அலை பாயுதே...

'கற்றது கடலளவு'-அத்தியாயம் -20 முதல் 50 வரை



அத்தியாயம் -20


கப்பலில் இருந்த எங்கள் எல்லோருக்கும் பயத்திலும், அதிர்ச்சியிலும் இரத்த அழுத்தம் அதிகமானது.

"யு, வெரி பியூட்டிஃபுல்." - சொல்லிவிட்டு வலது கை ஆள்காட்டி விரலால் கேதரினின் கன்னத்தில் கோடுபோட்டான் கொள்ளைக் கும்பலின் தலைவன்.

அவள் பயத்தோடு பின் வாங்கி, அடுத்த வரிசையில் நின்ற எங்கள் கப்பலின் 'போஸன்' மீது சாய்ந்தாள். ('போஸன்' (BOSUN) - கப்பலின் மாலுமிகள், பணியாட்களுக்கு தலைவன் போன்ற பதவி. இந்திய கப்பல்களில் 'ஸராங்' என்று அழைக்கப் படுகிறார்.).

அந்தக் கொள்ளைக்காரன் அவளை நெருங்கி, தோளைப் பிடித்து அவனை நோக்கி இழுக்கவும், அவள் வாய்விட்டு கதறிவிட்டாள்.. பயத்தோடு தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினாள்.

"ப்ளீஸ்.. அவளை ஒன்றும் செய்யாதீர்கள். நீங்கள் எங்களை எதுவும் செய்யமாட்டீர்கள் என்று ஆரம்பத்திலேயே உறுதி கொடுத்தீர்கள்.. அவளை விட்டு விடுங்கள்.. ப்ளீஸ்" - கேப்டன் அவனை நோக்கி கெஞ்சலுடன் கேட்டார்.

அவனோ சினிமாப் பட வில்லனைப் போல் கோரமாகச் சிரித்தான்.

"ஐ ஸீ நோ கேர்ள் தட் டைம்.. நெள ஐ ஸீ ஒன் கேர்ள்.." - என்றான்.

இப்போது வில்லியம்ஸ் கோபத்துடனும் இயலாமையுடனும் அவனைக் கெஞ்சினான். அவன் வில்லியம்ஸை பலமாக கீழே தள்ளி விட, வில்லியம்ஸ் தரையில் போய் விழுந்தான்.

நாங்கள் அனைவரும் பதறினோம்..

ஆனால் எதுவும் செய்யமுடியாத நிலையில் மனம் நோவதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு.

கொள்ளையன் கேதரினை தன்னுடன் அனைத்துக்கொண்டு, "லாங் டைம் நோ ஸீ கேர்ள்." - என்றான்.

இதுவரை சுமந்திருந்த துப்பாக்கியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, மேலும் அவளை இறுக்கமாக அணைக்க முயல, அவள் கண்ணீருடன் போராடினாள்.

ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில் எல்லோரும் துடிக்க, அவள் அவனிடமிருந்து திமிறிய வேகத்தில், அவளின் மேலாடையில் ஒரு பகுதி கிழிந்து அவன் கையோடு சிக்கிக் கொண்டது.

கிழிந்த பகுதியில் தெரிந்த உடலை மறைக்க அவள் போராடினாள். அந்த மிருகம் வெறித்தனத்தோடு அவளை மறுபடியும் பிடித்தது. மற்ற மூவரும் மனித உணர்வே இல்லாமல் ஏதோ

நாடகம் பார்ப்பதுபோல் சிரித்துக் கொண்டு இருந்தனர்.

மீண்டும் கேப்டன் உட்பட அனைவரும் அந்த மூவரிடமும் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் யாரையும் கண்டு கொள்ளவில்லை.

அவனின் வெறித்தனமான இழுப்பில் மேலும் துணி கிழிய, அவள் உடம்பை மறைத்துக் கொள்ள கீழே தரையில் உட்கார்ந்து கதறினாள். ஆனாலும் விடாமல் கொள்ளையன் அவளைப் பிடித்து இழுத்தான்.

ஆனால் அடுத்து நடந்த சம்பவம் யாரும் எதிர்பாராதது. பின்னால் நடந்த எல்லா திகைக்க வைக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அது தொடக்கமாகப் போய்விட்டது.

இல்லையென்றால் அப்படி ஒரு கோரமான முடிவு அவளுக்கு நிகழ்ந்திருக்குமா.."

இதைச் சொன்னபோது ஜூலியஸின் கண்கள் கலங்கிவிட்டன.

----------------------------

சிறிது மெளனத்துக்குப்பின், அதன் பிறகு நடந்த சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தான் ஜூலியஸ்.

"அது எப்படி நிகழ்ந்ததென்று எனக்குப் புரிய சில வினாடிகள் பிடித்தது.

அதுவரையில் கொள்ளையனால் தள்ளி விடப்பட்டு தரையில் விழுந்து கிடந்த வில்லியம்ஸின் மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்.

கொள்ளையன் கீழே வைத்திருந்த துப்பாக்கி, வில்லியம்ஸின் அருகே கிடந்தது. கேதரின் கதறுவதைப் பார்த்து கொதித்த அவன், கீழேயிருந்தபடியே வேகமாக நகர்ந்து அந்தத் துப்பாக்கியை இழுத்து, எடுத்த வேகத்தில் ஆவேசத்துடன் எழுந்து, அந்தக் கொள்ளையனின் பின் மண்டையை நோக்கி ஓங்கி அடித்தான்.

கடைசி வினாடியில் அந்தக் கொள்ளையன் அவனைக் கவனித்து இருக்க வேண்டும். திடுக்கிட்டு தடுக்க முயற்சித்த அவனின் வலது கையில் வில்லியம்ஸின் சக்தி முழுதும் பிரயோகித்த அந்த துப்பாக்கி அடி விழுந்தது.

வலியுடன் துடித்த அவன் கேதரினை விட்டுவிட, வெறியோடு மறுபடியும் அவனை அடிக்க ஓங்கிய வில்லியம்ஸ், பின்பக்கமிருந்து அவனுடைய தலையில் விழுந்த அடியில் நிலைகுலைந்து போய் அப்படியே குப்புற கீழே விழுந்தான்.

அவனை கீழே வீழ்த்திய மற்றொரு கொள்ளையன் மறுபடியும் அவனை காலால் உதைத்தான். அந்த மூவரும் அவனைச் சுற்றி நின்றனர்.

வில்லியம்ஸ் சுய நினைவோடு தான் இருந்தான். அப்போதுதான் அவன் செய்த காரியத்தின் விபரீதம் புரிந்தது. அவர்கள் நான்கு பேர் என்பதையும், அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததையும் அவனும் அந்த கணத்தில் மறந்து போய் இருந்தான்.

ஏதோ ஒரு வேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவனைத் தாக்கி விட்டிருந்தான். சொல்லப் போனால், அங்கிருந்த எங்கள் அத்தனை பேருக்கும் உள்ளுக்குள் அதே உணர்வு இருந்தது நிஜம்.

எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை நன்றாக புரிந்து இருந்ததால் அனைவரும் அமைதியாக இருந்தோம்.

ஆனால் விபரீதம் நடந்து விட்டது. வில்லியம்ஸின் வேகத்தைக் கண்ட மற்ற மூவரில் ஒருவன் அவனை பின் புறமிருந்து தாக்கி விழ வைத்திருந்தான்.

எந்தவித ஹீரோத்தனமான வேலையும் அந்த நேரத்தில் நிலைமையை மிகவும் மோசமாக்கவே செய்திருக்கும் என்பது வில்லியம்ஸுக்கு தாமதமாகவே புரிந்தது.

இப்போது அவன் புதிய வம்பை விலைக்கு வாங்கியிருந்தான். ஆனால் உயிரென நேசிக்கும் அன்பு மனைவிக்கு நேரும் கொடுமையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க எந்தக் கணவனால் முடியும்.

அடிபட்ட அந்தக் கொள்ளையன் வலியுடன் கையை உதறிக் கொண்டே, வெறியுடன் எழுந்து வில்லியம்ஸின் அருகே வந்தான்.

வில்லியம்ஸ் மெதுவாக எழுந்து நிற்க முயற்சிக்க, தன் வலது காலால் வில்லியம்ஸின் கையில் ஓங்கி மிதிக்க, கனமான அந்த பூட்ஸில், இரும்பும் இருந்திருக்க வேண்டும். வேதனையில் துடித்துப் போய் விட்டான்.

இன்னொரு உதை இடுப்பில்.. 'சுரீர் என்ற வலியில் அவன் அப்படியே சுருண்டு விட்டான்.

மறுபடியும் அவனது சட்டையுடன் கொத்தாகத் தூக்கி, ஏதோ புரியாத மொழியில் திட்டிக் கொண்டே முகத்தில் பலமாக அறைய, பின் பக்கமாக சரிந்து சுவற்றில் போய் மோதினான்.

அங்கிருந்த யாரும் இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. கேதரின் வில்லியம்ஸை அணைத்துக்கொண்டு கதறி அழுதாள்.

அவளை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கீழே தள்ளினான் - வில்லியம்ஸிடம் அடி வாங்கியவன். திகிலுடன் நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த எங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர் மற்ற மூன்று கொள்ளையர்கள்.

ஆனால் வில்லியம்ஸ¤க்கு ஏற்பட்ட கதியைப் பார்த்த எங்களில் யாரும் இப்போது எதுவும் செய்ய முயற்சிக்கவில்லை.

அதே நேரத்தில் முதல் கொள்ளையன் கையில் வைத்திருந்த 'வாக்கி டாக்கி' அழைத்தது. அவனுடைய கப்பலில் இருந்து கூப்பிட்டிருக்க வேண்டும். ஏதோ 'நேவி ஷிப்' என்ற வார்த்தை மட்டுமே புரிந்தது.

அவன் எரிச்சலுடன் ஏதோ திரும்ப அவர்களின் மொழியில் பேசினான். அவர்கள் ஏதோ மிகவும் முக்கியமான செய்தி சொல்லியிருக்க வேண்டும்.

உடனே பரபரப்பாகி மற்ற மூவரிடமும் ஏதோ வேகவேகமாக சொன்னான். அவர்களும் வாக்கி டாக்கியில் வந்த செய்தியைக் கேட்டதிலிருந்து சுறுசுறுப்பாகி விட்டனர்.

வேகமாக எல்லா மூட்டைகளையும் எடுத்துக்கொண்டு 'வீல் ஹவுஸ்' கதவைத் திறந்தனர். ஒருவன் வில்லியம்ஸைப் பிடித்து இழுக்க, இன்னொருவன் கேதரினைத் தூக்க முயற்சித்தான்.

அந்தத் தலைவன் கேப்டன் பக்கம் திரும்பினான்..

"கேப்டன்.. ஐ டேக் திஸ் கேர்ள்.. ஐ த்ரோ திஸ் பாய் ஓவர்போர்டு.." என்றான்.

சொல்லிவிட்டு வில்லியம்ஸை ஒரு உதை உதைத்தான். இன்னொருவன் பிடியில் இருந்து கேதரின் தன்னை விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தாள்.

அவன் அவளைத் தூக்கிக் கொண்டு போகப்போவதையும், வில்லியம்ஸைத் தூக்கி தண்ணீருக்குள் எறியப் போவதாகச் சொன்னதையும் கேட்டவுடன் அனைவரும் செய்வதறியாமல் திகைத்துப் போனோம்.

எல்லோரும் சேர்ந்து அவர்களிடம் கெஞ்ச ஆரம்பித்தோம். எங்கோ பிறந்து இப்படி ஒரு கண்காணாத இடத்தில் தண்ணீருக்குள் போவதற்கா வில்லியம்ஸ் கப்பலில் சேர்ந்தான்..

வண்ண வண்ணக் கனவுகளுடன் உலகத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்ற ஆசையுடன் கணவனோடு சேர வந்த கேதரினுக்கு இந்தக் கதியா?.. அனைவரின் நெஞ்சமும் கலங்கிப் போனது..

தேசம், மதம், மொழி எல்லாம் மறைந்து மனிதாபிமானமே எல்லோரிடமும் நிறைந்து நின்றது.. எல்லோரும் அந்தக் கொள்ளையரை விடாமல் கெஞ்சினோம்.

அந்தக் கொள்ளையரின் கப்பல் அதற்குள் எங்களின் கப்பலோடு ஒட்டிக் கொண்டு வந்திருந்தது. அதைக் கப்பல் என்று சொல்ல முடியாவிட்டாலும் படகு என்று நினைக்கும் அளவுக்கு சிறியதும் அல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட சைஸ்.

அந்தக் கப்பலில் இருந்து ஒருவன் கத்துவது இருட்டில் கேட்டது. கூடவே 'வாக்கி டாக்கி'யிலும் அதட்டலாகவும், பதட்டத்துடனும் சத்தம் வந்தது. அவர்களுக்கு என்னவோ பிரச்சனையாக இருக்கக் கூடும்.

கேதரின் கண்ணீருடன் அந்த கொள்ளைக்காரனுடன் போராடிக் கொண்டிருந்தாள். அவன் அவளை அடுத்த கீழ்த்தளத்துக்கு இழுத்துச் செல்ல முயன்றான்.

கப்பலில் இருந்த எல்லோரும் அவர்களைத் தொடர்ந்து போகத்தான் முடிந்ததே ஒழிய வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

கடலின் கொந்தளிப்பு அதிகமாகவே இருந்தது. அந்தக் கொள்ளையர்களின் கப்பல் வேகமாக தள்ளாடியது.

சில சமயம் இந்தப் பெரிய கப்பலின் மீதும் லேசாக மோதி அதிர்ந்தது. கேதரினைப் பிடித்திருந்தவன் கிட்டத்தட்ட கப்பலின் படகுத் தளத்துக்குச் சென்றிருந்தான்.

(Life Boat என்ற உயிர்காக்கும் படகு வைக்கப்பட்டிருக்கும் தளம் படகுத்தளம் ('Boat Deck') எனப்படுகிறது.).

கொள்ளையர்களுடைய கப்பலின் 'வீல் ஹவுஸ்' கிட்டத்தட்ட எங்கள் கப்பலின் படகுத் தளத்தின் உயரத்தில் இருந்தது. இங்கிருந்து அவர்களின் கப்பலுக்கு தாண்டிவிடும் தூரம்தான்..

ஆனால் அந்தக் கப்பல் சில சமயம் அலையின் வேகத்தால் விலகிச் செல்ல நேரிட்டதால் அவ்வளவு சுலபமாக தாண்டிச் செல்ல முடியாது.

வில்லியம்ஸைப் பிடித்திருந்தவன் அவனை இழுக்க முயற்சிக்க, இருவரும் போராடிக் கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக வில்லியம்ஸையும், கேதரினையும் அந்தக் கொள்ளையர்கள் விடப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது.

கப்பலில் இருந்த மற்றவர்கள் என்ன நடக்கப் போகிறதோ என்று தவிப்புடன் இருக்க, வினாடிப் பொழுதில் கேதரின் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். ஒரே உதறலில் அவள்

அந்தக் கொள்ளையனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்..

அவளின் அடுத்த அசைவில் அங்கிருந்த அனைவரும் அப்படியே உறைந்து போனோம்.
------------


டல்கொள்ளையர் பற்றி இன்னும் சில தகவல்கள்..

வழக்கமாக பகல் நேரங்களில் இவர்கள் வருவதில்லை.. இரவு நேரத்தில் கண்காணிப்பு குறைந்திருக்கும்.. கப்பல் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் தூக்கத்தில் இருப்பார்கள்..

வழக்கமாக கப்பலின் வீல் ஹவுஸ் பகுதியில் இருந்து, சுற்றிலும் வேறு ஏதாவது கப்பலோ, படகோ வருகிறதா என்று ரேடார் மூலம் கண்காணித்துக் கொண்டே தான் இருப்பார்கள்..

ஆனால் அந்த ரேடார் அமைக்கப் பட்டுள்ள இடத்தின் காரணமாக, சில கப்பல்களின் புகைபோக்கிக்கு பின்னால் உள்ள பகுதி ரேடாரின் கண்காணிப்பில் இருந்து தப்பி விடும்..

(கிட்டத்தட்ட 'Blind Spot' மாதிரி.)..

ரேடாரின் இந்தக் குறையை கொள்ளையர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.. கப்பலில் பின்னால் வரும் அவர்களின் படகு சிலசமயம் ரோடாரின் கண்காணிப்பில் இருந்து தப்புவது இப்படித்தான்..

கப்பலின் பின் பகுதியில் நெருங்கி, கொக்கி மூலம் கப்பலின் தளத்தில் உள்ள கம்பியை பயன்படுத்தி, கயிற்றால் செய்யப் பட்ட நூல் ஏணி கொண்டு கப்பலுக்குள் ஏறி விடுகிறார்கள்..

பொதுவாக கொள்ளையர்கள் நவீன ஆயுதங்களை வைத்திருப்பதால், அவர்களை எதிர்த்துப் போராட வேண்டாம் என்றும், கப்பலின் பொருட்களை கொள்ளையடித்தால் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிக் கொள்வது எளிது என்பதால் கம்பெனிகள், தங்கள் கப்பல் பணியாளர்களிடம் கொள்ளையர்களுடன் மோத வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள்..

ஆனால் மிக அரிதாகத்தான் கப்பல் ஊழியர்களை தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன்.)

-------

அத்தியாயம் 21

வினாடிப் பொழுதில் கேதரின் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.

ஒரே உதறலில் அவள் அந்தக் கொள்ளையனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்..

அவளின் அடுத்த அசைவில் அங்கிருந்த அனைவரும் அப்படியே உறைந்து போனோம். எப்படி அந்த முடிவுக்கு அவள் வந்தாளோ தெரியாது. விடுபட்ட அதே வேகத்தில் தளத்திலிருந்து வேகமாக ஓடிப்போய், கடலுக்குள் குதித்து விட்டாள்..

'நோ' என்ற கூச்சல் மட்டும் எங்களிடமிருந்து வந்தது.. அதற்குள் எல்லாம் முடிந்து போயிருந்தது..."

-ஜூலியஸ், கேதரின் கடலுக்குள் குதித்ததைச் சொன்னதும் என் இதயம் ஒருகணம் நின்றுபோனது.


ஜூலியஸும் அதைச் சொல்லிவிட்டு மெளனமானான். ஒரு இறுக்கமான சூழ்நிலை அப்போது எங்களிடையே நிலவியது. என்ன ஒரு கொடுமை என்று மனது கலங்கிப் போனது.

ஜூலியஸ் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோடி, அதன் பாதிப்பு என்னையும் ஆட்கொண்டது. நான் நீண்ட நேரம் கடலை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்..

சிறிது அமைதிக்குபின் ஜூலியஸ் தொடர்ந்து சொன்னான்.

"அவள் அந்த இருளுக்குள், மாபெரும் சமுத்திரத்துடன் கலந்து விட்டிருந்தாள்.. அந்த கொள்ளையர்களும் திகைத்துப் போயிருக்க வேண்டும்.

வில்லியம்ஸ் போராடிக் கொண்டிருந்ததால், அவனுக்கு, நடந்த நிகழ்ச்சி புரிய சில வினாடிகள் பிடித்தது. அவனைப் பிடித்திருந்தவனின் பிடியும் தளர்ந்திருந்தது.

வில்லியம்ஸ் அலறிக் கொண்டே கப்பலின் தளத்தருகே ஓடினான். இதற்குள் ஏற்கனவே இரண்டு கொள்ளையர்கள் அவர்கள் கப்பலுக்கு சென்றிருந்தனர். விலலியம்ஸையும், கேதரினையும் பிடித்திருந்தவர்கள் தான் இங்கே இருந்தனர்.

கேதரின் கடலுக்குள் குதித்த சம்பவம் நிலைமையை திசை திருப்பி விட்டது. மற்ற இருவரையும் உடனே திரும்பி விடும்படி அவர்கள் கப்பலிருந்து சத்தம் போட்டுக் கூப்பிட, மீதமிருந்த இருவரும் வில்லியம்ஸை விட்டுவிட்டு வேக வேகமாக அவர்கள் கப்பலுக்குத் தாவினார்கள்.

வில்லியம்ஸ் தளத்தின் ஓரத்தில் கம்பியைப் பிடித்துக் கொண்டு கதறினான்.. கைகளால் நெற்றியில் பலமாக அடித்துக் கொண்டான். நானும், இன்னும் சிலரும் ஓடிப்போய் அவனைப் பிடித்துக் கொண்டோம்.

அந்தக் கொள்ளையர்களின் கப்பல் விலகிச் செல்ல ஆரம்பித்தது.


அன்று இரவு பலருக்கும் தூங்காமலேயே கழிந்தது. வில்லியம்ஸ் கண்ணீர் வற்றி, அவனுடைய அறையில் உறைந்து போய் இருந்தான். அழுது, அழுது முகம் வீங்கி இருந்தது.

நான் கூடவே இருந்தேன். பின்னிரவு இரண்டு மணி வரை எல்லோரும் அவனோடு இருந்தனர். கேதரின் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் அந்தப் பகுதி முழுதும் தேடி விட்டோம்.


அந்தக் கொந்தளிக்கும் அலைகளில் அவள் அடித்துச் செல்லப் பட்டிருக்கக்கூடும். 'அவளுக்கு நீச்சல் தெரியாது' என்று வில்லியம்ஸ் அழுகையினிடையே சொன்னான். கண்டிப்பாக அவள் அதற்கு மேலும் உயிர் பிழைப்பது அரிது என்பது எல்லோருக்கும் தெரிந்து போனது.

கப்பலிலிருந்து செய்தி அனுப்பப்பட்டது. ஒரு வேளை வேறு ஏதாவது கப்பல் அருகில் இருந்து, அவள் உயிருடன் தப்பித்திருந்தால் அவர்கள் கண்டுபிடிக்க அந்த செய்தி உதவியாயிருக்கும்.

அன்றைய பயங்கரமான இரவு கேதரினின் உயிரைக் குடித்த திருப்தியுடன் காணாமல் போனது. நான் தூங்காமல் வில்லியம்ஸ் கூடவே விடியும் வரை இருந்தேன்.

மறுநாள் வில்லியம்ஸ் யாரிடமும் பேசவில்லை. மிகவும் உடைந்து போய் இருந்தான். அவன் கேதரினை மிகவும் நேசித்தது நான் அறிவேன்.

அதன்பின் வெறித்த பார்வையோடு இருந்தான். அவனை தனியாக விட்டுச் செல்லவே பயமாக இருந்தது. சாப்பிடக் கூட மறுத்து விட்டான்.

கடைசியில் எல்லோரும் கட்டாயப் படுத்தி கொஞ்சம் சாப்பிட வைத்தோம். அதுவும் அந்த ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டான். அவனது நிலைமை கருதி ஓய்வு கொடுத்து விட்டார்கள்.

மாலையில் நான் டியூட்டி முடிந்து அவன் ரூமுக்கு போனபோது நிறைய குடித்திருந்தான். மறு நாளும் நிறைய குடித்தான். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மூன்றாவது நாள் அவனிடம் நிறைய மாறுதல் தெரிந்தது. காலையில் எட்டு மணிக்கு இன்ஜின் அறைக்கு கூலிங் க்ளாஸ் அணிந்து கொண்டு வந்தான்.

ஆச்சர்யத்துடன் பார்த்தேன் நான்.

"வில்லியம்ஸ்.. என்னாயிற்று, ஏன் கூலிங் க்ளாஸ் போட்டிருக்கிறாய்?".

"உனக்கு கண் கூசலையா... எனக்கு ரொம்ப கூசுது.. எல்லா ட்யூப் லைட்டும் ரொம்ப பிரகாசமாக இருக்கு. அதனால் க்ளாஸ் போட்டிருக்கேன்". - க்ளாஸைக் கழற்றாமலேயே பதில் சொன்னான்.

ஏதோ ஆகிவிட்டது அவனுக்கு. தினமும் இதே விளக்குகள்தான் உள்ளன. இன்று மட்டும் புதிதாக கூசுகிறதா.. வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து கண்ணாடியைப் பறித்தேன்.

இடையில் என்னை இரண்டாவது இன்ஜினீயர் அழைத்ததால் நான் அவனை விட்டுப் போய் விட்டேன். அரைமணி நேரம் கழித்து அவனை இன்ஜின் ரூமில் கீழ்த்தளத்தில் சந்தித்தேன்.

ஒரு மூலையை வெறித்துக் கொண்டு இருந்தான். அவன் கையில் தீயை அணைக்கப் பயன்படும் ஒன்பது லிட்டர் 'ஃபோம்' வகை தீயணைக்கும் சிலிண்டா.

"ஹே.. வில்லியம்ஸ்.. என்னாச்சு?"

"இங்கே வா.. இந்தத் தீயை என்னால் அணைக்க முடியவில்லை.. நீ போய் அணை" - என்று ஒரு மூலையை நோக்கி கை நீட்டினான்.

அவன் கை நீட்டிய இடத்தைப் பார்த்தேன். ஏற்கனவே அந்த தளத்தில் வைக்கப்பட்டிருந்த தீயணைக்கும் கருவிகளை எல்லாம் உபயோகித்ததற்கான அடையாளங்கள்.

ஃபோம் முழுதும் கொட்டிப் போய் இருந்தது. கூடவே பவுடர் டைப் தீயணைப்புக் கருவியிலிருந்து பவுடர் முழுதும் வெளியேறி இருந்தது. ஆனால் அந்த இடத்தில் தீ இருந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை.

"வில்லியம்ஸ். ஏன் இதையெல்லாம் வேஸ்ட் செய்தாய்".

"வேஸ்ட்டா. தீயை அணைக்கப் பார்த்தேன் முடியவில்லை. இன்னும் எரியுது பார். என்னால் அணைக்க முடியல.. நீயாவது தண்ணீர் ஊற்றி அணைக்கப் பார்.. கமான் ஜூலியஸ். சீக்கிரம்"

"தீயா.. எங்கே இருக்கிறது?"

"தெரியலையா உனக்கு.. இதோ கண்ணுக்கு முன்னாலே எரியிறது கூட உனக்கு தெரியலையா.." - சொல்லி விட்டு என்னைப் பார்த்து வினோதமாக சிரித்தான்.

அவனிடம் விபரீத மாற்றம் ஏற்பட்டிருப்பது புரிந்து விட்டது. காலையில் இருந்தே அவன் சரியில்லை.

அவனை வலுக்கட்டாயமாக இழுத்துப் போய் மற்றவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். கேப்டனுக்கும் நிலைமை தெரிவிக்கப்பட்டது.

அவனை அறைக்குள் கொண்டு போய் விடச் சொன்னார். வெளியே எங்கும் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் கட்டளையிட்டார். அன்று முழுதும் வில்லியம்ஸைப் பற்றியே நினைத்து வருத்தப்பட்டேன்.

இரவு உணவுக்கு அவன் வரவில்லை. நான் தட்டில் அவனது அறைக்கு உணவு கொண்டு சென்றேன். அவன் என்னைக் கட்டிக்கொண்டு அழுதான்.

"ஜூலியஸ். யு ஆர் மை பெஸ்ட் ஃபிரண்ட்.." என்று புலம்பினான்.

ஒரு வழியாக சமாதானப்படுத்தி சாப்பிட வைத்துவிட்டு என் ரூமுக்குப் போனேன். அடுத்த பத்து நிமிடத்தில் கப்பலின் அபாய சைரன் ஒலித்தது..

எல்லோரும் எமர்ஜென்ஸி ஸ்டேசன் என்று அழைக்கப்படும் இடத்துக்கு ஓடினோம்.. அதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் விஷயம் பரவி விட்டது.

'சிறிது நேரத்துக்கு முன்னால் ஏதோ ஒரு உருவம் மேல் தளத்தில் அருகே நடந்து போற மாதிரி டியூட்டியில் இருந்த மூன்றாவது ஆபிஸர் பார்த்திருக்கிறான். இருட்டில் சரியாத் தெரியலை.

டார்ச் அடிச்சுப் பார்க்க முயற்சி செஞ்சப்ப, அந்த உருவம் தளத்திலிருந்து தண்ணீரில் குதித்து விட்டதாம். பார்ப்பதற்கு வில்லியம்ஸ் மாதிரி இருந்ததாம். கேப்டனுக்கு போன் செஞ்சு வில்லியம்ஸ் ரூம்ல பார்த்தப்போ அவன் ரூமில் இல்லையாம்'.

எனக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று அடைத்தது. அவனைத் தனியே விட்டு விட்டு வந்தது தவறு என்று மனதுக்குள் வருத்தப்பட்டேன்.

அவனை விட்டு விலகாமல் கூடவே இருந்திருக்கலாம். சே.. என் மீதே கோபப்பட்டுக் கொண்டேன்.

குதித்தது வில்லியஸ்தான் என்று ஊறுதியாகி விட்டது. அந்த இரவின் அமைதியில் வில்லியம்ஸும் கடலுக்குள் கேதரினைத் தேடி சங்கமமாகி விட்டான். தேடும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இந்தக் கடலுக்கு என்ன பசியோ.. எத்தனை உயிர்களைக் குடித்திருக்கிறது. ஆனால் ஓன்றுமே தெரியாத அப்பாவி போல் அமைதியாக இருந்தது .. அன்றிரவு முழுதும் நான் தூங்கவில்லை.

வில்லியம்ஸ் மெதுவாக நடந்து கடலுக்குள் விழுவது போன்ற காட்சி என் மனதில் அப்படியே பதிந்து போனது".-வில்லியம்ஸின் கதையை ஜூலியஸ் சொல்லி முடித்தபோது அவன்

கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

நான் எதுவும் பேசாமல் வெறித்தபடியே இருந்தேன். ஜூலியஸ் ஏன் ரோஹினி முன்னிலையில் இந்தக் கதையைக் சொல்லவில்லை என்று புரிந்தது.
--------


அத்தியாயம் 22

தன்பின் அடுத்த துறைமுகத்தில் ஜோவும் லீவில் சென்று விட்டான். எந்தவிதத் திருப்பங்களும் இன்றி கடல் வாழ்வு போய்க்கொண்டிருந்தது.

சில மாதம் கழித்து அருணும் லீவில் போனான். தனிமை கொடுமையானது. அந்தக் கப்பலில் இருந்த மீதி மாதங்களில் அதை அனுபவித்தேன்.

யாரும் இங்கே மனம் விட்டுப் பேசுவதில்லை. எல்லோரும் எதையோ பறிகொடுத்த மனப்பான்மையுடனேயே இருந்தனர்.

இங்கே வாழும் ஒவ்வொருவரும் ஒரு சோகக்கதையை சுமந்து கொண்டு வாழ்கிறார்கள். எட்டு மாதத்திற்கு ஒரு முறை இந்தக் கம்பெனியில் லீவில் வீட்டுக்குப் போக வேண்டும்.

அதிலும் பிலிப்பினோ பணியாளர்களுக்கு பத்து மாதம் வேலை. வீட்டைப் பிரிந்து இருப்பதால், எப்போதும் குடும்பத்தைப் பற்றியே கவலைப்பட்டு, இவர்களின் முகங்கள் எல்லாம் இறுகிப் போய் இருக்கின்றன.

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஓடிவிட்டன. அன்று கப்பலின் தளத்தில் எனக்கு வேலை. கூடவே பிலிப்பினோ ஃபிட்டர் ஜூலியஸ்..

ஜுலியஸ் நன்றாக டான்ஸ் ஆடுவான். பார்ட்டி நாட்களில் கலகலப்பாக எல்லோரையும் சிரிக்க வைப்பதில் அவனுக்கு நிகர் அவனேதான். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் அவன் அன்று சோகமாக இருந்தான்.

நாங்கள் இருவர் மட்டும் தளத்தில்..

என்னதான் இந்த வாழ்க்கை மீது சில நேரங்களில் வெறுப்புத் தோன்றினாலும், பல நேரங்களில் இந்தக் கடல் மீது காதல் வரத்தான் செய்கிறது.

வானம் இருண்டு மழை பெய்யக் கூடுமோ என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சமயங்களில், அறையின் கண்ணாடி ஜன்னல் அருகே உட்கார்ந்து கொண்டு, முழங்கால்களைக்

கட்டிக்கொண்டு, வெகு தூரத்தில் கடலுக்கும், வானத்துக்கும் வித்தியாசம் மறைந்து போயிருக்கும் அந்தத் தொடுவானத்தைப் பார்க்கும் போது மனதில் உள்ள எல்லாக் கவலைகளும் எங்கோ மறைந்து போய் விடும்.

நிஜமில்லாத தொடுவானம் தான்.. ஆனாலும் பார்க்கும் போது ஏனோ எப்போதும் பரவசமூட்டும்.. பார்த்துக் கொண்டே ஏதேதோ நினைவுகளில் மூழ்கிப் போய் விடுவேன்..

சில நேரங்களில் அந்த குளிர்ந்த நேரத்தில், மெலிதான சாரலுடன் மழைத்துளிகள் 'சட் சட்'டென்று அந்த இரும்புத் தளத்தில் விழும்போது, கப்பல் தளத்தின் மேல் நின்று ரசிப்பதில் நான் என்னை மறந்திருக்கிறேன்.

இன்றும் அப்படித்தான்.. கடலில் எந்தவித சலனமும் இல்லை.

(எங்கள் ஊர் இராமேஸ்வரத்தின் கடலும் இப்படித்தான் இருக்கும்.. அதை கடல் என்று சொல்வதை விட குளம் என்றே அழைக்க வேண்டும். கோபப்படவே தெரியாதவனைப் போல, அழத்தெரியாத குழந்தைபோல... அவ்வளவு அமைதியாது).

பரந்து விரிந்த பெரிய ஏரி போல் இருக்கிறது கடல். நிறைய இடங்களில் இது போன்ற அமைதியான கடல்பிரதேசங்களில் பறக்கும் மீன்களைப் பார்த்து சந்தோசப் பட்டிருக்கிறேன்.

கூட்டமாக கப்பலுக்கு அருகேயிருந்து 'விர்'ரென்று சிறிது தூரம் வரை பறந்து சென்று தண்ணீருக்குள் மறைந்து போகும் காட்சியைப் பார்த்துக்கொண்டே கப்பலை மறந்து போயிருக்கிறேன்..

இன்று பறக்கும் மீன்கள் இல்லை. ஆனால் கப்பலின் இடது புறத்தில் நான்கு டால்பின் மீன்கள். தண்ணீர்ப் பரப்பில் அவைகள் ஒன்றோடு ஒன்ற விளையாடிக் கொண்டும், துள்ளிக் குதித்துத் தண்ணீருக்கு வெளியே 'டைவ்' அடித்தும் கப்பலின் கூடவே வந்து கொண்டிருந்தன.


டால்பின்கள் பற்றிய நிறைய கதைகள் கேள்விப்பட்டிருந்தேன். அவை கடலோடிகளுக்கு நண்பர்கள். கடலில் விழுந்த கடலோடி ஒருவனை சுறாமீன்கள் தாக்காதவாறு பாதுகாத்து

அவனை உயிருடன் காப்பாற்றிய டால்பின்கள் பற்றி மாலுமிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அதனாலேயே டால்பின்கள் மீது ஒரு பாச உணர்வு எனக்கும் இருந்தது. வெகு நேரம் அவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜுலியஸ¤ம் பார்த்தான்.

நாங்கள் பார்ப்பதை உணர்ந்த மாதிரி, அந்த மீன்களின் கும்மாளம் இன்னும் அதிகரித்தது. தண்ணீருக்கு மேலே உயரமாக தாவி, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டன.

"ஜுலியஸ்.. இந்த டால்பின்களைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது?. நாம் ரசிப்பதைப் பார்த்து, அவையெல்லாம் தங்களுடைய திறமையை நமக்கு காண்பிக்க முயற்சிப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.. இல்லையா?"

ஜுலியஸ் முகத்தில் எந்தவித சந்தோசமும் இல்லை. நீண்ட பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.

"என்னாச்சு. ஏன் சோகமாய் இருக்கிறாய்?"

"என்னுடைய குடும்பத்தை நினைத்துக் கொண்டேன். இந்த டால்பின் மீன்கள் குடும்பத்தோடு எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றன. ஆனால் நம் நிலைமையைப் பார்த்தாயா. நான் வீட்டைப் பார்த்து ஒன்பது மாதம் ஆகிவிட்டது".

"இன்னும் ஒரு மாதம் தானே..".

"கல்யாணம் செய்திருந்தால் உனக்கு அதன் அருமை புரிந்திருக்கும். எவ்வளவு பணம் இருந்தாலும் நினைத்த நேரத்தில் நம் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று விரும்பினால் முடியுமா.

அவர்களுக்கு ஒரு சின்னப் பிரச்சனை என்றால், நம்மால் அதை தீர்த்து வைக்க முடிகிறதோ இல்லையோ, அந்த நேரத்தில் நாம் அந்த இடத்தில் இருப்பதே பெரிய நிம்மதி. அதெல்லாம் விட இன்னொரு பெரிய விஷயம் இருக்கு.
நம் குழந்தைகளுக்கு நாம்தான் அப்பா என்பதே மறந்து போய்விடுகிறது.."

அவன் சொன்னது ஆச்சர்யமாகவும் அதே நேரத்தில் வருத்தமாகவும் இருந்தது.

"போனதடவை என் இரண்டாவது பையன் பிறந்த ஒரு மாதத்திலேயே, நான் கப்பலுக்கு வந்து விட்டேன். அடுத்த முறை நான் போனபோது என்னைக் கண்டவுடனேயே பயந்து அலற ஆரம்பித்து விட்டான். கடைசியில் மூன்று நாள் கழித்தே என்னிடம் ஒட்ட ஆரம்பித்தான். இப்போது போகும்போது மறுபடியும் மறந்திருப்பான்."

அப்போது எனக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அதன்பின், எனது ஒன்பது வருட கப்பல் அனுபவத்தில், இதேபால் நிறைய பேர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

இந்திய ஆபிஸர் ஒருவரும், "நீ நம்பமாட்டாய்... என்னோட நண்பனின் மூணு வயதுப் பையன் அவனை அப்பான்னு கூப்பிட மாட்டான். 'சாக்லேட் அங்கிள்' என்று தான் அழைப்பான். அவனுக்கு அப்பா என்பது புரிகிறதோ இல்லையோ, எட்டு மாதத்துக்கு ஒரு முறை நிறைய வெளிநாட்டு சாக்லெட் கொண்டு வரும் 'அங்க்கிள்' என்பதை மட்டும் நன்றாகப் புரிந்திருக்கிறான்" என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி நிறைய சோகக் கதைகள். நான் சந்தித்த கப்பல்வாசிகளில், மிகச் சிலரைத் தவிர பெரும்பாலான அனைவரும், "இந்தக் கப்பல் வாழ்க்கையை விட்டுவிட்டு ஓடப்போகிறேன். சரியான சமயத்துக்காக காத்திருக்கிறேன்." என்பதை மட்டும் மறக்காமல் சொல்லி விடுகிறார்கள்.

எதையோ, எங்கோ தொலைத்துவிட்டு, வேறு இடத்தில் போய் தேடிக் கொண்டிருப்பவர்களைப் போலத்தான் எங்களின் வாழ்க்கையோ என்று எனக்கும் சில சமயம் தோன்றும்.

ஆழமான மகா சமுத்திரங்களின் எல்லாப் பகுதிக்கும் சென்று விட்டு வந்த பெருமையை வைத்துகொண்டு, இவர்கள் என்ன செய்யமுடியும். ஒரு நாளாவது நிம்மதியாக,

சந்தோஷமாக வீட்டில் குடும்பத்தோடு வாழ்வது தானே இவர்களின் முழு லட்சியமும்.

வித்தியாசமான ஒன்பது மாத அனுபவத்துக்குப் பின் எனக்கும் வீட்டுக்குத் திரும்பும் நாள் வந்தது. கப்பல் ஆஸ்திரேலியா வந்திருந்தது.. ஸிட்னிக்கு அருகிலுள்ள 'நியூ கேஸில் (New Castle) துறைமுகத்துக்கு வந்திருந்தோம்.

அங்கிருந்து ஸிட்னி மிக அருகில்.. நிறைய நேரம் கிடைத்ததால், ஸிட்னியை முழுதும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

அது ஒரு சொர்க்க பூமி. பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற உணர்வைத் தோற்றுவிக்கும் அந்த நகரம் என்னைப் பொருத்தவரை மிகவும் பிடித்தமான இடம்.

கப்பலை விட்டு ஸிட்னி விமான நிலையம் வந்து சேர்ந்தபோது, எனது வாழ்க்கை முழுதும் சந்தித்திராத அனுபவங்களையெல்லாம், இந்த ஒன்பது மாதங்களில் ஒரே கப்பல் அனுபவத்தில் பெற்று விட்டது போன்ற மலைப்பில் இருந்தேன்.

அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை..

மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இறங்கி நடந்த அந்த நேரத்தில் அருகில் கேட்ட தமிழ்க்குரலில் ஆச்சர்யப்பட்டுப் போய். 'அட.. இங்கேயும் யாரோ தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்களே' என்று ஒரு வினாடி ஆச்சர்யப்பட்டு, பின் தமிழக மண்ணில் காலடி எடுத்து வைத்து விட்டதை உணர்ந்து என்னை நினைத்தே வெட்கப்பட்டுக் கொண்டேன்.

ஒன்பது மாதங்களில் தமிழகம் எவ்வளவோ மாறியிருந்தது. நண்பர்களுக்கெல்லாம் எனது அனுபவங்கள் மிகவும் பரவச மூட்டுபவையாகவே இருந்திருக்க வேண்டும்.

சூயஸ் கால்வாய் பற்றியும், ஜிப்ரால்டா பாறை பற்றியும் சொன்னபோது பிரமிப்புடன் கேட்டார்கள்.

ஒன்பது மாதத்தில், உலகின் ஐந்து கண்டங்களில் கால் பதித்திருப்பது அவர்களைப் பொருத்தவரை பெரிய விஷயம்.

கடலில் குடிக்கும் தண்ணீருக்கு என்ன செய்வீர்கள் என்பதிலிருந்து, எத்தனை நாள் ஒவ்வொரு இடத்திலும் தங்கி ஊர் சுற்றுவீர்கள், சாப்பிடுவதற்கு மீன்பிடித்துக் கொள்வீர்களா என்பது வரை எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லச் சொல்ல அவர்கள் என்னை ஒரு தனி சாதனையாளன் என்றே எண்ணத்தொடங்கி விட்டார்கள்.

ஆனால் அங்கே வாழ்க்கை அத்தனை சுவாரஸ்யம் இல்லை என்பதை மட்டும் அவர்களிடம் சொல்லவில்லை.

அந்தக் கடலின் உப்பில் எத்தனையோ சோகக் கதைகளின் கண்ணீருக்கும் பெரிய பங்குண்டு என்பது இவர்களுக்குத் தெரியாமல் இருப்பதே மேல்.

ஏதோ, இவர்களை சந்தோஷப் படுத்தவாவது முடிகிறதே. கடலோடிகளின் வாழ்க்கைக்கு இப்படியும் ஒரு வடிகால் இருப்பதை நினைத்து இன்னொரு புறம் சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

கடல் கப்பல்வாசிகளுக்கு ஒரு காந்தம் போன்றது. இந்தக் தணணீரை ருசி கண்டவர்களை மீண்டும் மீண்டும் அது தன்வசமே ஈர்த்துக் கொள்கிறது.

நானும் என் விடுமுறை காலம் முடிந்தவுடன் அடுத்த கப்பலுக்குச் சேர தயாரானேன்.. வேறு புதிய அனுபவங்களைக் கற்றுத்தர கடலும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
-------------


அத்தியாயம் 23

டல் கப்பல்வாசிகளுக்கு ஒரு காந்தம் போன்றது. இந்தக் தணணீரை ருசி கண்டவர்களை மீண்டும், மீண்டும் அது தன் வசமே ஈர்த்துக் கொள்கிறது.

கப்பல் வாழ்க்கையில் ஒரு வசதி, எப்போது வேண்டுமானாலும் திரும்பக் கப்பலில் போய் சேர்ந்து கொள்ளலாம். (முன்பெல்லாம் அறுபது வயது வரை.. இப்போது அறுபத்தி ஐந்து வயது வரை போகலாம்.. அதற்குப் பின்னும் கூட போகலாம்- ஆனால் விஷேச அனுமதி பெற்றுக் கொண்டு!)

மேலும் ஒரே கம்பெனியில் யாரும் நிரந்தரமாக இருப்பதில்லை. ஆறு மாதமோ, எட்டு மாதமோ, காண்ட்ராக்ட் முடிந்து லீவில் இருந்துவிட்டு பின் இஷ்ட்டப்பட்டால் அதே கம்பெனியில் சேரலாம்.

இல்லையேல் வேறு கம்பெனியில் சேரலாம். ஒவ்வொரு ஆறு மாதமும் கம்பெனியை மாற்றும் ஆட்களும் உண்டு. நிரந்தரமாக ஒரே கம்பெனியில் இருப்பவர்களும் உண்டு.

பெரும்பாலான கம்பெனிகள் காண்ட்ராக்ட் முறையில் ஆட்களை எடுத்துக் கொள்கிறார்கள். இந்த மாதிரி கண்ட்ராக்ட் அடிப்படையில் வேலை செய்யும் போது லீவு காலத்தில் சம்பளம் கொடுப்பதில்லை.

ஆனால் ஒரு மாதம் வேலை பார்த்தால் பத்து நாள் லீவு சம்பளமும் சேர்த்து, அதே மாதத்தில் கிடைக்கும்படி இம்மாதிரி கம்பெனிகளில் அதிகச் சம்பளம் இருக்கும். லீவில் சம்பளம் கிடையாது என்பதால் எத்தனை மாதம் வேண்டுமானலும் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.

திரும்பச் சேரும்போது அந்தக் கம்பெனியில் அப்போது ஆள் தேவை என்றால் உடனே சேரலாம். இல்லையேல் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். வேறு கம்பெனியில் ஆள் தேவைப்பட்டாலும் போய் சேர்ந்து கொள்ளலாம்.

எனவே, எத்தனை வருடம் கழித்து போனாலும் வேலை இருக்கும். அவர்கள் எந்தப் பதவியில் முன்பு இருந்தார்களோ அந்தப் பதவிக்கான சர்ட்டிபிகேட் அவர்களிடம் இருக்கும்.

ஏற்கனவே வேலை பார்த்த அனுபவம் 'ஸீமென் புக்' எனப்படும் C.D.C (Continuous Discharge Certificate)-யில் பதிவாகியிருக்கும். அதை வைத்து வேலை கிடைக்கும்.

கப்பலில் இருப்பவர்களுக்கு லீவு என்பது அவர்கள் இஷ்ட்டத்துக்கு எடுத்துக்கொள்ளும் காலம்தான். வீட்டுக்கு வந்த ஒரு வாரத்திலேயே, உடனே கப்பலுக்கு திரும்பும் ஆட்களும் உண்டு.

ஒருவருடம் இருந்துவிட்டு போகிறவர்களும் உண்டு. பத்து வருடம் கழித்து மீண்டும் கப்பல் வேலைக்கு வருபவர்களையும் சந்தித்து இருக்கிறேன்.

நான் இரண்டு மாதம் கழித்து இரண்டாவது கப்பலில் சேரத் தயாரானேன். நான் சேர இருந்த கப்பல் கனடா நாட்டில் இருந்தது.

நான்காவது இஞ்ஜினீயர் ஒருவரும் அந்தக் கப்பலில் சேர என்னுடன் விமானத்தில் வருவதாக இருந்தது.. அதற்கு முன்பெல்லாம் நான்காவது இஞ்ஜினீயர் ஆவதற்கு தனியாக பரீட்சை என்று எதுவும் கிடையாது.

முதல் காண்ட்ராக்ட் முடிந்தவுடன் ஜூனியர் இஞ்ஜினீயரிலிருந்து நான்காவது இஞ்ஜினீயராக ப்ரோமோஷன் கொடுத்து விடுவார்கள். ஆனால் அந்த வருடத்திலிருந்து, அந்தப் பதவிக்கும் தனியாக பரீட்சை எழுத புதிதாகச் சட்டம் வந்திருந்தது.

கப்பலில் ஒவ்வொரு பதவிக்கும் பிரமோஷன் வாங்குவதற்கு அதற்குரிய பரீட்சைகள் எழுத வேண்டும். இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்தப் பரீட்சைகளை 'டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஷிப்பிங்'கின் கட்டுப்பாட்டிலுள்ள 'மெர்க்கண்டைல் மெரைன் டிபார்ட்மெண்ட்' நடத்துகிறது.

சென்னையில், பீச் ஸ்டேசனுக்கு அருகே உள்ளது இதன் கட்டிடம். இந்தியாவில் நடத்தப்படும் இந்தப் பரீட்சைகள் உலக அளவில் எல்லா நாட்டுக் கப்பல்களிலும் சேர்வதற்கு அங்கீகாரம் உடையவை.

நான் நான்காவது இன்ஜினீயருக்கான அந்தப் பரீட்சையை அப்போது எழுதியிருக்கவில்லை. எனவே மீண்டும் ஜூனியர் இன்ஜினீயராக சேர இருந்தேன். இந்த முறை எனக்குப் பயமே இல்லை.

முதல் கப்பல் தந்த அனுபவங்கள் என்னை மிகவும் தைரியசாலியாக்கி இருந்தன. எனது கம்பெனியின் தலைமை அலுவலகம் லண்டனில் இருந்ததாலும், மும்பையில் கிளை அலுவலகம் இருந்தது. அங்கே போனவுடன் என்னுடன் சேரவிருந்த நான்காவது இன்ஜினீயரைச் சந்தித்தேன்.

'பில்வராஜ் நாபர்' என்பது அவன் பெயர்.. மும்பைவாசி.. சுருக்கமாக 'பில்லி' என்று கூப்பிடச் சொன்னான்.

'ஸகார்' விமான நிலையத்தின் வாசலில் இரவு ஒன்பது மணிக்கு சந்திப்பதாகச் சொன்னான். இரவு ஒன்பது மணிக்கு அங்கே இருந்தேன். ஒன்பதரை வரை காத்திருந்தேன். அவன் வரவில்லை.

ஒருவேளை உள்ளே 'ஏர்லைன்ஸ் கெளண்ட்டர்' அருகே இருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் உள்ளே போனேன். வெளிநாடு செல்லும் விமானங்களுக்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே அங்கே இருக்க வேண்டுமல்லவா?.

மும்பை எனக்குப் புதிது. 'பில்லி இன்னும் வரவில்லையே' என்று நான் விழித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று என் பக்கத்தில் வந்து நின்ற ஒரு ஆள் ஏதோ ஹிந்தியில் கேட்டார்.

விமான நிலைய அதிகாரி போல் இருந்தார். நான் எனக்கு ஹிந்தி தெரியாது என்றேன். அங்கே ஆரம்பித்தது பிரச்சனை...

நான் 'திருதிரு'வென முழித்துக் கொண்டிருந்தது அவருக்கு சந்தேகம் ஏற்படுத்தியிருக்கலாம். என்னை ரொம்ப நேரம் கவனித்து இருந்திருக்கக் கூடும்.

"ஹிந்தி தெரியாதா.. எங்கிருந்து வருகிறாய்?" - ஆங்கிலத்துக்கு மாறி கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

நான் பச்சைத் தமிழன் என்பதைப் பெருமையோடு சொன்னேன்.

"உனது பாஸ்போர்ட்டை நான் பார்க்கலாமா?"

பார்க்கலாமே... காண்பித்தேன்.

அந்த கையில் வாங்கி, அதிலிருந்து புகைப்படத்தை பார்த்து விட்டு என் முகத்தையும் பார்த்தார்.. ('இந்த திருட்டு முழிதான் போட்டோவிலேயும் இருக்கு').

"சொந்த ஊர் எது?"

அதுதான் பாஸ்போர்ட்டில் தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கிறதே.. இருந்தாலும் சொன்னேன்.

"இராமேஸ்வரமா.. அப்படியானால் நீ இலங்கைத் தமிழனா.." - கேட்டுவிட்டு என்னை ஊடுருவது போல் பார்த்தார்.

அவசரமாக 'இல்லை'யென்றேன்.

இது வேறா.. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டு அப்போது ஒரு வருடம் ஆகியிருந்தது.

"இப்போ எங்கே போகிறாய்..?"

நான் மெரைன் இன்ஜினீயர் என்பதையும் கனடாவில் உள்ள கப்பலுக்குப் போய்ச் சேர இருப்பதையும் சொன்னேன்.

எனது பாஸ்போர்ட்டை மறுபடியும் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு, என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்.

இந்தப் பார்வை சரியில்லையே என்று எனக்குப் பட்டது. அவர் முகத்தில் சின்னதாக ஒரு மலர்ச்சி.

"கனடாவுக்குப் போகிறேன் என்கிறாய்..எங்கே உன் விசா "- சரியாக மாட்டிக்கொண்டாயா என்பது போன்ற பார்வையுடன் கேள்வி இருந்தது.

நான் என்னிடம் விசா இல்லை என்றும், எனது கம்பெனியிலிருந்து இமிக்ரேஷன் அதிகாரிகளுக்குக் கொடுக்க வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் காட்டினேன்.

அவர் அதை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, "என்னோடு கொஞ்சம் வருகிறாயா?" என்றார்.

"ஏதாவது பிரச்னையா" என்று கேட்டேன்...

'ஆமாம்' என்று தலையசைத்து விட்டு என் பாஸ்போர்ட்டை தனது சட்டைப்பையில் போட்டுக்கொண்டு 'போகலாமா' என்பது போல என்னைப் பார்த்தார்.

நான் எனது சூட்கேஸ்களை சுமந்துகொண்டு அவரைப் பின் தொடர்ந்தேன். போகும்போது பில்லி தென்படுகிறானா என்று பார்த்தேன்..

ம்ஹூம்.. சரியான நேரத்தில் வரமுடியாதபடி 'பில்லி'க்கு அப்படி யார் சூனியம் வைத்துத் தொலைத்தார்களோ என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டேன்.

அவர் என்னை ஒரு அறைக்குக் கூட்டிப் போய்விட்டு, வெளியே போய், போன வேகத்தில் நாலைந்து பேர் கொண்ட கும்பலோடு வந்து சேர்ந்தார்.

உள்ளே நுழைந்து, என்னைக் காட்டி, "ஹி இஸ் த ஒன்" என்றார்.

எல்லோருக்கும் நடுவில் நான் திருவிழாவுக்கு பலிகொடுக்கக் கூட்டி வந்த ஆடு போல் நின்று கொண்டிருந்தேன்.

அவர்களில், ஒரு ஆளின் கையில் பெரிய பேப்பர்... அதில் நிறைய புகைப்படங்கள்.. எனக்கு முதலில் எதுவும் புரியவில்லை. அவர்கள் தங்களுக்குள் இந்தியில் ஏதோ பேசிக் கொண்டனர்.

எனக்கு 'LTTE' என்ற வார்த்தை மட்டுமே புரிந்தது. உள்ளுக்குள் பகீரென்றது. அப்போது ராஜீவ் கொலையாளிகளை தீவிரமாக தேடிக் கொண்டிருந்த நேரம். எனக்கு புரிந்து விட்டது. என்னை அவர்களில் ஒருவன் என்று சந்தேகிக்கிறார்கள்.

அவர்களில் ஒரு ஆள் என்னிடம் நெருங்கி, மீண்டும் முதல் ஆள் கேட்ட அதே 'சொந்த ஊர் எது' என்ற கேள்வியிலிருந்து, எல்லாவற்றையும் கேட்க ஆரம்பித்தார்.

"நீ கனடாவுக்கு செல்ல வேண்டுமானால் விசா இருக்க வேண்டுமே... எங்கே உன் விசா" என்று மறுபடியும் கேட்டார். எல்லாம் சரி.. என்னிடம் விசா கிடையாதுதான்.. ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது.

வழக்கமாக, நாங்கள் வேலைக்காக சேரப்போகும் கப்பல் ஏதாவது இந்தியத் துறைமுகத்தில் இருந்தால், விமானத்திலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்து கப்பல் இருக்கும் துறைமுகத்தில் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். செலவை கம்பெனி ஏற்றுக் கொள்ளும்.

அதேபோல் கப்பல் ஏதாவது வெளிநாட்டுத் துறைமுகத்தில் இருந்தால், விமானச் செலவை ஏற்றுக் கொள்வதோடு, அந்த நாட்டுக்கான விசா எடுக்கும் பணியையும் கம்பெனியே செய்து கொடுக்கும்.

அந்த விசா, கப்பலில் போய்ச் சேர மட்டுமே பயன்படக் கூடிய விசாவாக இருக்கும். அதைப் பயன்படுத்தி வெளிநாட்டில் போய் செட்டில் ஆகமுடியாது.

ஆனால் ஒரு சில நாடுகளின் துறைமுகங்களில் கப்பல் இருக்கும்போது, அங்கே போய்க் கப்பலில்சேர, இந்தியர்களுக்கு விசாகூட தேவையில்லை. வெறும் பாஸ்போர்ட்டுடன்,

கப்பல் ஊழியர் என்பதற்கான CDC புக் இருந்தால் போதும்.(பொதுவாக காமென்வெல்த் நாடுகள் இந்தப் பட்டியலில் இருக்கும்).

அப்படிப்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. கனடாவுக்கு செல்ல எங்களுக்கு விசா எடுக்கத் தேவையிருக்கவில்லை என்பதால் கம்பெனியும் விசா எடுக்கவில்லை.. இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு மட்டும் ஒரு கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தது..

நான் தைரியமாக பதில் சொன்னேன்.. மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்க... ஆனால், இப்போதைய பிரச்சனை வேறு.

நான் தமிழ்நாட்டுக்காரன்.. அதுவும் ராமேஸ்வரம். முகத்தோற்றமும் தென் மாவட்டத்துக்கே உரித்தானது.. கிட்டத்தட்ட இலங்கைத் தமிழர்களும் இப்படித்தான் இருப்பார்கள்.

என்னிடம் விசாவும் இல்லை.. கனடா, இலங்கைத் தமிழர்கள் அதிகம் குடி பெயர்ந்திருக்கும் நாடு... இன்னும் ராஜீவ் கொலையாளிகள் கண்டுபிடிக்கப் படவில்லை. மாறு

வேடத்தில் உலவுகிறார்கள். அதே வேஷத்தில் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டுக்குத் தப்ப முயற்சிக்க வாய்ப்புண்டு.

இவை எல்லாம் சேர்ந்து எனக்கு எதிராக சதி செய்து விட்டன... நான் எவ்வளவு சொல்லியும் நம்பவில்லை. என் முகத்தை தன் கையில் வைத்திருந்த புகைப்படங்களோடு ஒப்பிட்டுக் கவனமாகப் பார்த்தார்கள்.

இடையில் யாருக்கோ போன் செய்து வரச் சொன்னார்கள். அது ஒரு பெண் அதிகாரிக்கு என்பதும், அவர்கள் என்னை சந்தேகப்படுவதையும், தொலைபேசியில் ஆங்கிலத்தில 'யெஸ் மேடம்' சொல்லி உரையாடிய போது தெரிந்து கொண்டேன்.

ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக தேடப்பட்ட சிவராசன் போன்றவர்களின் பலவகைப் பட்ட மாறுவேஷ சாத்தியங்கள் அந்த பேப்பரில் படங்களாக இருந்தது. எப்படியாவது என்னை

அதில் அடையாளம் கண்டு 'விருது' வாங்கும் முயற்சியில் அவர்கள் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

நான் என்னிடம் இருந்த பள்ளிச் சான்றிதழ் எல்லாம் எடுத்துக்காட்டி, இரமேஸ்வரம் அரசு பள்ளியில் படித்த எஸ்.எஸ்.எல்.சி. புத்தகம், மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

எல்லாம் எடுத்துக் காட்டினேன்.

அதையெல்லாம் பார்த்தபின் ஓரளவு நம்பிக்கை வந்திருக்க வேண்டும். இதற்குள் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் முடிந்து விட்டது.

கடைசியில் பில்லி அங்கே வந்தான். நானும் அவனோடு கப்பலில் சேர இருப்பதைப் பற்றி எடுத்துச் சொல்லி என் மீதிருந்த சந்தேகத்தை போக்க முயற்சித்தான்.

"ப்ளீஸ்.. நீங்கள் தலையிட வேண்டாம்.. இப்படி நிறைய பேர் தப்பிச் செல்கிறார்கள்.. உங்களுக்கு எதுவும் தெரியாது." என்று அவனின் வாயை அடைத்தனர்..

அவனை விமானத்துக்குள் போகச் சொல்லி விட்டனர். நான் 'கண்டிப்பாக வருவேன்' என்று சொல்லி அவனை போகச் சொன்னேன்.

வேறு எந்த வகையிலும் என்னை அவர்களால் மடக்க முடியாததால், 'போகலாம்' என்று அனுப்பி வைத்தனர்.

தப்பித்து ஓடி, விமானத்துக்கான 'போர்டிங் கார்ட்' வாங்கும்போது விமானம் புறப்பட இருபது நிமிடங்கள் இருந்தது. அவசர அவசரமாக புறப்பட்டேன்.. ஆனால் இன்னும் என்னை அவர்கள் விடுவதாயில்லை..

செக்யூரிட்டி செக்கிங்கிற்கு போகும்முன் ஒரு பெண் வந்தார்.அவர்தான் மேலதிகாரி என்று புரிந்தது.. அவரைச் சுற்றி என்னிடம் ஏற்கனவே விசாரித்த கும்பல் பவ்யமாக நின்றது.

வேறு வழியில்லாமல் மறுபடியும் அந்தப் பெண் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். இடையே விமானம் என் ஒருவனுக்காக காத்திருப்பதாக விமான கம்பெனிப் பெண் வந்து சொன்னாள்.

ஒரு வழியாக விட்டார்கள்.

கடைசியில் 'போங்கய்யா, நீங்களும் உங்க துப்பறியும் திறமையும். உண்மையான ஆளையெல்லாம் கோட்டை விட்டுடுவீங்க.. என்னைப்போல் ஆள் கிடைச்சா கேள்வி மேல கேள்வி

கேப்பீங்க...' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே விமானத்தைப் பிடிக்க ஓடினேன்.

என்னால் விமானம் பத்து நிமிடம் தாமதமாகவே புறப்பட்டது. அன்றைய தினத்தை மறக்கவே முடியாது.
-----------


அத்தியாயம் 24

ப்பலில் போய் சேர்ந்தவுடன் நான் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட கதையைக் கேட்டபின் அந்தக் கப்பலில் எல்லோரும் என்னை 'LTTE' என்று கூப்பிடவும் ஆரம்பித்தனர்.

எல்லாக் கப்பல்களுக்கும் பெயர் உண்டு. கம்பெனிக்கு விருப்பமான பெயரை வைத்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்பெனிகள் தங்களின் கப்பல்களுக்கு தமிழ்ப் பெயரையும் வைப்பதுண்டு.

தமிழ் பெரியார், தமிழ் அண்ணா, தமிழ் காமராஜர் - (இது பூம்புகார் கம்பெனி கப்பல்கள். தமிழ்நாடு அரசின் கம்பெனி)..

சென்னை முயற்சி, சென்னை வளர்ச்சி, சென்னை பெருமை, சென்னை நேர்மை, சென்னை சாதனை, சென்னை ஊக்கம், சென்னை ஜெயம், சென்னை பொலிவு என்பதெல்லாம் கப்பல்களின் பெயர்கள் (கவிஞர் கண்ணதாசன் வைத்த பெயர்களாம்).

இது தவிர விக்ரமன், ராஜராஜன், ஜெயங்கொண்டான் என்பதெல்லாம் தமிழ்நாட்டு கப்பல் கம்பெனிகளின் பெயர்கள் தான்.

எல்லா கப்பல்களுக்கும் முன் M.V. அல்லது M.T. போன்ற எழுத்துக்கள் இருக்கும் (எம்.வி.தமிழ் பெரியார் என்பது போல்).

இப்போதெல்லாம் கப்பல்களை இயக்குவதற்கு பெரும்பாலும் டீசல் இன்ஜின்கள் பயன்படுகின்றன. அதைக் குறிக்க 'எம்' என்ற எழுத்து (Motor என்ற வார்த்தைக்காக). Motor Vessel என்பதைக் குறிக்க M.V. என்ற எழுத்துக்கள்.

இதுவே எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் என்றால் Motor Tanker என்பதைக் குறிக்க M.T. என்ற எழுத்துகள். டீசல் இன்ஜினுக்குப் பதிலாக முன்பு நீராவி இன்ஜின்கள் இருந்தன. அத்தகைய கப்பல்களுக்கு முன் Steam Ship என்பதைக் குறிப்பிடும் வகையில் S.S. என்ற எழுத்துக்கள் இருக்கும். (S.S. Ramanujam உதாரணம்).

நான் சேரவிருந்த எனது இரண்டாவது கப்பல் கனடாவில் உள்ள 'ஸெத் ஐல்ஸ்' (Sept Isles) என்ற துறைமுகத்தில் இருந்தது. 'மாண்ட்ரீயல்' நகரம் போய் அங்கிருந்து 'க்யூபெக்' என்ற இடத்திற்கு இன்னொரு குட்டி விமானம்.

அங்கிருந்து 'ஸெத் ஐல்ஸ்'க்கு காரில் பயணம். கனடாவின் கிழக்குப் பகுதியில் பிரெஞ்சு அதிகம் பேசப்படுகிறது. அதே போல் மேற்குப் பகுதியான 'பிரிட்டிஷ் கொலம்பியா' பகுதியில் ஆங்கிலம் அதிகம்.

கனடாவில் இரண்டு மொழிகளும் உண்டு. நான் போய்ச் சேர இருந்த ஊர் பிரெஞ்சுப் பகுதியில் இருந்தது. பெயரும் பிரெஞ்சில் இருந்தது.. அந்த ஊரின் ஆங்கில மொழிபெயர்ப்பு 'Seven Islands' என்பதாகும்.

எங்களை வரவேற்க ஒரு பெண் வந்திருந்தாள். கப்பல் இன்னும் துறைமுகத்துக்குள் வரவில்லை என்றும், மறுநாள் காலை வரை எங்களை ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப் போவதாகவும் சொன்னாள்.

கப்பலில் வேலை பார்ப்பவர்கள், கப்பலில் சேரும்போது ஊரிலிருந்து புறப்பட்டது முதல் கப்பலில் போய் சேரும் வரையிலான ரயில், விமானச் செலவு எல்லாவற்றையும் கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்..

நான் கையிலிருந்து எதுவும் செலவழிக்க தேவையில்லை. எந்த நாட்டில் கப்பல் உள்ளதோ அங்கே போய்ச் சேர்வதற்கான விமான டிக்கெட்டை இந்தியாவில் இருந்து புறப்படும்போது கையில் கொடுத்துவிடுவார்கள்.

அதன்பின் விமான நிலையத்திலிருந்து கப்பலுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய வேலையை அந்த நாட்டில் உள்ள ஏஜண்ட்டுகள் செய்வார்கள். அதற்கான செலவை கம்பெனியிடம் பின்னர் வசூலித்துக் கொள்வார்கள்.

ஒருவேளை கப்பல் துறைமுகத்திற்கு வந்து சேராமல் இருந்தால், கப்பல் துறைமுகம் வந்து சேரும் வரை ஹோட்டலில் தங்க வைக்கும் செலவையும் கம்பெனியே ஏற்றுக் கொள்ளும்..

சில சமயங்களில் எதிர்பாராத விதமாக ஒரு வாரம்கூட ஹோட்டலிலேயே தங்க வேண்டி நேர்ந்துவிடும். எல்லாச் செலவும் கம்பெனி ஏற்றுக் கொள்கிறது.

எங்கள் கப்பல் மறுநாள் துறைமுகத்துக்குள் வர இருந்தது. அதுவரை ஹோட்டலிலேயே தங்கி இருந்தோம். மறுநாள் பெண் ஏஜண்ட் வந்து கப்பலில் கொண்டு போய்ச் சேர்த்தாள்.

நான்காவது இன்ஜினீயர் பில்லி. ஆறுமாத பயணம் முடிந்து ஒரு வாரத்துக்கு முன்பு இன்னொரு கப்பலில் இருந்து லீவில் இறங்கியிருந்தான்.

"ஒரு வாரத்துக்குள் திரும்பவவும் கப்பலில் சேர்ந்து விட்டாயா" - நான் ஆச்சர்யத்தோடு கேட்டேன்.

"ஆறு மாதம் போன கப்பலில் இருந்தேன்.. இரண்டுமாதம் கழித்துத்தான் திரும்ப சேர்வதாக இருந்தேன். ஆனால் கம்பெனியிலிருந்து திடீரென்று கூப்பிட்டார்கள். அவசரமாக ஒரு நான்காவது இன்ஜினீயர் வீட்டுக்குப் போக வேண்டிய கட்டாயம் வந்ததால், வேறு ஆள் கிடைக்காததால் என்னை ஒரு 'வாயேஜ்' (Voyage) போய் வர முடியுமா என்று கேட்டார்கள்.. நானும் 'சரி'யென்று சொல்லி விட்டேன். அதனால் உடனேயே கப்பலில் சேர்கிறேன்'' என்றான்.

கப்பல் அங்கிருந்து இரும்புத்தாது ஏற்றிக் கொண்டு ஜப்பான் செல்ல இருந்தது. சுமார் ஐம்பது நாள் பயணம். ஜப்பான் போய் சேர்ந்தவுடன் அவனை கண்டிப்பாக ரிலீவ் செய்வதாக உறுதி அளித்ததனால் அவன் சேர்ந்திருந்தான்.

அந்தக் கப்பல் கேப்டன், சீஃப் இன்ஜினீயர், சீஃப் ஆபிஸர் மற்றும் இரண்டாவது இன்ஜினீயர் ஆகிய நால்வரும் பிரிட்டிஷ்காரர்கள். அது தவிர எட்டு இந்தியர்களும் மீதி பிலிப்பினோ பணியாளர்களும் இருந்தோம்.

கப்பல்வாசிகள் கப்பலில் இருக்கும்போது சந்தோஷமாக இருப்பதும், சோகமாக இருப்பதும் மாறி மாறி நடக்கும். கப்பலில் இன்ஜின் அறையில் உள்ள நூற்றுக்கணக்கான இயந்திரங்களில் ஏதாவது பிரச்னைகள் இருந்து கொண்ட இருக்கும்.

அதைச் சரி செய்யவே இன்ஜினீயர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் உடனடியாக சரி செய்ய முடியாத பிரச்னைகள் ஏற்படும்போது எல்லோரின் மனமும் வருத்தப்படும். சிலசமயம் நாள்கணக்கில் சரியாக சாப்பிடக்கூட செய்யாமல் இன்ஜின் அறையே கதி என்று இரவு பகலாக போராடினாலும் பிரச்னை தீராத நிலையும் ஏற்படும்.

அப்போதெல்லாம் ஏன் கப்பல் வேலைக்கு வந்தோம் என்று தோன்றும். தரையில் ஐம்பது பேர் இருந்து செய்ய வேண்டிய வேலையை, கப்பலில் வெறும் ஐந்தே பேர் செய்ய வேண்டும்.. (அதற்குத் தகுந்தாற்போல் அதிக சம்பளம் என்பது உண்மை).

ஆனால் தரையில் உதவிகள் அதிகம்.. கடலில் அது இல்லை.. எனவே, அடுத்த துறைமுகம் சேரும் வரை காத்திருந்துபின் தரையில் இருந்து 'ஸ்பெஷலிஸ்ட்டுகள்' வந்து தீர்த்து வைக்கும் வரை சரியாகத் தூக்கம் கூட வராது.

இம்மாதிரி பிரச்னைகளுக்கிடையிலும் மற்றவர்களை சந்தோசமாக வைத்திருப்பதில் சீஃப் இன்ஜினீயருக்கும், இரண்டாவது இன்ஜினீயருக்கும் முக்கிய பங்கு உண்டு.

அந்த வகையில் இந்தக் கப்பல் நல்ல கப்பல்.. ஏனென்றால் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை - ஜப்பான் போய்ச் சேரும் வரை.

ஆனால் ஜப்பானை நெருங்க ஆரம்பித்த போது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. பிரச்னை பெரிய அளவில் இல்லையென்றாலும், கப்பல் துறைமுகத்துக்குப் போனவுடன் சரி செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலையில் இருந்தோம்.

கப்பல் ஜப்பானில் ஒய்ட்டா (Oyta), மற்றும் நகோயா (Nagoya) என்ற இரு துறைமுகங்களில் சரக்கை இறக்க வேண்டியிருந்தது. முதல் துறைமுகமான 'ஓய்ட்டா' போய்ச் சேர்ந்தபோது கப்பல் உடனே உள்ளே செல்ல முடியாமல் நங்கூரமிட்டுக் காத்திருக்க வேண்டியிருந்தது.

பில்லியை அந்தத் துறைமுகத்தில் விடுவிக்க ஆள் வருவதாக இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல் வந்து விட்டது. மூன்றாவது இன்ஜினீயரான சஞ்சய் என்பவரின் மனைவியும் அந்தத் துறைமுகத்தில் வந்து சேர்வதாக இருந்தது.

அதனால் அவர்கள் இருவரும் மிகவும் சந்தோசமாக இருந்தனர். சஞ்சயின் இரண்டு வயதுக் குழந்தையும் தாயுடன் வர இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அங்கே கடுமையான புயல் வீச ஆரம்பித்தது...

புயலைச் சமாளிக்க முடியாமல் கப்பல் காற்றின் வேகத்தில் நகர ஆரம்பிக்க, நங்கூரம் போட்டும் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அதே நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக கப்பல் அங்கே காத்திருந்த வேறு கப்பல்களின் மீது மோதவோ, அல்லது கட்டுக்கடங்காமல் போய் தரை தட்ட வேண்டிய நிலையோ ஏற்படும் என்று தெரிந்து விட்டது.

வேறு வழியில்லாமல் கப்பலை அந்த இடத்தில் இருந்து வெளியே கரையை விட்டு தொலைவில் கடலுக்குள் கொண்டு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மெதுவாக கப்பலை வெளியே கொண்டு வந்தோம்.

ஆனால் புயலின் கடுமை அதிகரித்து விட்டது. கப்பலை ஏழு நாட்டிகல் மைல் வேகத்தில் செலுத்தினால் கப்பல் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை. எதிர்த் திசையிலிருந்து அந்த அளவுக்கு வேகத்தில் புயல் காற்று வீசிக் கொண்டிருந்தது.

அதற்கு மேலும் வேகத்தை அதிகப் படுத்தி செல்ல முயற்சித்தால் இன்ஜினுக்கு பாதிப்பு ஏற்படும்.ஆனால் அதை விட குறைவாகவும் செல்ல முடியாது. காற்றின் வேகத்தில் கப்பல் எங்காவது மோத நேரிடும்.

வேறு வழியில்லாமல் கப்பலை அதே இடத்தில் தக்க வைப்பதற்காக மட்டும் இன்ஜின் ஏழு நாட்டிகல் மைல் வேகத்துக்கு ஈடு கொடுக்க வேண்டியிருந்தது. அன்று என்ன ஆகுமோ என்ற பதட்டம் எல்லோரிடமும் இருந்தது.

ஜப்பான் கடல் பகுதியில் எப்போதும் புயல் இருந்து கொண்டே இருக்கும். ஐந்து மணி நேரப் போராட்டத்துக்குப் பின் புயலின் கடுமை குறைய ஆரம்பிக்க எங்களுக்கு நிம்மதி வந்தது.

மறுநாள் காலை கப்பல் துறைமுகத்துக்குள் செல்ல இருப்பதாக தகவல் வந்தது. மறுநாள் மாலைக்குள் புதிய நான்காவது இன்ஜினீயரும், சஞ்சயின் மனைவி, குழந்தையும் வருவதாக முதலில் தகவல் வந்தது.

ஆனால் கம்பெனியின் பம்பாய் அலுவலகத்திலிருந்து அடுத்த அரை மணி நேரம் கழித்து இன்னொரு வருத்தமான தகவலும் வந்தது..

கேப்டன் சஞ்சயை அழைத்து,"உன் தந்தை மரணமடைந்து விட்டார்" என்றார்.

சஞ்சய் மட்டுமல்ல.. நாங்கள் அனைவருமே அந்தச் செய்தி தந்த சோகத்தில் கலங்கிப் போனோம். சஞ்சய் உடனடியாக ஊருக்குச் செல்ல போராடியதும், அது முடியாமல் தவித்ததும், கப்பல் வாழ்வின் சாபக்கேடுகளை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது..

அந்த சம்பவம் மிகப் பெரிய பாடம்..
------------


அத்தியாயம் 25

ந்தக் கப்பல் ஓரளவு புதிய கப்பல்.. இம்மாதிரியான நவீன கப்பல்களில் இன்ஜின் அறை ஆளில்லாத இயந்திர பகுதியாக (Unattended Machinery Space)
மாறியிருந்தது.

அதனால் இன்ஜினீயர்கள் முன்புபோல் 'வாட்ச் கீப்பிங்' ஷிஃப்ட் முறையில் வேலை பார்க்கத் தேவையில்லை. எல்லோரும் காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்தரை மணிவரை ஒரே நேரத்தில் வேலை பார்க்க வேண்டும்.

அதன்பின் இரவு முழுதும் இன்ஜின் அறையில் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் இது போன்ற கப்பல்களில் வேலை பார்க்கும் இன்ஜினீயர்கள் மாலையிலிருந்து மறுநாள் காலை வரை ஓய்வெடுக்கலாம்.

இரவு உணவு முடித்து விட்டு நாங்கள் பிஸர்கள் பாரில் உட்கார்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அந்தக் கப்பலில் என்னுடன் இருந்த இந்திய ஆபிஸர்கள் அனைவரும் இளைஞர்களே.. பில்லி உட்பட நான்கு பேர் அதில் ஆல்கஹால் தொடாதவர்கள்.

நான் முன்பே குறிப்பிட்டதுபோல், கப்பலுக்கு வரும் இப்போதைய இளைஞர்கள் குடிப்பதை விரும்புவதில்லை என்பதற்கு அந்தக் கப்பல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.. அனைவரும் கோக்கோ-கோலாவோ, ஆரஞ்ச் டிரிங்க்கோ மட்டும் குடித்துக் கொண்டு, வழக்கமாக இரவு பனிரெண்டு மணி தாண்டியும், பேசிக் கொண்டே பொழுது போக்குவோம்.

மறுநாள் பில்லி ஊருக்குச் செல்வதாக இருந்தால், அன்று அவன் பார்ட்டி கொடுத்துக் கொண்டிருந்தான்.. மூன்றாவது இன்ஜினீயர் சஞ்சயும் இருந்தார்.

சஞ்சய் மிகவும் சாதுவானவர். அதிர்ந்து பேசி நான் பார்த்ததேயில்லை. பூனா அவரது சொந்த ஊர். கம்பெனியில் நீண்ட காலமாக இருப்பவர். கடின உழைப்பாளி.

மேலும் கம்பெனியில் அவருக்கு மிக நல்ல பெயர் இருந்தது என்பதும், நான் இந்த இரண்டு மாத காலத்தில் தெரிந்து கொண்ட விஷயங்கள்.

அவர் தன் மனைவி, குழந்தையின் வருகையை எதிர்பாத்து மிகவும் ஆவலோடு இருந்தார். நாங்கள் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, மெதுவாக அங்கே வந்த ரேடியோ ஆபிஸர், சஞ்சயை தனியே கூப்பிட்டு கேப்டன் அழைப்பதாகச் சொன்னார்.

என்ன விஷயம் என்று சொல்லவில்லை. எங்களையும் கூட வருமாறு சொன்னார். குழப்பத்துடன் எல்லோரும் மேலே கேப்டனின் அறைக்குச் சென்றோம். கேப்டன் முகத்தில் இறுக்கம். கையில் அப்போது வந்திருந்த தந்தி..

மெதுவாக எழுந்து சஞ்சயின் அருகே வந்த அவர், சஞ்சயின் தோள்களை அழுத்தி, "ஸாரி சஞ்சய்... இந்த துயரமான செய்தியை நான் உனக்குச் சொல்லியே ஆகவேண்டும்...மனதை திடப்படுத்திக் கொள்..." என்று சொல்லி நிறுத்திவிட்டு, பின் மெதுவாக "உன் தந்தை மரணமடைந்து விட்டார்" என்றார்.

சஞ்சய் மட்டுமல்ல.. நாங்கள் அனைவருமே அந்தச் செய்தி தந்த சோகத்தில் கலங்கிப் போனோம். அன்றிரவு நாங்கள் அனைவரும் சஞ்சயின் அறையில் இருந்தோம்.

அவரை ஆறுதல் படுத்தவே முடியவில்லை. சஞ்சயின் மனைவி அன்று காலையிலேயே புனேயிலிருந்து புறப்பட்டு கப்பலில் சேர்வதற்காக மும்பை போய்ச் சேர்ந்து விட்டதாகவும்,

ஜப்பானுக்கு புறப்பட விமான நிலையத்தில் காத்திருந்த கடைசி நேரத்தில், செய்தி சொல்லி திரும்ப ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்த தகவலும் மும்பையிலிருந்து கிடைத்தது.

என்ன ஒரு சோகமான நாள்... அது மட்டுமில்லை.. அதற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகள் இன்னும் கொடுமையானது.. தந்தை இறந்த விஷயம் கேள்விப்பட்ட எந்த ஒரு இந்தியனும் கண்டிப்பாக அடக்கம் செய்வதற்குள் கடைசியாக தந்தையின் முகத்தைப் பார்க்கத் தானும் போய்ச் சேர்ந்து விடத்தானே விரும்புவான்.

சஞ்சயும் உடனே இந்தியா புறப்பட விரும்பினார். அங்கேதான் சிக்கல். கப்பல் வாழ்க்கையில் அது பெரிய கொடுமை. நாம் நினைத்தவுடன் அப்படி கப்பலை விட்டுப்போய்விட முடியாது.

மூன்றாவது இன்ஜினீயரான அவரை விடுவிக்க இன்னொரு மூன்றாவது இன்ஜினீயர் கிடைக்க வேண்டும். காண்ட்ராக்ட் காலம் முடியும்முன் போவதால் கப்பலில் இருந்து இந்தியா போகும் விமான செலவை அவரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அது மட்டுமில்லாமல் அவரை விடுவிக்க வருபவரின் விமான மற்றும் ஏஜண்ட் செலவையும் இவரே ஏற்றாக வேண்டும். அப்படி ஏற்றுக் கொள்ளத் தயார் என்றாலும் உடனடியாக ரிலீவர் கிடைக்க வேண்டுமே.. அதுவும் சிரமம்.

நான்காவது இன்ஜினீயர் பில்லியை, ஜப்பான் வரைக்கும் மட்டுமே கப்பலில் இருக்கக் கம்பெனி கேட்டிருந்தததால், மறுநாள் மாலையில் பில்லி இந்தியா போவதாக இருந்தது.

ஆனால் பில்லி, சஞ்சய்க்காக தான் கப்பலில் இருப்பதாகவும், அதற்கு பதிலாக
சஞ்சயை இந்தியா அனுப்பவும் ஒப்புக் கொண்டான்...

கப்பல் இரண்டு நாள் கழித்து அடுத்த துறைமுகமான நகோயா போக இருந்தது.. அதற்குள் வேறு ஒரு மூன்றாவது இன்ஜினீயரை கம்பெனி ஏற்பாடு செய்ய வாய்ப்பு இருந்தது.

அப்படியே ஏற்பாடு செய்ய முடியாவிட்டாலும் கண்டிப்பாக எத்தனை நாள் முடியாவிட்டாலும் கண்டிப்பாக எத்தனை நாள் கழிந்தாலும் சரி, வேறு ரிலீவர் வரும் நாள்வரை இருப்பதாக பில்லி சம்மதித்தான்...

கப்பலில் மூன்றாவது இன்ஜினீயருக்குப் பதிலாக இன்னொரு நான்காவது இன்ஜினீயர் இருந்தாலும் போதுமானது. எனவே அந்த ஏற்பாடு பிரச்சனையில்லை என எல்லோருக்கும் தோன்றியது.

பாசம், உறவு என்பதெல்லாம் இந்தியர்களின் வாழ்க்கையில் இரத்தத்தில் ஊறிப்போன விஷயங்கள். ஆனால் பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் அதற்கெல்லாம் இடமில்லை போலும்!

அங்கே விரல் பிடித்து நடக்கும் வரைதான் தாய், தந்தை உறவெல்லாம், தானாக நடக்கத் தெரிந்துவிட்டால், அதன்பின் சிறகு முளைத்தவுடன் கூட்டைவிட்டு வெளியேறி பறக்க ஆரம்பித்துவிடும் பறவைகள் போல வீட்டை விட்டுத் தனியாக போய்விடும் துணிவுள்ள சமுதாயக் கட்டமைப்பு அவர்களுடயது என்று கேள்விப்பட்டிருந்தேன்.

அந்த வழியில் வாழ்ந்து பழக்கப் பட்டவர்கள்தானே எங்கள் கப்பலின் சீஃப் இன்ஜினீயரும், இரண்டாவது இன்ஜினீயரும். அவர்களுக்கு சஞ்சய் கப்பலைவிட்டு இந்தியா செல்வதில் சம்மதமில்லை.

ஒருவேளை அதே இடத்தில் ஒரு இந்திய சீஃப் இன்ஜினியர் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை உடனடியாக இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்திருப்பார்.

அவர்கள் சஞ்சயை அனுப்பாததற்கு ஒரே காரணம்தான் இருந்தது.. அவர்களுக்கு சஞ்சயின் துயரத்தை விட கப்பலின் மெஷின்கள் முக்கியமாகப் பட்டன. சஞ்சய் ஒரு அனுபவம் மிக்க இன்ஜினீயர்.

எந்தவித கோளாறு வந்தாலும் கஷ்டப்பட்டு அதை சரி செய்யாமல் இன்ஜின் அறையை விட்டு மேலே போகமாட்டார். எனவே இன்ஜினில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்கஅவர் கப்பலில் இருந்தாலும் நல்லது என்று சீஃப் இன்ஜினீயரும், இரண்டாவது இன்ஜினீயரும் முடிவு செய்திருக்க வேண்டும்.

மறுநாள் காலை கப்பல் கரைசேர்ந்தவுடன் அந்த ரிப்பேர் வேலையைத் தொடங்கலாம் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். எனவே சஞ்சய் போவதை அவர்கள் விரும்பவில்லை.

சஞ்சய் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து விட்டார்.

ஆனால் சீஃப் இன்ஜினியர் சம்மதிக்கவில்லை. கடைசியில் கண்ணீருடன் தன் தலைவிதியை நொந்தபடி அன்றிரவு தூங்காமலேயே கழித்தார். இங்கே யாருக்கு என்ன துக்கம்

இருந்தாலும் சில பிரிட்டிஷ்காரர்கள் அது பற்றி கவலைப்படுவதில்லை.
கண்டிப்பாக வேலை செய்தே கவேண்டும். அதிலும் அப்போதிருந்த இரண்டாவது இன்ஜினியர் சரியான 'Workaholic' என்று பெயர் வாங்கியவர்.

காலையில் சஞ்சய் இன்ஜின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்ததும் இரண்டாவது இன்ஜினீயர் அவர் கையைப் பிடித்துக் குலுக்கி, "ஐ'ம் வெரி ஸாரி, உனது தநதை இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்"- என்று வருத்தம் தெரிவித்து விட்டு செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டார்.

அவர்களைப் பொருத்தவரை துக்கம் என்பது அவ்வளவுதான். வேலை நடந்தாக வேண்டும். எந்தவித பிரச்சனை வந்தாலும் சமாளித்து கப்பலை ஓட்ட வேண்டும். கம்பெனியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்.

கடைசியில் அன்று நெஞ்சம் முழுவதும் துயரத்துடன், ஓய்வே எடுக்காமல் வேலை பார்த்து பிரச்னையை சரி செய்த பின்தான் அறைக்குப் போனார் சஞ்சய். அந்தத் துறைமுகத்தில் இருந்து அவர் விடுவிக்கப் படவும் இல்லை.

இரண்டு நாள் கழித்து அடுத்த துறைமுகமான நகோயா போய்ச் சேர்ந்தவுடன் அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள். ஒரு மூன்றாவது இன்ஜினியர் மனைவியுடன் வந்தார். புதிதாக கெளதம் என்ற நான்காவது இன்ஜினீயரும் வந்திருந்தான்.

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை நேரில் பார்க்கும் போதெல்லாம் என்ன வாழ்க்கை இது என்று கப்பல் வாழ்க்கை மீது வெறுப்பு தோன்றும்.

ஆனால் சஞ்சய் அந்த விஷயத்தில் கொஞ்சம் பணிந்து போய் விட்டார் என்பது, அடுத்த பதினைந்து நாள்களில் அதே கப்பலில் நடந்த இன்னொரு சம்பவம் புரிய வைத்தது.

கப்பல் அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள 'டால்ரிம்பிள் பே' (Dalrimple Bay) என்ற துறைமுகத்திற்குச் சென்றது. அங்கிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு டென்மார்க் செல்ல இருந்தது.

சுமார் ஐம்பது நாள் பயணம். கப்பலில் இருந்த இரண்டாவது நேவிகேட்டிங் ஆபிஸரின் காண்ட்ராக்ட் முடிய இன்னும் ஒரு சில நாட்களே இருந்தன. அவர் தன்னை விடுவிக்கும் படி ஏற்கனவே கம்பெனியிடம் விண்ணப்பித்திருந்தார்.

அவர் ஒரு வங்காளி. பெயர் ஏதோ 'பானர்ஜி' என்று நினைக்கிறேன். கண்டிப்பாக இன்னும் பத்து தினங்களுக்கு ஊரில் இருந்தாக வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது.

ஆனால் அவரை ரிலீவ் செய்ய யாரும் வருவதாகத் தெரியவில்லை. கப்பல் துறைமுகத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. அவர் கண்டிப்பாக அந்தத் துறைமுகத்தில் இருந்து வீட்டுக்குப் போயே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

ஏற்கனவே சஞ்சய்க்கு நேர்ந்த கதியை அவர் கண்கூடாகப் பார்த்திருந்தார். கப்பலுக்கு வந்திருந்த துறைமுக அதிகாரிகளைச் சந்தித்து புகார் கொடுக்க நினைத்தார். ஆனால், கேப்டன் அந்த அதிகாரிகளைச் சந்திக்க அனுமதிக்கவில்லை.

அதிகாரிகள் கேப்டனின் அறையில் இருந்தனர். ஆனால் கேப்டன் இவரை¨ அறைக்குள் செல்லவே விடவில்லை. கோபத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறிய அவர் அடுத்த இரு நிமிடங்களில் வேகமாகத் திரும்பினார்.

சாத்தியிருந்த கேப்டனின் அறையை 'படபட'வென்று தட்டினார். கோபத்துடன் கதவைத் திறந்த கேப்டன் எதிரே கண்ட காட்சியில் பயந்து போய் சட்டெனப் பின் வாங்கினார்.

அவர் அறை வாசலில் இடது கையில் இரத்தம் சொட்டச் சொட்ட இரண்டாவது ஆபிஸர். அறைக்குப் போன இரண்டாவது ஆபிஸர், முன்கையில் பிளேடினால் கீறிக் கொண்டு ரத்தத்துடன் திரும்பியிருந்தார்.
-------


அத்தியாயம் 26

றைக்குப் போன இரண்டாவது ஆபிஸர், முன்கையில் பிளேடினால் கீறிக் கொண்டு ரத்தத்துடன் திரும்பியிருந்தார்.

அவ்வளவுதான்.. பதறிப் போன கேப்டன் அடுத்த ஐந்தே நிமிடத்தில் அவரை கப்பலில் இருந்து வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து விட்டார்.(கப்பலில் இருந்து ரிலீவ் ஆவதை 'Sign Off' என்பார்கள்).

சூட்கேஸ்களைச் சுமந்து கொண்டு, கையில் பேண்டேஜுடன் கப்பலை விட்டுப் புறப்பட்ட அவரை "ஏன் அப்படி பிளேடால் கீறிக் கொண்டீர்கள்.." என்று கேட்டேன்.

அவர் சிரித்துக் கொண்டே, "ஜாக்கிரதையாகத்தான் கீறிக்கொண்டேன்.. ஒரு பரபரப்புக்காக அதைச் செய்தேன். ஆனால் அப்படியெல்லாம் செய்யாவிட்டால் இவர்கள் கண்டிப்பாக விடுவிக்க மாட்டார்கள்" என்றார்.

நான் சஞ்சய் விஷயத்தில் நடந்ததை நினைத்துக் கொண்டேன்.. பானர்ஜி இந்த கம்பெனிக்கு திரும்ப வரப்போவதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தார்.. அதனால் துணிந்து அப்படி ஒரு செயலை செய்தார்.

வேறு இரண்டாவது ஆபிஸர் இல்லாமலேயே கப்பல் அங்கிருந்து புறப்பட்டு, 'மெல்பர்ன்' அருகே சென்றபோது, ஹெலிகாப்டரில் வந்து புதிய இரண்டாவது ஆபிஸர் கப்பலில் சேர்ந்தார்.

ஒரு சிலர் பானர்ஜியை 'பைத்தியம்' என்றனர்.. சிலர் 'புத்திசாலி' என்றனர். எப்படியோ.. அது போன்ற சம்பவங்கள் எதுவும் அதன்பின் அந்தக் கப்பலில் நடக்கவில்லை.

ஆஸ்திரேலியாவில் இரண்டாவது இன்ஜினீயரான பழைய ஆள் போய் இன்னொருவர் வந்திருந்தார். பிரிட்டிஷ்காரர். ஜான் பேட்டர்ஸன் என்று பெயர். கொஞ்சம் ஜாலியானவர்..

எனவே கப்பல் வாழ்க்கையும் சந்தோசமாகவே போய்க் கொண்டிருந்தது.

பொதுவாக வயதான பிரிட்டிஷ்காரர்களிடம் இந்தியர்கள் என்றால் 'இரண்டாம் தர குடிமக்கள்' என்ற அந்த எண்ணம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் கொஞ்சம் இளைஞர்களான பிரிட்டிஷ்காரர்கள் அப்படி நினைப்பதில்லை.. சமமாக நடத்தும் மனநிலை இருக்கிறது. பாட்டர்ஸன் நாற்பதைக் கடந்தவர் என்றாலும் இந்தியர்களிடம் மிகவும் அன்பாகவே நடந்து கொள்வார்.

இவரிடம் ஒரு வினோதமான பழக்கம் இருந்தது. வயது வித்தியாசமோ, பதவி வித்தியாசமோ பார்க்காமல் யாரைப் பார்த்தாலும் ஒரு குறும்பு செய்வார்.

வேறொன்றுமில்லை.. திடீரெனக் குனிந்து எதிரே நிற்பவரின் தொடையில் கிள்ளிவிடுவார். இதனால் அவரைச் சந்திக்க நேரும்போது எல்லோரும் ஜாக்கிரதையாக சற்று விலகியே நிற்போம். அவரது இந்தப் பழக்கம் எங்கள் கம்பெனியில் பணிபுரியும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகி விட்டது.

(சில வருடங்கள் கழித்து அவர் சீஃப் இன்ஜினீயராக இருந்தபோது, மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.. ஆனால் அந்தப் பழக்கத்தை கைவிட்டிருந்தார்.. 'ஏன்' என்று கேட்டபோது சிரித்துக் கொண்டே பதில் சொல்லாமல் சமாளித்து விட்டார்.

பின்னால் கேள்விப் பட்டேன்... பழக்கதோசத்தில் இன்னொரு ஆபிஸரின் மனைவி என்பதை மறந்துவிட்டு ஒரு பெண்ணிடமும் கை நீட்டப் போய் விட்டாராம். பிரச்னை பெரிதாகாமல் சமாளித்து விட்டார்கள்.

அப்போதிலிருந்து அந்த 'சேட்டை'யைக் குறைத்து விட்டாராம். செய்தாலும் செய்திருப்பார்.. ஏனெனில் நானிருந்த அதே கப்பலில் சஞ்சய்க்குப் பதிலாக சேர்ந்திருந்த ஒரு மும்பை இந்தியரின் மனைவியை 'பார் பி க்யூ' பார்ட்டியின்போது குடிபோதையில் தூக்கி, டான்ஸ் ஆடக் கட்டாயப்படுத்திய சம்பவத்தையும் ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன்.

அதிகம் குடித்துவிட்டால் மனிதர் கொஞ்சம் பிரச்னைக்குரியவர்.. இந்த மாதிரி மனிதர்களால் நிறைய இந்திய ஆபிஸர்கள் தங்கள் ம்னைவியை கப்பலுக்கு கூட்டி வருவதும் இல்லை.

ஆனால் குடிக்காதபோது அவர் மாதிரி நல்ல மனிதரைப் பார்ப்பதும் அபூர்வம்.)


ப்பல் இந்தியப் பெருங்கடலில் பயணித்து, அதன்பின் அரபிக்கடலில் நுழைந்திருந்தது..

சூயஸ் கால்வாய் (Suez Canal) வழியாக மத்திய தரைக்கடல் பகுதிக்குப் போய், அங்கிருந்து டென்மார்க் செல்ல இருந்தது.

அரபிக்கடலில் மேலே போகப்போக வெப்பம் அதிகமாகிக் கொண்டிருந்தது. வழக்கமாக கப்பல்களின் இன்ஜின் அறை கொஞ்சம் சூடாகவே இருக்கும்.

ஆனால் அந்தக் கப்பலின் இன்ஜின் அறையின் வெப்பம் மிகவும் அதிகமாக இருந்தது. சாதாரணமாகவே நாற்படி டிகிரி சென்ட்டிகிரேட் இருக்கும்.

நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த 'ப்யூரிஃபையா' (Purifier) அறைக்குள் ஏற்கனவே நிறைய நீராவி பைப்புகளும், சூடாக்கப்பட்ட ஆயில் டாங்க்கின் இரும்புச்சுவரும் இருந்ததால்,அந்த அறையின் வெப்பநிலை ஐம்பது டிகிரியில் இருந்தது.

அன்று மாலைக்குள் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முடித்தாக வேண்டும். அந்த வெப்பத்தில் உடம்பே கொதித்தது. வியர்வை வெள்ளமாக ஓடியது..

தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு மேல் அந்த அறைக்குள் நிற்க முடியாமல், அடிக்கடி வெளியே ஓடிவந்து, ஓரளவு குளிர்ந்த காற்று வரும் இடத்தில் நின்றேன்.

தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது. இம்மாதிரி அதிக வெப்பம் உள்ள கடல்பகுதியில் கப்பல் பயணிக்கும் போது, அதிகம் வியர்ப்பதால் உடலிலுள்ள தண்ணீருடன் உப்புச் சத்தும் வெளியேறுகிறது.

அதைச் சமாளிக்க, வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பதால் தாகம் அடங்காத நிலையே ஏற்படுகிறது. உப்பு இழப்பைச் சமாளிக்க இது போன்ற நேரங்களில் கப்பலில் 'Salt Tablets' எனப்படும் மாத்திரைகள் உண்டு.

நானும் இரண்டு மாத்திரைகளை வாயில் போட்டுத் தண்ணீர் குடித்தபின் தாகம் அடங்கியது. இந்தக் கப்பலில் தமிழர்கள் யாரும் கிடையாது.. எனவே யாருடனும் நான் நான்கு மாதங்களாக தமிழே பேசியதில்லை..

அதை நினைக்கும் போது எரிச்சலாக வந்தது.. பனிரெண்டு மணிக்கு சாப்பிட மேலே போனேன்.. இந்தக் கப்பலில் தங்கும் தளத்திலிருந்து இன்ஜின் அறைக்குச் செல்ல லிஃப்ட்வசதி இருந்தது. (எல்லாக் கப்பல்களிலும் லிஃப்ட் வசதி இருப்பதில்லை.)

இன்ஜின் அறையிலிருந்து லிஃப்டில் நுழைந்தேன்.. மிகவும் சோர்வாக இருந்தது.. திடீரென்று தமிழில் பேசிப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. என்ன பேசுவது.. சட்டென கட்டபொம்மன் வசனம் பொருத்தமாகத் தோன்றியது.

'கொஞ்சி விளையாடும் எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா; மானங்கெட்டவனே' என்ற சிவாஜி ஸ்டைலில் சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென லிஃப்டின் கதவு திறந்து கொண்டது.

இன்னொரு தளத்தில் இருந்து லிஃப்டில் ஏறுவதற்காக அதை அழைத்திருந்த பாட்டர்ஸன் லிஃப்டின் வெளியே நின்று கதவைத் திறந்திருந்தார். லிஃப்ட் நின்றதுகூடத் தெரியாமல் தமிழ் பேசும் உற்சாகத்தில் இருந்திருக்கிறேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

அப்போதைக்கு சிரித்து சமாளித்து விட்டேன். ஆனால், கப்பலில் இருந்த மற்ற எல்லோரிடமும் நான் தனியாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றிச் சொல்லி விட்டார். எனக்கிருந்த தமிழ் பேசும் தாகம் அவர்களுக்கெங்கே புரியப் போகிறது.

நான் அப்படி தனியாக தமிழில் பேசியதைப் பார்த்த பாட்டர்ஸன் அன்று மாலை அதை நினைவில் வைத்துக்கொண்டு, "நீ இந்தக் கப்பலில் சேர்ந்து எத்தனை நாட்கள் ஆகின்றன" என்று கேட்டார்.

"நான்கு மாதம்" என்றேன்.

அவர், பாரில் இருந்த மற்றவர்களைப் பார்த்து, "அதற்குள்ளாகவா.. வழக்கமாக கடலில் ஆறுமாத காலம் தொடர்ந்து இருப்பவர்களைத் தான் நான் இந்த மாதிரி நிலையில் பார்த்திருக்கின்றேன்.. இவனுக்கு நான்கு மாதத்திலேயே ஆரம்பித்து விட்டது" என்று சொல்லவும் நான் உட்பட அனைவரும் சிரித்தோம்.

(கப்பலில் ஒருவர் ஆறு மாதத்துக்கு மேல் வேலையில் இருந்தால், அவரது மனநிலை, சராசரி மனிதனின் மனநிலையில் இருக்காது என்று எப்போதும் எல்லாக் கப்பல்களிலும் கிண்டலடித்துக் கொள்வது வழக்கம்.

சில நாடுகளில், கப்பல் வாழ்க்கையில் இருப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் வேலையில் தொடர்ந்து இருந்து விட்டு, ஊருக்குத் திரும்பும்போது, ஏதாவது ஒரு வழக்கு விசாரணைக்காக சாட்சியம் சொல்ல நேரிட்டாலும், அவர்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்வதில்லையாம்.

குறிப்பிட்ட காலத்துக்குமேல் கரையில் வசிக்காமல், கடலிலேயே வாழ்க்கையைக் கழித்து விட்டு வரும் கப்பல்வாசிகளின் சாட்சியத்தை 'சராசரி மனிதன்' சொல்லும் சாட்சியமாக,

அந்த நாட்டின் நீதி மன்றங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்ற கருத்தை கப்பல்வாசிகள் பலர் சொல்லவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று நான் தனியாகப் பேசிக் கொண்டிருந்ததை நினைத்த போது, இது நினைவுக்கு வந்தது.)

கப்பல் சூயஸ் கால்வாயை அடைந்து அங்கு நங்கூரமிட்டது.



சூயஸ் கால்வாய் எகிப்து நாட்டில் உள்ளது. மத்திய தரைக்கடலையும் (Mediterranean Sea), செங்கடலையும் (Red Sea) இணைக்கிறது இந்தக் கால்வாய். சூயஸ் கால்வாய் வழியாக கப்பல் போவதற்கு எகிப்து நாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும்.

இரவும் பகலும் இந்தக் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடை பெறுகிறது. செங்கடல் பகுதியிலிருந்து வரும் கப்பல்கள் கால்வாயின் தென்பகுதியில் இருக்கும்

சூயஸ் துறைமுகத்திற்கு வந்து முதலில் நங்கூரமிட வேண்டும்.

ஒவ்வொரு கப்பலும் எந்த நேரத்தில் கால்வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்கான தனித்தனி விதிகள் உண்டு. இந்தக் கால்வாயில் ஒரு சமயத்தில் ஒரு பக்கத்திலிருந்து செல்லும் கப்பல்கள் போய் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன், எதிர் திசையில் இருந்து கப்பல்களை கால்வாய்க்குள் அனுப்புவார்கள்

கால்வாயின் அகலமான சில பகுதியில் மட்டும் எதிரெதிரே இரண்டு கப்பல்கள் செல்லவும் முடியும். இதில், பின்னால் வந்து சேர்ந்த கப்பல்களை சீக்கிரமே போகும் லிஸ்டில் சேர்த்து, பணம் சம்பாதிக்கும் இடைத்தரகர்களும் உண்டு..

இவர்களுக்கு விஸ்கி பாட்டில்கள், சிகரெட் என்று கொடுத்தால் இது போன்ற சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் செய்து கொடுப்பார்கள்.

'மார்ல்பரோ' சிகரெட் பாக்கெட்டுகள் கொடுத்தால் போதும், எந்த வேலையையும் செய்ய வைக்கலாம் என்ற நிலை முன்பு இருந்த காலத்தில் இந்தக் கால்வாய்க்கு 'மார்ல்பரோ கனால்' என்ற பெயர் கப்பல்வாசிகளின் மத்தியில் மிகப்பிரபலம்.

கால்வாயைக் கடப்பதற்கு பைலட்டுகள் கண்டிப்பாகத் தேவை. (துறைமுகங்களில் கப்பலைக் கரை சேர்க்க, பைலட்டுகளின் அவசியத்தைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்).

பைலட்டுகளைத் தனியாக 'கவனிக்க' வேண்டும். இவர்களுக்கென்றே தனியாக விஸ்கி பாட்டில், சிகரெட் எல்லாம் கேப்டன் எடுத்து வைத்து விடுவார்.

இதை விட சூயஸ் கால்வாயில் கப்பலில் வியாபாரம் செய்ய வரும் எகிப்திய வியாபாரிகளின் தொல்லை கலந்த 'லொள்ளு' தாங்க முடியாது.

நம்மூர் குடுகுடுப்பைக்காரர்கள் போல் ஒரு உடை. விலை சொல்லும்போதும், பேரம் பேசும்போதும், ஏதோ உலகத்திலேயே நம் ஒருவருக்காகத்தான், அந்த அளவுக்கு விலையைக் குறைத்துச் சொல்கிறாற்போல் மூச்சுக்கு மூன்று தடவை 'மைஃபிரண்ட்.. ஒன்லி ஃபார் யூ... வெரி சீப்..' என்று சொல்லி விடுவார்கள்.

அங்கே கிட்டத்தட்ட எல்லா பொருள்களுக்கும் 'டூப்ளிகேட்' செய்து விற்று விடுவார்கள். இவர்களிடம் உள்ள ஒரு சிறப்பு, இதைத்தான் விற்பனைக்கு கொண்டு வருவார்கள் என்ற வரம்பே கிடையாது.

எதைவேண்டுமானாலும் விற்பார்கள். அதேபோல் எதை வேண்டுமானலும் வாங்கிக் கொள்வார்கள். கூடியவரை இங்கே வியாபாரம் என்பது பண்டமாற்று முறையில் நடக்கும்.

கப்பல் பயணத்தின்போது பொதுவாக யாரும் தங்களின் அறைகளை பூட்டுவது கிடையாது. ஆனால் சூயஸ் கால்வாய் பயணத்தின்போது கப்பலில் இருப்பவர்கள் பூட்டாமல் போய்விட்டால் அவ்வளவுதான்.

சூயஸ் வியாபாரிகள் கப்பலுக்கு வரப்போகிறார்கள் என்று கேள்விப் பட்டவுடன் மிகவும் ஜாக்கிரதையாக நம்முடைய அறைக்கதவுகளை திண்டுக்கல் பூட்டு கொண்டு பூட்டாத குறையாக இழுத்து மூடிவிட வேண்டும்.

'பலே திருடர்களோ?... கொள்ளையடித்துக் கொண்டு போய் விடுவார்களோ!' என்று பயப்படத் தேவையில்லை. கொண்டு போய் விட மாட்டார்கள்.

ஆனால் இன்னொரு வேலை செய்வார்கள். கப்பலின் தங்குமிடத்தில் உள்ள நடைபாதையில் பொருட்களை வைத்து 'பிளாட்பார வியாபாரம்' போல் செய்யும் இவர்களிடம் ஏதாவது பொருள் வாங்கலாம் என்று நினைத்து விருப்பப்பட்ட பொருளை பேரம் பேசி வாங்கினால் ஆபத்து...

அது ஏற்கனவே நம் கப்பல் நண்பர்கள் அறையிலிருந்து அடிக்கப்பட்ட பொருளாக இருந்துவிட நிறையவே வாய்ப்புகள் உண்டு. அதைவிட அதிசயம், நம் அறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளையே, நம் கண்முன்னால், நம்மிடமே விலை பேசும் அநியாயம்..

கில்லாடிகள் இவர்கள். எனவே, சூயஸ் வியாபாரிகள் என்றால் மிகவும் ஜாக்கிரதையாகஇருக்க வேண்டியது அவசியம். எங்கள் கப்பலுக்கும் வந்தார்கள்..

எகிப்தின் நினைவுச்சின்னங்கள், பிரமிடுகளின் மாடல்கள் என்று ஏகப்பட்ட பொருட்களுடன் பேண்ட், டீ-சர்ட், பனியன் எல்லாமே இருந்தது.

நான் எனக்குப் பிடித்த ஒரு பொருளின் விலை கேட்டேன். சென்னை பர்மா பஜார் வியாபாரிகள் தோற்றார்கள் இவர்களிடம்.

"மை ஃபிரண்ட்.. யூ இண்டியன்.. ஐ லைக் இண்டியன் ஃபுட் வெரி மச்.." என்று ஆரம்பித்து, முதலில் நாற்பது அமொக்க டாலரில் ஆரம்பித்தான்.

அதன் விலை பத்து டாலர்தான் இருக்கும்..

"பத்து டாலருக்குத் தருவாயா" என்று கேட்டேன்.

"நோ.. நோ.. திஸ் இஸ் ஒரிஜினல்.." என்று சொல்லிவிட்டு, "ஓ.கே. லாஸ்ட் ப்ரைஸ்... ட்வெண்ட்டி டாலர்" என்று சட்டென்று பாதி விலைக்கு குறைந்தான்.

கடைசியில் இறங்கி வந்து, "ஃபைனல் ரேட்.. பிகாஸ் யூ ஆர் மை பெஸ்ட் ஃபிரண்ட்(!).." என்று சொல்லி பத்து டாலருடன், கப்பலில் இருக்கும் இந்திய ஊறுகாய் பாட்டில்கள் இரண்டு தரும்படி கேட்டான்.

கப்பலில் நிறைய ஊறுகாய் பாட்டில்கள் இருந்தன.ஆனால் அது கப்பலின் சமையல்காரரிடம் வாங்க வேண்டும். நான் ஊறுகாய் சாத்தியமில்லை என்றேன்.. அட்லீஸட் கொஞ்சம் மசாலாப் பொடியாவது வாங்கிக் கொடு என்றான்.

நான் அதுவும் முடியாத காரியம் என்றேன்.கடைசியில், என்னிடமிருக்கும் சோப்புக் கட்டிகள் மூன்றாவது கொடுத்தால் போதுமென்றான்.. நான் பத்து டாலருடன், எனது அறையில் இருந்த சோப்புக் கட்டிகளைக் கொடுத்த பின் விட்டான்.

இதிலே அதிகமாக பேரம் பேசி வெற்றி பெருபவர்கள் கப்பலின் சமையல் டிபார்ட்மெண்ட் சேர்ந்தவர்கள்தான். கப்பலில் இரண்டு சமையல்காரர்கள், மற்றும் இரண்டு 'ஸ்டூவர்ட்ஸ்' (உதவியாளர்கள்) உண்டு.

ஊறுகாய், மசாலா பொடி மட்டுமே கொடுத்து பொருள் வாங்கிவிடும் கில்லாடிகள் இவர்கள். 'ஸ்டூவர்ட்ஸ்' என்ற உதவியாளர்கள் உணவு பரிமாறும் பணி, ஆபிஸர்களின் அறையைச் சுத்தம் செய்யும் பணி போன்றவற்றைச் செய்கிறார்கள்).

கடைசியில் ஒரு வழியாக சூயஸ் கால்வாயைக் கடந்து, கப்பல் மத்திய தரைக்கடலில் நுழைந்தது.

அதைத் தாண்டி ஜிப்ரால்டர் ஜலசந்தி.. கம்பீரமாகத் தோற்றமளிக்கும் ஜிப்ரால்டர் பாறையின் உறுதியில் என்னை மறந்து நின்றேன்.

அதன்பின் ஆர்ப்பரிக்கும் அலைகளைக்கொண்ட 'பே ஆஃப் பிஸ்கே' கடல்.. சமாளித்து,இங்கிலீஷ் கால்வாயில் பயணித்து கடைசியில் டென்மார்க் நாட்டிலுள்ள 'என்ஸ்டெட்' (Ensted) துறைமுகத்தை அடைந்தது.

இரவு ஒன்பது மணியிருக்கும்...கப்பலில் இருந்த 'கேடட்' இந்தியா திரும்பத் தயாராக இருந்தான். அவனை விடுவிக்க சென்னையிலிருந்து ஆனந்தன் என்ற கேடட்வர இருந்தான்.

('கேடட்' - நேவிகேஷன் டிபார்ட்மெண்ட்டின் டிரெயினிங்கில் சேரும் பதவிக்கான பெயர்.)

அவனும் வந்தான். 'வாழ்க்கையில் கேப்டனாகி விட வேண்டும்' என்ற லட்சியக் கனவுடன் வந்த அவன், கடைசியில் கடலுக்கே தன்னைப் பறி கொடுத்தான்.
-----------


மிழ்நாட்டிலிருந்து ஒருவன் வர இருந்த மகிழ்ச்சியில், ஆனந்தனின் (நிஜ பெயர் வேறு) வரவை எதிர்பார்த்து தளத்தருகே நான் நின்று கொண்டிருந்தேன்.

ஏஜெண்ட்டின் கார் வந்து நிற்கவும் அதிலிருந்து இறங்கி கப்பலின் படியில் ஏறிய அவனுக்கு வயது பத்தொன்பது இருக்கலாம்.

முதல் பார்வையில் அவனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து வருபவன் என்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு,

"தமிழ் பேசுவாயா" என்று கேட்டேன்.

"நல்லாவே பேசுவேன். எந்த ஊர்த்தமிழ் வேணும்.. மதுரைத் தமிழில் உரையாடவா.. இல்லை மெட்ராஸ் பாஷையில் பேசவா" - சிரித்துக் கொண்டே அறிமுகமான அவன் வாழ்க்கை கொடுமையான சோகத்தில் முடியக்கூடும் என்று அப்போது எங்கள் இருவருக்கும் தெரியாது.

கப்பல் டென்மார்க்கிலிருந்து கனடாவை நோக்கிப் புறப்பட்டது. இயல்பாகவே எப்போதும் கலகலப்பாகவே பழகும் அவன் வெகுவிரையில் அந்தக் கப்பலின் செல்லப்பிள்ளையாகி விட்டான்.

சோகமான மனநிலையில் யாராவது இருந்தால் போதும்... ஆனந்தன் போய் அவர்களிடம் ஐந்து நிமிடம் பேசினாலே போதும்.. உடனே கவலை மறந்து சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

வேலையிலும் 'ஸ்மார்ட்' என்று பிரிட்டிஷ்காரர்களிடமே நல்ல பேர் வாங்கிவிட்டான். அவனுக்குள் கப்பல் பற்றிய கனவு நிறையவே இருந்தது. சின்ன வயதில் இருந்தே கப்பலில் கேப்டனாக வர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்திருக்கிறான்.

அவனது தந்தையும் ஏற்கெனவே இந்திய கடற்படையில் உயர்ந்த பதவியில் இருந்ததால், இயல்பிலேயே கப்பல் வாழ்க்கையில் அவனுக்கும் பிடிப்பு வந்ததில் ஆச்சரியமில்லை. பள்ளிக் கூடத்தில் படிக்கும் நாட்களிலேயே ஒரு பயணியாக கப்பல் பயணம் செய்து அந்தமானுக்குச் சென்றிருக்கிறான்.

அந்தக் கப்பலில் மீதியிருந்த நாட்கள் எனக்கு போன வேகமே தெரியவில்லை. கப்பல் வாழ்க்கையைப் பற்றி நன்றாகத் தெரிந்து, எனக்கு அது பிடித்துப் போனது மட்டுமல்லாமல்,

ஆனந்தன் மாதிரி ஒரு இனிய நண்பன் கிடைத்ததும், எனது சந்தோஷத்துக்கு முக்கியக் காரணம்.

அந்த ஒரு வசந்த கால வாழ்க்கையை முடித்துக்கொண்டு, கப்பலை விட்டு லீவில் வீடு திரும்பும் நேரம் வந்தது. கப்பலில் இருந்து எனது சூட்கேஸ்களில் ஒன்றைச் சுமந்து கொண்டு டாக்ஸி வரை வந்து வழியனுப்பி வைத்தான்.

அதன்பின், எனது கம்பெனியின் அடுத்த கப்பல்களில் சேரும் போதெல்லாம், நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்று தெரியும்போது, "உனக்கு ஆனந்தனைத் தெரியுமா?" என்று மற்றவர்கள் கேட்பது வழக்கம்.

இந்தியர்கள் மட்டுமல்ல, பிரிட்டிஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் எல்லோரின் அபிமானத்தையும் அவன் பெற்றிருந்தான் என்பது எல்லாக் கப்பல்களிலும் எனக்குத் தெரிந்தது.

சில வருடங்களுக்குப் பின் மும்பை அலுவலகத்தில் வைத்து அவனைச் சந்தித்தபோது நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதே சிரித்த முகம்.

அன்றுதான் அவனை நான் கடைசியாகச் சந்தித்தது. அதன்பின் அவன் வேறு கம்பெனி ஒன்றில் சேர்ந்து விட்டதாக கேள்விப்பட்டேன்.

ஜூ.வி.யில் இந்தத் தொடர் எழுதுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் சொன்ன தகவல் என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"உனக்குத் தெரியுமா... ஆனந்தன் ஜப்பானுக்கு அருகே கடலில் விழுந்து விட்டான்" என்றார் அவர்.

"எந்த ஆனந்தன்.. நம்ம கம்பெனியில் இருந்தவனா?" - நான் பதற்றத்துடன் கேட்டேன். அவனாக இருந்துவிடக்கூடாது என்று மனம் பதைபதைத்தது.

கடைசியில் அது அவனேதான. என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அதன்பின் பலரிடமும் கேட்டபோது அந்தச் செய்தியை உறுதி செய்தார்கள்.

அது எப்படி நிகழ்ந்தது என்று இன்று வரை ஒரு மர்ம முடிச்சாகவே உள்ளது. யாருக்கும் பதில் தெரியவில்லை. கிடைத்த தகவல்களிலிருந்து என்னால் யூகிக்க முடிந்தது இதுதான்.

எங்கள் கம்பெனியை விட்ட பின்பு, வேறொரு கம்பெனியின் கப்பல் ஒன்றில் இரண்டாவது ஆபிஸராக பிரமோஷன் கொடுப்பதாக உறுதியளித்ததால், அவன் அந்த கம்பெனியில் சேர்ந்திருந்தான்.

ஒரு கப்பல் முடித்துவிட்டு, லீவில் இறங்கிய அவனை, விடுமுறைக் காலம் முடியும் முன்பாகவே வேறொரு கப்பலில் சேர அழைத்திருக்கிறார்கள். அந்தக் கப்பலில் இருந்த கேப்டன்,

ஆனந்தனுக்கு ஏற்கெனவே அறிமுகமாவனர்.

ஆனந்தன் வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் விரும்பிக் கேட்டுக் கொண்டதால், லீவு முடியும் முன்பே அவனும் சேர ஒப்புக் கொண்டுள்ளான். மேலும் அதே கப்பலில் அவனுக்கு சீஃப் ஆபீஸராக விரைவில் பதவி உயர்வு தரவும் தயாராக இருந்தனர்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் போய் சேர்ந்தவுடன் சென்னையிலுள்ள அவனது வீட்டுக்கு போன் செய்திருக்கிறான். ஜப்பானில் உள்ள இன்னொரு துறைமுகத்துக்கு கப்பல் புறப்பட்டிருக்கிறது.

அன்று காலையில் கப்பல் புறப்பட்டபின், நண்பகல் பன்னிரண்டு மணிக்கு டியூட்டியில் இருந்துள்ளான். இரவு உணவுக்குப் பின் நெடுநேரம் கேப்டன் மற்றும் சக ஆபிஸர்களுடன் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, தூங்கப் போய்விட்டான்.

அவ்வளவுதான்... அதன்பின்பு நடந்த சம்பவங்கள் இன்னும் தீர்க்கப்படாத ஒரு மர்மத்தின் சாட்சியங்கள்...

இரவு பன்னிரண்டு மணி டியூட்டிக்காக மாலுமி போய், அறைக் கதவைத் தட்டிப் பார்த்தால் ஆளே இல்லை.

கேப்டனுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டு கப்பல் முழுதும் தேடிப்பார்த்தும் கப்பலுக்குள் ஆனந்தன் இருக்கும் அடையாளமே இல்லை. அவனைக் கடைசியாக நான்கு மணி நேரத்து முன்பு பார்த்ததுதான்.

எனவே, கப்பலைத் திருப்பிக் கொண்டுபோய், வந்த வழியில் எல்லாம் தேடியிருக்கிறார்கள். கப்பலில் இருந்து தவறி விழுந்தவர்களைத் தேடும் எல்லாம் முறைகளும் பின்பற்றப்பட்டன.

மற்ற கப்பல்கள்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. கம்பெனியின் இந்திய அலுவலகத்துக்கும் தகவல் அனுப்பப்பட்டு, அவனது பெற்றோருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது.

இம்மாதிரி நேரங்களில் சம்பந்தப்பட்டவரை 'காணவில்லை' (Missing) என்று மட்டும் குறிப்பிடுவார்கள். 'இறந்துவிட்டான்' என்று முடிவு செய்வதில்லை.. ஏனென்றால், ஒரு வேளை தவறி விழுந்து யாராவது காப்பாற்றி, திரும்ப வரவும் வாய்ப்பிருக்கிறது அல்லவா?

மேலும் கப்பல் அப்போது இருந்த இடம், கரையில் இருந்து அதிக தொலைவும் இல்லை. நிறைய மீன்பிடிப்படகுகளும் அந்தப பகுதியில் இருந்திருக்கின்றன.

இதோ, ஆனந்தன் காணாமல் போய ஆறு வருடத்துக்கு மேல் உருண்டோடி விட்டது. இன்னும் அந்த மர்மமான மறைவுக்கு விடை கிடைக்கவில்லை.

ஷூ அணியாமல் வெறும் செருப்பு மட்டுமே அணிந்து கொண்டு தளத்தின் அருகே நடந்து ஒருவேளை தவறி விழுந்திருக்கலாம் என்று கருத்து நிலவினாலும், கப்பலில் வேலை செய்பவர்கள், இதை சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மிகவும் கலகலப்பாகப் பழகக்கூடிய அவனுக்கு எதிரிகள் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. அதுவும் அந்தக் கப்பலுக்குப் போய்ச் சோந்த ஒரே நாளுக்குள் யாரிடமும் அவ்வளவு தூரம் பகைமை ஏற்பட்டிருக்க முடியாது.

அவனிடம் கூட, ஒருவனால் பகைமை கொள்ள முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஒரே மகனைப் பறிகொடுத்த சோகத்தில் அவனது பெற்றோர்.

சமீபத்தில் (கட்டுரை ஜூவியில் தொடராக வந்த சமயத்தில்) அவர்களைச் சந்தித்த போது அவனது தாய் 'இன்னும் என் மகன் உயிரோடு இருக்கிறான்' என்றே நம்பிக்கையுடன் காத்திருப்பது புரிந்தது. அவர் சென்னையில் உள்ள பிரபல கண்மருத்துவ நிபுணர்களில் ஒருவர்.

"என் மகன் எப்படியும் தப்பித்து கரை சேர்ந்திருக்க வேண்டும்.. அல்லது யாராவது காப்பாற்றி இருக்க வேண்டும். ஒரு வேளை நினைவு மறந்து போய் இருக்கலாம். எப்போதாவது நாங்கள் வீட்டில் இல்லாத சமயம் கூப்பிட்டால் என்னாவது என்று தொலைபேசியுடன் குரலைப் பதிவு செய்யும் இயந்திரத்தையும் இணைத்துள்ளோம்.

ஒரு முறை புரியாத மொழியில் ஒரு குரல் கூட பதிவாகியுள்ளது. வேறு நாட்டினர் யாராவது தொடர்புகொண்டு அவனைப் பற்றி தகவல் சொல்ல முயற்சிக்கிறார்களோ என்னவோ...

எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது" என்றார் அவர் கண்ணீருடன்...

அந்த அன்னையின் துயரம் யாராலும் இறக்கிவைக்க முடியாதது.

(பின்னர்  ஒருநாள் ஆனந்தனின் தாயை நேரில் மீண்டும் சந்தித்தேன்.. இதற்கிடையில் அவனது அப்பாவும் ஒரே மகனை இழந்த சோகத்தில் மூழ்கி, சமீபத்தில் காலமாகி விட்டதாகச் சொன்னார்.. அரசு மருத்துவமனையில் கண் மருத்துவத் துறையில் நிபுணரான ஆனந்தனின் தாய், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது மற்றவர்களுக்காக இலவச சேவை செய்து வருகிறார்..)

கப்பல் வாழ்க்கையில் ஒரே சோகமான செய்திகளையே தருவதாக தோன்றக் கூடும்.. அங்கே எல்லா நேரங்களும் சந்தோச தருணங்கள் தான்.. ஆனால, இது போன்ற விஷயங்களும் உள்ளன என்பதையும் தெரிவிப்பதற்காகத் தான் துன்ப நிகழ்வுகளைப் பற்றி எழுத வேண்டியுள்ளது.. கரை வாழ்வில் சந்திக்க முடியாத அனுபங்கள் கப்பலில் நடப்பதால் அதுபற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.. மற்றபடி கப்பல் வாழ்க்கை மிகவும் ரசிக்கக் கூடியதே..


இரண்டு மாத விடுமுறைக்குப் பின் மீண்டும் வேறு கப்பலில் சேர்ந்திருந்தேன். மீண்டும் புதிய அனுபவங்களை எதிர்நோக்கி எனது கடல்பயணம்.

இது வேறு கப்பல். அதே கம்பெனியின் கப்பல்தான். நான் இப்போது நான்காவது இன்ஜினீயராகப் பதவி உயர்வு பெற இருந்தேன்.

அந்தக் கப்பலில் சேர்ந்து இரண்டு நாள் கழிந்திருக்கும். அன்று இரவு பனிரெண்டு மணிவரை விழித்திருந்து வீடியோவில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தேன். பனிரெண்டு மணிக்கு

மேல் டியூட்டி முடிந்து, மூன்றாவது ஆபிஸர் சோகத்துடன் எதிரே வந்தான்.

என்னைப் பார்த்தவுடன், "உனக்கு விஷயம் தெரியுமா.. 'ஷிப்பிங் கார்ப்பரேசன்' கப்பல் 'விஷ்வமோஹினி' கடலுக்குள் மூழ்கி விட்டது. நிறைய பேரின் உடல்,
கிடைக்கவில்லையென்று தகவல் வந்திருக்கிறது.." என்றான்.

எனக்கு அந்த வினாடியில் இதயமே நின்று போன உணர்வு. 'விஷ்வ மோஹினி'யா?.. இந்திய அரசுக்குச் சொந்தமான 'ஷிப்பிங் கார்ப்பரேசன்' நிறுவனத்தில் என்னுடைய நண்பர்களும், என்னோடு பயிற்சி முடித்த பலரும் சேர்ந்திருந்தனர்.

விஷ்வமோஹினியிலும் கண்டிப்பாக இருப்பார்கள்.

"எத்தனை பேர் தப்பித்தார்கள்.. யார் யார் என்ற விபரம் தெரியுமா.." என்று பதட்டத்துடன் கேட்டேன்..

'இல்லை' யென்று தலையசைத்தான். கப்பல் ஆபத்தில் இருக்கும்போது அனுப்பப்படும் செய்தியான 'S.O.S.' (Save Our Souls) எனப்படும் அபாய செய்தி எல்லாக் கப்பலுக்கும் அனுப்பப் பட்டிருக்கிறது.

கப்பல் 'பே ஆஃப் பிஸ்கி' கடல் பகுதியில் (இந்தக் கடல் பற்றி எனது முதல் பயணத்தில் குறிப்பிட்டுள்ளேன்) மூழ்கியிருக்கிறது.. ஸ்பெயினிலிருந்து காப்பாற்றப் போன ஹெலிகாப்டர்கள் ஒரு சிலரை மீட்டு வந்திருப்பதாகச் சொன்னான்..

உயிர் பிழைத்தவர்களின் விபரம் உடனடியாக தெரியாத நிலையில் என் நண்பர்களைப் பற்றி கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தேன்...

கப்பல் வாழ்க்கை பல சமயங்களில் மிகவும் சந்தோஷம் அளித்தாலும், இதுபோன்ற செய்திகளைக் கேள்விப்படும் போது மன உறுதி குலைந்து போவது இயற்கைதான்.

இரவு முழுதும் தூக்கமின்றியே கடந்தது.. காலை எழுந்தவுடன் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். காற்றுக்குக் கொஞ்சம் கோபம்தான்.. கப்பலை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

எனது அறையின் ஜன்னல் வழியே கப்பலின் முன்பகுதி முழுதும் தெரிந்தது. காற்றின் கோபத்தால் கடல்நீர் சிதறியெழுந்து கப்பலின் மேல்தளம் முழுவதையும் குளிப்பாட்டி விட்டுப் போனது.

முதன்முதலில் கப்பல் பயணம் செய்யும் யாரும், இந்த நிலையில் கப்பலைப் பார்த்தால், 'கண்டிப்பாக அடுத்த நிமிடம் கப்பல் மூழ்கிவிடும்' என்று நினைப்பார்கள்.

ஆனால் பழகிப் போனவர்களுக்கு 'இதில் எதுவுமேயில்லை' என்ற அலட்சியம் தோன்றும் இதைவிட எத்தனையோ ஆக்ரோஷனமான கடல்களைப் பார்த்தாயிற்று. இப்போது கப்பலின் முன்பகுதியைக் கூட பார்க்கமுடியாத அளவுக்கு பேய்மழை ஆரம்பித்து விட்டது.

குளிர்காலத்தில் வட அட்லாண்டிக் எப்போதுமே இப்படித்தான். அடம்பிடிக்கும் குழந்தைபோல எப்போதும் சிணுங்கல். சிறிது நேரத்தில் மழை நின்றிருந்தது.

மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தேன். வட அட்லாண்டிக் கடலின் சீறும் அலைகளில் கப்பல் தள்ளாடிக் கொண்டிருந்தது. அதன்பின் அமொக்கா சென்று சேரும் வரை நான் விஷ்வமோஹனி பற்றி தினமும் நினைத்துக் கொண்டே இருந்தேன்.

எனது கப்பல் அமெரிக்கா சென்றவுடன் முதல் வேலையாக எனது மற்றொரு நண்பனுக்கு போன் செய்தேன். என் நண்பர்கள் யாரும் அந்தக் கப்பலில் சேர்ந்திருக்கவில்லை..

ஆனாலும் இறந்து போன மற்றவர்களை நினைத்து மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.. அதன்பின் கொந்தளிக்கும் கடல் அலைகளை எப்போது பார்க்கும்போதும் ஏனோ வெறுப்பு தோன்றுகிறது..

எத்தனையோ உயிர்களை வாழ வைத்திருந்தாலும், சிலரின் உயிரைப் பறித்ததும் இதே கடல் என்ற உணர்வு எழும்போது வெறுப்பு தோன்றும்.

அதிலும், எனது கப்பல் வாழ்க்கையில் அதன்பின் எப்போது 'பே ஆஃப் பிஸ்கி'யைக் கடந்தாலும் அந்த நினைவு வரத்தான் செய்தது..

எத்தனை தேசங்கள்.. எத்தனை விதமான மனிதர்கள்.. ஆனால், பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சோகத்தை சுமந்து இருந்தார்கள்..

கடல் நீரில் எந்தத்துளி இனிப்பானது.. எல்லாமே உப்புத்தானே.. ஆனால், இன்னும் கடல் வாழ்கை இங்கே கரையில் வாழும் மற்றவர்களுக்கு ஒருசுவாரசியமும், எதிர்பார்ப்பும் கலந்த ஆச்சரியமானதாகவே இருந்து வருகிறது.

விஷ்வமோகினி கப்பல் மூழ்கும்போது, அதிலிருந்து உயிர் பிழைத்த தமிழரான ரங்கராஜனை (பெயர் மாற்றியுள்ளேன்) சில வருடங்களுக்குப் பின்பு ஒரு நாள் சென்னையில் நேரில் சந்தித்தேன்.

அந்தச் சம்பவத்திற்குப் பின் கண்டிப்பாக கடல் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டார் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு ஆச்சர்யம்...

கொஞ்சம் கூட கலக்கமே இல்லாமல் அதன் பின்னும் கடலை நாடிச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார்... அவருக்கே அந்த உறுதி இருக்கும்போது மற்றவர்களுக்கு வேண்டாமா..

ஜிப்ரால்டர் பாறையை நிறைய முறை கப்பலில் பயணம் செய்யும்போது பார்த்திருக்கிறேன். உறுதியான, கம்பீரமான அதன் தோற்றத்தில் மனதைப் பறி கொடுத்திருக்கிறேன்.

ரங்கராஜனைப் பார்த்தபோது மீண்டும் அந்தப் பாறை என் நினைவில் வந்து போனது. அவரது உறுதி அந்தப் பாறைக்கு இணையானது.

அன்று 'விஷ்வ மோஹினி' மூழ்கிய போது நடந்த சம்பவங்களையும், அதன் பின்னணியில் நடந்த விஷயங்களையும் அவர் விவரித்த போது எனக்கு ஏற்பட்ட திகைப்பும், ஆச்சர்யமும் கொஞ்சமல்ல..

அது 'டைட்டானிக்' போன்ற ஆங்கிலப்படங்களையும் தூக்கிச் சாப்பிடும் 'த்ரில்லிங்' அனுபவம்...

--------


அத்தியாயம் 28

ணிகக் கப்பல்களில் நிறைய பிரிவுகள் உண்டு.. 'டைட்டானிக்' போன்ற பாசஞ்சர் கப்பல்கள் முதல் வகை. சரக்குக் கப்பல்கள் மற்ற வகை. சரக்குக் கப்பல்களில் கூட நிறைய வகை உண்டு.

நிலக்கரி, உரம், இரும்புத்தாது, அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை மொத்தமாக ஏற்றிச் செல்லும் கப்பல்கள் 'BULK CARRIER' என்று அழைக்கப்படுகின்றன.

கச்சா எண்ணெய், டீசல் போன்றவற்றை ஏற்றிச் செல்லும் கப்பல்களும், கெமிக்கல் போன்றவற்றை திரவ நிலையில் கொண்டு செல்லும் கப்பல்களும் 'Tanker' பிரிவைச் சேர்ந்தவை.

இது தவிர எல்.பி.ஜி, எல்.என்.ஜி. போன்ற வாயுக்களை ஏற்றிச் செல்பவை 'Gas Carrier' வகை.

இப்போது 'கன்டெயினர்'களில் சரக்கு ஏற்றி அனுப்புவது அதிகமாகி விட்டது. எல்லாப் பொருட்களையும் அந்தப் பெட்டிகளில் போட்டு கப்பலில் ஏற்றுவது சுலபம் மட்டுமல்ல, வேகமாகவும் சரக்கு கொண்டு செல்ல முடிகிறது.

பதப்படுத்தப்பட்டு, குளிரூட்டப்பட்ட மீன் போன்ற உணவுப்பொருட்கள் எல்லாம் இந்த வகை 'Container Ship'களில் கொண்டு செல்லப்படுகிறது. (இவற்றில் Reefer Container என்ற முழுதும் குளிரூட்டப்பட்ட வகையும் உண்டு).

இதைத் தவிர ஒரே விதமான பொருளை மட்டுமல்லாமல், மற்ற பொருட்களையும் சேர்த்தே ஏற்றிச்செல்லும் 'General Cargo' கப்பல்கள் இப்போதைய நாட்களில் குறைந்து விட்டன.

பொதுவாக 'மெர்ச்செண்ட் நேவி' என்று அழைக்கப்படும் இந்த வணிகக் கப்பல்களில், காலி இடங்களைப் பொறுத்து எதில் வேண்டுமானாலும் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம். விபத்துகளுக்கு நிறைய வாய்ப்புள்ள Tanker கப்பல்களில் சேர சில குறிப்பிட்ட சிறப்பு பயிற்சிகளும் முடித்து இருக்க வேண்டும்.)

'விஷ்வ மோஹினி' கப்பல் கிட்டத்தட்ட ஒரு 'ஜெனரல் கார்கோ' வகை கப்பல். 'கார்கோ மற்றும் கன்டெயினர்' வகை.

ரங்கராஜன் அதில் முதன்முதலாகக் கப்பல் வாழ்வைத் தொடங்கியிருந்தார். ஐந்தாவது இன்ஜினீயராக கப்பலில் சேர்ந்த அவர் விடுமுறை இல்லாமல் அதே கப்பலில் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேலாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அவர் சேர்ந்திருந்த 'ஷிப்பிங் கார்ப்பரேசன்' கப்பல்களில் லீவு முடிந்தாலும் நம்மை ரிலீவ் செய்ய ஆட்கள் கிடைக்காமல் கப்பலில் இருக்க வேண்டிய நிலைதான் பெரும்பாலும்.

எனக்குத் தெரிந்து நிறைய பேர் அப்படித் தவித்திருக்கிறார்கள்.. (இது இந்திய அரசு நிறுவனம்).

எனவே 'ஷிப்பிங் கார்ப்பரேசனா... வேண்டவே வேண்டாம்' என்று ஒரு காலத்தில் ஓடும் ஆபிஸர்கள் நிறைய உண்டு.. இப்போது நிலைமை அப்படியில்லை. ரங்கராஜன் பதிமூன்று மாதங்களுக்குமேல் அதே கப்பலில் இருந்தார்.

இடையே கப்பல் நிறைய முறை இந்தியா வந்தது. சென்னைக்கும் வந்தது. எனவே அவருக்கு வீட்டை விட்டு தொலைதூரம் தள்ளியிருக்கும் நிலை இல்லை.

எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டிருந்தாலும் அந்த கப்பல் அனுபவம் அவரைப் பொருத்த வரை வாழ்க்கையில் மறக்கவே முடியாதது... கப்பல் அதற்குமுன் கடைசியாக இந்தியா வந்தபோது சென்னையில் ரிப்பேர் வேலைகளுக்காக 'Dry Docking' செய்யப்பட்டிருந்தது.

(Dry Dock என்பது பொதுவாக துறைமுகங்களில் கப்பல் ரிப்பேர்களுக்காக அமைக்கப்பட்ட இடம். கிட்டத்தட்ட ஒரு பெரிய சைஸ் தொட்டி மாதிரி கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அதன் ஒரு பக்கம் கப்பல் உள்ளே நுழைவதற்கு வழி இருக்கும். அதற்கு கதவுகளும் இருக்கும். அந்தக் கதவுகளைத் திறந்து விட்டால், கடலிலிருந்து தண்ணீர் அதற்குள் புகுந்து விடும்.

ரிப்பேர் செய்ய வேண்டிய கப்பல் இப்போது நுழைவாயில் வழியாக 'Dry Dock'கிற்குள் உள்ளே வரும். கதவுகள் மூடப்பட்டு கடலிலிருந்து தொட்டிக்குள் தண்ணீர் வருவது தடுக்கப்படும்.

கதவுகள் தண்ணீர் புகாவண்ணம் வடிவமைக்கப்பட்டவை. அதன்பின், தொட்டிக்குள் உள்ள தண்ணீரை ராட்சத பம்ப்புகள் மூலம் கடலுக்குள் அனுப்பி, தொட்டியை காலி செய்வார்கள்.

கப்பல் மெதுவாக தரையைத் தொடுமுன் தொட்டியின் தரைப்பகுதியில் வரிசையாக கட்டை போன்ற 'ப்ளாக்'குகள் வைத்து அதன் மேல் கப்பலை இருக்க வைப்பார்கள்.

இதில் நிறைய 'டெக்னிக்கல்' சமாச்சாரங்கள் உண்டு.. அதெல்லாம் நமக்கு வேண்டாம்..

வழக்கமாக, எப்போதும் தண்ணீரில் மூழ்கி இருக்கும் கப்பலின் அடிப்பாகப் பகுதியில் இருக்கும் இடங்களுக்கான ரிப்பேர் மற்றும் பெயிண்ட்டிங் வேலைகளையும், கடல் தண்ணீர் சம்பந்தப்பட்ட குழாய்கள் மற்றும் இயந்திரங்களின் ரிப்பேர் வேலைகளைச் செய்வதற்கும் இது போன்ற 'Dry Docking' செய்வது அவசியம்.

கரையோடு கட்டப்பட்டுள்ளவை தவிர 'Floating Drydock' எனப்படும் மிதக்கும் வகையும் உண்டு.. இவை கப்பல்களைப் போலவே மிதந்து கொண்டு, மற்ற கப்பல்களை தங்களுக்குள் சுமக்கும் வசதி பெற்றவை.

'Dry Dock'குகள் கப்பல் கட்டும் 'ஷிப் யார்ட்'களிலும் உண்டு. கப்பலை புதிதாகக் கட்டி, பின் எல்லா வேலைகளும் முடிந்த பின் கதவுகளைத் திறந்து விட்டு, கடல்நீரை நிரப்புவதன் மூலம், கப்பலை மிதக்க வைத்து, வெளியே கொண்டு வருவார்கள்.)

ரங்கராஜன் சென்னையில் இருந்து புறப்படும் முன் ஏற்பட்ட சம்பவத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார். அவரின் வார்த்தைகளிலேயே அந்த அனுபவத்தைக் கேட்பதுதான் நன்றாக இருக்கும்.

-----------

"அது ஒரு ஏப்ரல் மாதம்.. கப்பல் பிரிட்டனிலிருந்து கடைசியாகப் புறப்பட்டது..." என்று ஆரம்பித்தார்.

"சென்னையில் ரிப்பேர் வேலை முடிந்து 'Drydock' கதவைத் திறந்து தண்ணீர் உள்ளே வந்தது. கப்பல் மிதக்க ஆரம்பித்த உடனேயே ஒரு சின்னப் பிரச்னை ஏற்பட்டது.

அதைச் சரிசெய்து, கப்பல் சென்னை துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது. இந்தியாவைப் பார்த்தது அந்தக் கப்பலுக்கு அதுதான் கடைசி தடவை.

சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பா நோக்கிச் சென்ற கப்பல், இங்கிலாந்தில் சில துறைமுகங்களில் சரக்கு இறக்கி, ஏற்றிக் கொண்டு கடைசியாக 'Middle Sprow' துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

அதற்கு முந்தைய துறைமுகமான 'Port Swanesea' யில் விஷ்வமோஹினியில் இருந்த மூன்றாவது இன்ஜினீயர் இன்னொரு கப்பலுக்கு மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக, அந்தக் கப்பலிருந்த கோஷ் என்பவரை மோஹினிக்கு அனுப்பியிருந்தார்கள்.

கோஷ் இங்கே 'கூடுதல் இரண்டாவது இன்ஜினீயர்' பார்க்கும் பனிரென்டு மணியிலிருந்து நான்கு மணி டியூட்டியை அவர் பார்த்துக் கொள்வதாக ஏற்பாடு.

அவருக்கு பழக்கமில்லாத கப்பல் என்பதால் ஏற்கனவே அந்தக் கப்பலில் பதிமூன்று மாத அனுபவம் உள்ள ஐந்தாவது இன்ஜினீயரான என்னை அவருக்கு உதவி செய்ய அதே டியூட்டியில் வைத்தனர்.

கப்பல் 'மிடில் ஸ்ப்ரோ'விலிருந்து புறப்பட்டு இங்கிலீஷ் கால்வாயில் போகும் போதே வானிலை மிகவும் மோசமாக இருந்தது.

பதினொன்றாம் தேதி இரவு வழக்கம்போல் பனிரெண்டு மணி டியூட்டிக்கு நானும், புதிதாக வந்திருந்த கோஷும், அது வரை பணியில் இருந்த நான்காவது இன்ஜினீயரை விடுவிக்கப் போனோம்.

வழக்கமாக எல்லா இன்ஜினீயர்களும் டியூட்டி முடிந்து போகும்முன், தன்னுடைய 'வாட்ச்'சில் இன்ஜின் அறையில், இயந்திரங்களின் இயங்கும் நிலையில் ஏதேனும் மாறுதல்கள்,

அல்லது பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால் அதை தன்னை விடுவிக்க வருபவரிடம் தெரிவிக்க வேண்டும்.

(நான்கு மணி நேர டியூட்டியை 'வாட்ச்' என்ற வார்த்தையாலேயே குறிப்பிடும் வழக்கம் உள்ளது. அப்படியே நானும் எழுதுகிறேன். கப்பல் இண்டஸ்டிரியில் இது போன்ற நிறைய வார்த்தைகள் பழக்கத்தில் உள்ளன. )

நானும், கோஷும் இன்ஜின் ரூமிற்குப் போனவுடன், நான்காவது இன்ஜினீயர் அப்போது புதிதாக ஏற்பட்டிருந்த பிரச்னை பற்றிச் சொன்னான்..

'பில்ஜ்' என்று அழைக்கப்படும் இன்ஜின் அறையின் அடித்தளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் எண்ணெய் கலந்த கழிவுநீர் வழக்கமாக பின்புறத்தில் தேங்கும்.(முதல் கப்பலில் எனக்குக் கொடுக்கப் பட்ட தண்டனை 'பில்ஜ்' பகுதியை சுத்தம் செய்வது என்று குறிப்பிட்டிருந்தேன்.)

ஆனால் எல்லாத் தண்ணீரும் இன்ஜின் அறையின் முன்பக்கம் தேங்கத் தொடங்கியுள்ளதாகச் சொன்னான்.. நானும் அதைக் கவனித்தேன்..

(கப்பலில் சரக்கு ஏற்றப்பட்டிருந்ததால் வழக்கமாக சமமட்டமாக இருக்கும்.. ஏதோ ஒரு காரணத்தால் கப்பலின் முன்பகுதி பின்பக்கத்தை விட தண்ணீருக்குள் அதிகமாக மூழ்கியிருக்கும் நிலை ஏற்பட்டால் பில்ஜ் தண்ணீர் முன்பாதியில் சேர ஆரம்பிக்கும்...)

ஆனால் இதுதான் காரணம் என்று உடனடியாகக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமும் இல்லை. இம்மாதிரி சந்தேகத்திற்கு இடமான நிகழ்ச்சிகள் நடக்கும் போது அதை உடனே கப்பலின் கட்டுப்பாட்டுப் பகுதியான வீல்ஹவுஸிற்கு தெரிவிக்க வேண்டும். தெரியப் படுத்தினோம். அதிகப்படியான தண்ணீரை பம்ப் மூலம் வெளியேற்றினோம்..

(தண்ணீரை நேரடியாக கடலுக்குள் வெளியேற்றி விடக்கூடாது.. எனவே 'Oily Water Seperator' எனப்படும் கருவி வழியாக எண்ணெயைப் பிரித்து 'கிட்டத்தட்ட' வெறும் தண்ணீரை மட்டுமே கடலுக்குள் பம்ப் செய்ய வேண்டும்..

இல்லையேல் கப்பலைச் சிறைப்படுத்தி விடுவார்கள். இதற்க்கென்று நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. உலக அளவில் கடல் நீர் மாசு படாமல் இருக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கப்பலை மட்டுமல்ல, கப்பலில் வேலை பார்க்கும் இஞ்ஜினீயர்களையும் சிறைப்படுத்தி விடுவார்கள்.. இப்போதெல்லாம் மிகவும் கடுமையான சட்டங்கள்.)

ஏன் திடீரென்று தண்ணீர் முன்புறம் வந்தது என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். மனதுக்குள் அப்போதே 'ஸம் திங் ராங்' என்று பட்டது.

சிலசமயம் உள்ளுணர்வுக்குப் படும் விஷயங்கள் சரியானதாகவே அமைந்துவிடும். ஒரு வித கலக்கத்துடனே அந்த இரவின் 'வாட்ச்' கழிந்தது.

நாலு மணிக்கு வந்த இரண்டாவது இன்ஜினீயரிடம் விஷயத்தைச் சொன்னோம். அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவேயில்லை.

மறுபடியும் பகல் பனிரெண்டு மணிக்குத்தான் நாங்கள் டியூட்டிக்கு வர வேண்டும். அதனால் அந்த அதிகாலை நாலு மணிக்கே ப்ரெட், ஆம்லெட் என்று ஏதாவது சாப்பிட்டுவிட்டு (நாலு மணிக்கு 'பிரேக் பாஸ்ட்'!) தூங்கப் போய்விட வேண்டும்.

பதினொரு மணிக்கு மேல் எழுப்பி விடுவார்கள். எழுந்தவுடன் பல்துலக்கி, குளித்து விட்டு உடனே மதியச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பனிரென்டு மணி டியூட்டிக்குப் போய்விட வேண்டும்.

நானும் அன்று அப்படித்தான் காலையில் தூங்கப் போனேன். அன்றைய தினம் மிகவும் மோசமானதாக இருக்கப் போகிறதென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

பதினொரு மணிக்கு என் அறைக்கதவு தட்டப்பட்ட போது சாதாரணமாகத்தான் எழுந்தேன். வழக்கமாக அந்த சமயத்தில் டியூட்டியில் இருக்கும் 'Oiler' (இன்ஜினீயருடன் உதவிக்கு டியூட்டியில் இருப்பவர்) வந்து எழுப்புவார்.. அன்றும் அவர்தான்...

ஆனால் அன்று அவரின் முகத்தில் சந்தோசமே இல்லை. வெளிறிய தோற்றம்.

"பாஞ்ச் ஸாப் (நான் ஐந்தாவது இன்ஜினீயர் அல்லவா.. ஹிந்தியில் 'பாஞ்ச் ஸாப்'.. இந்தியக் கப்பல்களில் பெரும்பாலும் இந்தி கலந்த வார்த்தைகள்தான். சீஃப் இன்ஜினீயரை 'படா ஸாப்' என்பார்கள் இங்கே..) கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. என்னகுமோ தெரியவில்லை. எல்லோரும் கவலையாக இருக்காங்க.." என்றார் இந்தியில்.

காலையில் எழுந்தவுடன் கேட்ட முதல் செய்தியில் நான் திடுக்கிட்டுப் போனேன்.

"எப்படி நடந்தது?" கேட்கும் போதே, நினைவில் அதிகாலையில் பில்ஜ் தண்ணீர் முன்பக்கம் தேங்க ஆரம்பித்தது ஞாபகத்திற்கு வந்தது..

காரணம் இப்போது தெளிவாகப் புரிந்து விட்டது..

"நம்பர் ஒன் கார்கோ ஹோல்டில் இருந்த இரும்பு ரோல்களை சரியாகக் கட்டாததால், பிரிந்து கப்பலின் பக்கவாட்டில் மோதி ஓட்டை ஆகியிருக்கலாம்னு சொல்றாங்க.. சரியாத் தெரியலை" என்றார்.

என்னை விரைவாக வரச் சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

அந்த நிமிடத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினேன்..

என்ன நடக்கப்போகிறது...?

மெதுவாக தங்கும் அறையை விட்டு வெளியே வந்து பார்த்தேன். அந்த விநாடியில், நெஞ்சுக்குள் எதுவோ கனமாகத் தோன்றி அடைத்த உணர்வு.

எங்கள் கப்பல் சீரான வேகத்தில் நேராகச் செல்லாமல் தடுமாறி, கண் தெரியாதவர்கள் கைகளை முன்புறம் நீட்டி இடதுபக்கமும், வலது பக்கமும் அசைத்துப் பார்ப்பது போல் தள்ளாட்டத்துடன் போவது தெரிந்தது.

கப்பலின் முன் பக்கம் வழக்கத்துக்கு மாறாக தண்ணீருக்குள் அதிகமாக மூழ்கியிருப்பது இங்கிருந்து பார்க்கும் போது நன்றாகவே தெரிந்தது.

ஒருவித மனக்கலக்கத்துடன் அறைக்குத் திரும்பிய நான், ஏதோ ஒரு நினைப்பில் எனது சர்ட்டிபிகேட்டுகளை எடுத்து ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டேன்.

குளித்து முடித்துவிட்டு சாப்பிடச் சென்றேன். அன்று சாப்பாடு இறங்கவேயில்லை.

சாப்பிடச் சென்றபோது கவனித்தேன். சமையலறை அருகே யாரோ ஒருவர் தரையில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

நிலைமை மிகவும் மோசமாகி விட்டது எனக்குப் புரிந்தது.

அப்படியானால்.. அவ்வளவு தானா..?

என்னையறியாமல் என் கண்களையும் நீர் மறைத்தது.
-----


அத்தியாயம் 29


ங்கராஜன் விஷ்வமோஹினி கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார்..

'இருபத்து நான்கு வயதென்பது சாகும் வயதில்லை. அதுவும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் பிறந்து, எத்தனையோ எதிர்பார்ப்புகளுடனும், கனவுகளுடனும் கப்பல் வாழ்க்கையில்

நுழைந்திருந்த எனக்கு, இப்படி ஸ்பெயின் நாட்டுக் கடற்பகுதியில் போய் மூழ்க வேண்டியது தானா தலையெழுத்து'.

பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவரைப் பார்க்கும்வரை அந்த சூழ்நிலையின் விபரீதம் எனக்கு அவ்வளவாக புரியவில்லை.

ஆனால், கண்ணீர் வழிய உருகி பிரார்த்திக்கும் அவரைப் பார்த்த வினாடியில் நானும் உடைந்து போனேன். சாப்பிடப் பிடிக்காமல் எழுந்து விட்டேன்.

சற்று சீக்கிரமாகவே இன்ஜின் அறையை அடைந்த நான் அங்கிருந்த பரபரப்பான சூழ்நிலையைப் பார்த்து மேலும் கலவரமானேன்..

வழக்கத்திற்கு மாறாக கப்பலின் சீஃப் இன்ஜினீயரும் அங்கே இருந்தார்..

நான் போனவுடன் இரண்டாவது இன்ஜினீயர் என்னை அழைத்து, "மெயின் இன்ஜின் லூப்ரிகேட்டிங் ஆயிலின் டாங்க் (இதை Sump என்பார்கள் ) லெவல் குறைந்து கொண்டே போகிறது.. அதனால் அதைச் சரிப்படுத்த மேலே உள்ள டாங்கிலிருந்து கொஞ்சம் ஆயில் எடு" என்றார்.

நான் எவ்வளவு ஆயில் உள்ளதென்பதை அளக்க டேப் எடுத்துக் கொண்டேன்.

இன்ஜின் அறையின் நடுவில் கப்பலைச் செலுத்தும் முக்கிய இயந்திரமான 'மெயின் இன்ஜின்' இருந்தது. அதன் பின்பகுதியில் லூப் ஆயில் டாங்க்கில் உள்ள எண்ணெயின் அளவை அளக்க உதவும் பைப் இருந்தது.

அதற்குள் டேப்பை விட்டு எண்ணெய் எவ்வளவு உள்ளது என்று பார்க்க முடியும். நான் டேப்பைக் கொண்டு அளந்தபோது காலையில் பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்தது.

எப்போதும் குறிப்பிட்ட அளவுக்குக் குறையாமல் அந்த டாங்க்கில் எண்ணெய் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிக அவசியம். (மோட்டார் பைக்கில் எஞ்ஜின் ஆயில் லெவல் குறையாமல் பார்த்துக் கொள்வோம் இல்லையா.. அது போல). ஆனால் திடீரென்று அவ்வளவு எண்ணெய் குறைய வாய்ப்பே இல்லை.. யோசித்த போது உடனே காரணம் புரிந்தது.

கப்பலின் முன் பக்கம் தாழ்ந்து இருப்பதால், எண்ணெய் முழுவதும் டாங்க்கின் முன் பகுதியில் சேர்ந்திருக்கும். அளக்கும் இடம் பின் பகுதியில் இருந்ததால் எண்ணெய் குறைந்து இருப்பது போலத் தோற்றத்தைக் கொடுத்தது.

நான் இரண்டாவது இன்ஜினீயரின் உத்தரவுப்படி, புதிதாக எண்ணெய் எடுக்க ஆரம்பித்தேன்..

மற்றவர்கள், கப்பலுக்குள் ஏற்பட்ட ஓட்டை காரணமாக புகுந்துவிட்ட தண்ணீரை பம்ப்புகளின் உதவியால் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

கப்பலின் நிலைமை மிகவும் மோசமடைந்து கொண்டே வந்தது. இன்ஜினின் வேகமும் அதை நிரூபித்தது.

வழக்கமாக கப்பல் முழுவேகத்தில் செல்லும் போது ஒரு மணி நேரத்துக்கு குறிப்பிட்ட அளவு எரிபொருள் செலவாகும். நான் இப்போது பார்க்கும் போது அதே அளவு எரிபொருள் செலவு ஆவதாகக் கணக்கில் தெரிந்தது.

ஆனால் கப்பலின் இன்ஜினோ வழக்கமான ஸ்பீடைவிட பாதிக்கும் குறைவான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. கப்பலின் வேகமும் மிகக் குறைவாக இருந்தது. (கப்பலின் வேகத்தை நாட்டிகல் மைலில் குறிப்பிடுவார்கள்.. ஒரு நாட்டிகல் மைல்= சுமார் 1.852 கி.மீ)

கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், கப்பல் சிறிது சிறிதாக மூழ்கி வருவதை எல்லா விதத்திலும் அறிய முடிந்தது.

மாலை நான்கு மணிக்கு என் டியூட்டி முடிந்தாலும், பிரச்னை காரணமாக ஆறு மணி வரை கீழே இருக்கும்படி இரண்டாவது இன்ஜினீயர் சொன்னார்.

இதற்கிடையே கப்பலின் 'ஸ்டீயரிங் மோட்டார்' உள்ள அறையைப் பார்த்து வருவதற்காக நான் இன்ஜின் அறையை விட்டு வெளியே வந்தேன்.

அந்தக் கப்பலில் ஸ்டியரிங் அறை தனியாக இருந்தது. மனதில் கவலையோடு, வெளியே என்ன நிலைமை என்பதைப் பார்க்க வந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

கப்பல் முக்கால்வாசி தண்ணீருக்குள் இருந்தது. கப்பலில் இருந்த மற்ற பணியாளர்கள் அனைவரும், 'லைஃப் ஜாக்கெட்' என்று அழைக்கப்படும் உயிர்காக்கும் உடையை அணிந்து கொண்டு தயாராக இருந்தனர்.

(இந்த 'லைஃப் ஜாக்கெட்'டை சட்டை அணிவதைப் போல் அணிந்து கொள்ள வேண்டும். அதை அணிந்து கொண்டு குதித்தால் தண்ணீரில் மிதக்க முடியும்)
நான் வேகவேகமாக இன்ஜின் ரூமுக்குத் திரும்பினேன். இரண்டாவது இன்ஜினீயரைக் காணவில்லை. இன்ஜின் அறை முழுவதும் சுற்றிப் பார்த்தேன்.

என்னைத் தவிர அங்கே யாருமேயில்லை. நான் அப்போது என்ன செய்ய வேண்டும் என்றும் புரியவில்லை.

அதே சமயத்தில் கப்பலுக்கு மின்சாரம் சப்ளை செய்யும் ஜெனரேட்டர்களில் ஒன்றின் 'லூப் ஆயில்' அழுத்தம் குறைவதற்கான அலாரம் வந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் விட்டால், அந்த ஜெனரேட்டர் நின்று விடும் அபாயம் இருந்தது. கப்பலின் எல்லா இயந்திரங்களுக்கும், மற்ற விளக்குகளுக்கும் ஜெனரேட்டர் அவசியம்.

அவசர அவசரமாக தயார் நிலையில் இருந்த இன்னொரு ஜெனரேட்டரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தேன்.

அப்போது இன்னொரு பயங்கரமும் கண்ணில் பட்டது.

அந்தக் கப்பலில் ஜெனரேட்டர்கள் இன்ஜின் அறையின் முன்பக்கத்தில் கீழ்த்தளத்தில் இருந்தன. ஜெனரேட்டர் அருகே இன்ஜின் அறையிலிருந்து கப்பலின் முன்பகுதி வரை செல்ல

உதவும் 'Tunnel' பகுதியின் மூடும் கதவு இருந்தது.

இறுக்கமாக மூடியிருந்த அந்தக் கதவு வழியே தண்ணீர் பீய்ச்சி அடிக்க ஆரம்பித்திருந்தது. எல்லாம், எல்லைமீறி போய்க் கொண்டிருக்கிறது என்பதை அது புரிய வைத்தது.

ஆனாலும் பதட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வேகமாக ஜெனரேட்டரை ஸ்டார்ட் செய்து மின்சார உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, பிரச்சனையில் இருந்த ஜெனரேட்டரை நிறுத்தினேன்.

என்னைத்தவிர அங்கே யாருமே இல்லை என்ற ஞாபகம் வந்தது..

கப்பலின் இன்ஜின் அறைக்குள் தண்ணீர் வர ஆரம்பித்ததை, உடனே வீல் ஹவுஸில் டியூட்டியில் இருப்பவருக்கு தெரிவிக்கலாம் என்று வேகமாக டெலிபோன் செய்தேன்.

மணி அடித்துக்கொண்டே இருந்தது. யாரும் போனை எடுக்கவில்லை.

அந்தக் கப்பலின் வீல்ஹவுஸின் எந்த மூலைக்குள் இருந்தாலும் மூன்று பெல் அடிப்பதற்குள் டெலிபோன் இருக்கும் இடத்தை அடைந்து விடலாம்..

பின் ஏன் யாரும் எடுக்கவில்லை..?

சீஃப் இன்ஜினியருக்காவது போன் செய்து விஷயத்தைச் சொல்லலாம் என்று அவரது அறைக்கு டெலிபோன் செய்தேன்.. அங்கேயும் மணி அடித்துக் கொண்டே இருந்தது.

எனக்கு நேரம் செல்லச் செல்ல படபடப்பு அதிகரித்தது.

மறுபடியும் தொடர்ந்து வீல்ஹவுஸிற்கே முயற்சி செய்தேன். பெல் அடித்துக் கொண்டே இருந்தது. நானும் பொறுமையிழந்து போன நேரத்தில், சட்டென்று யாரோ போனை எடுத்து விட்டார்கள்.

அப்பாடா..

நிம்மதிப் பெருமூச்சு விட்ட அடுத்த வினாடி, என் காதில் எதிர்முனையில் இருந்து பேசிய குரல் சொன்ன வார்த்தைகள் இதயத்துடிப்பை அந்த வினாடியில் நிறுத்தியே விட்டது.

இரண்டே வார்த்தைகள்..

ஆனால் அதில்தான் எத்தனை அர்த்தங்கள்..

பேசியது கப்பலின் சீஃப் ஆபிஸர் என்று தோன்றியது.

"அபாண்டன் ஷிப்" (ABANDON SHIP) என்ற இரண்டே வார்த்தைகள் சொல்லிவிட்டு டெலிபோன் வைக்கப்பட்டு விட்டது.

அடுத்த வினாடி, இன்ஜின் அறையை விட்டு வெளியேறும் ஏணிப்படியை நோக்கி நான் தலை தெறிக்கும் வேகத்தில் ஓட ஆரம்பித்தேன்.

மூச்சு வாங்க ஓடி, என் அறைக்கதவைத் திறந்து என்னுடைய 'லைஃப் ஜாக்கெட்டை' எடுத்தேன்.

காலையிலேயே அவசரத்துக்கு உதவும் என்று பிளாஸ்டிக் பையில் பத்திரப் படுத்திய எனது சர்ட்டிபிகேட் அடங்கிய உறையை நான் அணிந்திருந்த 'பாய்லர் சூட்' உடைக்குள் என் மார்புப் பகுதியில் வைத்தேன்.

மாலை ஆறு மணியிருக்கும்.. அப்போது வெளிச்சம் இருந்தது. வழக்கமாக கப்பலுக்கு அபாயம் என்றால் உடனே கப்பலின் அபாய சைரன் ஒலிக்கும்.

'தீ' போன்ற எமர்ஜென்சி விஷயங்களுக்கு ஒரு வகையான சைரனும், 'கப்பல் மூழ்கி விடப் போகிறது' என்ற நிலை ஏற்பட்டால் அந்த சமயத்தில் வேறொரு மாதிரி சைரனும் ஒலிக்கச் செய்வார்கள்.

ஏழு முறை சின்ன 'பீப்' ஒலியும், தொடர்ந்து ஒரு நீண்ட 'பீப்' ஒலியும் கப்பலின் சைரனில் வந்தால் 'எல்லோரும் லைஃப் போட் இருக்கும் தளத்துக்குச் செல்லுங்கள்' என்று அர்த்தம்.

சைரன் ஒலி கூடவே கப்பலின் ஸ்பீக்கரில் எந்த மாதிரியான அபாயம் என்பதையும் கேப்டன் சொல்வார்.

'அபாண்டன் ஷிப்' என்பது 'கப்பல் மூழ்கப்போகிறது. அதனால் கப்பலை விட்டு தப்பிச் செல்ல எல்லோரும் உயிர் காக்கும் படகுக்குள் செல்லுங்கள்' என்பதற்கான உத்தரவு.

கப்பல் மூழ்கப் போகும் சமயங்களில் கேப்டன் அதற்கான முடிவை எடுக்க வேண்டும். இது வழக்கம். ஆனால் அன்று அப்படிப்பட்ட எதுவுமே நடக்கவில்லை.

முன்னறிவிப்பு எதுவுமே செய்யவில்லை. நான் வேறு ஒரு செய்தியைச் சொல்ல டெலிபோன் செய்ததால், கடைசியில் எனக்கு கப்பல் முழுவதும் மூழ்க இருப்பதும், கப்பலை விட்டுச் செல்ல முடிவெடுத்ததும் தெரிய வந்தது.

இல்லையேல்... நினைக்கும்போதே உடல் நடுங்குகிறது.

வேமாக ஓடிவந்த என் கண்களில் பட்டது, கப்பலின் இடது புறத்தில் இருந்த உயிர்காக்கும் படகு... அது, வழக்கமாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து இறக்கப்பட்டு, பாதி வழியில் தொங்கிக் கொண்டிருந்தது..

கப்பலின் பணியாளர்களில் பாதிப்பேரும், புதிதாக கப்பலில் சேர்ந்திருந்த இன்ஜினீயர் கோஷூம் கூட தொங்கிக் கொண்டிருந்த படகுக்குள் லைஃப் ஜாக்கெட் சகிதம் இருந்தனர்.

அப்படியானால் ரொம்ப நேரத்துக்கு முன்பே படகை இறக்க முடிவு செய்திருக்க வேண்டும். நான் எதையும் அறியாமல் கீழே இன்ஜின் அறையில் இருந்திருக்கிறேன்.

இப்போது அந்தப் படகு நான் நின்று கொண்டிருந்த தளத்திலிருந்து, ஏழெட்டு மீட்டர் கீழே இருந்தது.. இங்கிருந்து அதில் போக முடியாது..

வினாடிக்குள் சிந்தித்து கப்பலின் வலப்புறம் உள்ள இன்னொரு உயிர்காக்கும் படகுக்குச் செல்ல முடிவெடுத்து அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன்.

கப்பல் பலமாகத் தள்ளாடுவது தெரிந்தது..

நான் வலப்புறம் ஓடி அந்தப் படகைப் பார்த்தேன்.. நிறைய பேர் அந்தப் படகில் ஏறத் தயாராக லைஃப் ஜாக்கெட் கட்டிக்கொண்டு நின்றிருந்தனர்.

நான்காவது இன்ஜினீயர் மட்டும் படகில் இருப்பது தெரிந்தது. அந்தப் படகை இன்னும் கட்டப்பட்ட இடத்திலிருந்து விடுவிக்கவில்லை.

நான் என்ன செய்யலாம் என்று யோசித்தேன்..

அடுத்த வினாடியில் ஒரு பயங்கர சத்தம் கப்பலின் புகை போக்கி (சிம்னி) யிலிருந்து கேட்டது..

வெடிச்சத்தம் போலவும் இருந்தது... ஒரு பெரிய மரம் 'சடசட'வென முறிந்து விழுந்தால் எப்படியிருக்குமோ, அந்த மாதிரியும் இருந்தது..

அடுத்த சில வினாடிகள் எனது வாழ்க்கையின் மிக முக்கியமான மணித்துளிகள்..

சத்தம் கேட்ட வினாடியில், எப்படி வேகமாக அந்த முடிவை எடுத்தேனோ.. அது எப்படி நிகழ்ந்ததென்று இப்போது நினைத்துப் பார்த்தாலும் புரியவில்லை.

எனது வாழ்நாளில் நான் மிக வேகமாக ஓடிய வினாடிகள் அந்த வினாடிகள்தான்...

வேகமாக கப்பலின் இடதுபுறத்தில் இருந்த படகு நோக்கி மீண்டும் ஓடினேன்.

அடுத்த வினாடி மரணம் என்றால், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள யாருக்கும் அப்படி ஒரு அமானுஷ்ய சக்தி கண்டிப்பாக வரும் என்று அந்த நிகழ்ச்சிக்குப் பின் எனக்குத் தோன்றியது.. அப்படி ஒரு சக்தியைத் தந்தது உயிர்ப்பயம் என்று இப்போது தோன்றுகிறது...

ஓடிய வேகத்தில் எனக்கு வேறு எந்த சிந்தனையும் இல்லை..

சற்று நேரத்திற்கு முன்னால் வந்து பார்த்தபோது எட்டு மீட்டர் உயரத்துக்குக் கீழே தொங்கிய படகு இன்னும் அதே இடத்தில் ஆடிக் கொண்டிருந்தது.

அதன் பின்னணியில் சீறிப் பாயும் கடல் அலைகள்...

நான் தாமதிக்கவில்லை.. ஓடி வந்த அதே வேகத்தில் பாய்ந்து, நான் நின்றிருந்த தளத்திலிருந்து, படகுக்குள் தாவினேன்..

சிறிது தவறியிருந்தாலும் தண்ணீருக்குள் நேராகப் போய் விழுந்திருப்பேன். என்னவொரு பயங்கரமான நேரம் அது..

எனக்காகவே காத்திருந்ததைப் போல், குதித்து முடித்த வினாடியிலேயே, மீண்டும் பெரிய சத்தம் ஒன்றும் கேட்டது.

நான் படகில் விழுந்து இன்னும் சுதாரித்து எழுந்திருக்கவில்லை.. கண்களை நிமிர்ந்து பார்த்தால்.. அய்யோ.. வயிற்றுக்குள் பெரிய பந்து சுழலும் உணர்வு.

தலைக்கு எட்டு மீட்டர் உயரத்துக்கு மேல் கண்களுக்கு முன் தண்ணீர்.

அதெப்படி சாத்தியம் என்ற யோசிக்கக்கூட முடியவில்லை.. எல்லாம் இருள் மயமாகிப்போனது போல் ஒரு பிரமை..

எனது வாய்க்குள் உப்புக்கரிக்கும் தண்ணீர்.. அப்போதுதான் புரிந்தது... கப்பல் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறது..!

நான் மேலிருந்து குதித்த நேரமும், கப்பல் மூழ்க ஆரம்பித்த நேரமும் ஒன்று...

நான் படகில் விழுந்து எழ முயற்சிக்குமுன், படகும் கப்பலோடு இன்னும் கட்டப் பட்டிருந்ததால் அதுவும் தண்ணீருக்குள் போக ஆரம்பித்து, என் தலைக்கு மேல் தண்ணீர் தெரிந்திருக்கிறது.

அடுத்த வினாடியில் நானும் தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்திருக்கிறேன்.


----------

அத்தியாயம் 30


ங்கராஜன் விஷ்வமோஹினி கப்பல் அனுபவம் பற்றி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்..

"அடுத்த வினாடியில் நானும் தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்திருக்கிறேன்.

இதெல்லாம் விவரிக்க இவ்வளவு நேரம் ஆகிறதே தவிர நிஜத்தில், எல்லாம் ஒருசில வினாடிகளுக்குள் நடந்து முடிந்து விட்டது..."

ஒரு கப்பல் மூழ்குவது என்பது அவ்வளவு வேகமாக நடைபெறாது. சிறிது சிறிதாக, மெதுவாக தண்ணீருக்குள் செல்ல ஆரம்பிக்கும்..

சில சமயம் முழுவதும் மூழ்காமல் பாதிப்பகுதி மட்டும் தண்ணீருக்கு வெளியே இருக்கும்.

வேறு சில சம்பவங்களில் கப்பலின் முன்பகுதி மட்டும் மூழ்கி, பின்பக்கம் மூழ்காமல் முழுவதும் தண்ணீருக்குள் செல்ல இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிகழ்ச்சிகளும் உண்டு.

சில சமயங்களில் உடனே மூழ்கிப் போவதும் உண்டு.

கப்பலுக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்பதை அறிந்த உடனேயே முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

அதில் கப்பலின் முக்கிய இயந்திரமான 'மெயின் இன்ஜினை' நிறுத்தி விடுவதும் ஒன்று.

அதை நிறுத்திவிட்டால் கப்பலைச் செலுத்த உதவும், ஃபேன் போன்ற அமைப்பிலான 'ப்ரொப்பல்லர்' சுழல்வதும் நின்றுவிடும்.

கப்பல் நகர்வது தடுக்கப்படும். இந்த மாதிரி முக்கிய முடிவுகள் கேப்டனால் எடுக்கப்படும்.


ங்கராஜன் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

"ஆனால் அன்று அப்படி முடிவுகள் எதுவும் எடுக்கப் பட்டதாகத் தெரியவில்லை. அதிலும் கப்பலை விட்டுத் தப்பிச் செல்லும் முடிவு கூட முறையாக யாருக்கும் அறிவிக்கப் படவில்லை.

நான் கடைசியாக இன்ஜின் அறையை விட்டு வெளியேறிய போது 'மெயின் இன்ஜின்' இயங்கிக் கொண்டு இருந்தது.

அந்தக் குறுகிய காலகட்டத்தில் எல்லாம் நடந்துவிட்டது. அதையெல்லாம் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருந்தது..

ஏதோ ஒரு உள்ளுணர்வில் எட்டு மீட்டர் தூரத்தில் இருந்து படகுக்குள் குதித்து விட்டேனே தவிர, அந்த சமயத்தில் என்னுடைய யோசிக்கும் தன்மை எல்லாம், எங்கோ காணாமல் போயிருந்தது.

கப்பலுடன் எங்களின் படகும் இணைக்கப்பட்டு இருந்தது. உயிர்காக்கும் படகு எப்போதும் கப்பலுடனே கட்டப்பட்டிருக்கும்.

படகை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது பிணைக்கப்பட்டுள்ள இரும்புக் கயிற்றோடு தண்ணீர் மட்டம் வரை இறக்கி விட்டு, தண்ணீரைத் தொட்ட பின் விடுவிப்பார்கள்.

கப்பலே மூழ்க ஆரம்பித்து விட்டதால், கப்பலோடு இணைக்கப்பட்டிருந்த படகும் தண்ணீருக்குள் செல்ல ஆரம்பித்து.. அதனோடு இருந்த நாங்களும்..

இன்னும் சில விநாடிகள் தாமதித்தாலும் மூச்சுத் திணறி விடும் அபாயம் இருந்தது. அவ்வளவு வேகமாகத் தண்ணீருக்குள் மூழ்குவேன் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் அனைவரும் 'லைஃப் ஜாக்கெட்' அணிந்திருந்ததால் மூழ்காமல் மேலே மிதக்க வேண்டும்.

ஆனால் நாங்கள் படகில் இருந்ததால் தடுமாறாமல் இருப்பதற்காக படகின் ஓரத்தைக் கெட்டியாகப் பிடித்திருந்தோம்..

அதனால் படகு கூடவே நாங்களும் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தோம்.

தண்ணீருக்குள் மூழ்கிய நேரத்தில் அது நினைவில் தோன்ற, உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் நான் படகை விட்டு விட வேண்டும் என்பது புரிந்தது.

நீரில் மூழ்கும் வினாடியில் மீண்டும் எங்கிருந்து அப்படிப்பட்ட சக்தி வந்ததோ... அடுத்த வினாடி படகைப் பிடித்திருந்த என் பிடியை விட்டேன்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு, தண்ணீரைக் கீழே தள்ளி நீர்மட்டத்திற்கு வர கால்களை உதைத்தேன்.

பாதி திணறிய மூச்சுடன் நீருக்கு வெளியே தலையை நீட்டிய நான் பிரமித்துப் போனேன்.

மூழ்குவதற்கு சில வினாடிகளுக்கு முன் என் கண்ணில் பிரம்மாண்டமாகத் தெரிந்த கப்பல் இப்போது காணாமல் போய், அப்படி ஒன்று இருந்ததற்கான அடையாளம் எதுவுமேயில்லை.

நீண்டதாக மூச்சு வாங்கி, என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். இப்போதைக்கு மூழ்காமல் தப்பித்தாகி விட்டது.

ஆனால் இப்படியே எவ்வளவு நேரம் இருக்க முடியும். கடலுக்குள் ஆபத்துக்களுக்கு பஞ்சமா இருக்கிறது.. மெதுவாக அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்தேன்...

வெளிச்சம் மங்கிக் கொண்டே வந்தாலும், ஓரளவு பக்கத்தில் உள்ள பகுதியைப் பார்க்க முடிந்தது.. கப்பலில் இருந்த மற்றவர்கள் என்ன ஆனார்கள்?...

அலைகளும் கொஞ்சம் அதிகமாகவே இருந்ததால், கடல்நீர் ஒரே மட்டமாக இருக்கவில்லை. அதனால் மற்றவர்கள் அருகே மிதந்தாலும் அவ்வளவு சுலபமாகப் பார்க்கவும் முடியாது.

நீண்ட நேரம் அப்படியே இருக்க முடியாது என்பதால், பிடித்துக் கொள்ள வேறு ஏதாவது கைக்குக் கிடைக்கிறதா என்று தேட ஆரம்பித்தேன்.

தூரத்தில், கப்பலில் ஏற்றியிருந்த சரக்கு ஏற்றும் 'கண்ட்டெயினர்' ஒன்று மிதப்பது கண்ணில் பட்டது.. அதை நோக்கி நீந்திப் போய் பிடிக்கலாமா, என்று யோசித்தேன்.

என்னதான் நீச்சல் தெரிந்திருந்தாலும் மனதைரியம் மட்டும் இல்லையென்றால் கண்டிப்பாக எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது.

அதிலும் கடல்நீரின் வெப்பநிலை அப்போது மிகவும் குறைவாக, கிட்டத்தட்ட ஆறு டிகிரி சென்ட்டிகிரேட் இருக்கும். தண்ணீர் ஓரளவு வெதுவெதப்பாக இருந்தாலாவது பரவாயில்லை.

(கடலில் விழுந்தவர்களில் நிறைய பேர் மரணமடைய முக்கிய காரணமே தண்ணீரின் வெப்பநிலைதான் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.)

கை கால்கள் எல்லாம் ஏற்கனவே சில்லிட்டுப்போக ஆரம்பித்திருந்தது..

இந்த நிலையில் மன தைரியத்தையும் விட்டுவிட்டால், கண்டிப்பாக சாகத்தான் வேண்டும் என்று அந்த சூழ்நிலையிலும் எனக்கு நன்றாகவே மனதில் பட்டதால், செயற்கையாக ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்.

'எனக்கு கவலை இல்லை.. எப்படியும் சமாளித்து விடுவேன்..' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

கடல்நீரையும் குடித்து விட்டிருந்தேன்.. கண்களில் உப்புத் தண்ணீரால் ஏற்பட்ட எரிச்சல்.. வாயிலும் உப்புக்கரிப்பு.

எனக்கு மிகவும் அருகிலேயே கப்பலின் 'பண்டாரி'யும் மிதந்து கொண்டிப்பதை அப்போது கவனித்தேன்.

கப்பலில் ஆபிஸர் ரேங்க்கில் உள்ளவர்களுக்கு சமைப்பதற்கு ஒரு சமையல்காரரும், மற்ற பணியாளர்களுக்கு சமைப்பதற்கு இன்னொருவரும் உண்டு.

இந்தியக் கப்பல்களில் பணியாளர்களுக்கு சமைப்பவரை 'பண்டாரி' என்போம். அவர் மிகவும் குண்டானவர்.

இன்னொருவரைப் பார்த்த சந்தோசத்தில் அவரை நெருங்க முயற்சித்தேன்.

அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்திருக்க வேண்டும்.. கடலில் விழுந்தால் உயிரைக் காப்பாற்ற, கப்பலில் சில சாதனங்கள் உண்டு.

உயிர் காக்கும் படகைப் போலவே நிறைய பேரைச் சுமந்து கொண்டு மிதக்கக் கூடிய இன்னொரு சாதனம் 'லைஃப் ராஃப்ட்' (LIFE RAFT) என்பது.

சாதாரணமாக கூண்டு போன்ற அமைப்புக்குள் வைக்கப்பட்டிருக்கும் அவைகளைக் கடலில் தள்ளிவிட்டு அதனுடன் இணைக்கப்பட்ட கயிறை இழுத்தால், அதனுள் இருக்கும் ரப்பர் பகுதி விரிவடைந்து மிதக்கும்.

அதனுள் ஆட்கள் ஏறி உட்கார்ந்து கொள்ளலாம். மேற்பகுதி மூடப்பட்டு கிட்டத்தட்ட கூம்பு போன்ற வடிவில் கூரை அமைத்திருக்கும்.

கப்பல் தண்ணீருக்குள் மூழ்கிவிடும் சமயங்களில், அதை யாரும் உபயோகிக்காமலேயே போனாலும், ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்குச் சென்றவுடன், தானாகவே கப்பலிலிருந்து கழன்று

கொண்டு தண்ணீருக்கு வெளியே வருவதற்கான, 'HYDROSTATIC RELEASE' என்ற அமைப்பு அதில் பொருத்தப் பட்டிருக்கும்.

குறிப்பிட்ட ஆழம் சென்றவுடன் அழுத்தத்தால் இயக்கப்பட்டு, எங்கள் கப்பலில் இருந்த லைஃப் ராஃப்ட் ஒன்று கப்பலில் இருந்து விடுபட்டு வந்திருந்தது.

ஆனால், அது நேராக இல்லாமல் கூம்புப் பகுதி தண்ணீருக்குள் இருக்கும் படி தலைகீழாக மிதந்து கொண்டிருந்தது.

அப்படி மிதக்கும் சமயங்களில் கொஞ்சம் கஷ்டப்பட்டு திருப்பி விட்டால் சரியாக மிதக்கும்.

அப்படித் தலைகீழாக இருந்த அதை, பண்டாரி தனி ஒரு ஆளாக நேராக மிதக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.

நான் நீந்திக் கொண்டே அவரை நெருங்கி, அவருடன் சேர்ந்து அதைத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டேன்.

கொஞ்சம் சிரமமாக இருந்தது. தண்ணீரும் மிகக் குளிராக இருந்ததால் கஷ்டமாக இருந்தது. ஒருவழியாக சமாளித்து திருப்பி விட்டோம்.

நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, அதனுள் போவதற்காக இருந்த திறந்த பகுதியின் வழியே உள்ளே ஏறிவிட்டேன்.

பண்டாரி கொஞ்சம் குண்டானவர் என்பதால் உடனே உள்ளே வர முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டார்.

அவரது கைகளைப் பிடித்து உள்ளே வர உதவி செய்தேன் என்றாலும் அவரால் உள்ளே வர முடியவில்லை. ஆனால் ராஃப்ட்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

நானும் அவர் அதைவிட்டு பிரிந்து விடாமல் பிடித்துக் கொண்டேன். வேறு யாராவது கண்ணுக்கெட்டிய தொலைவில் போராடிக் கொண்டிருக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்தேன்..

யாரும் அருகில் இல்லை. கண்டிப்பாக உடனே இறந்து போகமாட்டேன் என்பது நிச்சயம் ஆகிவிட்டது..

அதிக நேரம் தண்ணீருக்குள் உடல் மிதக்க வேண்டியிருக்கவில்லை.

அப்போதுதான் என் உடம்பை முழுவதும் பார்த்தேன்.. உடலின் எந்தப் பாகமும் காணாமல் போகவில்லை. கைகால்கள் நன்றாகவே இருந்தன. சட்டென்று நினைவுக்கு வந்தது..

என் சர்ட்டிபிகேட்டுகள்?

கை தன்னிச்சையாக மார்பைத் தொட்டது. ஏதோ கனமாகப் பட்டது.. இருக்கிறது!.

அணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டை விலக்கிப் பார்த்தேன்.. ப்ளாஸ்டிக் உறை தெரிந்தது.. வெளியே எடுக்கவில்லை. கண்டிப்பாக ஈரமாகும்.

அடுத்தது என்ன என்று யோசிக்க ஆரம்பித்தேன்.. இப்போதைக்கு பாதி கிணறு தாண்டியாகி விட்டது. எவ்வளவு நேரம் போயிருக்குமோ தெரியாது..

என அதிர்ஷ்டத்தின் அடுத்த கதவு திறக்கும் ஓசை காதில் பேட்டது. தூரத்தில் ஏதோ ஓசை கேட்க ஆரம்பித்து நேரமாக ஆக, அது அதிகரிப்பது தெரிந்தது..

ஹெலிகாப்டரின் ஓசை போல் இருக்கவும் என் மனதில் உற்சாகம் பொங்கியது. சிறிது நேரத்திலேயே மிகப் பிரகாசமான ஒளி வானத்திலிருந்து தெரிந்தது.

ஹெலிகாப்டரே தான்..

இரண்டு ஹெலிகாப்டர்கள் நான் இருந்த இடத்தில் வட்டமிட ஆரம்பித்தன.

ஏற்கனவே இருட்ட ஆரம்பித்து விட்டதால் சக்தி வாய்ந்த 'ஸர்ச் லைட்டுகள்' மூலம் அவர்கள் உயிர் பிழைத்தவர்களையும், உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பவர்களையும் தேடி, காப்பாற்ற ஆரம்பித்தார்கள்.

ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மனிதர் கயிற்றுடன் கீழே வருவதும் பின் கடலிருந்து மனிதர்களைச் சுமந்து கொண்டு ஹெலிகாப்டரில் போய்ச் சேர்ப்பதும் மங்கலாகத் தெரிந்தது.

இடையிடையே நாங்கள் இருந்த லைஃப் ராஃப்ட் மீதும் வெளிச்சம் பாய்ந்தது. சில நிமிடங்கள் கழித்து பிரகாசமான ஒளி எங்கள் மேல் விழுந்தது.

அடுத்த சில வினாடிகளில், முழுவதும் பாதுகாப்பு உடை அணிந்த ஒரு மனிதர் கயிற்றின் வழியே எங்கள் அருகே வந்து தொங்கினார்.

வந்த வேகத்தில் பண்டாரியை ஒரு பெல்ட் போன்ற அமைப்பினால் கட்டிவிட்டு, அவரைச் சுமந்து கொண்டு மேலே போனார்.

நான் அவர் திரும்பி வந்து, என்னையும் காப்பாற்றிச் செல்வார் என்று காத்திருந்தேன்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அடுத்த நிமிடம் ஹெலிகாப்டர் நான் இருந்த பகுதியை விட்டு விலகி ஒரு முறை வட்டமடித்து விட்டு, முழுவேகத்துடன் பறந்து செல்ல ஆரம்பித்தது.

நான் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துப் போய்விட்டேன்.

----------


அத்தியாயம் 31

ஹெலிகாப்டர் காப்பாற்ற வந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி எல்லாம் அதே வினாடியில் வடிந்து போனது. எனக்கு எதுவும் புரியவில்லை.

எல்லோரையும் காப்பாற்றியவர்கள் ஏன் என்னை விட்டுவிட்டுப் போனார்கள் என்று தெரியவில்லை. சுற்றிலும் கும்மிருட்டு.. இப்போது என்ன செய்வது.?

ஒருவேளை நான் உள்ளுக்குள் இருந்ததை அவர்கள் கவனிக்கவில்லையா.. ஆனால், பண்டாரியை காப்பாற்றிச் சென்றவர் என்னையும் பார்த்தார் என்று நான் நம்பினேன்.

பின் ஏன் என்னையும் காப்பாற்றவில்லை என்ற கேள்வி என்னை அமைதியிழக்கச் செய்தது. திரும்ப வருவார்களா, இல்லை போனவர்கள் போனவர்கள்தானா.. குழப்பம் அதிகமானது.

குளிர்காற்று பலமாக அடித்து.. ஏற்கனவே முழுவதும் நனைந்திருந்தால் காற்று பட்டதும், உடலில் ஊசி குத்தியது போல் தோன்றியது.

ஆனாலும் மனதுக்குள் ஏதோ ஓரத்தில் சின்னதாக ஒரு நம்பிக்கை துளிரத்தான் செய்தது. நேரம் செல்லச் செல்ல அது குறைய ஆரம்பித்தது.

பண்டாரி இருந்த வரைக்கும், கூட ஆள் இருந்த தைரியமும் இருந்தது.

ஆனால் அவரையும் ஹெலிகாப்டர் கொண்டு போனபின் இப்போது தனிமையில் இருப்பது, மனதுக்குள் என்னன்னவோ சிந்தனைகளைத் தூண்டிவிட்டது.

அலையின் சீற்றம் குறையாமல் இருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் போய்விட்டது...

இந்த இரவில் இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்க வேண்டும்?
வீட்டை நினைத்துக் கொண்டேன். கப்பல் மூழ்கிய செய்தி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், இப்போதெல்லாம் கப்பல் மூழ்கிய செய்திகளெல்லாம் உடனுக்குடன் டெலிவிஷனில் வந்துவிடுகிறதே..

ஒருவேளை இதற்குள் செய்தி பரவியிருந்தால்.. கண்டிப்பாக கதறி அழுது விடுவார்கள்..

அதிலும் அம்மா.. நான் மூழ்கிவிட்டதாகக் கூட நம்பியிருப்பார்கள். அதை நினைத்தபோது நிஜமாகவே அந்த சூழ்நிலையில் கண்ணீர் வந்தது.

திடீரென்று எல்லாமே வெறுமையானது போலத் தோன்றியது. இங்கே நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்?. இனி என்ன நடக்கப்போகிறது. நான் தளர்ந்து போனேன்..

அந்த இரவில் மீண்டும் உதவி வரும் என்ற நம்பிக்கை கிட்டத்தட்ட என்னை விட்டு விலக ஆரம்பித்த நிலையில், வானத்தில் அந்த நம்பிக்கை ஒளி தோன்றியது.

நிஜமாகவே, தூரத்தில் தெரிந்தது ஹெலிகாப்டரிலிருந்து வரும் ஒளியா, இல்லை என் மனநிலையில் வானத்தில் தெரியும் நட்சத்திரத்தை விளக்கொளி என்று நம்பத் தொடங்கி விட்டேனா..

சந்தேகத்துடன் அந்த வெளிச்சம் வந்த திசையைத் தொடர்ந்து பார்த்தேன்.

வெளிச்சம் பெரிதாக ஆரம்பித்ததோடு, கூடவே ஹெலிகாப்டரின் சத்தமும் கேட்க ஆரம்பிக்கவும், எனக்கு முழு நம்பிக்கையும் வந்தது
வருவது ஹெலிகாப்டர்தான். மீண்டும் மனதில் உற்சாகம் தோன்ற ஆரம்பித்தது.

ஹெலிகாப்டர் ஒளி என் மீது படவும், சூப்பர்மேன் ஸ்டைலில் என்னையும் அந்த மனிதர் பெல்ட் கட்டி கயிறு வழியே மேலே தூக்கிப் போனார்.

அன்றைய மரணப் போராட்டத்திற்கு கடைசியில் ஒரு முடிவு கிடைத்து விட்டது.

ஹெலிகாப்டருக்குள் என்னைக் கொண்டு போன அடுத்த விநாடி, குளிரிலிருந்து என்னைப் பாதுகாப்பதற்காக முதலுதவி செய்ய ஆரம்பித்தனர்.
அதன்பின் சற்று நேரம் தேடிவிட்டு ஸ்பெயினில் உள்ள 'கிஜோன்' துறைமுகத்தை நோக்கி ஹெலிகாப்டர் பறக்க ஆரம்பித்தது.

போகும்போது என்னைக் காப்பாற்றியவரிடம், என்னை ஏன் முதல் தடவையிலேயே கூட்டிப் போகவில்லை என்பதைக் கேட்டேன்.

அவர், நான் பத்திரமாக உள்ளே இருப்பதைப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்.

ஏற்கனவே தண்ணீரிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

எனவே என்னை மேலே தூக்கிச் செல்வதில் நேரத்தைச் செலவிடுவதை விட, அவர்களை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்வது முக்கியம் என்பதால் என்னைக் காப்பாற்ற முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை விளக்கினார்.

அப்போதுதான் காரணம் புரிந்தது. அதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை விட, பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது எத்தனையோ மடங்கு மேல் அல்லவா.

அன்று என்னையும் சேர்த்து மொத்தம் பதினொரு பேர் உயிர் பிழைத்தனர் என்று நினைக்கிறேன்.. மீதிப் பேர் அனைவரும் இறந்து போயிருக்கக் கூடும்... ஏனெனில் பலரின் உடல்கள் கிடைக்கவில்லை.

நாங்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட போதே பத்திரிகை நிருபர்களும் புகைப்படக்காரர்களும் சூழ்ந்து விட்டனர்.

பின் கேள்விப்பட்ட செய்திகளிலிருந்து சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். கப்பலில் பிரச்சனை ஆரம்பித்தவுடனேயே 'கிஜோன்' துறைமுகத்துக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

ஆனால் கப்பலில் உள்ளவர்களை மீட்க ஹெலிகாப்டர் அனுப்ப ஏற்பாடு செய்ய நினைத்த அவர்களிடம், கப்பலில் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்ற இரண்டு அதிக சக்தி வாய்ந்த பம்புகளை மட்டும் முதலில் அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார் கேப்டன்.

ஒருவேளை, ஆரம்பத்திலேயே கப்பலைக் காப்பாற்ற நினைத்ததை விட, உயிர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக உதவி கேட்டிருந்தால அன்று எல்லோரும் உயிருடன் மீட்கப் பட்டிருக்கக் கூடும்.

ஆனால், இப்படி ஒரு முடிவு ஏற்படும் என்று கேப்டனும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

பாவம்.. அந்தக் கேப்டனும் அன்று மரணமடைந்தவர்களில் ஒருவர்.


ரங்கராஜன், தான் உயிர்தப்பிய அனுபவத்தைச் சொல்லி முடித்தபோது எனக்கு பிரமிப்பாக இருந்தது.

"இவ்வளவு ஆன பிறகும் எப்படி மீண்டும் கடலுக்கே போக தைரியம் வந்தது" என்று கேட்டேன்.

"இதையே பார்த்தாகி விட்டது.. பின் எதற்கு பயப்பட வேண்டும். இனி எந்தக் கடலுக்கும் பயமில்லை. எந்தச் சூழ்நிலையையும் என்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையே அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் வந்தது.

ஒருமுறை மரணத்தின் விளிம்புக்குச் சென்று வந்தபின் இனி ஏன் கடலைப் பார்த்து பயப்படப் போகிறேன்" என்று புன்னகையுடன் கேட்டார்..

அவரின் அனுபவத்தைக் கேட்டபின், எனக்கும் கடல் வாழ்க்கை பற்றிய கொஞ்ச பயமும் விலகி, ஒரு புதிய உற்சாகம் ஏற்பட்டதை மறைப்பதற்க்கில்லை.

மரணம் எந்த வாழ்க்கையில் இல்லை.. சாதாரணமாக சாலையோரம் நடந்து போகும் போது தவறாக ஓட்டி வந்த லாரி மோதினால் கூட சாவுதான்.

கப்பல் வாழ்க்கை கஷ்டமான வாழ்க்கை என்ற எண்ணம் விலக ஆரம்பித்தது.

எல்லா வேலையிலும்தான் கஷ்டம் உள்ளது. அப்படிப் பார்த்தால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதைத் தெரிந்தே சேரும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை என்னவென்பது.

அட்லீஸ்ட், கப்பலிலாவது லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 'பணம்' என்ற விஷயம் அந்த இழப்புகளை எங்களுக்கு சமன் செய்யும்.

ஆனால் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு என்ன கிடைக்கும்.. அவர்களின் வாழ்வுக்கு எங்களின் வாழ்க்கை ஓரளவு சொகுசுதான். மறுக்க முடியாத உண்மை.

ரங்கராஜனை அடுத்த முறை இந்தியாவில் சந்தித்த போதுதான் அவர் பிழைத்து வந்தது தெரியும்.

ஆனால் விஷ்வமோஹினி மூழ்கிய நிகழ்ச்சி நடந்தபோது நான் கப்பலில் அதுபற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் அல்லவா...


ஜிப்ரால்டலிருந்து அமெரிக்காவில் உள்ள 'ஹாம்ப்ட்டன் ரோட்ஸ்' (HAMPTON ROADS) துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது எனது கப்பல்.
ஹாம்ப்ட்டன் ரோட்ஸ் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், அதில் NORFOLK, NEW PORT NEWS என்ற இரண்டு துறைமுகங்கள் இருந்தன. நாங்கள் போனது NORFOLK துறைமுகத்துக்கு.

---------


அத்தியாயம் 32


மெரிக்கா... 'டாட் காம்' தலைமுறையினரின் லட்சிய தேசம்.

இந்த முறை கப்பலில் சேருவதற்கு முன்பாகவே மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா கிடைக்க எனது கம்பெனி ஏற்பாடு செய்திருந்தது.

அப்படி என்ன இருக்கிறது அந்த 'அமே.. ரிக்கா'வில் என்று பார்க்கும் ஆசையில் நானும் ஏராளமான எதிர்பார்ப்புடன் இருந்தேன்.

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள 'ஹாம்ப்ட்டன் ரோட்ஸ்' துறைமுகத்துக்குள் நுழையும் போதே ஏகப்பட்ட 'டிராஃபிக்'.

ஹாம்ப்டன் ரோட்ஸ் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் உள்ளது.. எங்கள் கப்பல் துறைமுகத்துக்குள் போகும்போது, ஏராளமான கப்பற்படை கப்பல்களும்,

விமானந்தாங்கிக் கப்பல்களும் எங்களின் கப்பலின் அருகே கடந்து சென்றன.

கப்பல் துறைமுகத்தில் கட்டப்பட்டு சரக்கு ஏற்றும் பணி ஆரம்பித்தது.

மாலையில் 'Seamen Mission' - ஐச் சேர்ந்த வேன் வந்தது. கப்பலில் உள்ளவர்களை நகருக்குள் கூட்டிப்போக வந்திருந்தது.

உலகில் உள்ள நிறைய நாடுகளின் துறைமுகங்களில் (குறிப்பாக அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய கண்டங்களில்) எல்லாம் கப்பல் பணியாளர்களுக்காக 'Seamen Club'-கள் உள்ளன.

கப்பல்வாசிகளுக்காக வெளிநாட்டு தொலைபேசி செய்யும் வசதியும், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டு வசதிகளும், அந்தந்த நாட்டு நினைவுப்பரிசுகள், பொருட்கள் வாங்க கடையும், சின்ன 'பார்' போன்ற வசதிகளும் (வெளியே இருக்கும் 'பெண்கள்' சம்பந்தப்பட்ட பார்கள் அல்ல.. இவை நாகரீகமாக குடித்துவிட்டு வந்துவிட மட்டும்) உண்டு.

இதைத் தவிர மினி பஸ் மூலம் இலவசமாக ஊரைச் சுற்றிக் காட்டவும் ஏற்பாடு செய்வார்கள். பிரார்த்தனை செய்வதற்கு சர்ச்சுகள் இணைந்த இத்தகைய கிறித்தவ சேவை அமைப்புகள் உலகம் முழுவதிலும் உள்ள கப்பல் பணியாளர்களின் நல்ல அபிமானத்துக்கு உரியவை.

கப்பல் ஒரு துறைமுகத்துக்குப் போய் சேர்ந்ததும், எல்லா கப்பல்வாசிகளும் கேட்கும் முதல் கேள்வி, "ஏஜெண்ட் வந்தாச்சா.. கடிதங்கள் கொண்டு வந்தானா" என்பதுதான்.

வீட்டிலிருந்து தொலைவில் வாழ்வதால் கடிதங்கள் தரும் சந்தோசமே தனி.. (ஆனால் இப்போது கப்பல்களில் E-mail வசதி வந்துவிட்டதால், துறைமுகம் வரும்வரை காத்திருக்க வேண்டியிராமல், கம்ப்யூட்டர் உதவிபுரிகிறது.)

அதற்கடுத்தாற்போல் கேட்கப்படும் இரண்டாவது கேள்வி, "இந்தத் துறைமுகத்தில் 'ஸீமேன் மிஷன்' பஸ் சர்வீஸ் உண்டா" என்பது.

அந்த அளவுக்கு பெயர்பெற்றவை இந்த சேவை நிறுவனங்கள்.. அதிலும் Norfolk-ல் உள்ள மையம் எங்கள் கம்பெனியில் எல்லோருக்கும் பிடித்த ஒன்று...

அங்கேயுள்ள பாதிரியார் ஜெர்ரியின் அன்பில் கப்பல்வாசிகள் கரைந்தே போவார்கள். கப்பலிலிருந்து போன் செய்து அவரைக் கூப்பிடத் தேவையில்லாமல், துறைமுகத்துக்குப் புதிதாக ஒரு கப்பல் வந்தவுடன், அவரே காரை எடுத்துக் கொண்டு வந்து விடுவார் என்று ஏற்கனவே அவரைப் பற்றி சொல்லியிருந்தார்கள்.

வயதானவர்.. என்றாலும் தானே காரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றிக் காட்ட புறப்பட்டு விடுவாராம்.

நான் முதல் தடவை அமெரிக்கா வந்திருப்பதால், அன்று இரவு நெடு நேரம் தங்கிசுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன்.

மாலை ஐந்து மணிக்கு ஃபாதர் ஜெர்ரியின் கார் வந்தது. கப்பலில் இருந்து பாதிப்பேரை மதியமே ஒருமுறை கூட்டிப் போய்விட்டு, திரும்ப விடுவதற்காக வந்தார்.

என்னுடன் இன்னொரு பிலிப்பினோ மாலுமியும் வந்தான். என்னைப் பார்த்ததும் புன்னகையுடன் கைகுலுக்கி, "நான் இதற்கு முன் உன்னை சந்தித்ததில்லை.. இதுதான் முதல்முறை சரியா" என்றார்.

நான் ஆச்சர்யத்துடன் 'ஆம்' என்றேன்.

"ஏனென்றால் இங்கே வரும் உங்கள் கம்பெனி கப்பல்களில் இருக்கும் எல்லோர் முகமும் எனக்கு நன்றாக அறிமுகமானவை.. எல்லோருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்

கொள்வேன். உன்னுடைய புகைப்படம் என்னுடைய ஆல்பத்தில் இல்லை.. அதனால் கேட்டேன்" என்றார்.

அவர் சொன்னது நிஜம் என்று அவரின் இடத்துக்குப் போய், புகைப்பட ஆல்பத்தைப் பார்த்தபோது தெரிந்தது.

எங்கள் கம்பெனியில் பணிபுரியும் நிறைய பேர் அதில் இருந்தனர். போன கப்பலில் என்னுடன் வேலை செய்த நிறைய பேரின் முகங்கள் அதில் இருந்தன.

"ஊர் சுற்றிப் பார்க்கலாமா" என்று கேட்டு விட்டு எங்களை காரில் ஏற்றிக் கொண்டார். காரை ஓட்டிக்கொண்டே ஊரின் முக்கியப் பகுதிகளைச் சுற்றிக்காட்டி அவற்றைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார்.

கடைசியில் நாங்கள் 'ஷாப்பிங்' செய்வதற்காக, ஊரில் இருந்த மிகப் பெரிய 'ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' வாசலில் கொண்டு போய் நிறுத்தினார்.

எங்களை இறக்கி விட்டு, பொருட்கள் எல்லாம் வாங்கி முடித்தவுடன் டாக்ஸி பிடித்து அவருடைய இடத்திற்கு வந்தால் எங்களைக் கப்பலில் கொண்டுபோய் விடுவதாகச் சொன்னார்.

தேவைப்பட்டால், அங்கிருந்து போன் செய்தால் தானே மறுபடியும் வந்து கூட்டிச் செல்வதாகச் சொல்லி விடைபெற்றார்.

'மிலிட்டரி மால்' என்ற அந்த பிரம்மாண்டமான கட்டிடத்துக்குள் உலகில் உங்களுக்குத் தேவைப்படும் எல்லாப் பொருட்களும் கிடைக்கும்.. எங்கே திரும்பினாலும் கடைகள்..

தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியே வந்தபோது மணி எட்டு ஆகிவிட்டது.

கூட வந்த பிலிப்பினோ மாலுமி "கொஞ்சம் லேட்டாகவே போகலாம்.. நீ பாருக்கு வரவில்லையா.. இங்கே 'பாடி ஷோ' ரொம்பப் பிரபலம்.. பார்த்துவிட்டுப் போகலாம்.. எனக்கும் தனியாக இருந்தால் போரடிக்கும்.." என்றான்.

"கப்பலுக்கு போகும் வழியில்தானே பார் இருக்கிறது.. நீ போகும் இடம் வரை நானும் டாக்ஸியில் வருகிறேன். அதன்பின் என்ன செய்யலாம் என்று அப்புறம் யோசிக்கலாம்" என்றேன்.

டாக்ஸி பிடித்தோம். அவன் சொன்ன இடத்துக்குப் போய் நின்றது. அந்தத் தெரு முழுவதும் வண்ண வண்ண நிறங்களில் கவர்ச்சிகரமான அழைப்புகள்.

'பீப் ஷோ' என்றும் 'பாடி ஷோ' என்ற பெயர்களுடன் பெண்களை வைத்து வியாபாரமாக்கும் பொழுதுபோக்கு இடங்கள் வரிசையாக..

நான், "முதலில் சாப்பிடலாமா.. எனக்கு பசிக்கிறது" என்றேன்.

"நீ என்னுடன் வரவில்லையா.. இங்கே ஒரு நல்ல 'ஸட்ரிப்ட்டீஸ்' பார் ஒன்று உள்ளது. அங்கேயே சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்றான்.

எனக்கு நல்ல பசி.. தூரத்தில் 'மெக் டொனால்டு' கடை ஒன்று தெரிந்தது.

கூட வந்த பிலிப்பினோ மாலுமியை அவன் விருப்பப்பட்ட 'ஸ்ட்ரிப்ட்டீஸ்' பாருக்கு போகச் சொல்லி விட்டு, நான் சிறிது நடந்து ஊர் சுற்றிப் பார்த்தபின் கப்பலுக்கு போகிறேன் என்று 'மெக் டொனால்டு' கடை நோக்கி நடந்தேன்.

கடையில் பெரிய பெரிய சைஸ்களில் விதவிதமான 'பர்கர்'கள், குச்சி குச்சியாக விரலை விட நீளமாக உருளைக் கிழங்கு சிப்ஸ், கோகோ கோலா என்று விளம்பரம் செய்திருந்த படத்தில் மிக அழகாகத் தெரிந்தன.

நான் சிக்கன் பர்கர் ஆர்டர் செய்து விட்டு அதன்பின் எங்கே போகலாம் என்று யோசித்தேன்..

வழக்கமாக எங்கள் கப்பல் போகும் ஊர்களெல்லாம் பெரிய பெரிய இரும்பு தொழிற்சாலைகள், அல்லது மின்சாரம் தயாரிக்கும் 'பவர் ஸ்டேசன்' போன்ற இடங்களாக இருக்கும்.

நிலக்கரி, இரும்புத்தாது ஏற்றும் கப்பல்கள் வேறு எங்கே போகும்?. அதனால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைப் பார்ப்பது என்பது மிகவும் அரிது.

இப்போது அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது..

அதுவும் 'அமே.. ரிக்கா' எனக்கு ஆசை வந்தது..

கண்டிப்பாக இன்று வீடுகள் உள்ள பகுதியில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் இருந்த பகுதியில் கொஞ்ச தூரம் தள்ளி வீடுகள் தென்பட்டன. வீதியில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை.

நான் ஆர்டர் செய்திருந்த பர்கர் வந்தது.

எனக்கு அதைப் பார்த்தவுடன் சிரிப்பு வந்தது.

இந்த அமெரிக்கர்களும், ஏமாற்றுவதில் நம்மூர் ஆட்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல...'பர்கர்' விளம்பரத்தில் ஊதிப்போய் தெரிந்த பர்கரின் 'பன்' நிஜத்தில்

மெலிந்துபோய் பரிதாபமாகக் காட்சியளித்தது...

விளம்பரத்தில் போட்டோ பிடித்து போட்டிருந்த சைஸில் ஐந்தில் ஒரு பங்கு கூட இல்லை. வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு மெதுவாக அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்புப் பகுதி நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

அந்தப் பகுதியில் இருந்த வீட்டு வாசல்களில் எல்லாம் சின்னக் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தன..

வீட்டுமுன் இருந்த புல்வெளியில் சாய்வு நாற்காலி போட்டு வயதான பாட்டி, தாத்தாக்கள்.

மருந்துக்குக் கூட வெள்ளையர்கள் யாரும் இல்லை. அந்தப் பகுதி முழுவதுமே கறுப்பின மக்கள்.

நீண்டு இருந்த தெருவில், வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். எனது கையில் இருந்த ப்ளாஸ்டிக் பைக்குள் மாலையில் செய்த 'ஷாப்பிங்' பொருட்கள்..

தெரு முடியும் இடத்தில் விளக்கு வெளிச்சம் குறைந்து இருளாக இருந்தது.. வீடு எதுவும் இல்லை.

அடர்த்தியான மரங்கள் இரண்டு பக்கமும், ஆனால் தொலைவில் பாதை இரண்டாக பிரியும் இடத்தில் மறுபடியும் வீடுகள் தென்பட்டன.

மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது. இன்னும் சிறிது நேரம் நடந்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்..

பத்தடி தூரம் நடந்திருப்பேன். திடீரென பிரகாசமான வெளிச்சம் எதிரேயிருந்து கண்களைக் கூசவைத்தது. தொடர்ந்து என்னருகே மோட்டர் பைக் ஒன்று வந்து நின்றது.

பைக்கில் இரண்டு பேர்.. நல்ல உயரம்.. திடகாத்திரமான உடல்வாகு... இரண்டு பேருமே ஆப்பிரிக்க அமெரிக்க(African Americans) இனத்தவர்கள்..

பின்னால் உட்கார்ந்திருந்தவன் இறங்கி, என்னருகே வந்தான். என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

"வாட் த ஹெல் யு ஆர் டூயிங் இன் திஸ் ப்ளேஸ்" அவன் என்னை நெருங்கிக் கொண்டே கேட்கவும் எனக்கு பயத்தில் கால்கள் நடுங்கின...

'யார் நீ' என்று கேட்டுக் கொண்டே என் இடது தோளில் கைவைத்து அழுத்தினான். எனக்கு பேச வார்த்தைகள் வெளிவரவில்லை.

அவன் என்னை உலுக்கி மறுபடியும் அதட்டினான்.

பயம் நீங்காமலேயே பாதி உளறலுடன் நான் கப்பல்வாசி என்பதையும் சும்மா நடந்து போகலாம் என்று நினைத்ததையும் சொல்லி முடித்தேன்.. அதற்குள் முற்றிலுமாக வியர்த்திருந்தேன்.

மனதுக்குள் என்னவோ நடக்கப் போகிறது என்று தோன்ற இதயத்துடிப்பு மிகவும் அதிகமானது..

"இந்த ஏரியாவுக்குள் தனியாக வரக்கூடாது என்று கப்பலில் யாரும் உனக்கு சொல்லித் தரவில்லையா" -குரலில் மிரட்டல் இருந்தது.

என் தோளில் கைவைத்திருந்தவன், பைக்கில் உட்கார்ந்திருந்தவனை நோக்கி திரும்பி கை நீட்டினான்.

அவன் ஏதோ ஒன்றை இவனிடம் கொடுத்தான்.. இருட்டில் சரியாகத் தெரியவில்லை.. நான் அதற்குள் எதையெதையோ கற்பனை செய்துவிட்டிருந்தேன்.

அவர்கள் என்னை சுட்டுவிட்டு பணத்தையெல்லாம் பறித்துக்கொண்டு தெருவில் தள்ளிவிட்டுப் போகக்கூடும்.. கப்பலில் என்னைத் தேடுவார்களே.. வினாடிகளுக்குள் ஏராளமான கற்பனைகள் வந்து என்னைக் கலக்கின..

"ஹேய் மேன்.. வந்து என் பின்னால் ஏறிக்கொள்" என்று பைக்கில் அமர்ந்திருந்தவன் என்னைப் பார்த்துச் சொன்னான்.

எனக்கு எதுவும் புரியவில்லை.. ஏன் அவன் பைக்கில் ஏறச் சொல்கிறான்?.
நான் பயந்து போய் ஓரடி பின்வாங்கினேன்.

"பயப்படாதே.. உன்னை உன் கப்பலில் கொண்டு போய் விடுகிறேன். இது மிகவும் மோசமான ஏரியா.. தனியாக வந்ததே தப்பு.. ஏறி உட்கார்" என்றான் அவன்.

நான் என்னருகே நின்றிருந்தவனை பயத்துடன் பார்த்தேன். அவன் கையில் சாவிக்கொத்து - நான் துப்பாக்கி என்று கற்பனை செய்தது அதைத்தான். பைக்கில் இருந்தவன் கொடுத்தது.

என்னருகே நின்றவன் என் தோளில் தட்டி "என்ன.. உன்னை ஏதாவது செய்து விடுவோம் என்று பயப்படுகிறாயா.. அப்படிச் செய்வதென்றால் இந்த இடத்திலேயே உன்னிடம் உள்ளதைப் பறித்திருக்கலாம் இல்லையா...

நாங்கள் கல்லூரி மாணவர்கள்.. உன்னை யாரும் எதுவும் செய்து விடக் கூடாதே என்பதற்காக இவன் கொண்டு போய் விடுகிறான்.. ஏறு பைக்கில்" என்றான்.

எனக்கு அவன் சொன்னதும் நம்பிக்கை வந்தது..

உண்மைதான்.. தப்பான ஆட்கள் என்றால் இப்போதே என்னிடம் இருப்பதைப் பறித்திருக்கலாம்.

சிறிது தயக்கம் இருந்தாலும் நம்பி பைக்கில் ஏறினேன்.
---------


அத்தியாயம் 33

நான் அந்தக் கருப்பு இன இளைஞனின் பைக்கில் ஏறி அமர்ந்தேன்.

"நீ வீட்டில் போய்க் காத்திரு. இவனை விட்டு விட்டு வருகிறேன்" என்று நின்று கொண்டிருந்தவனிடம் சொல்லிவிட்டு, பைக்கை எடுத்தான் அவன்.

ஃபாதர் ஜெர்ரியின் இடத்தருகே நிறுத்தச் சொல்லி, நன்றி கூறி அவனை அனுப்பி வைத்தேன்.

நடந்ததை ஃபாதரிடம் சொன்னேன்.

"நல்லவேளை. உனக்கு ஒன்றும் ஆகவில்லை.. போகும்போது நான் சொல்ல மறந்து போனேன். இது மிகவும் மோசமான பகுதி.. கடவுள் அவர்கள் மூலம் உன்னை இங்கே பத்திரமாகச் சேர்த்திருக்கிறார்..'' என்றார்.

அங்கேயே இந்தியாவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வீட்டுக்குப் பேசினேன். பின் ஃபாதர் ஜெர்ரியே என்னைக் கப்பலில் கொண்டு வந்து விட்டுச் சென்றார்.

தூங்கலாம் என்று படுக்கையில் விழுந்து, தூக்கம் வராமல் எழுந்து, தளத்தில் டியூட்டியில் இருந்த மாலுமியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது, என்கூட மாலையில் வெளியே வந்த பிலிப்பினோ மாலுமி சோர்வுடன் கப்பலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.

அவன் முகம் வெளிறிப் போய் இருந்தது. படியேறி வந்தவுடன் டியூட்டியில் இருந்த மாலுமியிடம், பிலிப்பினோ மொழியில் கவலையுடனும், பதட்டத்துடனும் ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

நான் 'என்ன விஷயம்' என்று கேட்டபின், ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் சொன்னான்.

அவன் பாரில் இருந்து புறப்பட்டு, டாக்ஸி பிடித்து வந்திருக்கிறான்..

ஃபாதர் ஜெர்ரியின் இல்லத்தின் கதவுகள் மூடியிருந்தததால், டெலிபோன் செய்வதற்காக அந்தப் பகுதியிலேயே இருந்த 'கோராஸ் ஷாப்' என்ற ஒரு பிலிப்பினோ கடைக்குப் போய் டெலிபோன் செய்து விட்டு, நடந்தே கப்பலுக்கு வர நினைத்திருக்கிறான்.

அதுதான் பிரச்னையே... ஏற்கனவே நல்ல போதையில் இருந்த அவனை, மூன்று பேர் சேர்ந்த கருப்பினக் கும்பல் வழிமறித்து, 'எய்ட்ஸ் ஊசி' போட்டுவிடுவதாக பயமுறுத்தி, அவன் வாங்கியிருந்த பொருட்களையும் கையிலிருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு விட்டதாம்.

அவன் சொல்லி முடித்த போது, நான் என்னை நினைத்துக் கொண்டேன். அந்த கருப்பின இளைஞர்கள் மிகவும் நல்லவர்கள்.

இல்லையென்றால், நானும் வேறு ஏதாவது கும்பலிடம் மாட்டியிருக்கக் கூடும். அமெரிக்கா, இந்த அளவு மோசமான நாடு என்று நான் எதிர்பார்க்கவில்லை.

(அதன்பின் சில வருடங்களுக்குப் பின், இந்தியாவிலும் அது போன்ற 'எயிட்ஸ் ஊசி' புரளி கிளம்பியதைப் பத்திரிகைகளில் படித்த போதெல்லாம், எனக்கு அந்த இரவின் சம்பவம் நினைவுக்கு வந்தது.)

மறுநாள் காலை கப்பல் முழுதும் விஷயம் பரவியிருந்தது.. ஒவ்வொருவராக துக்கம் விசாரித்தனர்.

அதுமட்டுமல்ல.. அந்த மாலுமியின் ஆறுதலுக்காக தங்களுக்கு நேர்ந்த மற்றும் கேள்விப்பட்ட இது போன்ற நிகழ்ச்சிகளைச் சொல்ல ஆரம்பித்தனர்.

குறிப்பாக நார்போஃக் துறைமுகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் சகஜம் என்றும் முன்பெல்லாம் கத்தி, துப்பாக்கி கொண்டு மிரட்டும் நிகழ்ச்சிகள் மாறி இப்போது எயிட்ஸ் ஊசி வந்து விட்டதாக எரிச்சல் பட்டுக்கொண்டார்கள்.

அந்தத் துறைமுகத்துக்கு அதன்பின் எத்தனையோ முறை போயிருக்கிறேன்.. தனியே நடந்து சுற்றிப் பார்க்கலாம் என்று போனதில்லை..

பின்னாளில் நியூஆர்லின்ஸ், ஃபிலடெல்பியா போன்ற எத்தனையோ நகரங்களுக்குப் போயிருக்கிறேன். ஆனால் அமெரிக்காவில் தனியாகப் போக ஆசைப்பட்டதே இல்லை.


ப்பல் அதன்பின் ஃபிரான்ஸ் சென்றது.

எங்கள் கப்பல் துறைமுகத்தில் கட்டப்பட்டவுடன் மாலையில் நிறைய பேர் வெளியே போய் விட்டனர்.

எனக்கு அன்று கப்பலின் இன்ஜின் அறையை பார்த்துக் கொள்ள வேண்டிய டியூட்டி நாள்.

நான் அன்று வெளியே போகமுடியாது. தங்கும் தளத்தின் வெளியே நின்று ஓரமாக இருந்த கம்பிகளைப் பிடித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது கீழே துறைமுகத்தின் 'ஜெட்டியில்' கப்பலின் ஏணி அருகே நின்றிருந்த ஒருவர் என்னை நோக்கி கையசைத்துக் கூப்பிட்டார்.

நான் அவரைக் கவனிக்கவும், "இந்தக் கப்பலில் இந்தியர்கள் இருக்கிறார்களா?" என்று கேட்டார்.

நாற்பது வயதிருக்கும். நான் இந்தியன் என்பதைச் சொன்னேன்.

முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் ஏணிப்படி வழியாக மேலேறி வந்து என் கைகளைக் குலுக்கி இந்தியில், "நானும் இந்தியன்தான். குஜராத்தைச் சேர்ந்தவன்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தூரத்தில் தெரிந்த ஒரு கப்பலைக் காட்டி "நான் அந்தக் கப்பலின் ஃபிட்டர். அது ஒரு கிரேக்க கம்பெனிக் கப்பல். ஒழுங்கான இந்தியச் சாப்பாடு சாப்பிட்டு இரண்டு மாதம் ஆகிவிட்டது. உங்கள் கப்பலில் இந்தியச் சாப்பாடு கிடைக்குமா?" என்று ஆவலுடன் கேட்டார்.

இரண்டு மாதமாகக் கப்பலில் யாருக்கும் சம்பளம் தரவில்லை என்றும் சரியான சாப்பாடு கூட இல்லையென்றும் அவர் சொன்னார்.

வெறும் பிரெட் மட்டும் சாப்பிட்டு, நாக்கு செத்துப்போய் விட்டது என்று தயக்கத்துடன் சொன்ன அவரை அழைத்துப் போய், எங்கள் மெஸ் ரூமில் சாப்பிடச் செய்தேன்.

எங்கள் கம்பெனி கப்பல்களில் 'கான்ட்டினென்ட்டல் டைப்' உணவு. ஆனாலும்,        இந்திய ஸ்டைலில் சோறு, குழம்பு கூட உண்டு. வயிறாறச் சாப்பிட்டுவிட்டு நன்றி சொல்லி விட்டுப்போனார் அவர்.

பொதுவாகவே, கிரேக்க கப்பல்களில் வேலை பார்ப்பவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் வேறு எவருக்கும் கிடைப்பது சந்தேகமே. நிஜமாகவே பிரமிப்பூட்டும் அனுபவங்கள்.

என்னுடன் கப்பலில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயராக வேலை பார்த்த, 'ஜோதிக்குமார்' என்ற தமிழரிடம் கப்பல் அனுபவம் பற்றி ஏராளமான சம்பவங்களைக் கேட்டிருக்கிறேன்.

'கப்பல் வாழ்க்கையில் இப்படியும்கூட சம்பவங்கள் நடக்குமா?' என்று கப்பலில் வேலை பார்ப்பவர்களே வியக்கும் சுவாரஸ்யமான அனுபவங்கள் அவை.

உலகக் கப்பல் வரலாற்றில் கிரேக்கர்களுக்கென்று தனி இடம் கண்டிப்பாக உண்டு.. எந்த மாதிரிக் கப்பல் என்றாலும் சமாளித்து ஓட்டுவதில் வல்லவர்கள் அவர்கள்.

'கிரீக் ஷிப்பில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் எத்தகைய கப்பலையும் ஓட்ட முடியம்' என்பது கப்பல் வேலையில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

அவர்களின் வழியே தனி வழிதான்.

'பழைய இரும்பு, தகரம், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்ச்ச்ச்..சம்பழம்..' என்று தெருக்களில் கூவி விற்பவர்கள் யாராவது அணுகினால் கப்பலையே விற்றுவிட்டு பேரீச்சம்பழம்

வாங்கிச் சாப்பிடலாம் என்ற நிலையில் உள்ள பழைய்ய்ய கப்பல்கள்.. அதையும் சமாளித்து விடுவார்கள் கிரேக்க கம்பெனிகள்.


கிரேக்கக் கப்பல்களில் ஜோதிக்குமாருக்கு கிடைத்த அனுபவங்களை பின்னால் தனியாக எழுதுகிறேன்..

அதற்கு முன் எனது கப்பல் அனுபவங்களை சொல்லி முடிக்கிறேன்..

கப்பல் வாழ்வில் நான் நுழைந்து நான்கு ஆண்டுகள் கடந்து போயிருந்தன..

"பத்ரீஷியாவும் ரோஸானாவும்" என்ன ஆனார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லி விடுகிறேன் இப்போது..

--------

அத்தியாயம் 34

ப்பல் வாழ்வில் நான் நுழைந்து, நான்கு ஆண்டுகள் கடந்து போயிருந்தன.

இந்த நான்கு வருடங்களில், உலகின் எல்லாக் கண்டத்திலும் காலடி பதித்து விட்டேன்.. கடல் மார்க்கமாகவே உலகை ஒரு முறை சுற்றி வந்து விட்டேன்.

வேலையில் சேர்ந்து, முதல் கப்பலில் இருந்தபோது, ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் தந்த பாதிப்பால், எனக்கு நானே சபித்துக் கொண்ட நிலை மாறி, அனுபவங்கள் என்னை பக்குவப் படுத்திவிட்டன.

காலப்போக்கில், இப்படிப்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் வேறு எந்த வேலையிலும் கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணம் தோன்றி, என் வேலையை நேசிக்கத் தொடங்கி விட்டேன்.

நான்கு வருடங்களுக்குள் பார்த்த நாடுகளும், சந்தித்த மனிதர்களும் எத்தனையெத்தனை... எவ்வளவோ அனுபவங்கள்..

புதுமையும் பிரமிப்பும் கலந்த இந்த ஒவ்வொரு அனுபவமும் கண்டிப்பாக தரை வாழ்க்கையில் கிடைத்திருக்கவே செய்யாது...

கடல் எத்தனை அதிசயங்களைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது...

ஒவ்வொரு முறையும் கடல் எனக்கு அறிமுகப்படுத்திய அற்புதங்களை நினைத்து என் மனதில் அதன் மீதிருந்த பிரமிப்பு, பலமடங்காக அதிகரிக்கவே செய்திருந்தது.

இப்போது, வானமும் காற்றும் என்னுடைய நெருங்கிய தோழர்களாகி விட்டிருந்தன. பொழுது போகாத வேளைகளில், அவற்றோடுதான் என்னுடைய நேரம் போனது...

இரவின் மடியில் வானம் முழுதும் அள்ளித் தெளித்திருக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்து பிரமிப்பில் ஆழ்ந்திருக்கிறேன்...

தினமும் சூரியன் மறைவதையும் உதிப்பதையும் கண்டு ரசிக்க முடிகிறது..

இரவு மணி பதினொன்று ஆனாலும், சூரிய வெளிச்சத்தைப் பார்க்க முடிந்த கோடைகால ஐரோப்பாவைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்...

பறக்கும் மீன்களையும், இரவில் கப்பலின் ஓரத்தில் மின்மினிப்பூச்சிகளின் கூட்டத்தை ஒன்று சேரப் பார்ப்பதைப் போல் தோற்றமளிக்கும் ஒளிரும் கடல் தாவரங்களையும், இன்னும் எத்தனையோ விதமான அதிசயங்களையும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்...

தீவுகள் போன்ற சைஸில் மிதந்து, நீரூற்று போல் தண்ணீர் பீச்சியடிக்கும் 'திமிங்கிலங்கள்', குழந்தைகள் போல் கும்மாளமடிக்கும் 'டால்பின்கள்', பத்து நாட்களுக்கு மேலாக கப்பலின் கூடவே தொடர்ந்து பறந்து வரும் விதவிதமான 'ஆல்பட்ரோஸ்' பறவைகள்...

நடுக்கடலில், திடீரென்று வானத்திலிருந்து கடலுக்கு பாலமிட்டாற்போல் காட்சியளித்து கடல் தண்ணீரை யானை தும்பிக்கையில் நீர் உறிஞ்சுவது போல் உறிஞ்சி எடுத்து, பின் காணாமல் போகும் 'WATER SPOUTS'.... இன்னும் எத்தனையோ அதிசயங்கள்....

மிகவும் சுவாரஸ்யமான வாழ்க்கை என்றில்லாவிட்டாலும், இவையெல்லாம் என்னை அந்த வாழ்க்கையுடன் கட்டிப் போட்டிருந்தன.

இந்த நேரத்தில் என்னை கலங்கடித்த அந்த நிகழ்ச்சியையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.


பிரேஸில் நாட்டின் மடீரா துறைமுகத்துக்குப் போனதையும் அங்கே பாரில் பணிபுரிந்த பத்ரீஷியா மற்றும் அவளது மகள் ரோஸானாவையும் பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன்.

நினைவிருக்கிறதா...

இதோ, நான்கு வருடத்துக்குப் பின் எனக்கு மறுபடியும் மடீரா போகும் வாய்ப்பு, பழைய நினைவுகள் எனக்குள் தோன்றின...

மனதிற்குள் சின்ன எதிர்பார்ப்பு இருந்தது.. பத்ரீஷியா இன்னும் அப்படியே இருப்பாளா.. இல்லை மாறியிருப்பாளா... பழைய வாழ்க்கையிலிருந்து மாறியிருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன்.


இப்போது நான் மூன்றாவது இன்ஜினீயர்.

கப்பல் 'மடீரா' துறைமுகத்தின் கரை தொட்டதும், டாக்ஸி பிடித்து 'காஸப்பிளாங்கா' பாருக்குப் போனோன்...

பார் மாறவேயில்லை.. அதே, பாதி இருட்டான ஹால். மேஜைகள், பாட்டில்கள், உடைந்து போன க்ளாஸ்கள்.. ஹாலில் நடனமாடும் பெண்கள்... எல்லாம் அதே தான்...

நான் என்னுடன் நட்போடு பழகிய தோழி பத்ரீஷியாவைத் தேடினேன்....

மேஜைக்கு வந்து நின்ற பையனிடம் "பத்ரீஷியா எங்கே" என்று கேட்டேன்.

"பத்ரீஷியா?..." -யோசித்தான்.

"ஓ.. பத்ரீஷியாவா.. அவள் போன வருடமே செத்துப்போய் விட்டாளே.."

உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்த உணர்வு.. அந்தப் பையன் வெகு சாதாரணமாக சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

ஆனால், என் நெஞ்சுக்குள் அந்தச் செய்தி கத்தி கிழித்தாற் போன்ற உணர்வில் துடித்துப் போனேன்.

சட்டென்று என் கண்ணில் நீர் கட்டியது....

நிஜமா.. இல்லை பையன் தவறாகச் சொல்கிறானா.. அது பொய்யாகவே இருக்க வேண்டும் என்று மனதுக்குள் ஏதோ எதிர்பார்ப்பு தோன்றியது.

வேறு யாரைப்பற்றியோ தவறான செய்தியைச் சொல்லுகிறானோ என்றும் நினைத்தேன். அதற்குள் மேலும் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்க முடியவில்லை..

நிஜமாகயிருந்து விட்டிருந்தால்.. எப்படி இறந்திருப்பாள்? .. இந்தக் கேள்விகள் என்னை அமைதியிழக்கச் செய்தன..

ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை...

பையன் திரும்பி வந்தான்...

"நிஜமாகவே பத்ரீஷியா இறந்து விட்டாளா.. எப்படி?" -அவசரத்துடன் கேட்டேன்.

"ஆமாம்.. 'அவளுக்கு எயிட்ஸ்' ஒரு வருஷம் பாருக்குக் கூட வரவில்லை.. கடைசியில் செத்துப் போனாள்.." -என்றான் அவன்.

அவள் இறந்து விட்டாள் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.. ரோஸானா என்ன ஆனாள்...

"அவளுக்கு ஒரு மகள் இருந்தாளே..."

"யார் ரோஸியா... வீட்டில் இருப்பாள் இப்போது" -என்றான் பையன்.

நான் பாரை விட்டு வெளியே வந்தேன்... அவள் வீட்டை நோக்கி வேகமாக ஓட்டமும் நடையுமாக செல்ல ஆரம்பித்தேன்.

மூச்சிரைத்து அவள் வீட்டு வாசலை நெருங்கிய போது கவனித்தேன்.. வாசலில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.

தயக்கத்துடன், வேறு வழியில்லாமல் பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினேன்.

நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வெளியே வந்து, சந்தேகத்துடன் பார்த்தாள்...

"பத்ரீஷியா வீடு?" ....

"இது தான்.... ஆனால் அவள் இப்போது உயிரோடு இல்லையே..."

பையன் சொன்னது நிஜம்தான். ரோஸி எங்கே போனாள்.. நான் யோசித்தேன்.

"உனக்கு பத்ரீஷியாவைத் தெரியுமா" அந்தப் பெண் கேட்டாள்.

"ஆமாம்.. ரோஸானா எங்கே இப்போது" - நான் கேட்டேன்.

"ரோஸியா... நீ பாரிலிருந்து தானே வருகிறாய்.. அவள் அங்கே தானே போனாள்.. ஐந்து நிமிடம் முன்னால் போனாள்.. அவள் அங்கேதான் இருக்கிறாள்"

அந்த செய்தி இன்னொரு 'ஷாக்'... ரோஸியா....? அந்த பாரிலா....?

-------


அத்தியாயம் 35

"ரோஸியா... நீ பாரிலிருந்து தானே வருகிறாய்.. அவள் அங்கே தானே போனாள்.. ஐந்து நிமிடம் முன்னால் போனாள்.. அவள் அங்கேதான் இருக்கிறாள்"

பக்கத்து வீட்டுப் பெண் சொன்ன அந்த செய்தி இன்னொரு 'ஷாக்'... ரோஸியா....? அந்த பாரிலா....?

மீண்டும் ஓட்டமும் நடையுமாக வேகமாக பாருக்கு திரும்பி, அந்த மெல்லிய இருளில் அவளைத் தேடினேன். அடையாளம் கண்டுபிடிப்பதில் கஷ்டம் தெரிந்தது...

நான்கு வருடத்துக்கு முன் பார்த்தது.

கடைசியில் கையில் 'டிரிங்க்ஸ் ட்ரே'யுடன் தூரத்தில் நடந்து சென்றவளைக் கண்டுபிடித்தேன்.

அந்த பிரேஸிலிய சூழலில் இந்தியத் தன்மை தனியாக தெரிந்த முகத்தை வித்தியாசப் படுத்த முடிந்தது.

அவள் எந்த பார் பக்கம் வரவே கூடாது என்று அவளது தாய் நினைத்தாளோ, அதே பாரில் இப்போது இவள்...

அருகே நடந்து போய் மெதுவாக, "ரோஸி" என்று கூப்பிட்டேன்.

திரும்பி என்னைப் பார்த்தாள்.. இந்த நான்கு ஆண்டுகளில் முகம் மறந்திருக்கக் கூடும்.

"என்னை நினைவிருக்கிறதா.. நான்கு வருஷத்துக்கு முன் உன் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.. உன் டாடி ஊர்க்காரன்" -அடுத்து என் பெயர் சொன்னதும் அவள் புரிந்துகொண்டாள்.

அவள் முகம் பிரகாசமானது... கையில் வைத்திருந்த ட்ரேயை டேபிள் மேல் வைத்து விட்டு, ஓடி வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்....

அவள் மறக்கவில்லை... ஓரமாக இருந்த மேஜை ஒன்றில் அமர்ந்தோம். அவள் உள்ளே போய் சொல்லி விட்டு வந்திருந்தாள். நீண்ட நேரம் எதுவும் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்...

அந்த மெல்லிய வெளிச்சத்தில் கண் கலங்கியிருப்பது தெரிந்தது...

"மம்மி செத்துப்போய் விட்டாள்.. தெரியுமா..."

'தெரியும்' என்று தலையசைத்தேன். அவள் உடனே கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

நான் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன்.. நீண்ட நேரம் கழித்துத்தான் நிறுத்தினாள்.  இருக்கும் இடம் 'பார்' என்பதால், அவளை சமாதானப் படுத்தினேன்.

பாரில் ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தால் எங்களை யாரும் கண்டு கொள்ளவேயில்லை.

"மம்மி இறந்தவுடன் சாப்பிடக்கூட பணம் இல்லை... என்னை டாக்டருக்கு படிக்க வைப்பதற்காக சேர்த்த பணம் எல்லாம் அவளின் ஹாஸ்பிடல் செலவுக்கே போய்விட்டது. எனக்கு வேறு வழியும் தெரியவில்லை... கடைசி நாட்களில் ஹாஸ்பிடல் செலவுக்கும் பணம் இல்லாத நிலை வந்தது... அதனால் நான் பாருக்கு வர முடிவு செய்தேன்".

மறுபடியும் அவள் அழ ஆரம்பித்தாள். எத்தனை கனவுகளை சுமந்திருந்தாள்...
அவள் தேம்பித் தேம்பி அழுதாள். நானும் எதுவும் பேசத் தோன்றாமல் அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.

கப்பலில் இருந்து புறப்பட்ட போது இருந்த சந்தோச உணர்வு எல்லாம் வடிந்து போய்விட்டது.

நான் வேறு எதையோ எதிர்பார்க்க, இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது.

முகத்தை துடைத்துக் கொண்டு, "வீட்டுக்குப் போகலாமா" என்று கேட்டாள்.

உள்ளே போய் சொல்லிவிட்டு வந்தாள்.

நான்கு வருடங்களுக்கு முன் பத்ரீஷியாவுடன் அதே தெருவில் நடந்து போனது நினைவுக்கு வந்தது. வீட்டிக்குள் நுழைந்ததும் பத்ரீஷியாவின் புகைப்படம் சிரித்தது...

என்னையறியாமலேயே கண்கள் கலங்கின... நீண்ட நாட்கள் பழகின நெருங்கிய தோழி ஒருத்தியை பறி கொடுத்த சோகம் என்னை ஆட்கொண்டது.

ரோஸானா பேசிக்கொண்டே போனாள்.

"மம்மி உயிரோடு இருந்த போது, முதலில் நான் பாருக்குப் போவதை விரும்பவேயில்லை... ஆனால் சாப்பிட வேறு வழியுமில்லை...
'சேல்ஸ் கேர்ள்' ஆக மட்டும் வேலை செய்யச் சொன்னாள்... பகலில் ஸ்கூல் போய் விட்டு இரவில் பாரில் பனிரெண்டு மணிவரை சேல்ஸ் வேலை...

மம்மி செத்துப்போன பின் ஸ்கூல் போவதையும் நிறுத்திவிட்டேன்... அவள் செய்த தொழிலை மட்டும் நான் செய்யக்கூடாது என்று என்னிடம் ப்ராமிஸ் வாங்கியிருக்கிறாள்.

சேல்ஸ் கேர்ள் வேலையில் வரும் பணம் எனக்கு போதுமானது... மம்மி போல் மகளை டாக்டராக்க வேண்டும் என்ற லட்சியங்கள் எதுவும் எனக்கு இல்லை.

சாப்பிடுவதற்கு கிடைத்தால் போதும்.. இங்கே பாருக்கு வருபவர்கள் தொந்தரவு தாங்க முடியவில்லை... நிறைய பேர் வற்புறுத்துவார்கள்... எப்படியோ சமாளித்து வருகிறேன்...

நான் அந்த தொழிலை வெறுக்கிறேன்... மம்மி இந்த வயதில் என்னை விட்டு இறந்து போக அந்தத் தொழில் தானே காரணம்..."

நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். என்னால் இன்னும் பத்ரீஷியா இறந்து விட்டாள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"ஏன் நீங்கள் எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள்... கேட்க மறந்து போனேன்... என் டாடியை கண்டுபிடித்தீர்களா..."

'இல்லை'யென்று தலையை மட்டும் அசைத்தேன்.

அப்போதுதான் தோன்றியது. நான் இத்தனை வருடங்களில் அந்த நட்ராஜைக் கண்டுபிடிக்க நினைத்தது கூட இல்லை...

அவள் அதை எதிர்பார்த்திருக்க வேண்டும்... முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.

திடீரென்று ராபர்ட் பற்றி அப்போது நினைவுக்கு வந்தது... பார்த்தவுடன் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன்... ஆனால், பத்ரீஷியா பற்றி பேசிக் கொண்டிருந்ததில் மறந்துவிட்டது...

"ரோஸி... ராபர்ட் எங்கே... நீங்கள் திருமணம் செய்யவில்லையா..."

அவள் மெளனமாக இருந்தாள்... பின் சிறிது நேர அமைதிக்குப் பின் சொன்னாள்...

"ராபர்ட் இப்போது பெரிய ஃபுட்பால் பிளேயர் ஆகிவிட்டான். பெரிய இடத்து பெண் சிநேகிதிகள் அதிகம்... தேசிய அளவில் ஆடுவதால் என்னை மறந்து விட்டிருப்பான்... அவனைப் பார்த்தே நாளாகிவிட்டது..." என்றாள்.

நான் அவளை நினைத்து பரிதாபப் பட்டேன். பாவம். இவள் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லையா?..

"இனிமேல் என்ன செய்யப் போகிறாய் ரோஸி..?"

"தெரியவில்லை... மம்மி இல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது... நிறைய பேர் வீடு வரை வந்து தொந்தரவு செய்கிறார்கள்...

எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும் என்று பயமாக உள்ளது. நானே ஒரு வேளை மாறிவிடுவேனோ என்றுகூட பயப்படுகிறேன்".

நான் மெளனமாக டேபிளில் இருந்த பத்ரீஷியாவின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் என்னென்னவோ நினைவுகள் ஓடியது.

இவள் இந்த இடத்தில் இருந்தால் கண்டிப்பாக பத்ரீஷியாவின் பாதையைத் தேர்ந்தெடுக்க கட்டாயப் படுத்தப்படலாம்.

நீண்ட மெளனத்திற்குப் பின் பளிச்சென்று அந்த எண்ணம் தோன்றியது...

ரோஸானாவின் எதிர்காலத்திற்கு நான் நினைத்த முடிவு சரியாக இருக்கும் என்று தோன்றியது.

"ரோஸி.. நீ இந்தியாவுக்கு வந்துவிடு... உன்னை உன் டாடியிடம் ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு"... என்றேன்.

அந்த நட்ராஜைக் கண்டுபிடிக்க முடியுமோ இல்லையோ, அட்லீஸ்ட் இந்த நரகத்திலிருந்து அவள் விடுதலையடைவாள்...

அவள் வேதனை நிறைந்த பார்வையுடன் என்னைப் பார்த்தாள்.

"இந்தியா வரும் அளவுக்கு பணத்துக்கு நான் எங்கே போவேன்?"

"அதைப்பற்றி இப்போது கவலைப்படாதே... நீ சரியென்று சொல்... பின்னால் யோசிக்கலாம்"...

அவள் அந்த வினாடியில் குழம்பிப் போனது போல் தெரிந்தது.

"அவசரமில்லை... நன்றாக யோசித்து பதில் சொல். நாளை இரவு மறுபடியும் பாருக்கு வருகிறேன்"...

எப்படி இவ்வளவு சீக்கிரம் முடிவு எடுத்தேன் என்று எனக்கே கூட ஆச்சர்யமாக இருந்தது.

அன்று இரவு கப்பலில் போய் சேர்ந்தவுடன் அவளின் எதிர்காலம் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

எப்படி அந்த நடராஜைக் கண்டுபிடிப்பது? பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பிரேஸில் வந்து போன ஒரு மாலுமியைத் தேடி கண்டுபிடிப்பது சுலபமா?..

அதுவும் வெறும் பெயர் மட்டும் வைத்துக் கொண்டு..

(நட்ராஜ் என்பது அவரின் நிஜப்பெயர் அல்ல.. தொடருக்காக நான் மாற்றி வைத்துள்ளேன்..  மேலும் ஊர் விசாகப்பட்டினம் என்பது மட்டுமே தெரியும்..

நான் கூட என்னிடம் 'சொந்த ஊர் எது?' என்று கேட்கும் வெளிநாட்டு நண்பர்களிடம், 'இராமேஸ்வரம்' என்றால் தெரியாது என்பதால் எளிதாக தெரியும் என்பதற்காக 'Madras' என்று சொல்வது வழக்கம்..

அதே போல் நட்ராஜும் விசாகப்பட்டினம் என்று சொல்லியிருக்கலாம்.. அவர் ஆந்திராவில் எந்த ஊரைச் சேர்ந்தவரோ?..)

ரோஸியிடம் உடனேயே யோசிக்காமல் சொல்லிவிட்டேன்... ஆனால் விகடனில் பத்திரிக்கை நிருபராக இருந்த அனுபவத்தால், மற்றும் இன்னும் உள்ள தொடர்புகளை வைத்து, எப்படியோ கண்டுபிடித்து விடலாம் என்று மட்டும் ஏனோ தோன்றியது எனக்கு...

வெகு நேரம் தூக்கம் வரவில்லை...

மறுநாள் மாலை ஆறுமணிக்கு பாருக்குப் போய்ச் சேர்ந்துவிட்டேன்.

என்னைக் கண்ட உடனேயே ஓடிவந்து கண்கலங்கி என் கைகளைப் பற்றிக் கொண்டாள்... அவள் கண்களில் கண்ணீர்.

"சொல் ரோஸி. இந்தியாவுக்கு வர, சம்மதம் தானே.."

அவள் மெளனமாக தலை குனிந்து இருந்தாள்..

----------

அத்தியாயம் 36


நான் ஆர்வத்துடன் கேட்டேன்..

"சொல் ரோஸி. இந்தியாவுக்கு வர, சம்மதம் தானே.."

அவள் மெளனமாக தலை குனிந்து இருந்தாள்... பின் மெலிதான குரலில் சொன்னாள்.

"இல்லை... என்னை மன்னித்துவிடுங்கள்".

நான் அவளின் பதிலில் அதிர்ந்து போனேன்.

"ஏன்... என்ன பிரச்சனை?" பதற்றத்துடன் கேட்டேன்.

"உங்களின் எண்ணத்திற்கு மிகவும் நன்றி... நான் நேற்று முழுவதும் யோசித்துப் பார்த்தேன். என் டாடியைக் கண்டுபிடித்தாலும் அவர் என்னை ஏற்றுக் கொள்வார் என்பது என்ன நிச்சயம்?... கண்டிப்பாக மாட்டார்...
என்னால் அவர் குடும்பத்தில் வீண் பிரச்னைதான் வரும். என் டாடி பற்றி நான் நிறைய எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறேன்...

அதெல்லாம் நடக்கவில்லையென்றால் மனமுடைந்து போவேன்... நான் ஆசைப்பட்ட எதுவும் நடக்கவில்லை பார்த்தீர்களா, நான் கையில் கட்டியிருந்த கயிறு கூட இப்போது இல்லை... இப்போது இருக்கும் கற்பனைகளோடாவது வாழ்கிறேன்... என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். ப்ளீஸ்".

நான் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கத் தயாராக இல்லை...

"நான் பிரேஸிலிலேயே இருந்து விடுகிறேன். வேறு ஏதாவது நல்ல வேலை கிடைக்கும்வரை இந்த ஸேல்ஸ் கேர்ள் வேலை பார்த்து சமாளித்துக் கொள்கிறேன். ஆனால் கண்டிப்பாக அம்மா செய்த தொழில் மட்டும் செய்ய மாட்டேன்... இது பிராமிஸ்..." என்று கண்ணீர் விட்டாள்...

என்னால் அவளுக்கு சமாதானம் சொல்லத்தான் முடிந்தது. கடைசி வரை அவள் சம்மதம் சொல்லவேயில்லை.. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது..

"நீங்கள் வருத்தப் படாதீர்கள்.. கண்டிப்பாக எனக்கு உங்கள் உதவி தேவைப்படும் சமயத்தில் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.. அப்போது முடிந்தால் உதவி செய்வீர்களா?" என்று மட்டும் கேட்டாள்.

நான் உறுதியளித்தேன்.. அதன் பின் நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். எனது முகவரி கொடுத்தேன்...

"கவலைப் படாதே ரோஸி... உன் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்..." என்று அவளிடமிருந்து விடைபெற்றேன்..

இந்த முறை அவளை விட்டுட்டு, அந்த பாரிலிருந்து கப்பலுக்கு புறப்பட்டபோது என்றுமில்லாத அளவுக்கு மனதில் சோகம் இருந்தது...

எனது டாக்ஸி கண்ணிலிருந்து மறையும் வரை அவள் பார் வாசலில் நின்று கையசைத்துக்கொண்டே நின்றது தெரிந்தது.

அதன்பின் அங்கே போனது அது தான் கடைசி...

சில மாதங்கள் கழித்து அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. ராபர்ட் திரும்ப வந்ததாகவும் அவளை தன்னுடன் அழைத்துப் போக விரும்புவதாகவும் எழுதியிருந்தாள்...

பிரேஸிலில் உள்ள 'ரியோ டி ஜெனிரா' நகரத்தில் வேலையில் சேரப் போவதாகவும் சந்தோஷப்பட்டிருந்தாள்.

கப்பல் வாழ்க்கையில் நான் சந்தித்த எத்தனையோ பேரில், ரோஸானா என்ற அந்த வித்தியாசமான பெண் மட்டும் என் நினைவில் இருந்து நீங்காத இடம் பிடித்துவிட்டாள்...

அவளின் துயரமான வாழ்வுக்கு முடிவு கிடைத்தது, மீண்டும் சந்தோஷ வாழ்க்கையைத் தொடங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...

அந்தக் கடிதம்தான் அவளிடமிருந்து வந்த கடைசி கடிதம். அதன் பின் பிரேஸில் போகும் வாய்ப்பு எனக்கும் கிடைக்கவில்லை.

ரோஸானா... அவள் சேற்றிலே முளைத்த செடியில் பூத்த மலர்... மிக ஆபூர்வமான மலர் அது..

அந்தச் சூழ்நிலையில் அவளைப் போல மனஉறுதியுடன் வேறு யாராலும் வாழ்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே...

ரோஸானாவின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்...

அந்தக் கடைசி கடித்ததிற்குப் பின் நான் வேறு ஒரு கப்பலில் சேர்ந்து விட்டேன்.. ரோஸியிடம் இருந்து வேறு கடிதம் எதுவும் வரவில்லை.. அவளின் 'ரியோ' நகரத்து முகவரி எனக்கு எழுதவில்லை..

கப்பல் வாழ்வில் இது ஒரு சாபம்.. நமக்கு வரவேண்டிய கடிதங்கள் பல இடங்கள் சென்று, பல ஏஜெண்டுகளின் கைமாறி வரும்..

பல கடிதங்கள் தொலைந்து போய்விடும்.. என் இனிய தோழி ரோஸியின் நட்பையும் அப்படித்தான் தொலைத்தேன்.. அவள் எந்த ஊரில் இருந்தாலும் வாழ்க்கை முழுதும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்று தான் வேண்டிக்கொள்வேன்..

ரோஸானா என்ற தோழியின் நட்பு என்றும் என் நினைவில் இருக்கும்..

-------------------


ப்பல் வாழ்வில் முதல் கப்பல் மட்டும்தான் கசப்பான அனுபவங்களைத் தந்தது. அதன்பின் எல்லாக் கப்பல்களும் மிகவும் சந்தோஷம் தருபவையாகவே இருந்தன...

ஒவ்வொரு கப்பலிலும் புதிய புதிய முகங்கள்... புதிய தேசங்கள் என்று வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

எல்லாக் கப்பல்களும் UMS(unattended machinery space) அடிப்படையிலான முறையில் இயங்கியதால், பகல் நேரத்தில் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருந்தது...

காலை எட்டுமணிமுதல் மாலை ஐந்தரை மணி வரை வேலை நேரம்.. கப்பலில் மற்ற நேரங்களில் பொழுது எப்படிப் போகிறது என்பதையும் சொல்லி விடுகிறேன்.

கப்பலில் விளையாட்டு அறை உண்டு... டேபிள் டென்னிஸ் விளையாடுவோம். சில கப்பல்களில், உடற்பயிற்சி செய்வதற்காக 'ஜிம்' வசதிகளும் உண்டு.

சரக்கு ஏற்றிச் செல்லாமல் இருக்கும் பயணங்களில், சரக்கு ஏற்றும் இடமான 'கார்கோ ஹோல்டு' பகுதிகளுக்கு உள்புறம் சென்று கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளையும் விளையாடுவது உண்டு...

இதெல்லாம் ஒவ்வொரு கப்பலில் சேர்ந்துள்ள கும்பலைப் பொறுத்தது... சரியான 'குரூப்' அமைந்து விட்டால் பொழுது போவதே தெரிவதில்லை...

இது தவிர, கப்பலில் உள்ள சின்ன நீச்சல் குளத்தில் கடல் தண்ணீர் நிரப்பி நீச்சலடித்துப் பொழுது போக்குபவர்களும் உண்டு...(நீச்சல் குளம் என்பது கப்பலைப் பொறுத்தவரை கொஞ்சம் பெரிய சைஸ் அளவிலான தொட்டி...)

ஆறுமணிக்கெல்லாம் எல்லோரும் பார் அமைந்துள்ள இடத்திற்கு வந்து விடுவோம். அனைவரும் யூனிஃபார்ம் அணிந்திருக்க வேண்டும்...

ஏழு மணி வரை பாரில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டே கதை பேசுவதும்,மியூஸிக்கை அலற விட்டு ரசிப்பதும், அன்றாட வேலைகளில் ஒன்றாகி விட்டவிஷயம்.

ஏழு மணியிலிருந்து ஏழரை மணி வரை சாப்பிடும் நேரம். அதன்பின் மீண்டும் பார் பகுதிக்கு வந்து விடுவோம்...

தூக்கம் வரும் வரை பொழுது போக்குவதற்கு நிறைய வழிகள் உண்டு...
'டார்ட்'(Dart) எனப்படும் விளையாட்டு தான் பெரும்பாலும்...

இரு அணிகளாகப் பிரிந்து கொண்டு விளையாடுவார்கள்... அது போரடித்து விட்டால், இருக்கவே இருக்கிறது சீட்டுக்கட்டு... சுமார் ஒன்பது மணி வரை சீட்டு விளையாட்டு. (பணம் வைத்து அல்ல... சும்மா பொழுது போக்க மட்டுமே!)

ஒன்பது மணிக்குப் பின் கப்பலில் உள்ள வீடியோவில் படம் பார்ப்போம்... பிரிட்டிஷ் கம்பெனி என்பதால் பெரும்பாலும் ஆங்கிலத் திரைப்படங்களின் கேசட்டுகள் இருக்கும்.

ஒவ்வொரு துறைமுகத்திலும், எங்கள் கம்பெனியின் தலைமை அலுவலகம் லண்டனில் இருந்து புதிய ஆங்கில திரைப்படங்களின் கேசட்டுகள் ஏஜெண்ட் வழியாக வந்து சேரும்.

இந்தியாவிலிருந்து புதிதாக சேரும் இந்திய ஆபிஸர்களும், வரும் போது இந்திப் பட கேசட்டுகளைக் கொண்டு வருவதுண்டு...

சரக்குக் கப்பல்களில் பொதுவாக டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்பதற்கு டிஷ் ஆன்ட்டெனா வசதி செய்யப்பட்டிருப்பதில்லை. கப்பல் கரையிலிருந்து கடலுக்குள் பயணம் செய்யும் போது, டி.வி நிகழ்ச்சிகள் தெரிவதில்லை...

துறைமுகங்களை நெருங்கும்போது மட்டுமே அந்தந்தப் பகுதிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் டி.வி.யில் தெரிய ஆரம்பிக்கும்...

நடுக்கடலில் செல்லும் போது டி.வி.நிகழ்ச்சிகள் தெரியாத நிலையில், வீடியோ மூலம் மட்டுமே படங்கள் பார்க்க முடியும்...

துறைமுகம் வந்து சேரும் வரை தினசரி வாழ்க்கை என்பது இப்படி இருக்கும்.

கப்பல் கரை சேர்ந்ததும் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு மாலை வேளைகளில் அந்தந்த நாட்டின் துறைமுகத்தின் அருகிலுள்ள ஊருக்குள் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கப்பலுக்குத் திரும்பி விடுவோம்...

ஒவ்வொரு கப்பலும் இப்படித்தான்... எங்களது கம்பெனியில் வழக்கமாக ஆறுமாத கான்ட்ராக்ட் அடிப்படையில் பணியில் சேர்வோம்.

விடுமுறை கழிந்தபின் ஊரை விட்டு கப்பலுக்குப் புறப்படும்போது உற்சாகமாக இருக்கும். கப்பலில் சேர்ந்து, நாட்கள் செல்ல ஆரம்பிக்கும்...

மூன்று மாதங்கள் கழிந்து விடும். பாதிப் பணிக்காலம் முடிந்து விட்டதால், இன்னும் தொண்ணூறே நாட்களில் ஊர்போய்ச் சேர்ந்துவிடலாம் என்ற உற்சாகம் மீண்டும் பற்றிக் கொள்ளும்...

இப்படித்தான் எல்லாக் கப்பல்களிலும் நாட்கள் சென்றன. கப்பல் பணியில் உயர்பதவிகளைப் பெற நிறைய பரீட்சைகள் எழுத வேண்டும்.

நானும் எல்லாத் தேர்வுகளும் எழுதி கடைசியில் 1998-ம் வருடம் ' சீஃப் இன்ஜினீயர் ' பதவிக்கான தேர்வு எழுதி, தகுதி பெற்றேன்.

நான் இருந்த பிரிட்டீஷ் கம்பெனியில், பதவி உயர்வு என்பது மிகவும் மெதுவாகவே தரப்படும் ஒருவிஷயமாக இருந்தது..

இந்த நிலையில் இந்திய கம்பெனி ஒன்றில் சீஃப் இன்ஜினீயராகப் பணிபுரிய எனக்கு அழைப்பு வந்தது.

ஏற்கனவே அந்தக் கப்பலில் இன்னொரு சீஃப் இன்ஜினீயர் இருந்ததால், முதல் இரண்டு மாதங்கள் 'அடிஷனல் சீஃப் இன்ஜினீயராக' பதவி உயர்வு தருவதாகச் சொன்னார்கள்.

கொச்சின் துறைமுகத்தில் போய் அந்தக் கப்பலில் சேர்ந்தேன். கப்பல் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று சில ரிப்பேர் வேலைகளை முடிக்க இருந்தது.

என் கல்லூரித் தோழனான குமாரும் எனது கப்பலில் மூன்றாவது இன்ஜினீயராக சிங்கப்பூரில் சேர்ந்தான்.

கப்பல் வாழ்வில் நல்ல நண்பர்கள் கூட இருக்கும்போது நாட்கள் போவதே தெரியாது. அதை அந்தக் கப்பல் பயணம் நன்றாகவே உணரவைத்தது.

சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியா சென்று, சர்க்கரை ஏற்றிக் கொண்டு கப்பல் தென்கொரியா சென்றது. அந்தத் துறைமுகத்தில் நான் சீஃப் இன்ஜினீயராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

முதல் முதலில் கப்பலில் சேர்ந்த போது முரட்டுத்தனமாக என்னிடம் நடந்துகொண்ட சீஃப் இன்ஜினீயர் என் நினைவுக்கு வந்தார். கப்பல் வாழ்க்கை மீதே நான் வெறுப்புற்றுப்போன அந்த நாட்கள் நினைவில் வந்தன.

கஷ்டங்களைச் சகித்துக் கொண்டதன் பரிசு தானே, இன்று கப்பலில் சீஃப் இன்ஜினீயராக வர முடிந்திருக்கிறது.

ஆனால், முதல் கப்பலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் என் மனதில் காயங்களாகப் பதிந்திருந்ததால், எனக்கு ஏற்பட்ட நிலைமை, என் கீழ் பணிபுரிய வரும் மற்ற ஜுனியர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

ஒவ்வொரு கப்பலிலும் எனக்குக் கீழ் புதிதாகச் சேர்பவர்களை மிகவும் நட்புடனும் மரியாதையுடனும் நடத்துவதை என் வழக்கமாக்கிக் கொண்டேன்.

எனக்குக் கீழே ஊழியர்களாகச் சேர்ந்து, பிறகு பிரிந்து வேறு கப்பல்களுக்குப் போகிறார்கள்.

அவர்களில் பலர், வாய்ப்பிருக்கும் போது என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசவும், நேரில் வந்து சந்திக்கவும் தவறுவதில்லை.

மேலும், இப்போதைய புத்தம் புதுத் தலைமுறை இளைஞர்கள் மிகவும் பொறுப்பானவர்கள்.

முன்பிருந்த கப்பல் வாசிகளைப் போல் மற்றவர்களைத் துன்புறுத்தும் 'சாடிஸ்ட்' ரகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இல்லை. துன்பம் கண்டு சுலபத்தில் சோர்ந்து விடுவதும் இல்லை.

நான் பொறுப்பேற்ற பின், கப்பல் கனடாவிலுள்ள வான்கூவர் சென்றது.

அங்கிருந்து பின் ஈகுவடார், பெரு மற்றும் சிலி நாடுகளுக்குச் சென்றது.

சிலி நாட்டை விட்டுப் புறப்பட்டு, தென் அமெரிக்கக் கண்டத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள 'மெகல்லன் ஜலசந்தி'யை நோக்கி கப்பல் பயணப்பட்டது..


இன்ஜின் அறையிலிருந்து, மேலே தங்கும் தளப்பகுதிக்கு வந்திருந்தேன். கடலின் அழகை ரசிக்கவோ, குளிர்ந்த காற்றின் இனிமையை அனுபவிக்கவோ முடியாத ஒரு சோம்பலான காலைப் பொழுது.

வானிலை இன்னும் மோசமாக மாறக்கூடும் என்று கப்பலுக்குத் தகவல் வந்திருந்தது.

அந்தக் கப்பலில் சேர்ந்து நான்கு மாதங்களாகி விட்டன. இன்ஜின் அறையின் தலைமைப்பதவி... இதுதான் நான் ஆசைப்பட்டது...

கப்பல் வாழ்க்கையில் நுழைந்த போது, சீஃப் இன்ஜினீயர் ஆகி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது... இதோ, நிறைவேறிவிட்டது...

கப்பல் வாழ்வில் சாதிக்க நினைத்த ஒரு குறிக்கோளை அடைந்து விட்ட திருப்தி எனக்குள் இப்போது இருந்தது.

ஆனால், போய்ச் சேர வேண்டிய இலக்கை அடைந்த பின், ஏனோ வெறுமை தோன்றுவதாகவும் ஒரு எண்ணம் மனதில் வியாபித்தது...

இதோ, கண்ணுக்கு முன் பரந்து விரிந்திருக்கும் சமுத்திரப் பரப்பு கூட வெறுமையாகத் தெரிகிறது. வழக்கமாக வானம் தெளிவாக இருக்கும்போது தூரத்தில் தொடுவானம் தெரியும்...

கடலும், வானமும் ஒன்றையொன்று தொட்டுக் கொள்வதாகத் தோன்றும் அந்த இடம்... நிஜமில்லாத தொடுவானம்...

ஆனாலும், சில வேளைகளில் அது கூட ரசிக்கக்கூடியதாக, மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கும்... இன்று அதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

காலை ஒன்பது மணி ஆகி விட்டது. ஆனாலும், மேகமூட்டம் காரணமாக சற்று இருட்டாக இருந்தது. கடல் மிகவும் சீற்றத்துடன் இருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர்ச் சமவெளி, குளிர்ந்த காற்று முகத்தில் ஜில்லென்று பட்டு சிலிர்க்க வைத்தது...

மற்றொரு சமயமாயிருந்தால், இதை அனுபவித்து ரசித்திருப்பேன். ஆனால், ஏனோ இன்றைய சூழ்நிலையில் எதையும் ரசிக்கும் மனநிலை இல்லை...

பசிபிக் பெருங்கடலின் வழக்கமான ஆர்ப்பரிக்கும் அலைகள்... எப்போதும் இப்படித்தான். ஆனால் இன்று மிகவும் மோசம்.

பெயருக்குப் பொருத்தமேயில்லாமல், எப்போதும் சீற்றத்துடன் இருக்கும் இந்தக் கடலுக்கு 'பசிபிக்'(Pacific) என்று ஏன் சாந்தத்தைக் குறிக்கும் பெயரோ...

'சிலி' தேசத்திற்கு மேற்கே, அந்தப் பசிபிக் கடலின் சீறும் அலைகளில், சீற்றத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் எங்கள் கப்பல் தள்ளாடிக் கொண்டிருந்தது.
-----------

அத்தியாயம் 37


'சிலி' தேசத்திற்கு மேற்கே, அந்தப் பசிபிக் கடலின் சீறும் அலைகளில், சீற்றத்தக்கு ஈடு கொடுக்க முடியாமல் கப்பல் தள்ளாடிக் கொண்டிருந்தது.
தளத்தின் ஓரத்தில் கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த என் கால்களை பெரிய அலை நனைத்து விட்டுச் சென்றது.

அலையின் உயரம் அதிகரித்துக் கொண்டே வருவது கப்பலின் தளத்திலிருந்து பார்க்கும் போதே தெரிந்தது. காற்றின் வேகமும் அதிகரித்திருந்தது.

அலையில் நனைந்த கால்கள் ஜில்லென்று குளிர்ந்தது.

"என்ன 'படா ஸாப்'... காற்று பலமாக அடிக்கிறது தெரியலையா... தண்ணீர் மேலே அடிப்பதுகூடத் தெரியாமல் அப்படி எதைப்பத்தி யோசிச்சிட்டு இருக்கீங்க?..."

பின்புறத்திலிருந்து வந்த குரல் என்னை நினைவுலகத்திலிருந்து, நிஜ உலகிற்கு அழைத்து வந்தது...

காற்றின் வேகத்தில் கடல்அலை சிதறி, என் மேலும் தண்ணீர் தெளித்துவிட்டிருந்தது... அந்த உணர்வு கூட இல்லாமல் நான் யோசனையில் இருந்திருந்தேன்.

என்னை அழைத்தது கப்பலின் ஜுனியர் இன்ஜினீயர் வடிவேல். சேலத்தை சொந்த ஊராகக் கொண்ட அவன், இந்தக் கப்பலில் முதன் முதலாக தனது கடல் வாழ்க்கையைத் தொடங்கியிருந்தான்...

இந்தக் கப்பல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்குச் சொந்தமானது... இந்தியக் கப்பல்களில் பெரும்பாலும் ஹிந்தியும், ஆங்கிலமும் கலந்த வார்த்தைகள்தான்...

அதனால், சீஃப் இன்ஜினீயரான என்னை இங்கே எல்லோரும் 'படா ஸாப்' என்றே அழைக்கிறார்கள்.

"உங்களை 'கேப்டன் ஸாப்' அவரோட கேபினுக்கு வரச் சொன்னார்" என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.

நான் கேப்டனின் அறையை நோக்கி நடந்தேன். கேப்டன் கோவாவைச் சேர்ந்தவர். ஐம்பது வயதிருக்கும் அவர் இந்தக் கப்பலில்தான் முதல் தடவையாக கேப்டனாகியிருந்தார்...

"கமின் சீஃப்"... என்று என்னை அழைத்துவிட்டு, அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே கடலைப் பார்த்து, "க்ளைமேட் ரொம்ப மோசமாக இருக்கிறது...தாக்குப் பிடிக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது... இன்ஜின் நிலைமை எப்படி உள்ளது" என்று வருத்தம் தோய்ந்த முகத்துடன் கேட்டார்.

நானும் கடலை ஒரு முறை பார்த்துவிட்டு, "இன்னிக்கு ராத்திரி ரொம்ப மோசமாக இருக்குமென்று 'வெதர் ரிப்போர்ட்' வந்திருப்பதை பார்த்தேன் கேப்டன்... இன்ஜின் ஸ்பீடைக் குறைத்து விட்டோம்... கப்பலின் வேகம் இப்போது வெறும் எட்டு 'நாட்டிக்கல்' மைல்" என்றேன்.

கப்பலின் பாதுகாப்புக்கு செய்ய வேண்டிய சில ஏற்பாடுகள் குறித்து விவாதித்து விட்டு, நான் மீண்டும் தளத்திற்கு வந்தேன்...

வரப்போகும் புயலின் சீற்றம், கடலில் நன்றாகவே தெரிந்தது... தளத்தில் உயிர்காக்கும் படகுக்கு அருகே நின்றிருந்தேன்...

தூரத்தில் சிலி நாட்டின் நீண்ட மலைத் தொடர் தெரிந்தது. அப்போது இன்னொரு காட்சியும் கூடவே கண்ணில் பட்டது...

ஒரு கப்பல் அது... சின்னக்கப்பல். ஆனால் அது ஏற்கனவே மூழ்கிவிட்டிருந்தது... பாதி மூழ்கிய நிலையில் அப்படியே தண்ணீரின் மேல்பரப்பில் நன்றாகவே தெரிந்தது...

எங்கள் கப்பல் பயணம் செய்து கொண்டிருந்த பகுதி... கரையிலிருந்து வெகு தொலைவில் இல்லை... அந்தக் கப்பல் மூழ்கியிருந்த இடமும் மிகவும் ஆழமான பகுதி இல்லையென்று தோன்றியது...

ஒரு வேளை, மூழ்க ஆரம்பித்து இங்கே தரைதட்டி இருக்கக்கூடும்... அது மூழ்கி வருடங்கள் பல ஆகியிருக்க வேண்டும்... அதன் இரும்புப் பகுதிகள் துருப்பிடித்துப் போய் தெரிந்தன...

அந்தக் கப்பல் என்ன சூழ்நிலையில் மூழ்கியதோ... அதை நினைத்த போது நெஞ்சுக்குள் பாரமாக அழுத்தியது...

கப்பலில் இருந்த அனைவரும் கண்டிப்பாக உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது...

இது போன்ற காட்சிகளைக் இங்கே காணும் நேரங்களில் மன உறுதி குலைந்து போகிறது ... நானும் கவலையுடன் எனது கப்பலின் உயிர்காக்கும் படகை ஒரு முறை பார்த்துக் கொண்டேன்...

கப்பல் மூழ்க நேரிடும் அபாய கால கட்டத்தில் தப்பிக்க, கப்பலில் இரண்டு உயிர்காக்கும் படகுகள் இருந்தன... கப்பலில் ஆபத்துக் காலத்தில் உயிர்காக்க நிறைய சாதனங்கள் உள்ளன...

'LIFE JACKET' என்று அழைக்கப்படும் உயிர்காக்கும் சட்டையை, நாம் வழக்கமாக அணிந்து கொள்ளும் சட்டை, அல்லது கையில்லாத 'கோட்' அணிவது போல் அணிந்து கொண்டால் தண்ணீரில் மிதக்கலாம்...

அது தவிர 'LIFE BUOY' எனப்படும் மிதக்கும் வளையங்கள், LIFE RAFT, LIFE BOAT போன்ற சாதனங்கள் உண்டு...

கப்பலின் இடது பக்கத்தை 'Port Side' என்றும், வலது பக்கத்தை 'Starboard Side' என்றும் அழைப்பார்கள். இரண்டு பக்கத்திலும் பக்கத்திற்க்கொன்றாக இரண்டு
உயிர்காக்கும் படகுகள் உண்டு.

ஆபத்து காலங்களில் கப்பல் மூழ்க நேரிடும் போதோ, தீ போன்ற அசம்பாவிதங்கள் நேரிடும்போதோ, கப்பலை விட்டுவிட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், உயிர்காக்கும் படகைத்தான் முதல் சாதனமாக தேர்ந்தெடுக்கிறார்கள்...

அபாயக் காலங்களில், நான் வலதுபுறப் படகுக்குச் செல்ல வேண்டும். அதே போல் கப்பலில் உள்ள ஒவ்வொருவரும் இரண்டில் எந்த படகுக்குச் செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அட்டவனை தயார் செய்யப்பட்டிருந்தது...

ஆனால், இப்போது கப்பலுக்குப் பிரச்சனை ஏற்பட்டு, படகில் ஏறித் தப்பித்தாலும், இந்த பயங்கரப் புயலின் மத்தியில் சின்னப்படகு ஒரு துரும்பு போல சிதறிவிடும் என்பதும் உண்மை...

ஆபத்து காலங்களில் 'கடைசி வரை நீங்கள் இருக்கும் கப்பலை விட்டுச் செல்லாதீர்கள்... அதுவே சிறந்த உயிர் காக்கும் படகு' என்பது எங்கள் எல்லோருக்கும் கப்பல் வாழ்க்கையில் நுழையும் போது சொல்லிக் கொடுக்கப்பட்ட பாலபாடம்.

ஆனால், புயலின் கடுமை எந்த அளவு அதிகமாகப் போகிறது என்று தெரியாத நிலையில் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சரியாக செய்து வைப்பதே நல்லது.

வானம் இருண்டிருந்தது அச்சத்தை ஏற்படுத்தியது... இந்தக் கடலுக்கு என்ன கோபமோ?...

எனக்கு 'விஸ்வமோஹினி' கப்பல் மூழ்கிய சம்பவம் அப்போது ஏனோ நினைவில் வந்தது... இயற்கையை யார் வெல்லமுடியும்.

கப்பலுக்கு எந்த சேதமுமின்றி, அனைவரும் பத்திரமாக உயிருடன் போய்ச் சேர வேண்டுமே என்ற கவலை தோன்றியது...

கப்பலின் முன்பகுதி முழுதும் தண்ணீருக்குள் மூழ்கி எழுந்தது...
இயற்கையின் சீற்றம் குறையும் வரை, காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை...

வேறு அசம்பாவிதம் எதுவும் நடந்தவிடக்கூடாது என்று நம்புவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்...

கடலின் சீற்றம் குறைந்த பாடில்லை. மெதுவாக தளத்திலிருந்து பெருமூச்சுடன் என் அறைக்குத் திரும்பினேன்.

எப்போது இந்தப் பகுதியைக் கடந்து செல்வோம் என்று மனதும் ஏங்க ஆரம்பித்தது. ஒரு நாள் முழுதும் இந்த மனநிலை தொடர்ந்தது.

ஒரு வழியாக, பிரச்சனை தரும் பசிபிக் பெருங்கடலிலிருந்து, சிலி நாட்டின் மலைகளின் இடையேயுள்ள நீர்வழிப் பாதை வழியாக கப்பல் நுழைந்ததும் நிம்மதி வந்தது...

கடல் அமைதியாக இருந்தது அங்கே...

அதன்பின் எந்த பிரச்சனையுமின்றி 'மெகல்லன் ஜலசந்தி'யை அடைந்து இரண்டு நாள் பயணத்தில் அட்லாண்டிக்கில் நுழைந்தது கப்பல்... நாங்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்...

உண்மையில், இது போன்ற கவலையுடன் கப்பலில் இதற்குமுன் பயணம் செய்ய நேரிட்டதில்லை... இந்த முறை கொஞ்சம் மோசம்...

பிரச்னையின்றி, புயலின் கொடுமையிலிருந்து தப்பித்த சந்தோஷம் எங்கள் அனைவருக்கும் நிறையவே இருந்தது...

இடையில், கப்பலின் இன்ஜினில் பிரச்சனை ஏற்பட்டு "2000-ம் ஆண்டு" பிறந்த அந்த புத்தாயிரம் ஆண்டைக்கூட மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியாதபடி, இரவு பகல் தூக்கமின்றி இரண்டு நாட்களை கழித்த ஒரு அனுபவமும் ஏற்பட்டது...

அந்த நாட்களில் மனது அடைந்த கவலையை இங்கே திரும்பப் பிரதிபலிப்பது கடினம் என்று தோன்றுகிறது...

'கப்பல் என்றாலே வெறும் சோகம் நிறைந்த வாழ்க்கை தானா' என்ற தவறான அபிப்ராயத்தையும் வாசகர்களுக்கு அது ஏற்படுத்தி விடக்கூடும்.

எல்லாவற்றையும் சமாளித்து, அட்லாண்டிக்கைக் கடந்து, தென் ஆப்பிரிக்காவிலுள்ள 'டர்பன்' துறைமுகத்தில் நின்று, பிறகு ஈரான் நாட்டிலுள்ள 'பந்தர் அப்பாஸ்' துறைமுகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தது கப்பல்.


அப்போது ரேடியோ ஆபிஸர் ஜெயராமன் தொலைபேசியில் பதற்றத்துடன் என்னை கேப்டனின் அறைக்கு வருமாறு அழைத்தார்.

கப்பலின் கேப்டன் நல்ல மனிதர்தான். ஆனால், கொஞ்சம் அதிகமாகவே 'டிரிங்க்ஸ்' சாப்பிடுவார். அதுதான் பிரச்சனையே.

ஏற்கெனவே ரத்த அழுத்தம் உட்பட பல நோய்களுக்காகத் தினமும் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

"கேப்டன் உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. திடீரென்று மயக்கமாகி விட்டார்... நாடித்துடிப்பும் குறைந்து கொண்டே வருகிறது... உடனே கேப்டன் அறைக்கு வாருங்கள்" என்று பதற்றத்துடன் ரேடியோ ஆபீஸர் போனில் சொன்னவுடன், நான் கேப்டனின் அறை நோக்கி ஓடினேன்.

படுக்கையில் எந்த ஒரு அசைவுமின்றிக் கிடந்தார் கேப்டன். மூச்சு இருந்தது. சீஃப் ஆபீஸர் முதலுதவி செய்து கொண்டிருந்தார்.

உடனடியாக 'பந்தர் அப்பாஸ்' துறைமுகக் கட்டுப்பாட்டு அறைக்கு ரேடியோ மூலம் அவசரச் செய்தி அனுப்பி, டாக்டரை அழைத்தோம்.

மின்னல் வேகத்தில் காரியங்கள் நடந்தன. கடந்த இரண்டு நாட்களாக கேப்டன் கொஞ்சம் அளவுக்கு அதிமாகவே குடித்து விட்டிருந்தார்.

வழக்கமாக, கப்பலில் யாராவது அதிகமாகக் குடிப்பது தெரிந்தால், கேப்டன் அவருக்கு மதுபானங்கள் கிடைக்காதபடி தடை செய்வார். இங்கே கேப்டனே மொடாக்குடியர் என்றால் யார் அவரைத் தடுக்க முடியும்?

குடித்ததோடு மட்டுமல்லாமல், தினமும் கட்டாயமாகச் சாப்பிட வேண்டிய மாத்திரைகளையும் இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லையாம். அது அவரது உடலை மோசமாகப் பாதித்துவிட்டது.

கடைசியாக பாதி நினைவுடன் இருந்தபோது ரேடியோ ஆபீஸரிடம் மாத்திரை சாப்பிடாததை அவரே சொல்லியிருக்கிறார்.

துறைமுகத்தில் இருந்து 'ஸ்பீட் போட்' மூலம் மருத்துவ உதவி வந்தது. நினைவில்லாத நிலையிலேயே அவரைப் படகுக்கு அனுப்பினோம்.

எங்கள் கப்பலின் இரண்டாவது இன்ஜினீயரையும் அவரைக் கவனித்துக் கொள்ள படகில் அனுப்பி வைத்தேன். அன்றிரவே கப்பலைக் கரை சேர்க்க பைலட் வந்து சேர்ந்தார்.

கேப்டன் இல்லாத கப்பலை, சீஃப் ஆபீஸரே பொறுப்பேற்றுக் கவனித்துக் கொண்டார். மறுநாள் காலையில் கேப்டனின் நினைவு திரும்பி, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனையிலிருந்து தகவல் வரவும் எங்களுக்கு நிம்மதி வந்தது.

இரண்டு நாள் கழித்து, கப்பலுக்கு வந்து சேர்ந்ததும் அவர் செய்த முதல் காரியம் மீண்டும் மது அருந்தியதுதான்.

ஈரானில் மதுபானம் உபயோகிக்கத் தடை இருந்ததால், கப்பலில் இருந்த மதுவகைகள் எல்லாம் 'லாக்கர்' அறையில் சீல் வைக்கப்பட்டிருந்தது.


ஆனால் கப்பலின் ஏஜெண்ட்டை நட்பு பிடித்துக் கொண்டு, எங்கிருந்தோ கள்ளத்தனமாகக் கிடைத்த ரஷ்ய நாட்டு 'வோட்கா' வைக் கப்பலுக்கே கொண்டு வரச்செய்து குடித்தார் கேப்டன்.

அந்த ஏஜெண்ட்டே கப்பல் ஊழியர்களுக்கும் இந்த விஷயத்தைச் சொன்னதால், கேப்டன் மறுபடியும் குடிப்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

கப்பல் அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவில் குஜராத் வந்து சேரும் வரை முழு போதையில் மிதந்து கொண்டிருந்தார்.

அந்தத் துறைமுகத்தில் பைலட் கப்பலுக்கு வந்தபோது, அவர் நிதானத்திலேயே இல்லாததால், வலுக்கட்டாயமாக அவரை அறையில் உட்காரவைத்து கேப்டனின் நிலை அந்த பைலட்டுக்குத் தெரியாமல் சமாளித்தார்கள் சீஃப் ஆபிஸரும் மற்ற நேவிகேட்டிங் ஆபீஸர்களும்.

அதே சமயம், நாங்கள் குஜராத்தை அடைவதற்கு முன்பே எல்லா விஷயங்களும் எப்படியோ கப்பல் கம்பெனிக்குத் தெரிந்துவிட்டிருந்தது.

கப்பலை விட்டு இறங்கியதுமே கேப்டனுக்கு பரிசு காத்திருந்தது. அவரை வேலையை விட்டுத் தூக்கி, வீட்டுக்கு வழியனுப்பும் பரிசுதான் அது.

புதிய கேப்டன் தயாராக இருந்தார். எனக்கு ஆறுமாத காண்ட்ராக்ட் காலம் முடிந்ததால் லீவில் செல்ல விண்ணப்பித்து இருந்தேன். அது சாங்ஷன் ஆகிவிட, அந்தக் கப்பலில் சீஃப் இன்ஜினீயராப் பணிபுரிந்த கப்பீரத்தோடு ஊர் திரும்பினேன்.

எனது கப்பல் வாழ்க்கையில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று வந்துவிட்டேன். ஆனால், இந்த ஒன்பது வருட அனுபவத்தில் நிறைவேறாத ஆசைகள் நிறைய உண்டு.

முதன்முறை கப்பல் வாழ்க்கையில் சேர்ந்த தினத்தன்று அருகில் போய்ப் பார்க்க முடியாத பாரீஸ் நகரின் ஈஃபிள் கோபுரம் இன்னும் பார்க்க முடியாததாகவே உள்ளது.

எத்தனையோ முறை கப்பலில் சேரும் போதும், லீவில் திரும்பும் போதும் பாரீஸுக்குப் போயிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் விமான நேரம் காரணமாக ஈஃபிள் கோபுரத்தை அருகே சென்று பார்க்க முடியாமல் போகும்.

அதுபோலவே, இஸ்ரேல் போய்ச் சேர்ந்த போதும், ஒரு மணி நேரப் பயண தூரத்தில் 'ஜெருசலமும், பெத்லஹேமும்' இருந்தும், நேரமின்மையால் அந்த இடங்களுக்கும் போக முடியாமல் திரும்பினேன்.

கடல் எனக்கு எத்தனையோ வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துவிட்டது. ஆனால்,முக்கியமான ஒன்றை மட்டும் நான் இன்னும் கற்கவேயில்லை.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்...

அதுதான் நீச்சல்!

ஆம். உலகின் எல்லாக் கண்டத்திலும் கடல்பயணம் செய்தே, காலடி பதித்துவிட்ட எனக்கு இன்னும் நீச்சல் தெரியாது. கப்பலில் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் மிக நன்றாக நீந்தக் கூடியவர்களா இருக்கவேண்டும் என்று நினைத்தீர்களானால் ஏமாற்றம் தான் அடைவீர்கள்.

'Survival at Sea' என்ற ஒரு பயிற்சியை கப்பல் வேலைக்குச் செல்பவர்கள் முடித்திருக்க வேண்டும். அந்தப் பயிற்சியின் போதுகூட 'Life Jacket'
போட்டுக்கொண்டால் போதும் என்பதால், நீச்சல் அவசியம் தெரிய வேண்டியதில்லை.


கப்பல் வாழ்க்கை பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு.. ஆனால் அவை எல்லாம் என் வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்கள் இல்லை.. பலரின் அனுபவங்கள் மிகவும் பிரமிப்பூட்டுபவை..

நான் சீஃப் இஞ்ஜினீயராக பணியாற்றிய கப்பலில் என்னுடன் எலக்ட்ரிக்கல் எஞ்ஜினீயராக சென்னையைச் சேர்ந்த 'ஜோதிகுமார்' பணிபுரிந்தார். அவரின் கிரேக்கக் கப்பல் அனுபவங்கள்

மிகவும் சுவாரஸ்யமான தகவல்களைக் கொண்டவை..
-----

அத்தியாயம் 38

லகக் கப்பல் வரலாற்றில் கிரேக்கர்களுக்கென்று தனி இடம் கண்டிப்பாக உண்டு.. எந்த மாதிரி கப்பல் என்றாலும் சமாளித்து ஓட்டுவதில் வல்லவர்கள் அவர்கள்.

"கிரீக் ஷிப்பில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் எத்தகைய கப்பலையும் ஓட்ட முடியம்" என்பது கப்பல் வேலையில் உள்ள எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அவர்களின் வழியே தனி வழிதான்.

"பழைய இரும்பு, தகரம், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்..சம்பளம்.." என்று தெருக்களில் கூவி விற்பவர்கள் யாராவது அணுகினால் கப்பலையே விற்றுவிட்டு பேரீச்சம்பழம் வாங்கிச் சாப்பிடலாம் என்ற நிலையில் உள்ள பழைய்ய்ய கப்பல்கள்..

அதேபோல், கிரேக்கக் கம்பெனிகளுக்குச் சொந்தமான கப்பல்களில் சேர மற்ற நாட்டுக் கம்பெனிகளில் உள்ளது போல், முறையான சர்ட்டிபிகேட்டுகள் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. சர்ட்டிபிகேட் இல்லாதவர்களையும் வைத்து சமாளித்து வந்தனர்.


ஜோதிக்குமார் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயராக சேர்ந்தாலும், மூன்றாவது இன்ஜினீயர் வேலையையும் பார்த்துக் கொண்டார்.

இந்தியக் கம்பெனி கப்பல்களைத் தவிர மற்ற வெளிநாட்டு கம்பெனி கப்பல்களில் சேரும் இந்தியர்கள், நம்மூர் சாப்பாடு கிடைக்காமல் சிரமப்படுவார்கள்..

ஆனால் அரிசி சாதம், காய்கறிகள் என்று ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளுமளவு சாப்பாடு இருப்பதால் சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் அதையும் இங்கே எதிர்பார்க்க முடியாது என்று தெரிந்து விட்டது.

எல்லாமே ஐரோப்பிய வகை சாப்பாடுதான். அதிலும் கிரேக்க ஸ்டைலில்.. வாரத்தில் ஒரே ஒரு வேளை மட்டும் அரிசிச்சோறு..

அதற்கு சேர்த்துக்கொள்ள டின்னில் அடைக்கப்பட்ட பெயர் தெரியாத ஏதோ ஒரு கீரை. அத்துடன் வெண்ணெய் அல்லது 'சீஸ்' . இதையெல்லாம் கலந்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்..

அது ஒன்றுதான அரிசி சம்பந்தப்பட்ட உணவு. மற்ற நாட்களில் மூன்று வேளையும் பிரெட். அதனுடன் சேர்த்து சாப்பிட, வேக வைத்த இறைச்சி.

கப்பலில் உணவுப் பொருட்கட்ளை குளிர் செய்யப்பட்ட அறைகளில் வைத்திருப்பார்கள்.

மீன், இறைச்சி முதலியவற்றை சுமார் -20 டிகிரி சென்டிகிரேடிலும், காய்கறி, பால் முதலிவற்றை +4 டிகிரியிலும் வைத்திருப்பார்கள்.

ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அறைகள் உண்டு. ஒரு துறைமுகத்திலிருந்து இன்னொரு துறைமுகம் செல்லும் வரைக்கும் தேவையான உணவுப் பொருட்களை மொத்தமாக முந்தைய துறைமுகத்திலேயே வாங்கிக் கொள்வார்கள்.

பத்து நாள் தூரத்தில் போய்ச் சேரும் பயணமும் உண்டு. அறுபது, எழுபது நாட்கள் கரையைத் தொடாமல் செல்லும் பயணமும் உண்டு..

எல்லாவற்றையும் சமாளிக்க குளிர்பதனம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களே. புத்தம் புதிதாக வாங்கும் பொருட்களில் இருக்கும் ருசியை இதில் எப்படி எதிர்பார்க்க முடியும். அதிலும் இந்திய உணவுகள் இல்லையென்றால்..

'கோல்டு ரூம்' என்று அழைக்கப்படும் இறைச்சி வைக்கப்பட்டுள்ள அறைகளில் நுழைந்து பார்த்தால் மயக்கம் வரும் அளவுக்கு, இரத்தமும் சதையுமாக இறைச்சி தொங்கிக் கொண்டிருக்கும்.

அதிலிருந்து, தினமும் அன்றாட தேவைக்கேற்ப இறைச்சி மற்றும் மீன் முதலியவற்றை சமையல் செய்பவர் எடுத்து வருவார். அதை அவர் சமைக்கும் ஸ்டைலே தனி.

கிரேக்க கப்பல்களில் சமைப்பவரை ' மாய்க்கரா ' என்று அழைக்கிறார்கள்.
அரையடிக்கு அரையடி சைஸில் உள்ள இறைச்சித் துண்டை நடுவில் பெரிய துளையிட்டு, அதனுள் பூண்டை அடைத்து அப்படியே தண்ணீரில் கொதிக்க வைப்பார்கள்..

அரை வேக்காடு.. பின்பு அதை எடுத்து பிரெட் வெட்டும் கத்தியால் பிரெட் அளவுக்கு துண்டு போட்டு விடுவார்கள். அவ்வளவுதான்..

பிரெட், இந்த வேகவைத்த இறைச்சி, தொட்டுக் கொள்ள சட்னி மாதிரி ஏதோ ஒன்று... சட்னியை வாயில் வைக்கச் சகிக்காது.. இதுதான் தினசரி உணவு...

ஆனால், பின்னர் இதுவே பழக்கமாகிப் போய், அந்தச் சட்னி இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரியே இருக்காது என்ற அளவுக்கு அது பிடித்துப்போனது.

சில சமயம் மீன், நண்டு, கோழிக்கறி முதலியவையும் உண்டு.. அதை சமைக்கும் முறையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்..

அவற்றோடு தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெயில் அப்படியே கொதிக்க வைத்து விடுவார்கள். அவ்வளவே..

தினசரி உணவு என்பது இதுதான். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது போகப்போக பழகி விட்டது..

உணவு என்பது இந்த அளவுக்கு பிரச்சினையான விஷயம் என்று சொன்ன ஜோதிக்குமார், கிரேக்கக் கப்பல் வாழ்க்கை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

"அங்குள்ள யாவருக்கும் ஆங்கிலமே தெரியாது.. எல்லாம் 'கிரீக்' பாஷைதான்.. கேப்டனுக்கு மட்டும் கொஞ்சம் ஆங்கிலம் தெரியும். எப்படியோ சமாளிக்க வேண்டியிருந்தது"..

ஒரு நாள் கேப்டன் ரூமிற்கு அழைத்தார்.. கம்பெனியின் இன்னொரு கப்பலுக்கு அவசரமாக ஒரு எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர் தேவைப்படுவதாகவும் என்னை அந்தக் கப்பலுக்கு அனுப்பப் போவதாகவும் சொன்னார்.

அந்தக் கப்பலில் மூன்றாவது இன்ஜினீயராக ஒரு இந்தியர் இருப்பதாகச் சொன்னவுடன் நான் உடனே என்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்ட புறப்பட்டுவிட்டேன்.

கப்பல் பர்மாவில் இருந்தது.. ரொம்ப சந்தோஷத்தோடு பர்மா போய்ச் சேர்ந்த நான் கப்பலைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அப்படியே ஓடி வந்துவிடலாமா என்று நினைத்தேன்.

ஏர்போர்ட்டில் கைலி கட்டிய ஒருவர் வரவேற்பார் என்று சொல்லியிருந்தார்கள்.

அங்கே இறங்கிப் பார்த்தால் நின்றிருந்த எல்லோருமே கைலி கட்டியிருந்தார்கள். இதில் யாரைப் போய் நான் பிடிப்பது.

நான் 'திருதிரு' வென்று முழிப்பதைப் பார்த்து வேகமாக என்னை நோக்கி ஒருவர் வர ஆரம்பித்தார். லுங்கி கட்டியிருந்தார்..

முழுக்கை சட்டை போட்டு, லுங்கியை சட்டைக்கு மேல் பேண்ட் போடுவது போல் 'இன்' செய்திருந்தார்.

'அப்பாடி.. வந்து விட்டார்' என்று நான் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரம் என்னை நெருங்கிய அவர், "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். தன்னை விமானநிலைய அதிகாரி என்று சொன்னார்.

நான், போன கப்பலில் இருந்து இறங்கி இந்தியா சென்று, இந்தியாவிலிருந்து நேரடியாக பர்மா வராமல் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து, அங்கே இரண்டு நாள் ஹோட்டலில் தங்கி, பின் அங்கிருந்து பங்களாதேஷ் போய் கடைசியாக பர்மா வந்திருந்தேன்...

நேராக மூக்கைத் தொடாமல், தலையைச் சுற்றியதோடு மட்டுமில்லாமல் காது, கண் எல்லாவற்றையும் தொட்டுவிட்டு வந்தது மாதிரி.

அப்போது பர்மாவில் ராணுவ ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.

நான் இந்தியாவிலிருந்து நேராக பர்மாவுக்கு வராமல் சிங்கப்பூர், பங்களாதேசம் வழியாக வந்ததால் அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.

கப்பல் கம்பெனியோ, அவர்களின் வசதிப்படி இந்த மாதிரி விமான ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நான் கப்பலில் அவசரமாக சேர வேண்டியிருந்தது பற்றியும், விமான சர்வீஸில் நேரடி டிக்கெட் கிடைக்காததால் இந்த ஏற்பாடு செய்ததையும் சொன்னேன்.

ஒரு வழியாக திருப்தியடைந்து அவர் ஆளை விட்டார். என்னை வரவேற்க வந்த நபர், தாமதமாக வந்து கூட்டிப் போனார்.

கப்பல் நிற்கும் இடம் போனதும் மனதிற்குள் ஏதோ வித்தியாசமாகப் பட்டது.

கப்பலின் ஏணியில் ஏற முற்படும்போது எதிரே ஒருவர் கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

கையில் சோப்பு, துண்டு சகிதம் பக்கெட்டுடன் இறங்கி வந்தவர் ஒரு கிரேக்கர்...

நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன், அவர் "யூ எலக்ட்ரோலக்?.. குட்" என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, அதன்பின் வேகமாக ஏதோ 'கிரீக்' கில் சொன்னார்.

கப்பல் எனக்காகக் காத்திருப்பதாகவும் கப்பலில் மின்சாரம் இல்லையென்றும் அதனால் குளிப்பதற்கும், டாய்லெட் போவதற்கும் கரையில் உள்ள ஓர் இடத்திற்குப் போவதாகச்

சொல்லிவிட்டு, அவசரமாக ஓடும் அவரைப் பார்த்து நான் அங்கேயே நின்றுவிட்டேன்.
-------


அத்தியாயம் 39

ப்பலுக்கு மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்கள் உண்டு.

கப்பலில் உள்ள எல்லா இயந்திரங்கள், பம்ப்புகள் முதலியவற்றை இயக்கவும், விளக்குகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை வழங்கவும் ஜெனரேட்டர்களில் இருந்துதான் மின்சாரம் எடுக்கப்படுகிறது.

கப்பலில் குடிப்பதற்கும் மற்ற உபயோகங்களுக்கும் தேவைப்படும் நல்ல தண்ணீர், கடல் நீரிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

'FRESH WATER GENERATOR' என்ற சாதனத்தின் உதவியால் கடல் நீர் கொதிக்க வைக்கப்பட்டு, ஆவியாகி, உப்பு தனியாகப் பிரிக்கப்பட்டு சுத்தமான 'டிஸ்ட்டில்டு' தண்ணீர் பெறப்படுகிறது.

இந்த தண்ணீர் பெரிய இரும்புத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு இருக்கும்.
இன்ஜின் அறையிலுள்ள தொட்டியிலிருந்து மேலே தங்கும் அறைப்பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல 'HYDROPHORE' என்ற சாதனம் உண்டு.

முழுதும் மூடப்பட்ட தொட்டி போன்ற அதிலிருந்து, சுமார் நான்கு கிலோ (4Kg/Cm2) அழுத்தமுள்ள காற்றை உபயோகித்து, எல்லா இடங்களுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படும்.

அதற்குத் தேவையான காற்றை சப்ளை செய்ய 'கம்ப்ரஸர்' ஓட வேண்டும்.. கம்ப்ரஸருக்கு மின்சாரம் தேவை.


ஜோதிக்குமார் சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தவுடன், அந்த கிரேக்கர் ஏன் கப்பலைவிட்டு வெளியே உள்ள இடத்துக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டது என எனக்குப் புரிந்தது.

நான் நினைத்ததையே ஜோதிக்குமார் சொன்னார்.

"கப்பலில் ஜெனரேட்டர்கள் எதுவும் இயங்கவில்லை. அதனால் தண்ணீர் சப்ளையும் இல்லை. கப்பலில் இருந்த அனைவரும் கரையில் உள்ள ஒரு இடத்திற்குப் போக வேண்டியிருந்தது.

கப்பலில் நுழைந்தவுடனேயே கேள்விப்பட்ட இந்தச் செய்தியால் அதிர்ந்து போனேன்.. மூன்று நாளாக கப்பலில் மின்சாரம் இல்லையாம்.

கிரேக்கக் கப்பல்களின் நிலைமை கொஞ்சம் மோசமாகவே இருக்கும் என்று தெரியும். ஆனால் இந்த அளவுக்கு மோசம் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.

ஆப்பிரிக்காவிலுள்ள 'அங்கோலா' விற்குக் கொண்டு செல்வதற்க்காக கப்பலில் 'மொச்சைக் கொட்டை' ஏற்றப்பட்டிருந்தது.

அங்கோலாவில் கடுமையான வறுமையும், வறட்சியும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. மொச்சை அவர்களின் உணவில் மிக முக்கியமானது. அங்கே அது அவசரமாகத் தேவைப்பட்டது.

கப்பலிலோ மின்சாரம் கிடையாது. கப்பல் இப்போதைக்குப் புறப்பட வழியில்லை.

எனவே 'கார்கோ' வை, (கப்பலில் ஏற்றப்படும் எல்லா சரக்கையும் 'கார்கோ' என்றே அழைப்பது வழக்கம்) கப்பலில் ஏற்றியனுப்பும் முதலாளி, தாமதமாகும் என்பதால் இன்னொரு கப்பலுக்கு மாற்ற ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

அப்படிச் செய்ய நேரிட்டால், எங்கள் கப்பல் கம்பெனிக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவது மட்டுமல்ல. கம்பெனியின் பெயரும் கெட்டுவிடும் என்ற நிலை இருந்தது.

எனவே கப்பலுக்கு உடனடியாக மின்சாரம் கிடைக்கச் செய்வது மிக முக்கியமாக இருந்தது.

நான் போன முதல் நாளே இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

கேப்டனை சந்தித்து விட்டு, உடை மாற்றிக்கொண்டு கீழே என்ஜின் அறைக்குச் சென்றேன். கப்பலில் மூன்று ஜெனரேட்டர்கள் இருந்தன.

ஒரு ஜெனரேட்டர் துறைமுகத்தில் மட்டும் உபயோகிப்பது.. ஆனால் அது உபயோகிக்கவே முடியாமல் உடைந்து போய் இருந்தது.

இன்னொரு ஜெனரேட்டரின் சில பாகங்கள் பழுதடைந்திருந்ததால், முழுதும் பிரிக்கப்பட்டு கிடந்தது. அதை மாட்டி தயார் செய்ய குறைந்தது நான்கு நாட்களாவது ஆகும் என்றார்கள்.

நன்றாக ஓடிக் கொண்டிருந்த ஒரே ஒரு ஜெனரேட்டரும் எலக்ட்ரிக்கல் கோளாறு காரணமாக நின்று போனது.

ஜெனரேட்டருடன் இணைந்த 'ஆல்ட்டர்னேட்டர்' பகுதியில் பிரச்னை, ஆனால் எதனால் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ரிப்பேர் செய்வதற்க்காக வந்திருந்த கொரிய நாட்டு சர்வீஸ் எஞ்ஜினியர் கொஞ்சம் குண்டு.. தலை மிகப் பெரியது.. அவரும் முடிந்தவரை முயற்சித்து சோர்ந்துபோய் இருந்தார்.

நான் போனபோது மாலை ஆறு மணி ஆகிவிட்டிருந்தது.

கப்பலில் வெளிச்சத்திற்க்காக அங்கங்கே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டார்கள்.

ஒரு ஆளை மட்டும் மெழுவர்த்தி ஏற்ற வைத்துவிட்டு மற்ற எல்லோரும் எஞ்ஜின் அறையை விட்டுப் போய் விட்டனர். எனக்கு அவர்தான் உதவிக்கு இருந்தார்.

ஒரே ஒரு டார்ச் இருந்தது. மெதுவாக எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். எனக்கும் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் 'ஆல்ட்டர்னேட்டரி' ல் உள்ள சின்ன திறப்பின் வழியாக உள்ளே உள்ள பாகங்களைப் பார்க்க முயற்சித்தேன்.

மெதுவாக கழுத்தை வளைத்து, தலையை அதனுள் விட்டுப் பார்த்தவுடன் எனக்கு பிரச்சனை என்னவென்று புரிந்து விட்டது.

அதனுள் இருந்த ஒரு தகடு இன்னொரு பகுதியுடன் உரசிக் கொண்டிருந்தது.. அதனால், இயந்திரத்தின் 'இன்சுலேசன்' குறைந்து விட்டிருந்தது..

மிகவும் சுலபமான பிரச்னை.. ஆனால் மூன்று நாட்களாக ரிப்பேர் செய்ய முடியாததற்குக் காரணம் அது உள்பகுதியில் இருந்ததுதான்...

கொரிய நாட்டு சர்வீஸ் எஞ்ஜினியர் மிகவும் திறமையானர். அவரும் இதை மிக சுலபமாகக் கண்டுபிடித்து இருப்பார். அவரின் தலை கொஞ்சம் சின்னதாக இருந்திருந்தால்..

என்னுடைய தலை உள்ளே நுழையும் அளவுக்கு சின்னதாக இருந்ததால், என்னால் தலையை உள்ளே விட்டு பார்க்க முடியந்தது.

ஒரு வழியாக ஜெனரேட்டரை ஸ்டார்ட் செய்தேன். மின்சாரம் வந்தவுடன் கப்பலில் கல்யாண வீட்டுக் களைதான். அன்று முழுதும் கொண்டாட்டம்.

கப்பல் நள்ளிரவு இரண்டு மணிக்கு பர்மாவிலிருந்து புறப்பட்டது.

ஆனால் பர்மாவில் கப்பலுக்கு உணவுப் பொருட்கள் எதுவும் கொடுக்கவில்லை.. தரவும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

கப்பலில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாததால் குளிர்பதன அறையில் வைத்திருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் கெட்டுப் போய் விட்டது...

எல்லாவற்றையும் வெளியே கொட்டி விட்டார்கள்.

இப்போது கப்பலில் அரிசி மட்டும் மிச்சம்.. கப்பல் அங்கிருந்து அங்கோலா சென்றாக வேண்டும்.. ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்.

சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?
----------


அத்தியாயம் 40

ப்பலில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாதால் குளிர்பதன அறையில் வைத்திருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் கெட்டுப் போய் விட்டது...

எல்லாவற்றையும் வெளியே கொட்டி விட்டார்கள். இப்போது கப்பலில் அரிசி மட்டும் மிச்சம்.. கப்பல் அங்கிருந்து அங்கோலா சென்றாக வேண்டும். ஒரு மாதத்திற்கு மேல் ஆகும்.

சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?

நாங்களெல்லாம் கவலையில் இருந்தோம்.. கேப்டன் மட்டும் கவலையே படவில்லை..

கப்பல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு ஒரு குறுகிய நீர்வழியில் சென்று கொண்டிருந்தது.. கப்பலின் எஞ்ஜினை நிறுத்தச் சொல்லி கேப்டன் உத்தரவிட்டார்.

காரணம் புரியாமல் எஞ்ஜினை நிறுத்தினோம். எங்கள் அனைவரையும் மேலே வரும்படி அழைத்தார்.

மூன்று மணியிருக்கும். வெளியே கும்மிருட்டு. மெதுவாக தட்டுத்தடுமாறி தளத்திற்கு வந்தோம்.

தூரத்தில் தண்ணீரில் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன..

அருகே வரவர பத்துப்பதினைந்து சின்னச் சின்னப் படகுகள் கப்பலை நெருங்குவது தெரிந்தது. அவற்றில் பெரிய ' காடா ' விளக்குகள்.

அருகே வந்தவுடன் கப்பலின் இரும்பு ஏணி இறக்கப்பட்டடது. 'திமுதிமு' வென்று ஆட்கள், இருபது பேருக்கு மேல் இருக்கும்.

ஒவ்வொருவரும் ஆளுக்கொரு ஆட்டைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தனர். எல்லாம் உயிரோடு இருந்தன. கப்பலில் ஆடுகளை கட்டிப்போட்டார்கள்.

திரும்ப அவர்களின் படகுக்குள் போய் தலையில் கூடைகளை சுமந்து கொண்டு வந்தனர். காய்கறி மற்றும் மீன் கூடைகள்..

அடுத்த பயணத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு கப்பல் அங்கிருந்து புறப்பட்டது.

ஒரு மாதத்திற்குப் பின், கப்பல் அங்கோலா நாட்டிலுள்ள 'லோபிதோ' துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டது.

இடையில் எஞ்ஜின் கோளாறுகள்.. நாலைந்து நாளுக்கு ஒரு முறை நடுக்கடலில் நிறுத்தி நிறுத்தி ரிப்பேரை சரி செய்து கப்பலை அங்கோலா கொண்டு போய் சேர்த்தோம்.

மறுநாள் கப்பல் துறைமுகத்துக்குள் செல்ல இருந்தது. பொழுது போவதற்காக,  கப்பலின் தளத்திற்கு வந்து மீன் பிடிக்கலாம் என்று தூண்டில் போட்டோம்.

போட்ட சிறிது நேரத்தில் நம்மூர் வாளை மீன் போல இருந்த மீன்கள் நிறைய பிடிபட்டன.

( கப்பல் நடுக்கடலில் செல்லும்போது யாரும் மீன் பிடிப்பது இல்லை. அதற்கு நேரமும் கிடையாது. துறைமுகங்களில் இருக்கும் போதோ அல்லது நங்கூரமிட்டுக் காத்திருக்கும் போதோ, பொழுது போவதற்க்காகத்தான் மீன் பிடிப்பது எல்லாம்.. மற்றபடி உணவுக்காக மீன்கள் முந்தைய துறைமுகத்திலேயே வாங்கி ஸ்டாக் செய்யப்பட்டவை .)

சந்தோசத்துடன் வேகவேகமாக 'மாய்க்கரா' வை (சமையல்காரர்) கூப்பிட்டு சுடச்சுட மீன்குழம்பு செய்யச் சொன்னேன்...

எப்படி இந்திய ஸ்டைலில் குழம்பு வைப்பது என்றும் சமையற்காரருக்கு சொல்லித் தந்தேன்.

நாங்கள் மீன் பிடித்ததைக் கேள்விப்பட்ட கேப்டன், அந்த மீன்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார்.

நாங்கள் இருந்த அவசரத்தில் அவர் வரும்வரைக்கும் பொறுமை இல்லை.. உடனே கொதிக்கும் குழம்பில் போட்டு விட்டோம்.

வேகமாக வந்த கேப்டன், குழம்பில் மீன் கொதிப்பதைப் பார்த்து, " இந்தப் பகுதியில் சில விஷ மீன்கள் இருக்கின்றன.. அதுதான் பார்த்துச் சொல்லலாம் என்று வந்தேன்.. அதற்குள் போட்டுவிட்டீர்களே" என்று சொல்லிவிட்டுப் போனார்...

நான் அதைக் கண்டுகொள்ளவேயில்லை... அவசர அவசரமாக கொஞ்சம் சாதம் எடுத்து மீன்குழம்பை ருசி பார்க்க ஆரம்பித்தேன்.

சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே வாந்தி எடுத்தேன்.

திடீரென்று உடலில் சில மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்தன. தொண்டை முதல் மார்புக்குக் கீழ்ப்பகுதி வரை கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்தன.

வேகவேகமாக கேப்டனிடம் ஒடினேன்...

" நான்தான் சொன்னேன் இல்லையா.. நீ சாப்பிட்டது விஷ மீனாக இருக்கும். அதுதான் பிரச்னை.." என்றார்.

" நாளை மதியம் வரை துறைமுகத்திற்குள் செல்ல முடியாது.. அங்கே டாக்டரும் இல்லை.. இப்போது என்ன செய்வது" என்று சொல்லிவிட்டு யோசிக்க ஆரம்பித்தார்.

என் உடம்பில் கொப்புளங்கள் பெரிதாக ஆரம்பித்தன. நான் சாப்பிட்டது விஷ மீனாக இருக்கக்கூடும் என்று கேப்டன் சொன்னதைக் கேட்டு எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது.

துறைமுகத்திற்குள் செல்ல மறுநாள் ஆகும் என்பதால் அதுவரை எதுவும் செய்யமுடியாது என்ற விஷயம் என்னை அதிகமாகவே கலவரப் படுத்தியிருந்தது.

கேப்டன் என்னை அமைதிப்படுத்தினார்..

" கவலைப் படாதே.. உயிருக்கு ஒன்றும் ஆகாது... வெறும் அலர்ஜி. இது மாதிரி கேஸ்களை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.." என்றார்.

அவர் சொன்னபின் கொஞ்சம் தைரியம் வந்தாலும் முழுவதும் சமாதானம் ஆகவில்லை. கொப்புளம் பெரிதாவது நின்று போனது..

அதனால் வலி எதுவும் இல்லை.. தொந்தரவு இல்லாவிட்டாலும், மறுநாள் காலைவரை தூக்கம் வராமல் பயத்துடன் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தேன்.

அதிர்ஷ்டவசமாக மறுநாள் காலையிலேயே கப்பல் துறைமுகத்துக்குள் போனது.

அதிகாலையில் கப்பல் போய்ச் சோர்ந்தவுடன் ஏஜெண்ட் என்னை டாக்டரிடம் கூட்டிபோக வந்தான். நல்ல உயரமாக இருந்தான் ஏஜெண்ட்..

என்னுடன் துணைக்கு பஞ்சாபி மூன்றாவது இன்ஜினீயர் வந்தான்.. இருபத்தேழு வயது அவனுக்கு. 'சிங்' என்று நான் கூப்பிடுவேன்.

எங்களை ஒரு பழைய காரில் நகருக்குள் கூட்டிப் போனான் ஏஜெண்ட். காரை ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போகாமல் ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.

" தப்பாக நினைத்துக் கொள்ளாதே.. நான் சரியாகச் சாப்பிட்டு நிறைய நாள் ஆகிவிட்டது.. சாப்பிட்டு விட்டுப் போகலாமா" என்று பரிதாபத்துடன் கேட்டான் ஏஜெண்ட்.

அவன் முகம் மிகவும் சோகமாக இருந்தது. உண்மையாகவே இருக்கக் கூடும்.

அங்கோலாவில் அப்போது உள்நாட்டுச் சண்டை நடந்து கொண்டு இருந்தது. வறுமையும் திருட்டும் அங்கே அதிகம் என்று கேள்விப்பட்டிருந்தேன்.

அரிசிச் சோறும், ரங்கூன் மொச்சைக் குழம்பும் ஸ்பெஷல் உணவாம். ஹோட்டலுக்குப் போய் நன்றாக திருப்தியாக சாப்பிட்டபின், எட்டுமணிக்கு அங்கேயிருந்த ஒரு அரசாங்க மருத்துவமனைக்கு முன்னால் வண்டியை நிறுத்தினான்.

" இந்த ஊரில் பிரைவேட் டாக்டர்கள் யாரும் கிடையாது. இது ஒன்றுதான் ஹாஸ்பிடல்" என்று சொல்லிவிட்டு எங்களை அங்கேயே உட்காரச் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

காம்பவுண்ட் சுவற்றுக்கு வெளியே கையில் மிஷின் கன்கள் சுமந்த இளைஞர்கள் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.. காலை எட்டு மணியிலிருந்து மதியம் இரண்டு மணிவரை யாரும் வரவில்லை.

இரண்டு மணிக்கு ஏஜெண்ட் வந்தான்.. எங்களை அங்கிருந்த டி.பி. ஆஸ்பத்திரிக்குப் கூட்டிப் போய் உட்கார வைத்தான்.

" டாக்டர் மூன்று மணிக்கு மேல் வருவார்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த நீக்ரோ நர்ஸ் பெண்ணைக் கூப்பிட்டு எங்களை அறிமுகப்படுத்தி வைத்தான்.

ஏஜெண்ட்டை போகச் சொல்லி விட்டேன்..

கடைசியில் மூன்று மணிக்கு மேல் அந்த நர்ஸ், டாக்டர் வந்து விட்டதாகச் சொல்லிவிட்டுப் போனாள்.

டாக்டர் மிகவும் இளமையாக இருந்தார்..

நான் என் பிரச்னையைச் சொன்னேன்.. எடுத்தவுடனேயே, "சமீபத்தில் ஏதாவது மீன் சாப்பிட்டீர்களா" என்று கேட்டார்.

நான் முதல் நாள் பிடித்த மீன் பற்றிச் சொன்னேன்.

" அது ஒரு அலர்ஜி ஏற்படுத்தும் மீன். நாங்கள் யாருமே அதைச் சாப்பிடுவதில்லை" என்றார். சில மாத்திரைகள், ஊசி மூலம் போட்டுக் கொள்ள மருந்துகள் எழுதிக் கொடுத்தார்.

" எங்களிடம் மருந்து, ஊசி, மாத்திரை எதுவும் இல்லை. ஹாஸ்பிடல் முழுதும் நேயாளிகள்தான்.. என்ன செய்வது, எங்கள் நாட்டு நிலைமை அப்படி" என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

"எங்கள் நாட்டில் நடக்கும் கலவரத்தில் யாரும் இருப்பதில்லை. டாக்டர்களே இங்கு தங்குவதில்லை. டாக்டருக்குப் படித்தவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடிவிடுகிறார்கள்" என்றார்.

நான் அவரை நினைத்து மிகவும் பெருமைப்பட்டேன்.

" இப்படி உள்ள சூழ்நிலையில் உங்களைப் போன்ற சில டாக்டர்களாவது இருந்து சேவை செய்கிறீர்களே" - என்று அவருக்கு என் பாராட்டைத் தெரிவித்தேன்.

அதற்கு அவர் சொன்ன பதில், என்னைத் தூக்கி வாரிப் போட வைத்தது.

----------


அத்தியாயம் 41

"நானா.. டாக்டரா.. யார் சொன்னது.. நான் இப்போது மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவன்தான்.. டாக்டர்கள் இல்லாததால் நானே வந்து கவனித்துக் கொள்கிறேன். படிப்பு முடிந்ததும் நானும் நல்ல வேலை தேடி, வேறு நாட்டுக்குப் போகப் போகிறேன்" என்றார்.

நான் என்ன சொல்வதென்றே தெரியாமல் அமைதியாக இருந்தேன்.

ஏஜெண்ட் வந்து எங்களை கூட்டிச் சென்றான். எனக்கு சரியான பசி.. காலையிலிருந்தே எதுவும் சாப்பிடவில்லை. நல்ல ரெஸ்டாரண்ட்டுக்குப் போனோம்..

மூன்று பேரும் சேர்ந்து சாப்பாடு ஆர்டர் செய்தோம்.. அதே அரிசி சாதம், மொச்சைக் கொட்டை.

சாப்பிட்டு விட்டு மருந்துக் கடை தேடிப்போனாம். கேட்ட மருந்துகளை கொடுத்தான் கடைக்காரன்.

சரிபார்த்தபோது, எல்லா மருந்துகளும் காலாவதியாகியவை என்று தெரிந்தது.           ஒரு மாதம், இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே அவற்றின் உபயோகப்படுத்தும் காலம் முடிந்து போய்விட்டது.

"அதெல்லாம் ஒன்றும் ஆகாது.. இன்னும் ஒரு வருடத்துக்குப் பிறகு கூட உபயோகிக்கலாம்.. வேறு வழியும் இல்லை.. என்னிடம் புதிய மருந்தும் கிடையாது.." என்று

சாதாரணமாகச் சொன்னான் கடைக்காரன்.

எனக்கும் வேறு வழி இல்லை. அதைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்.

வரும்வழியில் கண்ணில்பட்ட கட்டிடங்கள் எல்லாம் இடிந்துபோய் இருந்தன.  சுவர்களில் துப்பாக்கி குண்டு துளைத்த அடையாளங்கள்.

என்னுடன் வந்த பஞ்சாபி இன்ஜினீயர், "இங்கே நடப்பது 'சிவில் வார்' என்று எனக்குத் தெளிவாக தெரிகிறது" என்றான்.

நான் " எப்படிச் சொல்கிறாய் " என்றேன்.

" கட்டிடங்கள் எல்லாம் இடித்திருக்கிறர்களே. கட்டிடம் எல்லாம் சிவில் இன்ஜினீயரிங் சம்பந்தப்பட்டது தானே " என்றான்.

அந்த நேரத்திலும் அவன் சொன்ன ஜோக்கை நினைத்து சிரிக்கத் தோன்றியது.        சர்தார்ஜி ஜோக் இப்படி இருக்காதே என்ற நினைப்பும் கூடவே ஓடியது.

கப்பலுக்கு வந்தபோது, ஐந்து மணியாகி விட்டது. நாங்கள் கப்பல் அருகே சென்றபோது திடீரென்று அங்கே கூலி வேலை செய்யும் ஆட்களில் சிலர் திடுதிடுவென்று அங்குமிங்கும் சிதறி ஓட ஆரம்பித்தனர்.

ஏதோ கலவரம் ஏற்படுவதுபோல் தோன்றியது.

ஓடி வந்த ஒருவன் தடுமாறி என் மீது வந்து விழ, காவலுக்கு வந்த செக்யூரிட்டி, பின்தொடர்ந்து வந்து அவனைப் பிடித்துக் கையில் இருந்த இரும்புக் கம்பியால் உடம்பு முழுதும் அடிக்க ஆரம்பித்தான்.

ஆனால் அவ்வளவு அடியையும் தாங்கிக் கொண்டு கொஞ்சம் கூட அழாமல் இருந்த அவனைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டு நின்ற சமயத்தில் அந்த அதிசயம் நடந்தது.

அடி வாங்கிக் கொண்டிருந்தவன் கப்பலில் இருந்து சரக்குகளை மூட்டையாகத் தூக்கி கரையில் உள்ள சேமிப்புக் கிடங்கில் கொண்டுபோய் வைக்கும் கூலித் தொழிலாளிகளில் ஒருவன்.

அவனைப் போலவே நூற்றுக்கணக்கானவர்கள் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.

துறைமுகத்துக்குள் கம்பிவேலி அமைத்து இருந்தார்கள். நூறு பேருக்கு மேல் அந்தக் கம்பிக்கு வெளிப்பக்கத்தில் நின்று அதில் முகம் பதித்தபடி கப்பலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அனவைரும் அன்றைக்கு கூலி வேலை கிடைக்காதவர்கள். ஒருவேளை நாளை வாய்ப்பு கிடைக்கக் கூடும். ஆப்பிரிக்க ஏழை நாடுகளில் இதே நிலைதான்.

எல்லோரும் அழுக்குப் படிந்த உடையுடன் இருந்தார்கள். அவர்களுடைய உடம்புக்கே பொருத்தமில்லாத மிகவும் லூசான உடை.

என்மீது வந்து விழுந்த அந்த தொழிலாளியும் அப்படிப்பட்ட உடையில் இருந்தான். அவனுடைய 'தொளதொள' பேண்ட்டை ஷு-விற்குள் 'இன்' செய்திருந்தான்.

செக்யூரிட்டி அடித்த அடிக்கு நானாக இருந்திருந்தால் கதறி அழுது, கீழே சுருண்டு விழுந்திருப்பேன். அவனோ கல் மாதிரி நின்றான்.

அடித்துக் கொண்டே செக்யூரிட்டி அவனின் சட்டையைப் பிடித்து வேகமாக இழுக்க, சட்டை ஒரு பக்கம் கிழிந்து தொங்க, கிழித்திருந்த சட்டைப் பகுதியிலிருந்து மொச்சைக் கொட்டை படிக்கணக்கில் கொட்டியது.

இவ்வளவு நேரம் இரும்புக்கம்பி அடிகளைத் தாங்கிக் கொண்டிருந்தது அந்த ரங்கூன் மொச்சைகள்தானா..

எனக்கு அவன் மீது இருந்த பரிதாபம் மறைந்து, சிரிப்பு வந்தது.

செக்யூரிட்டி அவனுடைய பேண்ட்டையும் பிடித்து இழுக்க, ஷுவிற்குள் மடித்துவிட்டிருந்த பகுதி வெளியே வர கால்பகுதியிலிருந்தும் மொச்சைப்பயறு கொட்டியது.

செக்யூரிட்டி விடவில்லை.

மேலே போட்டிருந்த உடையை முழுவதும் கழற்றி விட்டு, மறுபடியும் அவனுடைய உடையை பிடித்து இழுக்க அடுத்த அடுக்கு போல் அந்த சட்டையிலிருந்து மீண்டும் மொச்சை கொட்டியது.

எனக்குச் சிரிப்புடன், பரிதாபமும் தோன்றியது அப்போது....

செக்யூரிட்டி மீண்டும் இரும்புக் கம்பியை ஓங்கி, அவனை அடிக்கப் போக, அந்த தொழிலாளி அப்படியே மண்டியிட்டு கீழே உட்கார்ந்து செக்யூரிட்டியின் காலைப் பிடிக்கவும், அடிக்க ஓங்கிய கையை அப்படியே கீழே போட்டான்.

அவனைக் காலால் உதைத்துத் தள்ளிவிட்டான் செக்யூரிட்டி.. தப்பித்த சந்தோசத்தில் அவன் கேட்டை நோக்கி தலைதெறிக்க ஓடினான்.

செக்யூரிட்டி சிரித்தபடியே அவனைப் பார்த்துக் கொண்டு சொன்னான்..

"தினசரி இது நடக்கிறது.. இப்போது இவன் சும்மா ஓடுகிறான் என்று நினைக்காதீர்கள்.. இன்னொரு டிரெஸ் உள்ளே போட்டிருக்கிறான்.

சுமார் பத்து கிலோவாவது இப்போது வெளியே கொண்டு போயிருப்பான்.." என்று சொல்லிவிட்டு, "அங்கே பாருங்கள், இங்கே வேலை செய்யும் பலருக்கு மொச்சைக் கொட்டைகளைத் திருடிச் செல்வதுதான் வேலை.." - தூரத்தில் கைகாட்டினான்.

இங்கே நடந்ததைப் போலவே நிறைய பேர் செக்யூரிட்டிகளிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

உடையில் மறைத்துக் கொண்டு திருடிச் செல்லும் அளவுக்கு உள்ள அவர்களின் ஏழ்மை நிலைமையை நினைத்து வருத்தப்படத்தான் முடிந்தது.

கப்பலுக்குப் போய் குளித்துவிட்டு ஏஜெண்ட் வருவான் என்று காத்திருந்து ஏமாந்ததே மிச்சம்..

ஆறு மணிக்கு சர்தார்ஜியைக் கூட்டிக்கொண்டு வெளியே புறப்பட்டேன்.

'செக்யூரிட்டி கேட்'க்கு வெளியே போகும் முன் பாஸ்போர்ட்டை அங்கே உள்ள        ஆளிடம் கொடுத்தோம்.

கொடுத்துவிட்டு, மெதுவாக அங்கே இருந்த சின்ன 'கேட்'டைத் தாண்டி கால் பதித்த மறு நிமிடம், வெளிப்பக்கமிருந்து 'படபட' வென்று துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம்.

திடுக்கிட்டுத் திரும்பிய என்னை சட்டையைப் பிடித்து பின்புறமாக இழுத்து, ரூமுக்குள் தள்ளினான் அங்கிருந்த செக்யுரிட்டி. நான் தடுமாறிப் போய் கீழே விழுந்தேன்.

துப்பாக்கி சத்தம் இன்னும் தொடர்ந்தது.. சிறிது நேரத்துக்குப் பின், மெதுவாக எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தேன்.

ஒரு கும்பல் மெஷின்கன் துப்பாக்கிகள் சகிதம் வெளியே இஷ்டம் போல் சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தது தெரிந்தது.

நாங்கள் பயத்தோடு பதுங்கியபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சில நிமிடங்களில் ஒரு ஜீப்பில் ஏறி, அந்த கும்பல் போகவும் செக்யூரிட்டி எங்களை வெளியே போகலாம் என்று உடனேயே சொல்லிவிட்டான்.

போவதா, வேண்டாமா என்று யோசித்தேன். முதன் முதலில் துப்பாக்கி சுடுவதைப் பார்த்த அதிர்ச்சி, அதுவும் 'மெஷின் கன்'னால் சுட்டது. இன்னமும் பிரமிப்பில் இருந்தேன்.

"பயப்படாதீர்கள்.. இனிமேல் வரமாட்டார்கள்.. இன்றைக்கு அவ்வளவுதான்.." என்றவன், "இது இங்கே தினமும் நடக்கும் விஷயம். உங்களை எதுவும் செய்ய மாட்டார்கள்..

அவர்களுக்குள் மட்டும் சுட்டுக் கொள்வார்கள்" என்றான்.

சர்தார்ஜிக்கு கண்டிப்பாக ஊருக்குள் போயே ஆகவேண்டும்.. என்னை தைரியப்படுத்தினான்.

"ஹோட்டலுக்குத்தானே.. ஐந்து நிமிடம் பொறுங்கள்.. நானும் உங்களோடு வருகிறேன்" என்றான் அந்த கருப்பின செக்யூரிட்டி.

ஒரு வழியாக ஹோட்டல் வரை போகலாம் என்று புறப்பட்டோம்.

நடந்து போகும்போது, சற்றுமுன் நடந்த சண்டைக்கு சாட்சியாக நான்கு பிணங்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. யாரும் அந்த உடல்களைத் தீண்டக்கூட இல்லை.

இதென்ன ஊர் என்று நினைத்துக்கொண்டே கேட்டுக்கு அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்குப் போனோம்..

கூட வந்த செக்யூரிட்டி தன்னை ரிலாக்ஸ் பண்ணிக்கொண்டு அப்படியே ஹோட்டல் மேஜை மேல் தூங்கிப்போனான்.

திரும்ப கேட்டுக்கு வந்தோம்.. அது பூட்டி இருந்தது..


--------

அத்தியாயம் 42



ள்ளே டியூட்டியில் இருந்த செக்யூரிட்டி "ராத்திரி நேரத்தில் பார்ஸ்போர்ட்டைத் திரும்பத் தர முடியாது.. போய்விட்டு காலையில் வாருங்கள்.. இப்போதைக்கு வெளியே ஹோட்டலில் தங்கி விடுங்கள்" என்று சொல்லிவிட்டு எங்களைக் கண்டுகொள்ளாமல் தூங்கப் போய் விட்டான்.

மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இந்த இரவில் எங்கே ஹோட்டல் தேடிப் போய் அலைவது. அதுவும், இங்கே எந்த நேரத்தில் துப்பாக்கி குண்டு வெடிக்கும் என்றும் தெரியவில்லை.

மறுபடியும் ஹோட்டலுக்குப் போய் எங்களோடு வந்த செக்யூரிட்டியை எழுப்பினோம். தூங்கிக் கொண்டிருந்த அவனிடம் விஷயத்தைச் சொன்னோம்.

அவன் யோசித்துவிட்டு, எங்களை ஏஜெண்டின் வீட்டுக்கு கூட்டிப் போவதாகச் சொன்னான். ஏஜெண்ட் வீட்டுக்கு நடந்தே போனோம்.

அது ஒரு பெரிய மாளிகை.

காலையில் சாப்பாட்டுக்கே வழியில்லை என்று கெஞ்சிய ஏஜெண்ட் இவ்வளவு பெரிய மாளிகைக்குச் சொந்தக்காரனா.. நான் ஆச்சர்யப்பட்டேன்.

ஆனால் அந்த பங்களாவில் சுத்தமாக வெளிச்சமே இல்லை.. தெருவின் மற்ற பகுதிகளில் மின்சாரம் இருந்தாலும் அந்த வீட்டில் இருப்பது போல் தெரியவில்லை.

வீட்டின் கதவைத் தட்டினோம். ஐந்து நிமிடம் ஆகியும் யாரும் வந்து திறப்பதற்கான அறிகுறியே இல்லை.

செக்யூரிட்டி விடாமல் தட்டினான்..

கொஞ்ச நேரம் கழித்து மெதுவாக கதவு திறக்கும் ஓசை கேட்டது. ஆனால் முழுதும் திறக்காமல் சின்ன இடைவெளி மட்டுமே தெரிந்தது.

அந்த இடைவெளியில் மெலிதான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தூக்கக் கலக்கத்துடன் ஏஜெண்ட்டின் முகம் தெரிந்தது.

எங்களைப் பார்த்ததும், கதவை முழுதாகத் திறந்தான்.

செக்யூரிட்டி எங்களின் பிரச்னையைச் சொல்லி விட்டுப் போய்விட்டான்.

ஏஜெண்ட் எங்களை வீட்டுக்கு உள்ளே கூட்டிப் போனான். கையில் மெழுகுவர்த்தி வைத்திருந்தான்.

வெளியில் மின்சாரம் இருந்தும் இந்த பங்களாவில் ஏன் இல்லை என்று கேட்டேன்.

அவன் சோகத்துடன் சொன்ன பதில் என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது.

வீட்டில் மாட்டியிருந்த எல்லா பல்புகளும் ஃப்யூஸ் போய் விட்டதாம்.. திரும்ப பல்பு வாங்கிப் போடுவதற்கு கையில் பணம் இல்லையாம்.

அவன் சொல்வதை நம்புவதா, வேண்டாமா என்று புரியவில்லை.

இவ்வளவு பெரிய மாளிகைக்குச் சொந்தக்காரன் பல்பு வாங்கக் காசில்லை என்றால் எப்படி நம்ப முடியும். நான் அவனிடம் கேட்டே விட்டேன்.

என்னை ஒருமுறை பார்த்தான்.. பின்பு மெதுவாகச் சிரித்தான்..

" இந்த வீட்டுக்கு நான் சொந்தக்காரன் என்று உனக்கு யார் சொன்னது.."

" இது உன் வீடு இல்லையா.."

" இல்லை.. யாருடைய வீடோ.. சண்டையினால் விட்டு ஓடிவிட்டார்கள்.. நான் வந்து தங்கிக் கொண்டேன்.." என்றான்.

அவனுக்கு இரண்டு மனைவிகள் என்றும் இரண்டு பேருடனும் அதே (இருட்டு) வீட்டில் வாழ்வதாகச் சொன்னான்.

" நீங்கள் வந்து கதவைத் தட்டியபோது நான் ஏன் ரொம்ப நேரம் கதவைத் திறக்கவில்லை தெரியுமா?.

இங்கே யார் வேண்டுமானலும் எந்த வீட்டை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம்.

நான் கதவைத் திறக்கும் போது உள்ளூர் ரவுடி யாராவது என் வீட்டுக்குள் வந்துவிட்டால் நான் வெளியேற வேண்டியதுதான்.. அதன்பின் வீடு அவனுக்குத்தான் சொந்தம்" என்றான்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே அந்த வீட்டின் பிரம்மாண்டம் தெரிந்தது.

அதிக விலையுள்ள கார்ப்பெட், அலங்கார விளக்குகள் போன்ற நிறைய பொருட்கள் அந்த மாளிகையில் இருந்தன.

ஏஜெண்ட் எங்களின் பிரச்னையைக் கேட்டுவிட்டு அங்கேயே தங்கச் சொன்னான்.

அந்த இருட்டில், காற்றே இல்லாத வீட்டில் தங்குவது கொடுமை.. அருகே வேறு ஹோட்டலில் தங்க முடியுமா என்று கேட்டேன்.

எங்களை அழைத்துக் கொண்டு ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து போய் ஒரு ஹோட்டலைக் காட்டினான்...

அது ஒரு நட்சத்திர ஹோட்டல்.. சண்டை காரணமாக ஹோட்டல் கைவிடப்பட்டு இப்போது யாரோ ஒருவரின் பாதுகாப்பில் இருந்தது.

அங்கே அப்போது ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டுமே இருந்தான். ஏஜெண்ட் எங்களை அறிமுகப்படுத்திவிட்டுப் போய்விட்டான்.

ஆனால் அந்தக் கருப்பின வாட்ச்மேனுக்கு ஸ்பானிஷ்தான் தெரிந்திருந்தது...

அவனுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளையும் எனக்கத் தெரிந்த கொஞ்சம் ஸ்பானிஷையும் வைத்து சமாளித்தோம்.

'மூன்று குழந்தைகள், எல்லோரும் பட்டினி' என்று சொன்னதைப் புரிந்து கொண்டேன்.

ஒரு டாலர் கொடுத்தால் ரூம் என்றான்..

நான் தங்கப்போகும் அறைக்கான சாவி எடுத்துக்கொண்டு ரூமிற்குள் போனேன்.

முழுவதும் குப்பையும், ஒட்டடை அடிக்காமல் இருந்ததால் பாழடைந்தும் இருந்தது.

ஏஜண்ட் வீடு (?) எவ்வளவோ தேவலாம். ஆனால், இனிமேல் அலைய முடியாதென்று சோர்வுடன் படுக்கையில் படுத்ததுதான் தாமதம்.

நான் படுத்திருந்த படுக்கையோடு அந்தக் கட்டில் உடைந்து விழ, நான் தரையில் விழுந்தேன்.

அந்தக் கட்டில் உபயோகப்படுத்தப்பட்டு எத்தனையோ மாதங்கள் (வருடங்கள் !) ஆகியிருக்க வேண்டும். முழுவதும் துருப்பிடித்துப் போய் இருந்தது. எந்த நிமிடத்திலும் கீழே விழத் தயாராக இருந்தது.

நான் அதைக் கவனிக்கவில்லை. நான் இருந்த நிலையில் படுத்தால் போதும் என்று இருந்தேன்.

என் உடம்பின் பளு மேலே பட்டவுடன் கட்டில் அதனுடைய சப்போர்ட்களில் இருந்து உடைத்துக் கொண்டது.

படுக்கையுடன் நான் கீழே விழுந்தேன். நல்ல வேளையாக மெத்தை என்பதால் என் முதுகு தப்பித்தது..

வேறு வழியில்லாமல் அப்படியே படுத்துக் கொண்டேன். காலையில் வாட்ச்மேன் வந்து எழுப்பிய போது மணி எட்டு.

அவசர அவசரமாக துப்பாக்கிச் சண்டை ஆரம்பிக்குமுன் கப்பலுக்குப் போய்சேர்ந்தோம்.


ஜோதிக்குமார் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார்.

" அடுத்து கப்பல் தாய்லாந்து போக இருந்தது.

கப்பல்வாசிகளுக்கு எந்த ஊரைப்பற்றித் தெரிகிறதோ இல்லையோ தாய்லாந்தைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது.

அந்த நாட்டுக்குப் போகாதவர்கள்கூட மற்றவர்களிடம் இருந்து கேள்விப்பட்டதிலிருந்தே தாய்லாந்து பற்றிய முழு விபரமும் தெரிந்திருப்பார்கள்.

நான் அப்போது முதல்முறையாகப் போனேன்.

தாய்லாந்து என்றவுடன் 'பாங்காக்' நினைவுக்கு வருமளவுக்கு கப்பல்வாசிகளுக்கு 'கோஸி சாங்' துறைமுகமும் நன்கு அறிமுகமானது.

எனது கப்பல் 'கோஸி சாங்' கிற்குப் போனது.

அங்கே துறைமுகத்துக்குள் போகாமல் வெளியே நங்கூரமிட்டு கரைக்கு வராமலேயே கார்கோவை ஏற்றி இறக்கும் பணி செய்ய வேண்டும்.

துறைமுகத்துக்கு செல்ல 'பைலட்' எங்கள் கப்பலுக்கு வந்து கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தார்.

எங்கள் கப்பல் துறைமுகத்துக்குள் போகாமல் நங்கூரம் பாய்ச்சி இருந்தாலும் அந்த இடத்துக்குக் கப்பலைக் கொண்டு வரவும் பைலட் தேவை...

கப்பல் நங்கூரமிட்டதும் கப்பலில் ஹோட்டல் நடந்த ஒரு பெண் வந்தாள்..

தாய்லாந்து துறைமுகங்களில் கப்பலிலேயே ரெஸ்ட்டாரண்ட் நடத்துவது சகஜம்.

டேபிள், நாற்காலிகள், கேஸ் ஸ்டவ், ஃபிரிட்ஜ் என்று ஒரு பார் நடத்தத் தேவையான அத்தனை சமாச்சாரங்களும் கப்பலுக்கே வந்து விட்டன.

அவள் ஒரு நாற்பது வயது பெண்மணி... பாரின் சொந்தக்காரி.. கூடவே ஆறு மற்றும் நான்கு வயதிருக்கும்... இரண்டு குழந்தைகள்...
--------

அத்தியாயம் 43

டேபிள், நாற்காலிகள், கேஸ் ஸ்டவ், ஃபிரிட்ஜ் என்று ஒரு பார் நடத்தத் தேவையான அத்தனை சமாச்சாரங்களும் கப்பலுக்கே வந்து விட்டன.

அவள் ஒரு நாற்பது வயது பெண்மணி... பாரின் சொந்தக்காரி.. கூடவே ஆறு மற்றும் நான்கு வயதிருக்கும்... இரண்டு குழந்தைகள்...

என்னைப் பார்த்து.. " யூ எலக்ட்ரோலக்?" - என்று கேட்டாள்.

கிரீக் கப்பல் என்பதால் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரை 'எலக்ட்ரோலக்' என்று அழைத்தாள்...

இந்த மாதிரி சமயங்களில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களுக்கு வி.ஐ.பி. அந்தஸ்துதான்.. பார் நடத்துபவர்கள் மிகவும் 'ஸ்பெசலாக' கவனித்துக் கொள்வார்கள்.

நல்ல சுவையுடன் சாப்பாடு கிடைக்கும். ஏனென்றால் அவர்களுக்குத் தேவையான எலக்ட்ரிக்கல் சப்ளை எல்லாம் நான் மனது வைத்தால்தான் கொடுக்க முடியும்.

நானும் பவர் இணைப்பு கொடுத்தேன்.

வழக்கமாக எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரும், பணி செய்யும்போது 'பாய்லர்சூட்' உடை அணிந்திருக்கவேண்டும்.

கிரேக்கக் கப்பல்களில் அதெல்லாம் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை.

நான் ஒரு டி- சர்ட், லூசான ஷார்ட்ஸ் அணிந்திருந்தேன்.

கப்பலில் இருந்த ஒவ்வொருவரின் பெயருக்கும் ஒரு பக்கம் ஒதுக்கப் பட்டு புதிய பைல் ஒன்று உருவாக்கப்பட்டது.

அவரவர் சாப்பாடு மற்றும் டிரிங்க்ஸின் பில், அவர்களுடைய கணக்கில் ஏறிவிடும்.

கப்பலின் சமையற்காரர் 'மாய்க்கார' விற்கு கொஞ்சம் வேலை குறைவு.

அவர் கொடுக்கும் உணவிலிருந்து விடுதலை பெற்று நம் ஊரில் சாப்பிடுவது போல் சாப்பிட இருக்கவே இருக்கிறது அந்த 'மினி பார் கம் ரெஸ்டாரண்ட்' .

விதவிதமான மீன் வகைகளை, ருசியாக நல்ல காரத்துடன் சுடச்சுட சமைத்துக் கொடுத்தார்கள்.

நாம் என்ன டேஸ்ட்டில் வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த டேஸ்ட்டில் கிடைத்தது.

கிரேக்கர்களும் வந்து சாப்பிட்டார்கள். அங்கே அதிகம் விற்பனையானது ஐந்து டாலர் விலையுள்ள, அரை பாட்டில் லோக்கல் விஸ்கி..

எனக்கு, நான்கு நாளில் உணவு பில் அறுபது டாலர் வந்துவிட்டது.

இதில் விஷயம் என்னவென்றால், எல்லோருக்கும் பில், கணக்கில்தான் ஏறியது.. யாரும் பணம் கட்டவில்லை.

காரணம், யாரிடமும் கையில் பணம் இல்லை.

வழக்கமாக, முதல் தேதி ஆனவுடன் அவரவரின் சம்பளத்தை நம்முடைய பேங்க் கணக்கில் செலுத்தச் சொன்னால், கம்பெனியே செலுத்திவிடும்.

எனது முந்தைய கம்பெனியின் சம்பளம் பற்றி கவலையே படவேண்டியதில்லை. முப்பதாம் தேதியே நம் கணக்கில் போய்ச் சேர்ந்து விடும்.

இதற்கிடையே, நமக்கு பணம் தேவையென்றால் டாலராக கேப்டனிடம் அட்வான்ஸ் கேட்டும் வாங்கிக் கொள்ளலாம்.

ஒவ்வொரு துறைமுகத்துக்குப் போகும் முன்பு நம் செலவிற்குப் பணம் தேவை என்பதால், நமக்குத் தேவையான பணத்தை கேப்டன் அமெரிக்க டாலராகவோ, கப்பல் போகும்

நாட்டின் கரன்ஸியாகவோ கொடுத்து விடுவார்.

இதற்காக எல்லா கேப்டனிடமும் குறிப்பிட்ட அளவு டாலர் இருக்கும்.

இல்லையேல், கப்பல் போய்ச் சேரும் துறைமுகத்தில் உள்ள கம்பெனியின் ஏஜண்ட், கேப்டனின் தேவைக்குத் தகுந்தபடி அமெரிக்க டாலரோ, உள்ளூர் பணமோ கொண்டு வந்து தருவார்.

நாம் வாங்கும் அட்வான்ஸ் பணம், சம்பளத்தில் கழிக்கப்படும்.
அந்தக் கப்பலில் உள்ள எல்லோரும் அட்வான்ஸ் கேட்டிருந்தோம்.

ஆனால், கப்பல் தாய்லாந்து போய்ச் சேர்ந்து நான்கு நாட்கள் ஆகியும் இன்னும் ஏஜண்ட் பணம் கொடுக்க வரவேயில்லை.

அதனால் யாரும் அந்த மினி ஹோட்டலின் பில்லை ஸெட்டில் செய்யவில்லை.

" கேப்டன்.. நோ மணி.. ஏஜண்ட் எப்போது பணம் கொண்டு வருவான்.. " என்று கேட்டால், " நோ ஐடியா.. டோண்ட் ஒர்ரி.. என்ஜாய்.." என்று பதில் சொன்னார்
கேப்டன்.

எல்லோரின் கேள்விக்கும் கேப்டனின் பதில் இதுவாகவே இருந்தது.

ஏஜண்ட்டின் மேல் தப்பு இருக்காது. கம்பெனி பணம் கொடுக்கச் சொன்னால் கொடுக்கப் போகிறான்.

கிரேக்கக் கம்பெனி ஆயிற்றே.. அதனால் இதெல்லாம் சகஜம். சில சமயம் மாதக்கணக்கில் சம்பளமே தரமாட்டார்கள்.

கப்பலில் உள்ளவர்களுக்கு இது சாதாரணமாயிருக்கலாம். ஆனால் ஹோட்டல் நடத்தும் பெண் அப்படி இருக்க முடியுமா..?

அவள் பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள்..

ஐந்தாவது நாள் வந்தது. ஏஜண்ட் வரும் சுவடே இல்லை..

வழக்கமாக காலை எட்டு மணிக்கு எல்லோரும் இன்ஜின் அறைக்குப் போய் வேலையை ஆரம்பித்து விடுவோம்.

அன்று எல்லோரும் மிகவும் உற்சாகம் இழந்து காணப்பட்டனர். மெஸ் பில்லை எப்படிக் கட்டுவது என்ற யோசனைதான்.

சீஃப் இன்ஜினீயர், யாரிடமாவது பணம் இருந்தால் கொடுக்கச் சொல்லி கேட்டார். அனைவரிடமும் இருந்த பணத்தை எல்லாம் சேர்த்து மொத்தமே முன்னூறு டாலர்தான் தேறியது.

ஆறாவது நாள் சீஃப் இன்ஜினியர் சொன்னார்.

" நமக்குச் சேர வேண்டிய சம்பளம் இன்னும் வரவில்லை. ஒவ்வொருவருக்கும் ஐம்பது டாலருக்கு மேல் ஹோட்டலில் பணம் பாக்கி உள்ளது. அதனால் இன்று நாம் வேலை நிறுத்தம் செய்து, கம்பெனிக்கு விஷயத்தை தெரிவிப்போம்.

நாளைக் காலைக்குள் பணம் வரவில்லையென்றால் முதல் காரியமாக ஜெனரேட்டர்களை நிறுத்தப் போகிறேன்.. கப்பலின் வேலை எல்லாம் நிற்கட்டும். கம்பெனி என்ன செய்கிறது என்று பார்க்கலாம்" என்றார்.

என்ன இருந்தாலும் இவர்களுக்கு இருக்கும் தைரியம் வேறு யாருக்கும் இருக்காது என்று நினைத்துக் கொண்டேன்.

கேப்டன் கவலையே படவில்லை. அவரும் கப்பல் ஊழியர்கள் பக்கம்தான்..

கம்பெனிக்கு விஷயத்தைச் சொல்லிவிட்டார். ஆனால் கம்பெனியிலிருந்து எந்த பதிலும் இல்லை.

இதில் முக்கியமான விஷயம், வேலை செய்யப் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டோமே தவிர யாருக்கும் மனது கேட்கவில்லை.

பொதுவாக தரையில் நடப்பதுபோல் கப்பலில் உள்ளவர்கள் 'வேலைநிறுத்தம்'  போன்ற போராட்டமெல்லாம் நடத்துவதில்லை.

வேலையைப் பொறுத்தவரை சரியாகச் செய்ய வேண்டும் என்ற உணர்வு உடையவர்களாகவே இருப்பார்கள்.

கோபத்தில், வேலை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாலும் மனது கேட்காமல் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

கப்பலில் வேலை செய்வது கம்பெனிக்குத் தெரியாமல் கேப்டன் பார்த்துக் கொண்டார்.

அன்றைய பொழுது கழிந்தது. மறு நாள் ஜெனரேட்டரை நிறுத்தப் போவதாக சொல்லியிருந்தாலும் அதைச் செய்யவில்லை.

கப்பல் முழுவதும் ஒருவித இறுக்கமான சூழ்நிலை நிலவியது.

அன்று மாலை கப்பல் அந்த துறைமுகத்தை விட்டு புறப்பட்டாக வேண்டும். ஆனால் ஹோட்டலுக்கு பணத்தை ஸெட்டில் செய்யாமல் எப்படிப்போவது?

கடைசியில் இன்னொரு முடிவுக்கு வந்தோம்...

என்னிடம் ஒரு தங்கச் சங்கிலி இருந்தது.. ஏழு பவுன் மதிப்பு இருக்கும். கண்டிப்பாக அதை விற்றால் கடன் தொகையை விட அதிகம் பெறும்.

ஒரு வழியாக பேச்சுவார்த்தை நடத்தி அந்த செயினை விற்று பணத்தை பார் நடத்தும் பெண் எடுத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள்.

பணம் வந்தவுடன் செயினுக்கான பணத்தை எனக்குத் தரவும் ஏற்பாடாகியது.

பார் பெண் அந்த செயினை எடைபோட்டு வாங்கிக் கொண்டாள்..

எல்லோரும் கம்பெனியின் மீது கோபமாக இருந்தார்கள். அவர்களின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்பட்டதாகவே அவர்களுக்குத் தோன்றியது.

பணத்தை ஸெட்டில் செய்து விட்ட திருப்தி இருந்தாலும், எல்லோரிடமும் ஒருவித வருத்தமான உணர்வு இருந்தது.

இப்படி ஒரு சூழ்நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளதே என்ற எரிச்சல் கூட தோன்றியது.

அன்று சீஃப் இன்ஜினீயர், ஜெனரேட்டரை நிறுத்தி விடவில்லை.

கம்பெனி மேல் கோபம் இருந்தாலும் கப்பல் என்னவோ கம்பெனிக்குச் சொந்தமானது என்ற எண்ணம் ஏனோ வர மறுத்தது..

அதற்குப் பதில் ' நாங்கள் வேலை பார்க்கும் கப்பல், எங்களின் சொந்த வீடு போன்றது ' என்ற உணர்வு இருந்தது.

எனவே கப்பலின் இயந்திரங்களை நிறுத்தி அதன்மூலம் கம்பெனியைப் பழிவாங்க நினைத்தாலும் அதற்கு யார் மனமும் இடம்தரவில்லை..

அன்று மாலை கப்பல் அங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்...

கம்பெனியிலிருந்து செய்தி ஏதும் வரவில்லை.

கேப்டன் இந்த சமயத்தில் மிகவும் சாதுர்யமாக நடந்து கொண்டார்.

கப்பல்வாசிகள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொண்டு, கப்பலின் செயல்பாடுகள் எதுவும் பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டாலும், பணம் ஏற்பாடு செய்யாமல் ஏமாற்றும்

கம்பெனிக்கு அது பற்றி தெரியப்படுத்தாமல், கப்பலின் நிலைமை பிரச்னையில் இருப்பதாக ஒரு இமேஜை உருவாக்கினார்.

வழக்கமாக கேப்டன் ஆகிவிட்டால் எல்லோரும் கம்பெனியின் ஆளாக மாறிவிடுவார்கள்.

கேப்டன் பதவி என்பது கம்பெனியின் மொத்த ரெப்ரஸண்ட்டேடிவ் மாதிரி.

ஆனால் அந்தக் கேப்டன் தொழிலாளர் சப்போர்ட்டர்.. எல்லோரிடமும் மிக ஜாலியாகவும், உரிமையாகவும் பேசுவார்.

அனைவரும் சோகத்தில் இருந்ததால், யாரும் சாப்பாடுகூட சரியாகச் சாப்பிடவில்லை.

மதியம் வரை கம்பெனியிலிருந்து எந்த செய்தியும் வராததால், மதிய உணவுக்குப் பின் சீஃப் அனைவரையும் அழைத்து, ' மதியத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டாம்.

எமர்ஜென்ஸி வேலை எதுவும் இல்லை. எல்லோரும் ரெஸ்ட் எடுங்கள்' என்றார்.

எல்லோரும் மேல்தளத்தில் உட்கார்ந்து தூரத்தில் தெரியும் கரையையும் மற்ற கப்பல்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

மணி மூன்று இருக்கும். திடீரென்று பணியாட்களிடையே பரபரப்பு..

மேலே வீல்ஹவுஸ் பகுதியிலிருந்த மாலுமி மேலேயிருந்தே கிரீக்கில் கத்தினான்..

எனக்கு எதுவும் புரியவில்லை.
------

அத்தியாயம் 44

மேலே வீல்ஹவுஸ் பகுதியிலிருந்த மாலுமி மேலேயிருந்தே 'உற்சாகமாக' கிரீக்கில் கத்தினான்..

எனக்கு எதுவும் புரியவில்லை.

மற்றவர்கள் எழுந்து நின்று தூரத்தில் எதையோ கைகாட்டி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்யவும், நானும் என்னவென்று பார்த்தேன்.

தூரத்தில் இருந்து 'ஸ்பீட்போட்' ஒன்று தண்ணீரைக் கிழித்துக் கொண்டு எங்கள் கப்பலை நோக்கி வந்து கொண்டிருந்தது. கண்டிப்பாக ஏஜண்ட் என்று புரிந்தது.

பணம் கொண்டு வருவான் என்று நம்பி அந்த சந்தோசம்... கடைசியில் ஏஜண்ட் ஏமாற்றவில்லை..

கேப்டன் கம்பெனிக்குக் கொடுத்த தகவலால், 'கப்பலைத் துறைமுகத்தை விட்டு எடுக்க முடியாமல் போய்விடக் கூடும்' என்ற பயத்தில் கம்பெனி பணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டிருந்தது.

அன்று அவர்களிடம் காணப்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

செயினை திரும்பப் பெற்றுக் கொண்டு ஹோட்டல் பெண்ணுக்கு பணத்தை ஸெட்டில் செய்தோம்...

கப்பல் அன்று இரவே புறப்பட்டது. தாய்லாந்திலிந்து அரிசி ஏற்றிக்கொண்டு ஆப்பிரிக்காவில் ' ஐவரி கோஸ்ட் ' அருகேயுள்ள ' பெனின் ' துறைமுகத்திற்குச் சென்றது.

சீஃப் இன்ஜினீயர் பெயர் ' கோஸ்த்தா '.. அவரை மாஸ்டர் கோஸ்த்தா என்று அழைப்பார்கள். நிஜமாகவே அவர் அளவுக்கு துணிச்சலானவரைப் பார்ப்பது அபூர்வம்.

சீஃப் இன்ஜினீயர் என்ற பந்தா கிடையாது.. எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொள்வார்.

கிட்டத்தட்ட ஐம்பது நாளைக்கு மேல் பயணம்..

மனிதர் ஒரு செயின் ஸ்மோக்கர்.. சென்னால் நம்பமாட்டீர்கள்.

அந்த ஐம்பது நாட்களில் அவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை காலி செய்து விட்டது என்னைப் பொருத்தவரை சாதனையாகவே தோன்றியது.

கப்பல் துறைமுகம் போய்ச் சேர்ந்ததும் என்னையும், மூன்றாவது இன்ஜினீயரையும் அழைத்தார்.

" ஐந்து மணிக்கு தயாராக இருங்கள். வரும்போது ' மாய்க்கரா 'விடம் சொல்லி ஒரு காலி டப்பாவையும் வாங்கி வாருங்கள்" என்றார்.

'எதற்கு' என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவில்லை.

சரியாக ஐந்து மணிக்கு என் அறைக் கதவைத் தட்டினார்.

சர்தார்ஜி காலியாக இருந்த ஒரு லிட்டர் சைஸ் டப்பாவை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வந்திருந்தான்.

ஆப்பிரிக்கத் துறைமுகங்களில் வேலை செய்யும் தொழிலாளர் நூறு பேர் என்றால் வேலை இல்லாமல் வெளியே நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் குறைந்தது நூறு பேராவது இருப்பார்கள்.

கோஸ்த்தா சும்மா நிற்பவர்களில் இரண்டு பேரைக் கூப்பிட்டு கப்பலில் இருந்த அரிசி மூட்டைகள் இரண்டை தூக்கி வரச் சொன்னார்.

அவர்கள் இருவரும் ஆர்வத்துடன் ஓடிப் போய் மூட்டைகளைச் சுமந்து கொண்டு வந்தனர்.

கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி ஓடிவந்து மூட்டை தூக்குபவர்களைத் தடுத்தார்..

கோஸ்தாவுக்கு கோபம் வந்து விட்டது.. கப்பலில் இருந்து புறப்படும் போதே 'சுதி' ஏற்றிக் கொண்டு வந்திருந்தார்.

அவருக்கும் சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாது.. செக்யூரிட்டிக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் ஆங்கிலம் தெரிந்திருந்தது.

தடுத்த செக்யூரிட்டியைப் பார்த்து, " யு நோ ஸ்பீக்.. ஷட் அப். ஐயம் சீஃப் இன்ஜினீயர் " என்றார் அதிகாரத்துடன்.

செக்யூரிட்டி விடத்தயாராயில்லை, " நோ. நோ. பெர்மிஷன் " என்றான்.

சீஃப் இன்ஜினீயருக்கு ஜிவ்வென்று கோபம் வந்துவிட்டது..

" யூ லுக்.. யூ ஸ்டுப்பிட்.. ஷட் அப் " என்று மேலும் அவனை அதட்டியபடி சொல்லிவிட்டு மூட்டை தூக்கியவர்களைப் போகச் சொன்னார்.

செக்யூரிட்டி அவரின் அதட்டலில் அசந்துபோய் அப்படியே நின்று விட்டான்.. கோஸ்த்தாவுடன் நாங்களும் வெளியே வந்தோம்..

வெளியே இருந்த வண்டி ஒன்றை அழைத்தார். மூட்டை தூக்கி வந்தவர்களுக்கு ஆளுக்கு இரண்டு டாலர் கொடுத்து அனுப்பினார்.

அவரும் வண்டியில் ஏறிக் கொண்டு எங்களையும் ஏறச் சொன்னார். அவர் இதே துறைமுகத்துக்கு நிறைய முறை வந்திருப்பதாகச் சொன்னார்..

ஒவ்வொரு முறையும் இதே போல் அரிசி மூட்டையை வெளியே கொண்டு வந்துவிடுவாராம்..

வண்டிக்காரனிடம், வண்டியை சின்னச் சின்ன சந்துகளில் போகச் சொன்னார்.

கடைசியில் ஒரு சேரிப் பகுதியில் நிறுத்தச் சொன்னார். எங்கள் வண்டி போய்ச் சேர்ந்தவுடன் பெரிய கும்பலே எங்களைச் சுற்றிக் கொண்டுவிட்டது..

" எல்லோரும் வரிசையாக வாருங்கள் " என்று உத்தரவு போட்டார் கோஸ்த்தா.

நானும் சர்தார்ஜியும் வரிசையை ஒழுங்கு படுத்தும் வேலையைச் செய்தோம்...

அரிசி மூட்டையைப் பிரித்து, கையில் இருந்த டப்பாவில் ஆளுக்கு இரண்டு டப்பா அரிசி வீதம் கொடுத்தார்.

எல்லோருக்கும் கொடுத்தபின், அவரின் கைகளைப் பிடித்து நன்றி சொன்ன அந்த ஏழைகளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்..  எங்கள் கண்களிலும் நீர் திரையிட்டது.

'கடைத் தேங்காயோ, வழிப் பிள்ளையாரோ' என்ற வார்த்தைகள் நினைவில் வந்தாலும், அவர் செய்தது ஒரு மகத்தான சேவை.

எத்தனையோ மூட்டை அரிசிகள் வீணாக தரையிலும் கடல் நீரிலும் சிந்துவதைக் கண்டிருக்கும் எனக்கு அந்த இரண்டு மூட்டைகள் பட்டினியில் தவிக்கும் ஏழைகளுக்குப் பயன்பட்டதில் மிகவும் மகிழ்ச்சிதான்.

நாடு விட்டு நாடு வந்து யாருடைய அரிசியையோ யாருக்கோ தானம் செய்த அந்த நிகழ்ச்சி என் மனதை விட்டு நீங்கவேயில்லை..

மாஸ்டர் கோஸ்த்தா கப்பல் வாழ்வில் ஒரு மறக்க முடியாத மனிதர்....

- சொல்லிமுடித்த ஜோதிக்குமார் " ஒரு கப்பலில் அரிசி போட்டு எலி வளர்க்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டது.. அது ஒரு வித்தியாசமான கிரேக்கக் கப்பல் அனுபவம் " என்று இன்னொரு கப்பல் பற்றியும் சொல்லத் தொடங்கினார்.


கிரீஸ் நாட்டிலுள்ள ஒரு கப்பலில் சேர ஏதென்ஸ் ஏர்போர்ட் போய்ச் சேர்ந்தபோது கம்பெனி ஆள் தயாராக இருந்தான். ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து கப்பலுக்குள் போகச் சொன்னான்.

கிட்டத்தட்ட ஆறு மணி நேர பயணம் மலை மேல் பாதை.. மலை மலையாகத் தாண்டி போய்க் கொண்டேயிருந்தது கார்.. கடைசியில் ஒரு வழியாக கடல் தெரிந்தது.

நெருங்கும் போதே கப்பலின் வடிவம் ஒரு பிரம்மாண்டமான மீன் போலத் தெரிந்தது.

டாக்ஸியில் இருந்து இறங்கி கப்பலில் ஏற கப்பலின் இரும்பு ஏணிப்படியை தேடினால், அது கீழே இறக்கப்படாமல் மேலேயே வைக்கப்பட்டிருந்தது.

மேலே தளத்தில் இரண்டு கிரேக்கர்கள் நின்று கொண்டிருந்தார்கள். பார்த்தால் வாட்ச்மேன்கள் போல் தெரிந்தது.

அவர்களிடம் சைகையால் ஏணியை இறக்கச் சொன்னேன். அவர்கள் கைகளை விரித்து " நோ கரண்ட் " என்றனர்.

கப்பலில் 'GANGWAY' என்று அழைக்கப்படும் இரும்பு ஏணியை ஏற்றி இறக்க மின்சாரம் தேவை.

கப்பலில் ஜெனரேட்டர் இயங்கவில்லை என்பது புகைப்போக்கியிலிருந்து புகை எதுவும் வரவில்லை என்பதிலிருந்தும், கப்பலின் அருகே நின்றிருந்தும், எந்தவித சத்தமும் இல்லாததிலிருந்தும் தெரிந்தது.

வழக்கமாக கப்பலுக்கு வெளியே நின்றாலும் ஜெனரேட்டர் ஓடும் சத்தம் கேட்கும். இப்போது வேறு வழியில்லை. ஏணி வழியே போகமுடியாது.

பைலட்டுகள் கப்பலில் ஏறுவதற்காக பிரத்யோகமாக பயன்படுத்தும் கயிற்று ஏணி இருந்தது.

அது நம் கையளவே உள்ள மரக்கட்டைகளை கயிற்றால் கட்டி செய்த ஏணி..

அது கப்பலின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருக்கும். செங்குத்தாக தொங்கும் ஏணியின் கயிற்றை கைகளால் பற்றிக் கொண்டு ஏற முடியும்.

ஒரு வழியாக சூட்கேஸ்களை கயிற்றில் கட்டி மேலே அனுப்பிவிட்டு, பைலட் ஏணி பிடித்து கப்பலில் ஏறினேன்.

கப்பல் முழுதும் கும்மிருட்டு.. கப்பலில் இரண்டு வாட்ச்மேன்களைத் தவிர வேறு யாருமில்லை.. நான் கப்பலுக்கு வந்த முதல் ஆள்..

வாட்ச்மேன்களில் ஒருவர் 'கேரி' என்று சத்தம் போட்டான்.. கொஞ்ச நேரத்தில் இன்னொரு வாட்ச்மேன் மெழுகுவர்த்தி கொண்டுவந்தான்..

மெழுகுவர்த்திக்கு கிரீக்கில் 'கேரி' என்று பெயர்.

மெதுவாக தூசி படிந்து கிடந்த அறையை அடைந்தேன். கப்பல் முழுதும் ஒரே தூசியும் குப்பையும்..

ஒருவருடமாக கப்பல் அதே இடத்தில் கட்டப்பட்டு இருக்கிறதாம்.. இன்னும் இரண்டு நாள் கழித்தே, மற்றவர்கள் வருவார்களாம்..

மூன்றாவது நாள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள்.

கப்பலை கிரேக்கக் கம்பெனி அடிமாட்டு விலைக்கு வாங்கியிருந்தது. அங்கிருந்து கப்பலை சீனாவுக்குக் கொண்டு போய் கப்பலை உடைத்து விற்க இருந்தார்கள். (இதை SCRAPPING என்பார்கள்)..

கிரேக்கர்கள் கடைசியாக 'ஸ்க்ராப்பிங்' போகும் கப்பலில்கூட சரக்கு ஏற்றி அதிலும் லாபம் பார்த்து விடுவார்கள்.

இந்தக் கப்பலையும் சீனா கொண்டு போகும் முன் பிரான்சிலிருந்து தாய்லாந்திற்கு சரக்கு ஏற்றிப் போக ஏற்பாடு செய்துவிட்டனர்.

கப்பலுக்கு ரேடியோ ஆபிஸர் வேலைக்கு சேர வந்தவர் ஒரு இந்தியர். ஆனால் அவருக்கு எண்பது வயது இருக்கும். அவர் ஒரு சர்தார்ஜி.

பிரிட்டிஷ் காலத்தில் ராணுவத்தில் வேலை பார்த்தவர். இப்போது தள்ளாத வயதில், சுருங்கிய தசைகளுடன், கையில் ஒரு பையை சுமந்து கொண்டு தள்ளாடியபடியே கப்பலுக்கு வந்திருந்தார்..

தளத்தில் நின்ற நான், " கப்பலுக்கு எப்படி வருவீர்கள் " என்று கேட்டேன்.

" நோ பிராப்ளம்.. நான் எக்ஸ் மிலிட்டரிமேன் " -சொல்லிவிட்டு தட்டுத்தடுமாறி பைலட் ஏணியில் ஏறி கப்பலுக்கு வந்து விட்டார்.

ஒருவழியாக கப்பலை பயணத்துக்குத் தயார் செய்தனர். கப்பல் பிரான்ஸ் சென்று சரக்கு ஏற்றிக்கொண்டு தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டது.

கப்பலில் ஏகப்பட்ட பிரச்னை.. அடிக்கடி இன்ஜின் கோளாறு ஆகி நின்று போனது.. சரி செய்து, சரி செய்து ஓட்டினார்கள்.

கப்பலில் ஏ.ஸி. வேலை செய்யவில்லை. அதனால் தூக்கம் எல்லாம் வெளியே தளத்தில்தான்.

இரும்புத் தளத்தில் தலையணை வைத்துக்கொண்டு 'லைஃப் ஜாக்கெட்' எனப்படும் உயிர்காக்கும் சட்டையை தலைக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்கினோம்...

ஏனென்றால் இந்தக் கப்பலை நம்ம முடியாது.

இந்த மாதிரிக் கப்பல்களில் பயணம் செய்யுபோது கொஞ்சம் முன்ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது.

ஏற்கனவே ஜெனரேட்டர் ஓடும்போது பயங்கர சத்தம் வந்து ஒவ்வொரு பாகமாக பறந்து கொண்டு தள்ளிப் போய் விழுவதும் அந்தக் கப்பலில் அன்றாடம் பார்க்கும் விஷயமாகி விட்டது.

எந்த நேரத்தில் ஓட்டை ஏற்படும் என்றும் சொல்லமுடியாது என்பதால் லைஃப் ஜாக்கெட்டை அருகில் வைத்துக்கொண்டே எல்லோரும் தூங்கினோம்.
--------

அத்தியாயம் 45

(கிரேக்கக் கப்பல் அனுபவங்கள் என்னுடையவை அல்ல. நண்பர் ஜோதிக்குமார் அவர்களுடையவை. -கணேசன்.)

ழைய கப்பல் என்பதால் முழுவேகத்துடன் செல்லமுடியவில்லை. சில சமயம் வெறும் ஐந்து நாட்டிகல் மைல் வேகம்தான்.

கிட்டத்தட்ட நாற்பது நாள் கடந்து விட்டிருந்து. இன்னும் தாய்லாந்து வரவில்லை. ஐந்து நாள் பயணம் பாக்கி இருந்தது. அப்போது அந்தப் பிரச்சனை ஆரம்பித்தது..

இடையிடையே உடல் நலம் சரியில்லாமல் போய் மிகவும் சிரமப் பட்டார் வயதான ரேடியோ ஆபிஸர்.

எக்ஸ் மிலிட்டரி ஆள் என்றாலும் எண்பது வயது நெருங்கி விட்டதால் அடிக்கடி சின்னச் சின்ன பிரச்னைகள் வந்து கொண்டேயிருந்தன.

அன்று பிரச்சனை மிகவும் சீரியஸாக மாறிவிட்டது.

அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சிறுநீர் வெளிவராமல் போன நிலை ஏற்பட்டதும் வயிறு பானை போல் வீங்க ஆரம்பித்து விட்டது.

அவரால் எழுந்து நடக்கக் கூட முடியவில்லை..

கிரேக்கக் கப்பல்களில் எது நல்ல நிலையில் உள்ளது? அங்கிருந்த மருந்துகள் ஒன்று கூட அவருக்கு உபயோகமாக இல்லை.

ரேடியோ மூலம் வேறு மருத்துவ உதவி கேட்கலாம் என்றால், அதற்காக ரேடியோ உபகரணத்தை சரியாக உபயோகிக்கத் தெரிந்த ஒரே ஆள் ரேடியோ ஆபிஸர்தான்.

அவரால் அறையை விட்டே வெளியேற முடியாத நிலை. எனவே அதுவும் சாத்தியமாகவில்லை. என்னவெல்லாமோ செய்து பார்த்தாகி விட்டது.

அவரின் உடல்நிலை மிகவும் மோசமாகி வந்தது. மனிதர் தாங்க முடியாமல் துடிக்க ஆரம்பித்தார்.

கடைசியாக அவரைத் தூக்கிப் போய், ஷவரின் கீழ் உட்கார வைத்து குளிர்ந்த நீர் அவர் உடம்பில் பட வைத்தால் சிறுநீர் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று அதையும் முயற்சி செய்தார்கள்.

ம்ஹூம் .. எதுவும் நடக்கவில்லை.

அப்போது எனக்கு ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வந்தது. இதற்கு முன் இதே மாதிரி யாருக்கோ ஊரில் சிரமம் ஏற்பட்டபோது, முதியவர் ஒருவர் ஐடியா கொடுத்தது நினைவில் வந்தது...

என்ன தெரியுமா.. சொன்னால் சிரிக்கத் தோன்றும்...

எலிப்புழுக்கை இருக்கிறது அல்லவா?

அது காய்ந்து போவதற்கு முன் சேகரித்து, சிறிது தண்ணீரில் கரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப் போட்டால் சரியாகும் என்பது அந்த ஐடியா.

அது அப்போது நினைவுக்கு வந்து , அதைச் சொன்னபோது அனைவரும் சிரிக்கவே செய்தனர்.

ஆனால் நான் ஜோக்கடிக்கவில்லை என்றும் சீரியசாகவே சொல்கிறேன் என்பது தெரிந்த போது அனைவரும் சிரிப்பதை நிறுத்தினர்.

ஆனால் எலிப்புழுக்கைக்கு கப்பலில் எங்கே போவது ?

மற்ற கப்பல்களாய் இருந்தால் கண்டிப்பாக கப்பலில் எலி இருக்காது. இது கிரேக்கக் கப்பலாயிற்றே!...

ஒரு பழைய 'கோடவுன்' போல அந்தக் கப்பலும்.. சுத்தமாகவே இருக்காது.. எனவே ஒரு வேளை எலிகள் இருக்கக் கூடும் என்று தோன்றியது.

உடனே தேடல் பணி ஆரம்பித்து விட்டது.. என்ன ஆச்சர்யம்!... எதற்கும் உபயோகப் படாத பொருட்கள் போட்டு வைக்கும் ஒரு அறைக்குள் ஏராளமான எலிப்புழுக்கை..

எல்லோருக்கும் புதையல் கண்ட மகிழ்ச்சி.. அதில் காய்ந்து போகாத நிலையில் இருந்தவற்றை சேகரித்து உடனடியாக பற்றுப்போட ஏற்பாடு செய்தார்கள்..

அவரைப் படுக்க வைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்ட பதினைந்து நிமிடங்களில் அந்தப் பற்று காய ஆரம்பித்தவுடனேயே, அந்த மாஜிக் நடந்தது..

படுத்த நிலையிலேயே அவர் சிறுநீர் கழித்து விட்டார். பானை போல் வீங்கியிருந்த அவர் வயிறு வற்றிப்போய் விட்டது...

அன்று, அவர் மட்டுமல்ல.. முழுக் கப்பலும் சந்தோசக் கடலில் மூழ்கியது (!)..

ஒருவழியாக கப்பல் தாய்லாந்து போனவுடன், அவரை டாக்டரிடம் அனுப்பினார்கள்..

சீனா போகும் வரைக்கும் தேவையான மருந்து வாங்கிக்கொண்டார்.

ஆனால், அந்த மருந்து அவருக்கு உதவவில்லை. கப்பல் சைனா செல்லும் வழியில் மறுபடியும் சிறுநீர் கழிக்க முடியாமல் வயிறு வீங்க ஆரம்பித்தது.

மீண்டும் எலிப்புழுக்கை தேடும்பணி ஆரம்பித்தது.

கிடைத்ததெல்லாம் காய்ந்து உலர்ந்து போனவை. வேறு வழியில்லாமல் அதையே தண்ணீர் சேர்த்து பற்றுப் போடப்பட்டது.

அது எந்த பலனையும் கொடுக்கவில்லை. ஈரமான நிலையிலேயே எடுத்து உபயோகிக்க வேண்டும் என்பதுதான் கட்டாயம்.

அதற்காக எலிகள் இருக்கும் இடத்தைத் தேடும் பணி ஆரம்பித்தது. ஆனால் ஒன்று கூட தட்டுப்படவில்லை.

எலியை வரவழைப்பதற்கும், வளர்ப்பதற்கும் அரிசி போன்ற உணவுப் பொருட்களையெல்லாம் போட்டுக் கவர்ந்திழுக்க முயற்சி நடந்தது..

எதற்கும் எலி வரவேயில்லை.

( கிரேக்கக் கப்பல்களில் மசால் வடை செய்வது சாத்தியம் இல்லை.. ஒருவேளை மசால் வடை செய்து ஆசை காட்டியிருக்கலாம் ).

அவரின் நிலை மிகவும் மோசமாகி வந்தது.

இடையில் கப்பலில் இன்னொரு பிரச்னை..

அந்தக் கப்பலில் ' குக் ' வேலைக்குச் சேர்ந்திருந்தவன் இதற்கு முன் ' டெய்லராக ' இருந்தவனாம்.

அவசரத்துக்காக ஆள் கிடைக்காமல் அவனையே சமையற்காரனாக்கி கப்பலில் ஏற்றி அனுப்பி விட்டது கம்பெனி..

வழக்கமாக, கப்பலுக்குத் தேவையான எல்லா உணவுப் பொருட்களையும் தீர்ந்து போகும் நிலையில் இருந்தால், பார்த்து, முன்கூட்டியே கேப்டனிடம் சொல்லி ஆர்டர் செய்வது அவனது வேலை.

ஆனால் கப்பலில் ' உப்பு ' தீர்ந்து போக இருப்பதை அவன் கவனிக்கவில்லை.

கப்பலில் மருந்துக்குக்கூட உப்பு இல்லை..

இதிலென்ன பெரிய விஷயம். எங்கே பார்த்தாலும் கடல் தண்ணீர் தானே.. உப்புக்கா பஞ்சம் என்ற கேள்வி எழலாம்..

ஆனால் கப்பல் இப்போது கடல் பகுதியெல்லாம் கடந்து சீனாவில் உள்ள நதியில் பயணித்துக் கொண்டிருந்தது.. நதியில் முழுவதும் நல்ல தண்ணீர்..

எனவே உப்புத் தண்ணீரையாவது சேர்த்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பும் இல்லை.

வேறு வழியில்லாமல் எல்லோரும் இன்ஜின் அறையில் வந்து பைப்புகளில் முன்பு 'லீக்' ஏற்பட்ட இடங்களில் காய்ந்து போன உப்புத் துணுக்குகளைத் தேடி அலைய வேண்டிய கட்டாயம்.

குச்சி போன்ற அமைப்பில் தொங்கிக் கொண்டிருந்த உப்புப் படிமங்களை உடைத்து எடுத்து துறைமுகம் சேரும் வரை சமாளிக்க வேண்டியதாயிற்று.

ஒருவழியாக சைனா போய்ச் சேர்ந்தது.. அவசர அவசரமாக ரேடியோ ஆபிஸரை கரைக்கு அனுப்பி மருத்துவ உதவி செய்து பிரச்னை சரி செய்யப்பட்டது.

கப்பலை உடைப்பதற்காக ஒப்படைத்து விட்டு எல்லோரும் ஊர் போய்ச் சேர்ந்தோம் ".

- படு சுவாரசியமாக சொல்லி முடித்தார் ஜோதிக்குமார்.

கப்பலில் ஏராளமான அனுபவம் பெற்றிருந்த எனக்கும் அவர் சொன்ன அனுபவங்கள் பிரமிப்பாக இருக்கவும், மேலும் அவரது அனுபவங்களைச் சொல்லத் தூண்டினேன்.

கப்பலில் திருட்டுத்தனமாக ஏறி அடுத்த நாட்டுக்குச் செல்பவர்கள் ' STOW AWAYS ' என்பார்கள்.

அது பற்றி வித்தியாசமான அனுபவம் ஒன்றைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் அவர்.
---------

அத்தியாயம் 46

ப்பலில் திருட்டுத்தனமாக ஏறி அடுத்த நாட்டுக்குச் செல்பவர்கள் ' STOW AWAYS ' என்பார்கள்.

அது பற்றி வித்தியாசமான அனுபவம் ஒன்றைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார் அவர்.

கப்பல் நைஜீரியாவில் உள்ள ' TIN CAN ISLAND ' துறைமுகத்திலிருந்து பிரேஸிலில் உள்ள ' NATAL ' துறைமுகத்திற்கு புறப்பட்டது.

சில நாட்கள் கழிந்திருக்கும். அன்று இன்ஜின் அறையில் எலக்ட்ரிக்கல் பிரச்சனை. உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

இரவிலிருந்து தொடங்கி பிரச்னையை முழுதும் சரி செய்து முடிக்க மறுநாள் பகல் பனிரெண்டு மணி ஆகிவிட்டது.

இடையில் காலை உணவு கூட சாப்பிடவில்லை.

இரவு உணவுக்காக ஃபிரிட்ஜில் இரண்டு முட்டை, சாண்ட்விச், பால் எல்லாம் எடுத்து வைக்கச் சொல்லிவிட்டு மதியமே தூங்கப்போய் விட்டோம்.

கிரேக்கக் கப்பல்களில் பெரும்பாலும் இரவு உணவு மாலை ஐந்து மணிக்கே சாப்பிட்டு விட வேண்டும். அதுதான் எங்கள் கப்பலிலும் வழக்கமாக இருந்தது.

நான் தாமதமாக எழுந்திருப்பேன் என்பதால், எனக்காக சாப்பாடு எடுத்து வைத்து விட்டனர்.

தூங்கி எழுந்து பார்த்தால், மணி இரவு பதினொன்று ஆகியிருந்தது...

எனக்கு நல்ல பசி. சாப்பாட்டு அறைக்குப் போய் சாப்பிடலாம் என்று ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தால்.... காலியாக இருந்தது.

மதியம் தூங்கப் போகும் முன் உணவுத் தட்டில் ப்ளாஸ்டிக் பேப்பரால் மூடி, என் பெயரும் அதில் எழுதி வைத்திருந்தார்கள்..

அதனால் வேறு யாரும் கண்டிப்பாக எடுத்து சாப்பிட்டிருக்க மாட்டார்கள்.

சாப்பாடு எங்கே போனது, என்று யோசித்துக் கொண்டே வந்த நான் சட்டென்று திடுக்கிட்டுப் போனேன்..

பத்தடி தொலைவில் இருந்த நடைபாதைத் திருப்பத்தில், இரண்டு மர்ம உருவங்கள் வேகமாக ஒளிந்து மறைந்ததைப் போல் இருந்தது..

அவர்கள் ஓடியபோது காலடி ஓசையும் கேட்டது. என் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது..

நான் கண்டது நிஜமான காட்சி.. அதில் எனக்குச் சந்தேகமேயில்லை..

அவர்கள் கண்டிப்பாக கப்பல் பணியாளர்கள் கிடையாது. கப்பல் பணியாளர்கள் யாருமே அந்த நேரத்தில் அங்கே வர வாய்ப்பும் இல்லை.

இரண்டும் நல்ல உயரமான உருவங்கள்.

கப்பல் வாழ்க்கையில் நிறைய பேய்க்கதைகள் உலவுகின்றன..

பழைய கப்பல் வாசிகளைக் கேட்டால், " கப்பலில் ஆவிகள் இருக்கின்றன... சில சமயம் அந்த ஆவிகள் நமக்கு உதவி செய்யும்..

கனமான பொருள்களைத் தூக்க முயற்சிக்கும் போது அந்த ஆவிகள், கூட இருந்து உதவி செய்யும் " என்றெல்லாம் கதை சொல்வார்கள்.

அதிலும் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்திய பழைய கால கப்பல்களில், இது மாதிரி கதைகள் ஏராளம்.

பாய்லருக்குள் நிலக்கரியை அள்ளிப்போடும் வேலைகளில், கருப்பான உருவத்தில் வரும் இந்த ஆவிகள் கப்பல் பணியாளரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, தாங்களே வேலை செய்யும்..

சாப்பாடு மட்டும் கொண்டு வந்து கொடுத்தால் போதுமாம்.. இப்படி ஏகப்பட்ட சுவாரசியமான கதைகள் வயதான கப்பல்வாசிகள் மத்தியில் பிரபலம்..

இதையெல்லாம் கேள்விப்பட்டிருந்த நான் அந்த சமயத்தில் பயந்து போய் விட்டேன்.

அடுத்த வினாடி ஒரே ஓட்டம்.. என் அறையில் தான் போய் நின்றேன்.

அறைக்கு ஓடிப்போய் உள்பக்கம் இறுக்கத் தாளிட்டேன்.. விடியும் வரை தூக்கம் வரவில்லை.

மறுநாள் காலையில் வேகமாகப் போய் நான் பார்த்ததைக் கேப்டனிடம் சொன்னேன்...

அவர் அலட்டிக் கொள்ளாமல், " அதைப் பற்றிக் கவலைப்படாதே.. கப்பலில் 'Stow-aways' இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..

நேற்று மட்டுமல்ல.. நாலைந்து நாட்களாக இரவில் உணவெல்லாம் காணாமல் போய்விடுகிறது " என்று சாதாரணமாகச் சொன்னார்.

எனக்கு அப்போது ஞாபகம் வந்தது. நான் பார்த்த உருவங்கள் இரண்டும் ஆப்பிரிக்கர்கள்.. போன துறைமுகத்தில் யாருக்கும் தெரியாமல் ஏறி இருக்கலாம்.

ஒளிந்திருந்து கொண்டு இரவானதும் யாரும் இல்லாத சமயம் வந்து, சாப்பாட்டை எடுத்துச் சென்றிருக்கிறார்களோ...

கப்பல் பயணத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

குறிப்பாக ஏழ்மை மிகுந்த நாடுகளான ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளிலிருந்து வேறு கண்டங்களை நோக்கிச் செல்லும் கப்பல்களில், கள்ளத்தனமாக ஏறுவார்கள்.

பின் அடுத்த துறைமுகம் வந்ததும் கப்பலை விட்டு வெளியேறி, அந்த நாட்டில் எப்படியாவது நுழைந்து விடுவார்கள்.

கப்பல் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்ட ஒன்றிரண்டு நாட்கள் ஒளிந்திருந்து விட்டு, பின் வெளியே வந்து கப்பல்வாசிகளிடம் மாட்டிக்கொண்டால், இவர்களை மீண்டும் அடுத்த

துறைமுகத்திலிருந்து, திரும்ப சொந்த நாட்டுக்கே அனுப்பும் செலவை, கப்பல் கம்பெனி தான் முன்பெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

(இது குறித்து சர்வதேச அளவில் விதிமுறைகள் உள்ளன. இது போன்ற விஷயங்கள் கம்பெனிக்கும், கேப்டனுக்கும் தலைவலி தரும் விஷயங்கள்.

எனவே, இப்போதெல்லாம் கப்பல் புறப்படும்முன் கள்ளத்தனமாக யாராவது ஏறி ஒளிந்திருக்கிறார்களா? என்று கப்பல் முழுவதும் சோதனை செய்வது அவசியமான ஒன்றாகி விட்டது.)

எங்கள் கப்பலின் கேப்டன், இது போன்ற நிறைய சம்பவங்களை நேரில் பார்த்தவராம்.. அவர் அது பற்றி கண்டு கொள்ளவேயில்லை.

" கண்டிப்பாக ஒரு நாள் மாட்டிக்கொள்வார்கள்... அப்புறம் பார்க்கலாம் " என்று சொல்லி விட்டார்.

ஆனால் அது அடுத்த நாள் இரவே நடந்தது..

எங்கள் கப்பலில் அப்போது சீஃப் இன்ஜினீயராக 'அல்பர்த்தோ' என்ற பிரேசில்காரர் இருந்தார்.

அவர் தன் மனைவியுடன் அந்தக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

மறுநாள் இரவு பதினொரு மணியைத் தாண்டியிருக்கும். என் அறையின் தொலைபேசி மணி அடித்தது..

எதிர்முனையில் சீஃப் இன்ஜினீயர் அல்பர்த்தோ...

என்னை டைனிங் ஹாலுக்கு உடனே வரும்படி அழைத்தார். நான் கீழே போய் பார்த்தால், சீஃப் இன்ஜினீயர் இருந்தார்.

அவருக்கு எதிரே கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஒரு கருப்பர் இனத்தைச் சேர்ந்த இளைஞன்..

எனக்கு உடனேயே புரிந்து விட்டது.

நான் பார்த்த இரண்டு பேரில் ஒருவனாக இருக்கக் கூடும். கேப்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து அவனை விசாரித்தார்.

அவனோடு இன்னொருவனும் ஒளிந்திருப்பதாக ஒப்புக்கொண்டான். அவர்கள் ஒளிந்திருந்த இடத்தைச் சொன்னான்.

உடனேயே அந்த இடத்துக்குப் போய் ஒளிந்திருந்த இன்னொருவனையும் பிடித்து வந்தோம்..

அவர்கள் இருவரையும் ஒரு அறைக்குள் போட்டு, ஒரு கேன் நிறைய தண்ணீர் கொடுத்து வெளிப்பக்கம் பூட்டுப் போட்டோம் - என்று நிறுத்தினார் ஜோதிக்குமார்.

இத்தனை நாட்களாக யாருக்கும் தெரியாமல் இரவில் உணவுப் பொருட்களைத் திருடிச் சென்ற அவர்கள் மாட்டிக் கொண்டதற்கான காரணம் மிகவும் சுவாரசியமானது.

கப்பல் வாழ்க்கைக்கே பரிச்சயமான ஒரு முக்கியமான விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லாததால் அனாவசியமாக மாட்டிக் கொண்டார்கள்..
-------
அத்தியாயம் 47

இத்தனை நாட்களாக யாருக்கும் தெரியாமல் இரவில் உணவுப் பொருட்களைத் திருடிச் சென்ற அவர்கள் மாட்டிக் கொண்டதற்கான காரணம் மிகவும் சுவாரசியமானது.

கப்பல் வாழ்க்கைக்கே பரிச்சயமான ஒரு முக்கியமான விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லாததால் அனாவசியமாக மாட்டிக் கொண்டார்கள்..

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் உள்ள நேர வித்தியாசம் தான் அது.

உதாரணமாக, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள வித்தியாசம் இரண்டரை மணி நேரம்.

அந்த இரண்டரை மணி நேரத்தை ஒரே நாளில் சரி செய்யாமல் இரண்டு நாளைக்கொரு முறை ஒரு மணி நேரத்தை கூட்டி வைத்துக் கொள்வார்கள்.

அதேபோல், சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் கப்பல்கள் இரண்டரை மணி நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் இரவு பத்து மணிக்கு செய்வார்கள்.

இங்கிருந்து சிங்கப்பூர் போகும் கப்பல்கள் பத்துமணியானதும், உடனடியாக கடிகார நேரத்தை பதினொரு மணியாக்கி விடுவார்கள்.

சிங்கப்பூரிலிருந்து வரும் கப்பல்கள் அதுபோல் பத்துமணியானதும் கடிகாரத்தை பின்நோக்கி நகர்த்தி, மீண்டும் ஒன்பது மணியாக்கி விடுவார்கள்.

இப்படி, கப்பல் பயணத்தின் போது கப்பல் இருக்கும் இடத்திற்கேற்ப கப்பலின் நேரத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

இது தான் அந்தக் கப்பலிலும் நடந்தது...

கப்பல் ஆப்பிரிக்காவிலிருந்து பிரேஸில் நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் நேரத்தை பின்னோக்கிச் செலுத்த வேண்டும்.

அப்படி தொடர்ந்து செய்ததால், கப்பல் புறப்பட்ட நேரத்திலிருந்து மூன்று மணி நேரம் குறைந்திருந்தார்கள்.

கப்பலில் கள்ளத்தனமாக பயணம் செய்து கொண்டிருந்த அந்த இருவருக்கும் இந்த விவரம் எல்லாம் தெரியாததால், அவர்கள் கையில் கட்டியிருந்த கடிகார நேரம் மாற்றப்படாமல் இருந்திருக்கிறது.

தினமும் நள்ளிரவு தாண்டி இரண்டு மணியளவில் ஆள் நடமாட்டம் இருக்காது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்து, சாப்பாட்டு அறையில் இருந்த உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து கடிகாரத்தின் நேரம் மாற்றப்பட்டு அப்போது கப்பலின் கடிகாரத்தைப் பொருத்தவரை, பதினொரு மணி ஆகியிருந்தது...

ஆனால், அவர்கள் கடிகாரம் வழக்கம் போல் ஓடிக்கொண்டிருந்ததால் அது இரண்டு மணியைக் காட்டியிருக்கிறது.

இரண்டு மணியாகி விட்டதாக நினைத்து, பதினொரு மணிக்கே உணவுப் பொருளை எடுத்துச் செல்ல வந்து விட்டதால், ஜோதிக்குமாரின் கண்களிலும், சீஃப் இன்ஜினீயரின் கண்களிலும் பட்டு மாட்டிக் கொண்டனர்.

இதுதான் அவர்கள் மாட்டிக் கொண்ட கதை.

ஜோதிக்குமார் அதன்பின் நடந்ததைச் சொன்னார்.

" அவர்களுக்கு தினமும் உணவு கொடுத்து, அறையிலேயே பூட்டி வைத்து, பிரேஸில் போய்ச் சேர்ந்தவுடன் ஏஜண்ட்டை வரவழைத்து அவர்களை போலீஸில் ஒப்படைத்தோம்.

திரும்பவும் அவர்களின் சொந்த நாட்டிற்கே விமானம் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தோம்" என்று முடித்தார் ஜோதிக்குமார்.


கப்பல் ஒரு வேளை மறுபடியும் அதே நாட்டிற்குப் போவதாக இருந்தால், கப்பலிலேயே மீண்டும் அறைக்குள் அடைத்து, கொண்டு போய் விடலாம்.

பெரும்பாலும் நீண்ட நாள் பயணம் செய்ய வேண்டிய கப்பல்களில் மாட்டிக் கொண்டால், கடைசி வரை அவர்களை அறைக்குள் பூட்டி வைக்க மாட்டார்கள்.

அவர்களை ஓரளவுக்கு சுதந்திரமாக நடமாட விட்டு, சிலசமயம் கப்பலில் உள்ள பெயிண்ட்டிங், துருப்பிடித்த பகுதிகளை நீக்கும்
' CHIPPING ' போன்ற வேலைகளை செய்யச் சொல்வது வழக்கம்.

கப்பலில் இருப்பவர்கள் நல்ல மனம் படைத்தவர்களாக இருக்கும்போது, இப்படி செய்வார்கள். ஆனால் சிலசமயம் கொடுமையானவர்கள் கையில் மாட்டினால்...

முன்பெல்லாம் ஒரு சில நாடுகளின் கப்பல்வாசிகள், இப்படி கள்ளத்தனமாக கப்பலில் ஏறிவிடுபவர்களுக்கு, பெரும்பாலும் அந்தக் கொடுமையைச் செய்வார்கள் என்று நான்

கேள்விப்பட்டிருக்கிறேன்...

அது ' SANTAMARIA PUNISHMENT '...

கப்பலில் அவர்களை வைத்து சாப்பாடு போட்டு, அடுத்த துறைமுகம் கொண்டு போய்ச் சேர்த்து, மீண்டும் அவர்கள் நாட்டிற்குக் கொண்டு போக வேண்டிய விமானச் செலவையும் ஏற்கவேண்டும்...

மேலும் இதனால் ஏற்படும் பிரச்னைகளுக்கெல்லாம் கப்பலின் கேப்டனும், கப்பல் கம்பெனியும் பதில் சொல்லியாக வேண்டும்.

இதையெல்லாம் தவிர்ப்பதற்கு இந்தத் 'தண்டனை' யைக் கொடுக்கிறார்கள்.

கப்பலில் உள்ள காலியான இருநூறு லிட்டர் எண்ணெய் ' பேரல்கள் ' மூன்றை ஒன்று சேர்த்து, கயிற்றால் கட்டிவிடுவார்கள்.

ஆள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதற்குத் தகுந்தபடி பேரல்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். அந்த பேரல்களை தண்ணீரில் தள்ளிவிட்டால் மிதக்கும்.

கப்பலில் கள்ளத்தனமாக நுழைந்தவர்களை, கடலுக்குள் தள்ளிவிட்டு விடுவார்கள்..

அவர்கள் , அந்த மிதக்கும் பேரல்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் சில நாட்கள் உயிர் வாழ கொஞ்சம் பிரெட் பாக்கெட்டுகள், சின்னக் கேன்களில் குடிப்பதற்கு தண்ணீர்... இதையும் தூக்கி மிதக்கும் டிரம்களோடு போட்டு விடுவார்கள்.

பிரெட்டும், தண்ணீரும் தீரும் வரை கடலில் மிதந்து கொண்டே சமாளிக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால், வேறு ஏதாவது கப்பல்கள் காப்பாற்றி கரை சேர்க்க வாய்ப்புண்டு..

இல்லையேல் அவர்களின் கதை அதோகதி தான்.

ஆனால், இதே போல் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பா செல்ல முயன்ற ஆப்பிரிக்க இளைஞன் ஒருவனை அடித்துக் கொன்று, கடைசியில் அவனது உடலை கடலுக்குள் தூக்கி

எறிந்து ' ஜலசமாதி ' செய்த கொடூர சம்பவமும் நடந்திருக்கிறது.

அதைச் செய்த கப்பல்வாசிகள் வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் அல்ல...
மனிதாபிமானத்துக்குப் பேர் பெற்ற நமது இந்தியர்களே.

ஒரு இந்தியக் கம்பெனிக்குச் சொந்தமான அந்தக் கப்பலில் நான்காவது இன்ஜினீயராக வேலை செய்த, என் நண்பர் ஒருவர் நேரில் பார்த்த சம்பவம் அது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா நோக்கிச் சென்ற அந்தக் கப்பலின் புகைபோக்கி இருக்கும் ' FUNNEL ' பகுதியில் ஒளிந்திருந்திருந்தான் அவன்.

இரண்டு நாட்கள் கழித்து வெளியே வந்து, பட்டினியால் மயங்கிக் கிடந்த அந்த இளைஞனை தூக்கி வந்து சாப்பிட வைத்து, அறையில் அடைத்திருக்கிறார்கள்.

சில நாட்கள் கழித்து அவனை மற்றவர்களுடன் சேர்ந்து வேலை பார்க்கவும் அனுமதிக்கிறார்கள்.

கப்பல் துறைமுகத்தை அடைந்ததும், போலீஸ் வந்து அவனை கூட்டிப் போய் சிறையில் அடைந்திருக்கிறார்கள்.

கப்பல் மீண்டும் தென் ஆப்பிரிக்கா செல்ல இருந்ததால், புறப்படும்போது, மீண்டும் கப்பலில் ஒப்படைத்து விட்டுப் போய் விட்டது போலீஸ்.

வழக்கம் போல் கப்பல் ஆப்பிரிக்கா நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.

இந்த நாட்களில் அவன் மிகவும் நல்ல மாதிரியாக நடந்து கொண்டதால், அனைவரும் அவனிடம் நன்றாகவே பழகியுள்ளனர்.

நல்ல சாப்பாட்டுடன், சிலரின் நட்பினால் மது அருந்தவும் அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது..

மிகவும் ஜாலியாக இருந்த அவனின் வாழ்கைக்கு அந்த மதுவே எமனாகி விட்டது.

கப்பல் நிலநடுக்கோட்டுப் பகுதியை கடக்கும் இடத்தில் வெப்பம் அதிகம் இருக்கும்.

அதனால், காலையில் நன்றாக வேலை செய்தபின், மதியம் சாப்பிட்டு விட்டு, தங்கும் அறைப்பகுதி ஏ.ஸி. செய்யப்பட்டிருப்பதால் பணியாளர்களின் மெஸ் பகுதியில்,

சாப்பாட்டுக்குப் பின் தூங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் அவன்...

அன்று கொஞ்சம் கூடுதலாக மது அருந்தி விட்டிருக்கிறான்..

அதனால் பணியாளர் மெஸ் பகுதிக்கு வந்த கப்பல் பணியாளர் ஒருவரை, " இது என் இடம்.. யாரும் இந்த நேரத்தில் இங்கே வந்து தொந்தரவு செய்யக் கூடாது " என்று

அதிகாரத்துடன் தடுத்து, போதை அதிகமாக இருந்தால் அவரை தள்ளிவிடவும் செய்திருக்கிறான்.

கோபமடைந்த அவர், உடனே போய் மற்றவர்களிடம் விஷயத்தை சொல்லிவிடவும் கப்பலில் இருந்தவர்கள் கோபமடைந்து விட்டனர்.

கப்பலின் கேப்டனும் ஏற்கனவே கம்பெனியிடம் இருந்து, இந்த ' Stowaway ' விவகாரத்தில் நிறைய 'டோஸ்' வாங்கியிருந்தார்.

அதனால், அவரும் அவன் மீது பயங்கர கோபத்தில் இருந்ததால், கப்பல் பணியாளர்களுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார்...

கப்பலில் இருந்த ஒரு சிலர் அவனை உண்டு இல்லையென்று பண்ணிவிட்டனர்.

கோபத்தில் இரத்தம் கொட்டும் அளவுக்கு அவனை அடித்து, கட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டனர்...

கப்பலில் இருந்த மற்றவர்கள், மேலும் அவனைத் துன்புறுத்தாமல் காப்பாற்றி அடித்தவர்களைத் தடுத்தனர்.

மயங்கிக் கிடந்த அவனை, கப்பலின் தளத்தில் இருந்த கிரேனின் கீழ்ப்பகுதியில் ஒரு அறையில் அடைத்துப் பூட்டினர்.

அதன்பின் அவனை வெளியே விடவில்லை. சாப்பிட மட்டும் பிரெட் துண்டுகளை அந்த அறைக்குள் போட்டு வந்தனர்...

ஆனால் மூன்று நாட்களுக்குப் பின் சந்தேகப்பட்டு அந்த அறையைத் திறந்தவர்களுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது..

சாப்பாட்டுக்காக போட்டிருந்த பிரெட் எல்லாம் தொடப்படாமல் அப்படியே இருந்தன....

ஒரு சோகம் நடந்திருந்தது..

ஒரு உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருந்தது...

அவனின் உயிரற்ற உடலைத்தான் அவர்கள் பார்க்க முடிந்தது...

நடந்து போன சம்பவத்தால் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் திகைத்துப் போய் இருந்தனர்.

இப்படி ஒரு திருப்பத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கோபத்தில் அவனை அடித்து விட்டார்களே தவிர, அவன் சாவுக்கு காரணமாகி விடுவோம் என்று நினைக்கவில்லை.

இதனால் கம்பெனிக்கு பெரிய பிரச்னை ஏற்படும் என்று எல்லோருக்கும் தெரிந்தது...

ஏனென்றால் கப்பலில் அவன் இருப்பது அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருந்தது....

சில நாட்கள் கப்பலின் மீன் மற்றும் இறைச்சி பாதுகாக்கப்படும் குளிர்பதன அறை ஒன்றை காலி செய்து அந்த அறையில் அவனது உடலை வைத்துப் பாதுகாத்தனர்.

கடைசியில் அவனது உடலை வெளியே எடுத்து, கனமான இரும்பு போன்ற பொருட்கள் சேர்த்துக் கட்டி அவனது உடலைக் கடலுக்குள் தள்ளிவிட்டு ' ஜலசமாதி ' செய்தனர்.

வாழ்க்கை தேடி வேறு நாட்டுக்கு தப்பிச் சென்ற அவனது வாழ்க்கை இப்படிக் கொடுமையாக முடிவடையும் என்று அவன் நினைத்திருக்க மாட்டான்...

கோபத்தில் அவனை அடித்து, கடைசியில் அவனின் மரணத்திற்கே காரணமாகிவிட்ட அந்த இந்திய கப்பல்வாசிகளும், கண்டிப்பாக வாழ்நாள் முழுதும் அந்த உறுத்தல் இல்லாமல் வாழ்ந்து விட முடியாது.

இன்றும் எத்தனையோ பேர் கள்ளத்தனமாக கப்பல் மூலம் தப்பிச்செல்ல முயற்சி செய்கிறார்கள்.

இம்மாதிரி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்பவர்களை, பணம் வாங்கிக் கொண்டு ' கன்டெயினர் 'களுக்குள் அடைத்து யாருக்கும் தெரியாமல் ஏற்றியனுப்பும் ஏஜண்ட்டுகளும் உண்டு....

(சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்து நாட்டுக்கு இதுபோல் கன்டெயினர் மூலம் தப்ப நினைத்த பலர் மூச்சுத் திணறி இறந்த சம்பவம் உலகத்தையே குலுக்கிய நிகழ்ச்சியும் இப்படி நடந்ததுதான்.)
---------

அத்தியாயம் 48

கப்பல் பற்றிய சில தகவல்கள்

பயணிகள் கப்பல்களைத் தவிர, மற்ற எல்லா வகை சரக்குக் கப்பல்களிலும், கப்பலின் முன்பகுதியிலிருந்து முக்கால்வாசி நீளத்திற்கும் அதிகமான இடத்தை சரக்கு ஏற்றும் பகுதியாகப் பயன்படுத்துகிறார்கள்.

சரக்குக் கப்பல்களை BULK CARRIER , TANKER மற்றும் CONTAINER என்று பொதுவாக மூன்று வகையாகப் பிரித்துவிடலாம்.

(இதைத் தவிரவும் சில விசேஷ வகைக் கப்பல்களும் உண்டு.)

நிலக்கரி, இரும்புத்தாது மற்றும் பிற தாதுப் பொருள்கள், யூரியா, பாஸ்பேட், ஸல்ஃபர் போன்ற உரம் மற்றும் வேதியியல் பொருட்கள், அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற

உணவுப் பொருட்கள் என்று மொத்தமாக கொண்டு செல்லும் கப்பல்கள் Bulk Carrier வகையைச் சேர்ந்தவை.

இவற்றில் சரக்குகள், பெரிய தொட்டி போன்ற அமைப்பிலான ' கார்கோ ஹோல்டு ' (Cargo Hold) எனப்படும் பகுதிகளில் ஏற்றப்படுகின்றன.

இந்த கார்கோ ஹோல்டுகள் மேற்புறத்தில் கதவு போன்ற அமைப்புகளால் மூடப்பட்டிருக்கும்...

இந்தக் கதவு போன்ற மூடிகளைத் திறந்து, சரக்கு நிரப்பிக் கொண்டு அதன்பின் கதவை மூடிவிடுவார்கள்.

கப்பலில் பெரும்பாலும் இரண்டு கார்கோ ஹோல்டிற்க்கு இடையில் கிரேன்கள் இருக்கும்.. இந்த கிரேன்களின் உதவியால் சரக்கு ஏற்றி இறங்கும் பணி நடைபெறுகிறது.

பொதுவாக ஐந்து, மற்றும் ஆறு எண்ணிக்கையில் கார்கோ ஹோல்டுகள் இருக்கும் சின்ன கப்பல்களில் கிரேன்கள் இருக்கும்.

ஒன்பது எண்ணிக்கையில் கார்கோ ஹோல்டுகள் உள்ள பெரிய கப்பல்களில் ( ஒரு லட்சம் டன்னிற்கு அதிகமாக சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ) கிரேன்கள் இருப்பதில்லை.

இந்தக் கப்பல்களில் சரக்கு ஏற்றுவதற்கும் இறக்குவதற்க்கும் துறைமுகங்களில் உள்ள கிரேன்களே பயன்படுத்தப்படுகின்றன.

நமது இந்தியத் துறைமுகங்களில் சில வெளிநாட்டுத் துறைமுகங்களை ஒப்பிடும் போது, மிகவும் மெதுவாக பணிகள் நடைபெறுகின்றன...

அதிலும் இங்கே இருப்பது போல் அதிக எண்ணிக்கையிலும் வெளிநாடுகளில் ஆட்கள் இருப்பதில்லை...

ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொள்ளளவு (Tonnage) உள்ள கப்பல்களை பத்துமணி நேரத்திற்குள்ளாகவே சரக்கு ஏற்றி அனுப்பும் துறைமுகங்கள் நிறைய உண்டு...

மேலும் கடலோடு ஒட்டி கட்டப்பட்டுள்ள துறைமுகத்தின் தரைப்பகுதியான 'ஜெட்டி' பகுதி கொஞ்சம் கூட அசுத்தமாகாமல் பராமரிக்கும் பல வெளிநாட்டுத் துறைமுகங்களை ஒப்பிடும் போது நம் துறைமுகங்கள் மிகவும் பின் தங்கியிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்...

BULK CARRIER வகை கப்பல்களில் ஏற்றப்படும் சரக்கு பற்றிக் குறிப்பிட்டேன்

இதே போல், டீசல், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் முதலியவற்றை ஏற்றிச் செல்பவை ' ஆயில் டாங்க்கர் ' வகையைச் சேர்ந்தவை.

இதைத்தவிர கெமிக்கல், அமிலம் முதலியவற்றை திரவ நிலையில் கொண்டு செல்பவை ' கெமிக்கல் டாங்க்கர் ' பிரிவைச் சேர்ந்தவை...

இவற்றின் சரக்குகள் துறைமுகத்திலுள்ள, குழாய்கள் மூலம் ஏற்றி இறக்கப்படுகின்றன.

இந்தக் கப்பல்களில் கார்கோ ஹோல்டுகள் இருக்கும் பகுதிகளில் எண்ணெய் டாங்குகள் உள்ளன.

இதைத்தவிர எல்.பி.ஜி. போன்ற திரவமாக்கப்பட்ட வாயுக்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ' GAS CARRIER ' பிரிவைச் சேர்ந்தவை.

ஆயில் டாங்க்கர் கப்பல்களில் தளத்தின் மீது நிறைய குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும். அதை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.

இவற்றையெல்லாம் தவிர இப்பொது ' கன்ட்டெயினர் ' ரக கப்பல்கள் மிகவும் பிரபலமடைந்து உள்ளன.

எல்லாவிதமான பொருட்களையும் கன்ட்டெயினர் எனப்படும் பொட்டிகளில் அடைத்து அப்படியே அனுப்பிவைக்கும் இந்தக் கப்பல்களில் சரக்கு அனுப்புவது மிகவும் வேகமாக போய்ச் சேரும்.

ஒரு நாட்டின் நிறைய துறைமுகங்களைத் தொடும் இந்தக் கப்பல்கள், ஒரு துறைமுகத்தில் குறிப்பிட்ட சரக்குகளை இறக்கிவிட்டு, அதே துறைமுகத்தில் வேறு சரக்கு கன்ட்டெயினர்களை ஏற்றிக் கொள்கின்றன.

மற்ற கப்பல்களில் இப்படி ஒரே துறைமுகத்தில் சரக்குகளை இறக்கி விட்டு அதே துறைமுகத்தில் ஏற்றிக் கொள்வது மிக அரிது.

அதே போல் இந்த கன்ட்டெயினர் கப்பல்கள் மற்றவற்றை விட அதிக வேகத்திலும் செல்பவை.

சரக்குக் கப்பல்கள் பதினைந்து நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும். கன்ட்டெயினர் கப்பல்கள் இருபது மைலுக்கும் அதிகமாக செல்லும்.

பயணிகள் கப்பல்கள் முப்பது மைல் வேகத்திற்கு மேலும் செல்லும் திறன் பெற்றவை.

வழக்கமாக கப்பலின் கட்டுப்பாட்டுத் தளமான வீல்ஹவுஸிலிருந்து எந்த ஸ்பீடில் கப்பலின் எஞ்ஜின் இயங்க வேண்டும் என்பதற்கான உத்தரவு வரும்.

அதை எஞ்ஜின் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க, இரண்டு இடங்களிலும் 'டெலிகிராப்' என்ற சாதனம் உள்ளது.

அதில் எஞ்ஜினை நிறுத்தவும், கப்பல் முன்பக்கம், பின்பக்கம் செல்லவும், வெவ்வேறு வேகத்தில் செலுத்தவும் தனித்தனி உத்தரவுகள் உண்டு.

கப்பலை இயக்குவதற்கு பெரிய சைஸில் ஒரே ஒரு எஞ்ஜின் உண்டு. (மிகச் சில கப்பல்களில் இரண்டு எஞ்ஜின்கள் உண்டு.)

அந்த எஞ்ஜின் இயங்கும் போது அதனுடைய 'க்ராங்க் ஷாஃப்ட்' (Crank Shaft) டுடன் இணைக்கப்பட்டுள்ள ஃபேன் என்ற அமைப்பில் உள்ள 'ப்ரொப்பல்லர்' சுழலும்.

அதன் சுழற்சியால் தண்ணீர் பின்னுக்குக் தள்ளப்படும். அதனால் கப்பல் முன்புறம் செல்லும்.

கப்பலை கார் நிறுத்துவது போல் உடனே நிறுத்த முடியாது.

அதற்கென்று ' பிரேக் 'கும் கிடையாது...

கப்பலை நிறுத்த வேண்டுமானால் எஞ்ஜினை நிறுத்தி, எஞ்ஜினின் சுழற்சியை எதிர்த்திசையில் சுழலுமாறு செய்தால் முன்னால் செல்லும் கப்பல் பின்பக்கம் செல்ல முயற்சிக்கும்.

அந்த நேரத்தில் எஞ்ஜினை நிறுத்தி விடுவதன் மூலம் கப்பலை நிறுத்த முடியும். முழுவதும் நிற்க நிறைய நேரம் பிடிக்கும்...

நடுக்கடலில் கப்பல்கள் மோதிக் கொண்டதாக செய்திகள் வருவது இதனால் தான்.

கப்பல் முன்பக்கம் செல்வதை 'அஹெட்' (AHED) மூவ்மெண்ட் என்றும், பின்பக்கம் செல்வதை 'அஸ்டெர்ன்' (ASTERN) மூவ்மெண்ட் என்றும் அழைக்கிறார்கள்.

அதிலும் மிகக் குறைந்த வேகம், குறைந்த வேகம், பாதி மற்றும் முழுவேகம் என்று படிப்படியாக எஞ்ஜினின் வேகத்தை அதிகரிக்கலாம்.

குறிப்பிட்ட வேகத்தில் எஞ்ஜினை செலுத்த வீல்ஹவுஸ் டெலிகிராப் ஹேண்டிலை நகர்த்தி அதற்குரிய இடத்தில் வைத்தால், எஞ்ஜின் கட்டுப்பாட்டு அறையில், அந்த உத்தரவு எலக்ட்ரிக்கல் ஸிக்னல் மூலம் தெரிவிக்கப்பட்டு, எஞ்ஜின் டெலிகிராப்பில் சத்தம் வரும்.

அதற்கேற்ப எஞ்ஜினியர்கள் எஞ்ஜின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து எஞ்ஜினை இயக்கி தேவையான வேகத்தில் ஓட வைப்பார்கள்.

தற்போதைய நவீன கப்பல்களில் இந்தச் சிக்கலான விஷயங்கள் எல்லாம் தவிர்க்கப் பட்டு, நேரடியாக வீல்ஹவுஸ் டெலிகிராப்பை நகர்த்தினாலே போதும், நேரடியாக எஞ்ஜினை

அங்கிருந்தே கட்டுப்படுத்தும், ' பிரிட்ஜ் கண்ட்ரோல் ' முறை வந்து விட்டது.

கப்பல் பயண நேரம், அது செல்லும் துறைமுகங்களைப் பொறுத்து மாறுபடும்...

சென்னையிலிருந்து ஒரு வாரத்திற்குள் சிங்கப்பூர் சென்று விடலாம். பதினைந்து நாட்களில் ஜப்பான் போய்ச் சேரலாம்..

இருபத்தைந்து நாட்களில் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குப் போகலாம்... முப்பது நாட்களில் அமெரிக்கா போகலாம்...

ஆனால் இது ஒரு தோராயமான கணக்கு. ஒரு நாட்டில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகவே ஒரு சில நாட்கள் பிடிக்கும்...

மேலும் வானிலை, கடலின் கொந்தளிப்பு இவற்றைப் பொறுத்து கப்பலின் வேகம் குறையவும் கூடும்.

எனது பயணங்களில், எழுபது நாட்கள் தொடர்ந்து நிற்காமல் ஒரு துறைமுகத்திலிருந்து இன்னொரு துறைமுகம் செல்லும் பயணங்களும் உண்டு.
----------

அத்தியாயம் 49

நான் வேலை செய்த பிரிட்டிஷ் கம்பெனியின் கப்பல்கள், உலகம் முழுவதும் உள்ள நாடுகளைத் தொட்டுச் செல்பவை.

எல்லாமே Bulk carrier வகையைச் சேர்ந்தவை. இரும்புத்தாது அல்லது நிலக்கரி ஏற்றிச்செல்பவை.

கனடா அல்லது பிரேஸில் நாடுகளில் இரும்புத்தாது, அல்லது அமெரிக்காவில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஆசியாவிலுள்ள சீனா, கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கொண்டு செல்லும்...

இவை சுமார் நாற்பதிலிருந்து ஐம்பது நாட்கள் வரையிலான தொடர் பயணம்...

தென் ஆப்பிரிக்காவிற்கு கீழ்ப்பகுதியான ' நன்னம்பிக்கை முனை வரை ' சென்று, பின் அங்கிருந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்து மலாக்கா ஜலசந்தி, சிங்கப்பூர் வழியாகவும் செல்லலாம்...

அல்லது இந்தோனேஷியாவின் இடையே புகுந்து, தீவுகளின் உள்ளே பயணித்தும் தென்சீனக்கடலில் செல்லலாம்...

சரக்கை இறக்கிய பின், அந்த நாடுகளில் வேறு சரக்கு எதுவும் ஏற்றப்படுவதில்லை...

அங்கிருந்து சரக்கு ஏற்றப்படாமல், ஆஸ்திரேலியாவிற்கு செல்ல சுமார் பதிமூன்றிலிருந்து, பதினைத்து நாட்கள்.

இந்த மாதிரி சரக்கு இல்லாமல் செல்லும் போது, கப்பல் தண்ணீரின் மேலே வந்திருக்கும்.

ஆனால் கப்பலைச் செலுத்துவதற்குப் பயன்படும் ஃபேன் போன்ற ப்ரொப்பல்லர் என்ற பகுதி தண்ணீரின் மேலே இருந்தால், கப்பலைச் செலுத்துவதற்குப் பயன்படும் இன்ஜின் சக்தி வீணடிக்கப்படும்...

அந்தப்பகுதி தண்ணீருக்குள் முழுதாக மூழ்கி இருந்தால்தான் எரிபொருள் வீணாகாமல், முழுசக்தியும் உபயோகப்படுத்தப்படும்.

எனவே, சரக்கு ஏற்றாமல் இருக்கும் சமயங்களில், கப்பலை ஓரளவு தண்ணீருக்குள் மூழ்கி வைத்திருக்க கப்பலில் இதற்கென்றே உள்ள இரும்பு டாங்க்குகளில் கடல் தண்ணீர் நிரப்பப்படும்...

இந்த தொட்டிகள் கப்பலின் அடிப்பகுதியில் கார்கோ ஹோல்டின் கீழ்ப்புறமும், அவற்றின் பக்கவாட்டிலும் அமைந்திருக்கும்..

சரக்கு பாதி இறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, இன்ஜின் அறையில் உள்ள பெரிய பம்புகளின் உதவியால் இந்தத் தொட்டிகளில் கடல்நீர் நிரப்பப்படுகிறது.

இப்படி கடல்நீர் நிரப்புவதன் மூலம் கப்பல் ஓரளவு தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்.

இம்மாதிரி சரக்குகள் ஏற்றப்படாமல் வெறும் கடல் தண்ணீரை மட்டும் ஏற்றிச் செல்லும் பயணங்களைத் தான் ' BALLAST VOYAGE ' என்கிறார்கள். (இது பற்றி முன்பே ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன்)

ஆஸ்திரேலியாலில் சரக்கு ஏற்றுவதற்காக செல்லும் கப்பல்கள் சில சம்பிரதாயங்களை முடித்திருக்க வேண்டும்...

அந்த நாடு, சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் கடல் நீர் மாசுபடுவதைத் தடுப்பதற்காக நிறைய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவது மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும்.

அதே போல் வேறு நாட்டிலிருந்து வருபவர்கள் உணவுப் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்ற கடுமையான விதியும் உண்டு...

சரக்கு ஏற்ற வரும் கப்பல்கள், Ballast voyage -ல் வரும்போது சுமந்து வரும் கடல்நீரை, ஆஸ்திரேலியாவின் கடல்பகுதிக்குள் வெளியேற்றக் கூடாது...

(துறைமுகத்திற்குள் வந்தபின் சரக்கு ஏற்றப்படும் போது கொண்டுவந்த கடல் நீரை பம்புகள் மூலம் மீண்டும் கடலில் வெளியேற்றுவது வழக்கம்.)

வேறுநாடுகளின் கடல் தண்ணீரில் உள்ள கிருமிகள் ஆஸ்திரேலிய கடல்பகுதியில் வாழும் உயிரினங்களை அழித்துவிடக்கூடும் என்பதால், வேறு நாட்டு கடல் நீர் துறைமுகப்பகுதியில் கலக்க அவர்கள் அனுமதிப்பதில்லை.

எனவே, அந்த நாட்டு கடல்பகுதிக்குள் நுழையும் முன் ஏற்கனவே துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள கடல்நீரை வெளியேற்றிவிட்டு, அந்தப்பகுதியில் உள்ள தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

தண்ணீரை மாற்றியபின் அந்த நிகழ்ச்சியை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும்...

ஆஸ்திரேலிய துறைமுகத்தில் நுழைந்தவுடன், இதற்கென்றே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வந்து அதுபற்றிய ஆவணங்களை சரிபார்க்க வருவார்கள்..

மேலும் கொண்டு வந்த தண்ணீரின் 'ஸாம்பிள்' எடுத்து சோதனைக்குட்படுத்துவார்கள்...

இதையெல்லாம் முடித்துக் கொண்ட பிறகு சரக்கு ஏற்ற அனுமதிக்கிறார்கள்...

தற்போது இதேபோல் வேறு பல நாடுகளிலும் தண்ணீர் மாற்றும் முறையை கட்டாயமாக்க ஆரம்பித்துள்ளன.

இம்மாதிரி கடுமையாக சட்டங்களை ஏற்படுத்தி, அதை அமுலாக்குவதிலும் அவர்கள் கடுமையாகவும், நியாயமாகவும் இருப்பதனால், ஆஸ்திரேலிய துறைமுகத்தின் கடல்நீர் இன்னும் மாசுபடாமல், தெளிவாக இருக்கிறது...

எந்தக் கப்பலும், கப்பலின் இஞ்ஜின் அறையின் எண்ணெய் கலந்த கழிவுநீரை அந்தக் கடல்பகுதியில் பம்ப் செய்து வெளியேற்றி விடமுடியாது...

கப்பலையே சிறைப்படுத்தி விடுவார்கள்... கடுமையான அபராதத் தொகையும் விதிக்கப்படும்.

ஆஸ்திரேலியா இயற்கை வளங்களும், கனிம வளங்களும் நிறைந்த தேசம்...

எங்கள் கம்பெனி கப்பல்கள் அங்கிருந்து, அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தக்கூடிய நிலக்கரியை ஏற்றிக் கொள்ளும் ...

(நமது நாட்டிற்குக் கூட இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது)

சரக்கு ஏற்றிக் கொண்டபின் ஐரோப்பாவிலுள்ள நாடுகளுக்கு புறப்படும்... சுமார் நாற்பத்தைந்து நாட்கள் பயணம்...

சில கப்பல்கள், ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் போது இந்தியப் பெருங்கடலில் நுழைந்து, அரபிக்கடல் வழியாக சூயஸ்கால்வாய் சென்று, அதன்பின் மத்திய தரைக்கடல் வழியே

இத்தாலி மற்றும் கிழக்குப்பகுதி பிரான்ஸின் துறைமுகங்களுக்கு செல்லும்.

அல்லது, மத்திய தரைக்கடலைக் கடந்து ஜிப்ரால்டர் வழியாக, பே ஆஃப் பிஸ்கே கடல்பகுதியில் நுழைந்து, ஆங்கிலக் கால்வாய், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் இதர

ஐரோப்பிய துறைமுகங்களுக்குச் செல்லலாம்..

ஐரோப்பாவில் குறிப்பிட்ட துறைமுகத்தில் சரக்கை இறக்கி விட்டு, மீண்டும் அமெரிக்கா, கனடா அல்லது பிரேஸிலுக்கு Ballast voyage...

அங்கே மீண்டும் சரக்கு ஏற்றும் பணி. இப்படித்தான் கப்பல் பயணம் சரக்கு ஏற்றிக்கொண்டும், சரக்கு இல்லாத பயணமாகவும் மாறிமாறி நடைபெறுகிறது..

ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பா செல்லும் கப்பல்கள் தென் ஆப்பிரிக்காவின் கீழ்பகுதியிலுள்ள நன்னம்பிக்கை முனை வழியாக போனாலும், சூயஸ் வழியாக போனாலும் பயண

நாட்களில் வித்தியாசம் அதிகம் இருக்காது.

ஆனால், இந்தியாவிலிருந்து ஐரோப்பா செல்லும் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாகப் போனால்தான் விரைவில் போய்ச் சேர முடியும்.
------------
கடைசி அத்தியாயம் 50

சூயஸ் கால்வாய் இல்லாத நாட்களிலும், ஒரு காலக் கட்டத்தில் கால்வாய் மூடப்பட்ட சமயத்திலும், கப்பல் தொழில் மிகவும் சிரமமாகவே இருந்தது...

எகிப்து நாட்டின் குறுக்கே வெட்டப்பட்டுள்ள சூயஸ் கால்வாயின் மொத்த நீளம் சுமார் 193 கி.மீட்டர்.

அது இல்லாவிட்டால் இந்தியாவிலிருந்தும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஐரோப்பா செல்லும் கப்பல்கள் அனைத்தும், நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வரை சென்று சுற்றி வர வேண்டியிருக்கும்.

உதாரணத்திற்கு சவுதி அரேபியாவின் ஜெட்டா துறைமுகத்திலிருந்து, கருங்கடல் துறைமுகமான 'கான்ஸ்டான்ஸா' செல்வதென்றால், சூயஸ் பயணத்தினால் 86 சதவீத தூரம் குறைகிறது.

இன்று, தினமும் சுமார் நூறு கப்பல்களுக்கு மேல் சூயஸ் கால்வாய் வழியே செல்கின்றன.

சூயஸ் கால்வாய் இல்லாவிட்டால், அதனால் ஏற்படும் அதிக செலவைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பல கப்பல் கம்பெனிகள், தங்களின் தொழிலை மூடி வைத்து விட வேண்டியதுதான்.

ஏராளமான கப்பல்வாசிகளும், தங்களின் வேலையை இழக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும்.

சூயஸ் கால்வாய் எத்தனையோ கப்பல்வாசிகளின் குடும்பத்தை காப்பாற்றி அவர்களின் ' கால் வாய் 'க்கு மட்டுமல்ல, முழு வயிற்றுக்குமே உணவிடும் அன்னை.

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட இந்தக் கால்வாயை கட்டும் முயற்சிகள் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்து விட்டதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் தற்போதைய சூயஸ்கால்வாய் செங்கடலையும், மத்தியதரைக் கடலையும் நேரடியாக இணைப்பது போல் முன்பு நேரடியாக இணைக்க முயற்சிக்கவில்லை.

அவர்கள் நைல் நதியுடன் செங்கடலை இணைத்தனர்.

கி.பி. 1800 - வாக்கில் பிரான்ஸின் Napaolean Bonaparte -ன் இன்ஜினீயர்கள் இந்தியாவுக்கு செல்வதற்கான சுருக்கமான கடல்வழியை ஏற்படுத்தும் எண்ணத்திற்கு மறுஉயிர் கொடுத்தனர்.

பிரெஞ்சு இன்ஜினீயர்களின் கணக்குப்படி, செங்கடலின் மட்டத்திற்கும், மத்தியதரைக்கடலின் மட்டத்திற்கும் சுமார் 10 மீட்டர் வித்தியாசம் இருப்பதாகத் தோன்றியது...

அதனால், அந்த நிலையில் கால்வாய் கட்டினால், ஏராளமான நிலப்பகுதி வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் இருப்பதாக நினைத்தார்கள்.

ஆனால் அவர்களின் கணக்கு தப்பு என்று தெரியவந்து, பின்னாளில் கால்வாய் கட்டினால் பிரச்சனையில்லை என்று முடிவு செய்தனர்.

கடைசியில் 1859 -ல் எகிப்திய தொழிலாளர்கள் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டு, அந்தக் கால்வாய் கட்டும் பணி தொடங்கியது.

ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் எகிப்திய தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட இந்தக் கால்வாயின் கட்டுமானப் பணியில் உயிரை இழந்தவர்களின் எண்ணிக்கை 1,15,000 -க்கும் அதிகம்.

1867 -ல் திட்டம் முடிக்கப்பட்டு, 1869 -ம் ஆண்டு நவம்பர் 17 -ல் அதிகாரப்பூர்வமாக கப்பல் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

1956 -ல் எகிப்து நாட்டிற்கு சொந்தமாக்கப்பட்டது.. (அதற்கு முன் 87 வருட காலங்கள் சர்வதேச கம்பெனியாக இருந்து வந்தது.)

1967 -ல் ஏற்பட்ட அரபு - இஸ்ரேலிய சண்டைக்குப்பின் கால்வாய் மூடப்பட்டு, அதன்பின் 1975 -ல் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.

சூயஸ் கால்வாய் போல், கப்பல் போக்குவரத்துக்கு மிகவும் பயன்படும் இன்னொரு கால்வாய் 'பனாமா கால்வாய்'...

பசிபிக் பெருங்கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைத்து, எத்தனையோ கப்பல்கள் தென்அமெரிக்கக் கண்டத்தின் கிழ்ப்பகுதியான 'கேப் ஹார்ன்' (Cape Horn) வரை சென்று சுற்றிவர வேண்டிய தூரத்தை, பலமடங்கு குறைக்க பனாமா கால்வாய் உதவி செய்கிறது.

வட அமெரிக்கக் கண்டத்திற்கும்,தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையேயுள்ள பனாமா நாட்டின் குறுகிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கால்வாய்க்கும், சூயஸ்கால்வாய்க்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது...

சூயஸ் கால்வாயின் மொத்த நீளத்திற்கும், தண்ணீரின் அளவு கிட்டத்தட்ட ஒரே மட்டமாக இருக்கும்.

ஆனால், பனாமா கால்வாய் அமைந்துள்ள இடத்தில் மலைப்பகுதிகளும், ஏரியும் அமைந்து, அவற்றில் தண்ணீரின் மட்டம் கடல் நீரின் மட்டத்தைவிட அதிக உயரத்தில்

இருப்பதால், அதன் மொத்த நீளமும் வேறு வேறு மட்டத்தில் உள்ளது...

அதற்காகத்தான் பனாமா கால்வாயில் நிறைய 'லாக்ஸ்' (Locks) எனப்படும் அமைப்புகள் உண்டு... பனாமா கால்வாயில் மட்டுமல்ல...

நிறைய துறைமுகங்களில், குறிப்பாக நதிகள் கடலோடு கலக்கும் இடங்களில் இந்த 'லாக்ஸ்' என்றழைக்கப்படும் அமைப்புகள் உள்ளன.

ஒரு பக்கம் உயரமாகவும், அடுத்த பக்கம் தாழ்வாகவும் தண்ணீர் மட்டம் இருக்கும் இடத்தில் மூடப்பட்ட தொட்டி போன்ற அமைப்பிலான இந்த லாக்ஸ் இருக்கும்.

இது கிட்டத்தட்ட 'டிரைடாக்கு'கள் (Duy Docks) போலத்தான்...

(Dry Docks பற்றி முன்பே குறிப்பிட்டுள்ளேன்.) 'டிரைடாக்கு'களுக்கு ஒரு பக்க கதவு உண்டு... ஆனால் லாக்குகளுக்கு இருபக்கமும் கதவுகள் உண்டு.

முதலில் ஒரு பக்கக் கதவு திறக்கப்பட்டு, கடல்நீர் லாக்கின் உள்புறம் சென்று ஒரே மட்டமாகிவிடும்.

இப்போது கப்பல் உள்ளே கொண்டு வரப்படும். அதன்பின் திறக்கப்பட்ட கதவு மூடப்படும்..

தற்போது அந்த நீர் மட்டம் ஏரியிலிருந்து தண்ணீரை லாக்கினுள் திறப்பதன் மூலம் அதிகப்படுத்தப்பட்டு, எதிர்ப்பக்கம் உள்ள தண்ணீரின் மட்டத்திற்கு உயர்த்தப்படும்...

இப்போது மறுபக்கக் கதவு திறக்கப்பட்டு, அதன் வழியே கப்பல் எதிர்ப்புறம் செல்லும்.

பனாமா கால்வாயில் வரிசையாக அடுத்தடுத்து ஒன்றையொன்று ஒட்டியபடி, மூன்று லாக்குகள் உண்டு.

கால்வாயின் உள்ளே கப்பலின் பயணம், ஏரி, மலைப்பகுதிகளின் இடையேயான நீர்ப்பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும்.

மொத்தப் பயணத்தையும் பார்த்தால் கப்பல் படிக்கட்டுகளின் வழியே ஏறி இறங்கியது போல் தோன்றும்.

அந்த லாக்குகளின் உள்ளே கப்பல் பயணம் செய்யும் போது, இரண்டு புறமும் பக்கவாட்டில் இருந்து கப்பலை இழுத்துச் செல்ல இரயில் இன்ஜின்களைப் பயன்படுத்கிறார்கள்.

பனாமா கால்வாயின் வழியே பயணம் செய்வதே ஒரு மகிழ்ச்சியூட்டும், பரவசமான அனுபவம் என்று எனது நண்பர்கள் கூறுவார்கள்.

எனக்கு இதுவரை அதன் வழியே பயணம் செய்யும் வாய்ப்பே கிடைக்கவில்லை...

குறிப்பிட்ட சைஸுக்கு மேல் உள்ள கப்பல்கள், கால்வாயின் வழியே செல்லமுடியாது...

பசிபிக்கிலிருந்து அட்லாண்டிக் கடலுக்கு வர நேரிட்ட இரண்டு முறையும், நான் தென் அமெரிக்கா கண்டத்தின் கீழ்ப்பகுதி வழியாகவே சென்றேன்.

சூயஸ், பனாமா கால்வாய்களைத் தவிர ஐரோப்பாவின் இடையே ' கீல் கனால் ' என்ற நீண்ட கால்வாயும் உண்டு...

நிறைய ஐரோப்பிய நாடுகளின் வழியே செல்லும் ஒரு நீர்வழியான இந்த கால்வாயின் ஊடே பயணம் செய்வதும் ஒரு இனிமையான அனுபவம்...

இரண்டுபுறமும் பச்சைப் பசேலென்ற இயற்கைக் காட்சிகளின் அணிவரிசை...

இங்கிலாந்திற்கும் மற்ற ஐரோப்பா நாடுகளுக்கும், (குறிப்பாக ஃபிரான்ஸ்) இடையேயுள்ள ஆங்கில கால்வாய் (English channel) ஒரு பரபரப்பு அதிகமான நீர்வழி...

பெரிய கப்பல்கள் மட்டுமின்றி சின்னக் கப்பல்களும், ·ஃபெர்ரீஸ் (Ferrys) எனப்படும் சிறிய பயணிகள் படகுகளும் ஏராளமாக குறுக்கும் நெடுக்குமாக போய்க் கொண்டே இருக்கும்.

ஆங்கிலக் கால்வாய் மற்ற கால்வாய்களைப் போல் குறுகிய நீர்வழி இல்லை என்றாலும், இங்குள்ள அதிக போக்குவரத்தினாலும், பனிமூட்டத்தினாலும் இங்கும் விபத்துகள் நடந்துள்ளன.

தற்போது தகவல் தொடர்பு எவ்வளவோ வளர்ந்து விட்டது... ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் சேர்ந்த புதிதில் இந்த அளவு முன்னேற்றம் கிடையாது.

கப்பலில் உள்ளவர்களுக்கு வீட்டிலிருந்து தகவல் சொல்ல வேண்டுமானாலோ, கப்பலிலிருந்து வீட்டுக்கு செய்தி தெரிவிப்பது என்றாலோ இன்று 'ஸாட்டிலைட்' தொலைபேசி மூலம் உடனுக்குடன் பேசி விட முடிகிறது.

ஈ-மெயில் வசதியும் வந்து விட்டது...

வெளிநாட்டு கப்பல்களில் இந்த வசதி முன்பே வந்து விட்டாலும், இந்தியக் கம்பெனி கப்பல்களில் இருக்கும் அனைவராலும் இது பயன்படுத்தப்படுவதில்லை.

மேலும் நிறைய இந்தியக் கம்பெனிகளில் கேப்டன் விருப்பத்தின் பேரில் மட்டுமே இது வழங்கப்படுகிறது.

அவரும், அவர் யாருக்கு அனுமதி வழங்குகிறாரோ, அவர்கள் மட்டுமே இந்த வசதிகளை கப்பலில் அனுபவிக்கிறார்கள்.

நான் வேலை செய்த பிரிட்டிஷ் கம்பெனியில் இப்படிக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது... விதிகள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருந்தது.

யார் வேண்டுமானலும் ஈ-மெயில் வசதியைப் பயன்படுத்த முடிந்தது.

ஆனால் கடைசியாக வேலை செய்த இந்தியக் கப்பலில், கப்பலின் ஈ-மெயில் அடையாளப் பெயர் கூட யாருக்கும் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

அதைக் கேப்டனும் அவர் யாருக்கு அந்த வசதியைக் கொடுக்க விரும்புகிறாரோ அவர்களும், மட்டுமே உபயோகித்தையும் பார்த்த போது வருத்தத்தையே தந்தது.

மேலும் வெளிநாட்டுக் கப்பல்களில், ஆபிஸர்களாக இருந்தாலும் (அவர் கேப்டன் பதவியில் இருப்பவரானாலும்) மற்ற பணியாளர்களிடம் சகஜமாக பழகுவதையே அதிகம் பார்க்கமுடியும்.

ஆனால் இந்தியக் கப்பல்களில் அப்படிப்பட்ட ஆரோக்கியமான சூழ்நிலை இல்லை.

ஆபிஸர்கள், மற்ற பணியாளர்களிடத்தில் ஒருவித இடைவெளியைக் கடைபிடித்து, தாங்கள் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் என்பதை வெளிக்காட்டிக் கொள்வதைப் பார்க்க முடியும்.

இதேபோல், இந்தியக் கப்பல்களில் வாழ்க்கை முறைக்கும், வெளிநாட்டு கப்பல் வாழ்விற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.

சம்பளத்தில் கூட இந்தியக் கப்பல்களில் ஒரு பதவிக்குக் கிடைக்கும் பணத்தை விட, வெளிநாட்டுக் கம்பெனியில் மிக அதிகமாகக் கிடைக்கிறது.

கப்பலில் இன்ஜினீய்ர் வேலைக்குச் சேர பொதுவாக மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் டிகிரி முடித்துவிட்டு, கப்பல் கம்பெனிகள் அதற்க்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் போது

விண்ணப்பித்து பயிற்சியில் சேரலாம்.

ப்ளஸ்-டூ மாணவர்களுக்கு ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வு வருடந்தோறும் நடைபெறுகிறது...

அந்தப் பரீட்சை எழுதினால், ப்ளஸ்-டூ முடித்தவுடன் மெரைன் இன்ஜினீயரிங் பயிற்சியிலோ, நேவிகேட்டிங் ஆபிஸராக சேரும் பயிற்சியிலோ சேரமுடியும்.

கப்பலில் பணியாளர்களாகச் சேர்வதற்கான பயிற்சிகளை தமிழ்நாடு கடல்சார் வாரியம் நடத்துகிறது. தூத்துக்குடியில் உள்ளது இந்த நிறுவனம்.

மேலும் பல தனியார் நிறுவனங்களும் பயிற்சிகள் நடத்துகின்றன.

கப்பல் வேலையில் சேர்வதற்காக நடத்தப்படும் பயிற்சிகள் முடித்த எல்லோருக்கும், வேலை கிடைத்து விடுவதில்லை.

எனவே பெரும்பணத்தைச் செலவழித்து, இந்தப் பயிற்சி செய்யப் போகும் முன், அதன்பிறகு வேலை வாய்ப்பு எப்படி உள்ளது என்பதை நன்றாக விசாரித்த பின்பு சேருவதே நல்லது.

சென்னையிலுள்ள மெர்க்கன்ட்டைல் மெரைன் டிபார்ட்மெண்ட் (Mercantile Marine Department -MMD) பீச் ஸ்டேஷன் அருகில் உள்ளது.

இது கப்பல்துறை பற்றிய விதிகளை அமுல்படுத்தவும், அது சம்பந்தப்பட்ட வேலைகளுக்கான தேர்வுகளையும் நடத்தும் இந்திய அரசின் நிறுவனம்.

கப்பல் வேலையில் சேர விரும்புவர்கள் இந்த அலுவகத்தில் சென்று விசாரித்தால், எப்படி கப்பல் வேலைக்கு சேர்வது, எங்கெங்கே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்ற எல்லா

விவரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்...

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் ஏமாறாமல், சரியான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள இது போன்ற அரசு நிறுவனங்களை அணுகி

முழு விவரமும் தெரிந்து கொள்ளலாம்...

தங்களுடைய கல்லூரியிலோ, நிறுவனத்திலோ நடத்தப்படும் பயிற்சி முடித்தால் உடனடியாக கப்பலில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லி, பணத்தைப் பறிக்கும்

பயிற்சி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன.

ஒரு நிறுவனம் நடத்தும் அந்தப் பயிற்சி அல்லது ஒரு கல்லூரியில் உள்ள மெரைன் இன்ஜினீயரிங் கோர்ஸ், அரசால் (Director General of Shipping, MMD

போன்றவையால்) அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து விட்டபின் அந்தப் பயிற்சியில் சேர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்!

நன்றி...

எனக்கு கடலை அறிமுகம் செய்த திரு. 'கடலோடி' நரசய்யாவுக்கும், என்னைப் பத்திரிக்கையாளனாக உருவாக்கிய ஆனந்த விகடனுக்கும் (ஜூனியர் விகடனுக்கும்.